*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 11, 2011

ஈஷா தியான லிங்க கோவில்


கோவை சிறுவாணி சாலையில் முப்பது கி.மீ தொலைவில் ஈஷா தியானலிங்க கோவில் சத்குரு ஜக்கி வாசு தேவ் அவர்களின் தலைமையில் உருவாகியுள்ளது.கோவில் என்று சொல்வதைவிட விங்ஞானப்பூர்வமாக அமைக்கப்பட்ட தியானலிங்க மண்டபம்.இங்கு சென்று வந்த அனுபவத்தை பகிரவே இந்த பதிவு. தற்பொழுது சில சாமியார்களுக்கு நற்பெயர் இல்லையென்றாலும் இந்த பதிவு இவரை  "பின்பற்றுக" என்பதற்கல்ல,மற்ற சிறந்த இடங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது போவோமல்லவா?அது போல அனைவரும் இங்கு ஒரு முறை செல்ல வேண்டும் என்பது என் ஆசை. கோவை காந்திபுரத்திலிருந்து 14 டி பேருந்து செல்கிறது.

கணவர் எப்படியோ சத்குரு ஜக்கி வாசு தேவ் அவர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டுவிட்டார். ஆன்மீகத்தில் பிரபலமாகும் பெரியோர்கள்,சாமியார்கள்,சந்நியாசிகள் ஆன்மிகம் என்ற பெயரில் தனக்கென்று தனி முத்திரை பத்தித்தவராக இருப்பார்கள் .ஆன்மிகம் என்பது ஒன்றுதான் என்றாலும் அவரவர் நடையில்,வழியில் என்ன சொல்கிறார்கள்  என்பதை   தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமுள்ள கணவருக்கு,ஆழியார் பெரியவர்,ஓஷோ,ஜே.கிரிஷ்ணமூர்த்தி,இவர்களின் வரிசையில்(நம்ம நித்யானந்தாவும் வந்தார் ) தற்பொழுது சத்குரு ஜக்கி வாசு தேவ் அவர்கள்.இவருடைய தியானலிங்க கோவிலுக்கு போக வேண்டுமென்ற சமீபத்திய ஆசை கடந்த ஆண்டு 2010 அக்டோபர்  6  ஆம்  தேதி நிறைவேறியது.      

கோயமுத்தூர்   என்கிற பெயரை புத்தகம்,பஸ்,ரயில்,வலைப்பதிவுகள் இவற்றில் மட்டுமே படித்ததுண்டு.முதன் முறையாக கோயமுத்தூர் சென்றோம்.மதுரையின் எழிலை ரசித்த எனக்கு ஒரு சாயலில் கோயமுத்துரும் மதுரைக்குள் செல்வது போலவே இருந்தது.மிக அழகான ஊர்.அன்று மழையும் இப்போ வரபோறேன், வரபோறேன்னு சொல்லிக்கொண்டிருக்க பயணம் செல்லமாக சென்றது.சில நிமிடங்களில்  அழகான காட்டிற்குள் செல்வது போல இருந்தாலும்,பக்கமாக தெரிந்த மலைகளும் அதன் மேல் மேகங்கள் தொட்டு தொட்டு விளையாடுவது போல இருந்தைக்கண்டு,இத்தனை நாள் இந்த  ஊர்பக்கம் வராமல் போய்விட்டோமென  நிணைக்க வைத்தது.ஒரு காட்டிற்குள்தான் இறக்கிவிடப் பட்டோம்.தெற்கு வடக்கு ஒன்றும் புரியவில்லை.எதிரே சத்குரு ஜக்கி வாசு தேவ் அவர்களின் பெரிய பேனர் கண்ணில் பட்டது.எதார்த்தமாக வந்த எங்களுக்கு அந்த பேனரில் சத்குரு ஜக்கி வாசு தேவ் அவர்களின் சொற்பொழிவு அன்று மாலை ஆறுமணிக்கு  இதே தியானலிங்க மண்டபத்தில் நடைபெறுவதாக குறிப்பிட்டுருந்ததவுடன் இத்தனை நாள் புத்தகத்திலும் சீடியிலிம் ,தொலைக்கட்சியிலும்  பார்த்த   சத்குருவை நேராக பார்க்க வாய்ப்பு கிடைக்க போவதில்  கணவருக்கு சின்ன மகிழ்ச்சி.(ஆனால் நான் என்னவர் அளவுக்கு கிடையாது, என்னத்த பாத்து,என்னத்த கேட்டு ....................) 

நாலைந்து நடையில் அங்கு வந்து செல்லும் பேருந்துகளின் நேரங்கள்,எண்கள் குறிப்புடன் வழிகாட்டி பலகை இருந்தது.ஏற்கனவே தொலைக்காட்சி முதல்  யு  ட்யுப்  டவுன்லோடிங் வரை இந்த இடத்தை லைட்டிங் எப்பக்டுடன் பார்த்த எனக்கு   காலை
ஏழு  மணியளவில் பனிச்சாரலில் உள்நுழைந்த போது நாம பாத்த இடம்தானானு சந்தேகம் வந்தது.எதிரே பெரிய அழகான நந்தி, பக்கத்தில் மண்டபங்கள் சில வழிகள்,எங்கே முதலில் போகணும்னு தெரியல,அண்ணாந்து பார்த்தால் அந்த மண்டபத்தின் தூண்களில் ஏகப்பட்ட கருநாகங்கள் சிலைகளாக, அந்த நந்தியும் கல்லால் செய்யப்பட்டது அல்லவாம்,உலோகத்தால் செய்யப்பட்டதென  ஒருவர் சொன்னார்.அந்த நந்தியை கடந்து வரும்போதே தமிழகத்திற்குள் தான் இருக்கிறோமா என்ற உணர்வு,சுத்தம்,நிசப்தம் காணப்பட்டது.
காலை ஏழு மணிக்கு அங்கு பணிசெயபவர்கள் தவிர வருகை தந்திருந்தவர்கள் குறைவு,இந்த மண்டபத்தை கடந்தவுடன் சுத்தமான திறந்த வெளி உணவகம் ஆனால் க்லோஸ்ட்    என்று எழுதிய பலகை இருந்தது.அங்கும் இங்கும் விசாரிக்கையில்தான் அந்த உணவகத்திற்கும் மண்டபத்திற்கும் இடையில் அருமையான மலை முகடுகள் வெள்ளியங்கிரி மலைச்சாரல்  மேகமா,பனிப்போர்வையா என வித்யாசம் தெரியாமல் வெண் பட்டு உடுத்திய தேவதையா என யோசிக்க வைத்தது.அந்த காட்சிக்கு அன்றைய வானிலையும் காரணமாக இருக்கலாம்,லேசாக மழை தூரத் தொடங்கியது.

கொண்டு வந்த சுமைகள்,அணிந்திருந்த காலணிகள் வைக்க இடம் காட்டப்பட்டது,தீர்த்த குண்டம் இருக்கும் இடத்திற்கு வழி காட்டினர்,அங்கு நீராடிவிட்டு தியானலிங்க மண்டபத்திற்கு போகலாம் என்றனர்,ஒருவருக்கொருவர் அக்கா,அண்ணா என்றழைத்தனர். நங்கள் அங்கங்கு நின்று வேடிக்கை பார்த்து,பேசி,அந்த கருநாகங்களை தூண்கள் தாங்கி நிற்கும் மண்டபத்திற்குள் செல்ல எட்டரை மணி ஆகிவிட்டது.மக்கள் கூட்டமும் பெருக ஆரம்பித்துவிட்டது,அமைதி மட்டும் அப்படியே இருந்தது.

வந்த வழியே தீர்த்த குண்டம் செல்லும்போது,வாசலில் வழிநடத்தும் ஒருவர் தாங்கள் முதன் முறை வருகிறீர்களா,ஏற்கனவே வந்துள்ளீர்களா என கேக்கப்பட்டு,முதன் முறை வந்தவர் ஒரு பக்கமும்,ஏற்கனவே வந்துள்ளவர் ஒரு பக்கமும் அனுப்பப்பட்டோம்,வித்யாசம் என்னவெனில் முதல் முறை செல்பவர்களுக்கு இந்த ஸ்தலம் உருவான வரலாறு ,தியானலிங்கம் உள்ள கட்டிட அமைப்புகள் பற்றிய வீடியோ ஓளிபரப்பு காட்சிகளை  பார்ப்பதுதான்.
அத்தனை அமைதியான இடத்தில் கொலுசு அணிந்திருப்பவர்கள்,சலங்கை மெட்டி போட்டிருப்பவர்கள் அந்த ஆபரணங்களை கட்டாயமாக கழற்றியாக வேண்டும்,மொபைல்கள் நிசப்த நிலையில் இருக்க வேண்டும்,இதெல்லாம் செய்து விடலாம், குழந்தைகளை அழைத்து வருபவர்களுக்கு அவஸ்த்தையாக இருந்தது,ஏனெனில் குழந்தைகளுக்கு என்ன புரியும்,புது இடத்தை கண்டவுடன் குழந்தைகளுக்கு குஷியில்,ஆயிரம் கேள்வி கேப்பது,அங்கும் இங்கும் ஓடுவது,நிசப்தம் நிலவும்போது குழந்தை நார்மலாக பேசினாலே அதிக சப்தமாக கேக்கிறது,அங்கங்கே நிற்கும் சேவகர்கள் "உஷ்  உஷ்" னு சொல்லுவதுமாக  இருந்தனர்.

உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.லிங்க பைரவி சந்நிதானம்,எதிரே  மூன்று வித சிவ  பெருமானின் தலை  வடிவங்கள் ஆளுயரத்திற்கும் மேலே காணப்பட்டது.ஆண்கள்,பெண்களுக்கு தனித்தனியே  தியான மண்டபங்கள் இருந்தது.நீராடிவிட்டு இங்கெல்லாம் மீண்டும் வந்து உள் நுழைவோமென தீர்த்தகுண்டம் நோக்கி சென்றோம்.

தீர்த்தகுண்டம் செவ்வக வடிவிலும்  பூமியிலிருந்து  முப்பத்தைந்து அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளதாம்,இங்குள்ள சிவலிங்கம் கெட்டிப் படுத்தப்பட்ட பாதரசத்தால் ஆனதாம்.இதற்கு நேர் மேலுள்ள அரைக்கோள வடிவக் கூரையில் இயற்கை சாயங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் மகா கும்ப மேளாவை சித்தரிக்கிறதாம். 

ஆண்கள் தனியாக,பெண்கள் தனியாக நீராட அனுமதிக்கப் படுகின்றனர்.வருபவர்களை எல்லாம் அரை மணி நேர இடைவெளியில் அனுப்பினர்.ஒரு கிண்ணத்தில் வேப்பிலை அரைத்து வைக்கப்பட்டிருந்தது.விரும்பினால் எடுத்து உண்ணலாம்.நீராடும்போது தனி அறையில் குளித்த பிறகு ,அங்குள்ள பெண்களுக்கு  நைட்டி போன்ற கவுனும்,ஆண்களுக்கு துண்டும் காவி நிறத்தில் கொடுக்கப்பட்டது,எல்லோரும் ஒரே  வித ஆடையில் தீர்த்த குண்டத்திற்குள்  சென்றோம்,எதோ அகன்ற கிணற்றுக்குள் போவது போல இருந்தது,அருவி போல தண்ணீர் ஒரே சீராக மேலிருந்து வந்து கொண்டே இருக்கிறது.படிகளில் இறங்கினால் மிகுந்த குளிர்ந்த சுத்தமான நீர்.தண்ணீருக்குள் சிவலிங்கம்.சிவலிங்கத்தை சுற்றி தியான நிலையிலும்,எதோ பிராத்திக்கும் நிலையிலும் பெண்கள் இருந்தாலும்  கொஞ்சம் பயமாகவும்,வித்தியாசமாகவும் இருந்தது.பிறகு நமது ஆடைகளுக்கு மாறியவுடன் தியானலிங்கம் அமைந்திருக்கும் இடத்திற்கு சென்றோம்.

தியானலிங்கம்

அங்கு முதலில் தென்பட்டது ,தியானம் செய்வதற்கு மதங்களின் மனங்களும் ஒற்றுமை பெற வேண்டும்,மத பேத வித்யாசமில்லை என்று சொல்வதற்காக கீழே காணப்படும் வடிவம்  வைக்கப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.
அங்கே வருபவர்களை வழிநடத்துபவர்கள் கை மற்றும் கண் சைகையில்தான் பேசினார்கள்.அப்படியொரு அமைதி.பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை அனுமதிக்கிறார்கள்.குழந்தைகள் அமைதி காக்க வில்லையெனில்,வெளியில் அழைத்துச்  சென்று விடுங்கள் என்று சைகையிலே சொன்ன போது மனசு கஷ்டமாகத்தான் இருந்தது.    
இப்படியான லிங்க விளக்குகள் விற்கப்பட்டன,தியானலிங்கத்தின் அருகில் இதை நம் கைகளாலே வைக்கலாம்.ஆனால் விளக்கு வெளியிலே ஏற்றி உள்ளே கொண்டு சென்றோம்.இத்தனை தற்காப்பும் ஏன் என்று உள்ளே போனவுடன்தான் தெரிந்தது,எப்படித்தான் சத்குரு அவர்களின் மனதில் தோன்றி உருவானதோ தெரியவில்லை,மிக ஆச்சரியப்பட்டேன்,நமக்கு நாம் பெரு மூச்சு விட்டாலும்,பாதங்களை அழுத்தி ஊன்றினாலும் கூட அதற்கு சமமான அத்தனைஎதிரொலிகள்.பதிமூன்று அடி உயரமும் ஒன்பதடி அங்குலமும்  கொண்டதாம் இந்த  சிவலிங்கம்.பெரிய நாகம் சுற்றியுள்ளது,வழக்கமான முறையில் சிவலிங்கத்தின் மேல் தண்ணீர் சொட்ட,சேர்ந்த நீர் நாகத்தின் வாய் வழியாக சொட்டுகிறது,தோரயமாக ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு அமரலாமென நினைக்கிறேன்.அந்த விளக்கை மெதுவாக வைத்த போது கூட எதிரொலித்தது.பலரும் தன்னை மறந்த நிலையில் த்யானம் செய்து கொண்டிருந்தனர்,எனக்கு எப்படி தெரியும்னு கேக்கறிங்களா?நான் எல்லோரையும் வேடிக்கை தான  பார்த்துக் கொண்டிருந்தேன்,நேரம் முடிந்தவுடன் வெளியில் அனுப்பப்பட்டோம்.அந்த பிரமிப்பிலிருந்து  மீள அதிக நேரமெடுத்தது.ஏழு கிழமைகளில்    இங்கு வந்து தியானம் செய்யும் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு  பலன் உண்டாம்.
தியானலிங்க சக்தி வளையத்திற்குள் வரும் அனைவருக்கும் ஆன்ம விடுதலைக்கான விதை விதைக்கப் படுவதாகவும் குரு வழிகாட்டலின் மூலம் கிடைக்கும் தியானப் பலனை தியானலிங்கம் தருவதாக சொல்லப்படுகிறது.

பத்துமணிக்கு மேலே காலை உணவு சாப்பிட்டோம்,மிக ருசியாக இருந்தது,பாகற்க்காய் சிப்ஸ்,கம்பு மாவு மற்றும்  சில நார்மல்  உணவுகளும் விற்பனையில் இருந்தது.பன்னிரெண்டரை   மணிக்கு ஓங்கார தீட்சை  (பூஜை) என அறிவிக்கப் பட்டிருந்தது.முதல் நாள் தீபாவளி என்றாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிய ஆரம்பித்துவிட்டது,ஆனாலும் அத்தனை நிசப்தம்.உணவகத்தின் எதிரே சின்ன விற்பனை நிலையமும்  இருந்தது,அங்கும் போய் பார்த்தோம்,ஜக்கி வாசுதேவ் அவர்களின் புகைப் படங்கள்,புத்தகங்கள்,சீடிக்கள் ஒரு பிரிவிலும்,மற்ற பிரிவில் உடைகள்,மூலிகை சாம்பிராணி,சோப்புகள்,எண்ணைகள்,கைப்பைகள் இப்படியான பொருட்களும் இருந்தது. எல்லாம் அதிக விலையாகத்தான் இருந்தது.


லிங்க பைரவி 
  
பிறகு லிங்க பைரவியை   தரிசிக்க சென்றோம்,அங்கு கால்களை கழுவிச் செல்வதர்காக வைக்கப்பட்டிருந்த நீர்க் குழாய்களும் வித்தியாசமாகவே இருந்தது.உள் செல்வதற்கு முன் வருபவர்களை வெளியிலே நிற்க வைத்து லிங்க பைரவி பற்றியும் ,அங்கு சமர்ப்பணத்திற்காக  விற்கப்படும் .நெய் தீபம்,தாக நிவாரணம்,தேவி நேத்ரா அர்ப்பனை,சர்ப்ப சேவா,கேஷ அர்ப்பணம்,தேவி அபய சூத்திர,மாலை அர்ப்பணம் என்பவைகள் பற்றி
மற்றும் பலன்கள்  பற்றியும்  விளக்கம் தந்த பிறகு வரிசையில் அனுமதிக்கப்பட்டோம்.இவைகள் சில வடஇந்திய தோரணையில் இருந்ததாக உணர்ந்தேன்.உள்ளே பெண்களே பூஜைகள் செய்கிறார்கள்,வரும்போது எதோ ஒரு ஆசனத்தை குறிக்கும் வகையில் நமஸ்காரம் செய்யவேண்டுமெனவும் அதே போல வாசலில் ஒரு சிலையும் பூமியில் பதித்த வண்ணம் இருந்தது.

பிறகு பன்னிரெண்டரை மணிக்கு ஓங்கார தீட்சை காண மீண்டும் தியானலிங்க மண்டபத்திற்குள் சென்றோம்.ஒரு வெளி நாட்டு பெண்தான் வெறும் பித்தளை கிண்ணம் ஒன்றின் வரும்புகளில் சிறிய பித்தளையாலான தடியில் (ஒரு விரல் அளவுதான்,)வருடி வருடி  தன்னுடைய மெல்லிய குரலில் ஓங்கார தீட்சை தருவித்தார்.ஆதியும்  அந்தமும் இல்லாத இம்மந்திரம் இந்த தியானத்தை மேற்கொள்பவரின் உள்நிலை பரிமாணங்களோடு,சமநிலையையும்,அமைதியையும் அளிக்க வல்லதாம்.ஒன்னேகால்  மணிவரை நடைபெற்றது.

பிறகு மதிய உணவிற்கு சென்றோம்.அமைதியான மக்கள் கூட்டம்
திறந்த  வெளி உணவகத்தில் பணம் செலுத்தி டோக்கன் பெற்று மற்றொரு இடத்தில் உணவு நாமே பெற்றுக்கொள்ள வேண்டும்.இருப்பில் என்ன உள்ளது என்பதை பலகையில் எழுதி போட்டுக் கொண்டே இருந்தனர்,மக்கள் கூட்டத்தில் பக்கத்தில் வேறு எங்கும் உணவகமும் இல்லை என்பதால் உணவகம் நிரம்பி வழிந்தது.
ஸ்பந்தா ஹால்   
ஸ்பந்தா ஹால்  என்று ஒன்று இருந்தது.தியான  முகாம் என்று சொல்லப்பட்டது.அங்கு குழந்தைகள் வைத்திருப்போர் அனுமதிக்கப் படவே இல்லை.மாலை ஆறு மணிக்கு நடை பெறப் போவதாக இருந்த சத்குரு அவர்களின் சொற்பொழிவு  மழை காரணமாக ஸ்பந்தா ஹாலுக்கு மாற்றப்பட்டு விட்டது.
அன்று தயானந்த சரச்வதிகளும் மாலை வந்திருந்தார்.அவருக்கு பாத பூஜைகள் செய்து அங்கேயே பயிலும் பிள்ளைகள் எதோ ஒரு சமஸ்கிருத பாடலை பாடி வரவேற்றது இனிமையாக இருந்தது.எங்கோ செல்லும் மனதை இழுத்துப் பிடித்து என்னுடனே வைத்துக் கொண்டது போல உணர்ந்தேன்.குழந்தைகள் அனுமதி இல்லை என்பதால் என் மகளுடன் தியானலிங்க மண்டபத்தின் வெளிப்புரத்திலே ஸ்பந்தா ஹாலுக்கு சென்ற கணவர் வரும் வரை காத்திருந்தோம்.ஏழு மணிக்கெல்லாம் முகாம் முடிந்துவிட்டது.தயானந்த சரஸ்வதி சுவாமி மற்றும் ஜக்கி வாசு தேவ் அவர்களின் சொற்பொழிவும் பொதுமக்களின் ஆன்மீக கேள்விகளுக்கு  பதிலும்,முந்தைய சொற்பொழிவின் சீடியும் போடப்பட்டதாம்.இரவு எட்டு மணிக்கெல்லாம் அங்கிருந்து புறப்பட்டுவிட்டோம்

இங்கே சற்று பொறுமையுடன் இந்த கிளிப்பிங்கை பார்க்கலாம்  
.
·         ஈஷா அறக்கட்டளை இங்கு ஈஷா யோகப் பயிற்சி
       சமூக,கல்விமுறை,சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான கிராம           புத்துணர்வு இயக்கம் ,பசுமைக்கரங்கள் திட்டம்,ஈஷா வித்யா போன்ற திட்டங்களை தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் செய்யல படுத்தி வருகிறது. 








,






10 comments:

ப.கந்தசாமி said...

நல்ல விவரமான பதிவு. அண்மையில் செய்த மாற்றங்களை அறிந்து கொண்டேன்.

எல் கே said...

இறை நம்பிக்கை அதிகமாய் உள்ளாவன். ஆனாலும் இந்த ஈஷா யோகா மையத்தின் மேல் பலவிதமான சந்தேகங்கள் உள்ளன

Unknown said...

நான் இதிலிருந்து விலகி நிற்கும் ஆள். ஆனால் பாராட்டப் படக்கூடிய பதிவு ..

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

பயனுள்ள பதிவு.

இந்த முறை ஊருக்கு வரும் பொழுது போக வேண்டும் என்ற ஆசையை அதிகப்படுத்தி விட்டீர்கள் .

raji said...

நல்ல பதிவு
பகிர்வுக்கு நன்றி

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. எங்க ஊருக்கு போனதில் மகிழ்ச்சி. நானும் இரண்டு வருடங்களுக்கு முன் தோழி அழைத்து சென்றார். தியானலிங்கத்தின் மேல் விழும் ஒரு சொட்டு நீரும் அங்கு என்ன சத்ததுடன் விழுகிறது. அமைதி அப்படி ஒரு அமைதி. ஆண்கள் பேண்டை மடக்கி விட வேண்டும். காரணம் தரையில் உரசினால் கூட அங்கு சத்தம் கேட்கும். குப்பைகளை போட மரங்களில் சாக்குப் பை தொங்க விட்டிருக்கின்றனர். தியானம் செய்ய ஏற்ற இடம்.

சமுத்ரா said...

நல்ல பதிவு

ஆச்சி ஸ்ரீதர் said...

@DrPKandaswamyPhD அவர்களுக்கு
தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

@எல்.கே அவர்களுக்கு நன்றி & தங்கள் சந்தேகம் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?என் சிற்றறிவுக்கு தெரிந்தால் கிளியர் படுத்துகிறேன்.

@கே.ஆர்.பி செந்தில்
//நான் இதிலிருந்து விலகி நிற்கும் ஆள். ஆனால் பாராட்டப் படக்கூடிய பதிவு// என்று தெரிவித்தமைக்கு நன்றி.

@அருள் சேனாபதி அவர்களுக்கு தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.கட்டாயம் சென்று வாருங்கள்.

@ராஜி அவர்களுக்கு அன்பான நன்றிகள்

@ஆதி அவர்களுக்கு நன்றி.

குப்பைகளை போட மரங்களில் சாக்குப் பைகள் இருப்பதாக தெரியவில்லை கவனிக்கலையானு தெரியல.

@சமுத்ரா

தங்களின் முதல் வருகைக்கு நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் பயண அனுபவங்களை, தக்க படங்களுடன், பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது தான். எங்கெங்கு என்னென்ன நடக்கிறது என்பதை அனைவரும் அறிய முடிகிறது.

நிகழ்காலத்தில்... said...

நன்றி சகோ. அதே நாளில் நானும் குடும்பத்தோடு சென்றிருந்தேன்.

தங்களின் கணவர் சரியான வழிகளில்தான் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.:))

வாழ்த்துகள்
http://arivhedeivam.blogspot.com/2011/02/5.html