*வணக்கம் வருகைக்கு நன்றி*
Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Jan 2, 2012

மார்கழி மாதமும், காலத்தின் கோலமும்

சேனல்களை மாற்றினாலும் மனம் ஒருநிலைப்படாததால்,என் மனசுக்குதான் ஒரு ரிமோட் இல்லாமபோயிட்டு போ என்று ரிமோட்டை எரிச்சலுடன்  அழுத்தி  டீவீயை  ஆஃப் செய்துவிட்டு அடுப்படிக்கு சென்றாள் மஞ்சு.அடுப்பங்கறையிலும் என்ன செய்வதென்று புரியவில்லை.மஞ்சுவின் பார்வையில் மதியம் சமைத்த,சாப்பிட்ட பாத்திரங்கள் ”என்னை விளக்கு, துளக்குனு” சத்தம்போடுவதுபோல  இருந்ததால் அடுப்பங்கறையிலிருந்தும்   வெளியே  வந்துவிட்டாள்.

வீட்டிற்குள் யார் இருந்தாலும்,என்ன சொன்னாலும்,செய்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் தான் உண்டு,தன் வேலை உண்டுனு இருக்கும்னு கடிகாரத்தை பார்த்தாள்.நேரம் நாலரையானது.அப்பா எப்படியோ இவ்ளோ நேரத்தை கடந்துட்டேன்னு கடிகாரத்தைப் பார்த்து பெருமூச்சுடன் புன்னகைத்தாள்.பதிலுக்கு கடிகாரமும் அடுத்த நொடிக்கு நகர்ந்தபடி புன்னகைத்தது போலிருந்தது மஞ்சுவிற்கு.திருமணத்திற்கு பின் கணவனை விட அதிக நேரம்   மஞ்சுவுடன் இருப்பதும்,ஓயாமல் சுற்றி,இதோ வந்துடுவார்,இதோ வந்துடுவார்னு கணவன் வரும் நேரத்தை காட்டுவதும்  கடிகாரம்தான்.

மொபைல் ஒலித்தது.ஹோ! மொபைல எங்க வச்சேன்,யாரோ ஃபோன் பன்றாங்களேனு சத்தம் வரும் இடத்தை கண்டுபிடித்து  ஓடிப்போய்  எடுத்தாள்.அம்மா காலிங் என்பதை பார்த்தவுடன் அதீத புத்துணர்வுடன் அம்மாவுடன் பேசத்துவங்கினாள்.நலம் விசாரிப்புகள் முடிந்ததும் ஒரே போரடிக்குதும்மா எதுலையும் மனசு ஒன்றமாட்டேங்கிறது என்றாள் மஞ்சு.உனக்குனு ஒரு குழந்தை வந்துட்டுனா சரியாகிடும்னு அம்மா சொன்னதும் ”அம்மா” என்று தீர்க்கமாக குரல் கொடுத்தாள் மஞ்சு.

சரி மஞ்சு, ஒரு விசயம் ஞாபகப்படுத்ததான் ஃபோன் செய்தேன்,நாளைக்குதான் மார்கழி பிறக்குது.போன மார்கழியில் எங்களோட இருந்த,நான் வேண்டின தெய்வங்கள்  உனக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுத்துருக்கு,இந்த மார்கழிக்கு உன் கணவன் வீட்டில் இருந்தாலும் நம்ம வீட்லமாதிரியே காலையில் எழுந்து குளிச்சிட்டு,சாமி படத்துக்கிட்டயும்,வாசலிலும் விளக்கேத்திவச்சுடு,கலர் மாவு கிடச்சதுன்னா கலர் கோலம் போடு..என்றதும் கொஞ்சலும்,டென்சனுமாய் “அம்மா நீ வேற ஏம்மா என்னை டென்சனாக்குற, க்வாட்ரசில்  ரெண்டு  ஆள்  சேர்ந்தாப்ல நிக்கமுடியாத வாசல், அதுவும் இரண்டாம் மாடியில் இருக்கேன் .கல்யாணம் ஆகி வந்தப்பவே ஆசையா கோலம்மாவ கண்டுபிடித்து வாங்கி இந்த சின்ன வாசலில் சின்ன கோலம் போட்டதற்கே என் வீட்டு வாசல் வழியா போற பக்கத்து வீட்டுக்காரங்களெல்லாம் செய்யக்கூடாத குத்தம் செஞ்சிட்ட மாதிரி பார்த்தாங்க,சாக்பீஸ்ல கோலம்  போடுங்க,கோல ஸ்டிக்கர் வாங்கி ஒட்டிவைங்கனு உலக அட்வைஸ் கொடுத்தாங்க.அன்னைக்கே கோலம் போடுற ஆசையே விட்டுப்போச்சுன்னு சொன்னேன்ல,கலர் கோலத்த ஞாபகபடுத்தி வெறுப்பேத்திறியேம்மா”

சரி மஞ்சு உனக்கு அங்க தோது எப்படியோ அப்படி செய்ம்மா.சாஸ்த்திர சம்பிராதயங்கள மறந்திடாதம்மா,உன் வீட்டுக்காரரையும் நீதான் பாத்துக்கனும்,சந்தோசமா இருக்கனும்மா,அனுசரிச்சு நடந்துக்கோம்மா சரி வச்சிடுறேம்மான்னு ஃபோனை வைக்க மனசில்லாமல் இருவரும் பேசி முடித்தனர். தன் பெற்றோருடன் வாழ்ந்த மார்கழி மாதங்களின் நினைவுகளை நினைத்து தனக்குத்தானே ரசித்துக்கொண்டிருந்தவளை வாசலின் அழைப்பு மணியோசை தடுத்தது.கடிகாரத்தைப் பார்த்தாள் ஆறேகால்.ஹை... கணவராதானிருக்கும்னு ஆசையாய் ஓடினாள்.


கதவைத் திறந்தவுடன் “ஹ்ம்!.....  மஞ்சு இன்னைக்கு பொழுது எப்படி போனுச்சு,எனிதிங் ப்ராப்ளம்னு” கேட்டவர் மஞ்சுவின் கணவர்தான்.அதெல்லாம் ஒன்னுமில்ல,உள்ள வாங்கன்னு அன்பாய் வரவேற்று அவளும்  அந்த வீட்டிற்குள் புதிதாய்  நுழைவது போல உணர்ந்தாள்.இனி  கண்டுக்கவே மாட்டாள்னு கடிகார முட்கள் புலம்பியபடி சுற்றின.ஒரு   டீ எடுத்துட்டு வரவா? ஸ்நாகஸ் எடுத்துட்டு வரவா என்றாள் மஞ்சு.ஒரு கப் டீ போதுமென பதில் வந்ததும்  அதே அடுப்படிக்கு பறந்து செல்லாத குறையாக சென்று இரண்டு கப் டீ ரெடி செய்தாள்.விளக்கி கழுவ வேண்டிய பாத்திரங்கள் எதுவும் அவள் கண்களுக்குத் தெரியவில்லை.


ஃப்ரஷ் ஆகிட்டு கணினி முன் அமர்ந்திருந்த கணவரிடம் டீ எடுத்துக்கங்க என்று சொல்லி தானும் அருகே அமர்ந்து டீயை பருகியபடி உங்களுக்கு இன்னைக்கு ஆபிசில் வேலையெல்லாம் நல்லபடியா நடந்துச்சா என்றாள்.அஸ்யூஸ்வல் என்றார் மஞ்சுவின் கணவர்.நாளைக்கு மார்கழி
மாதம் பிறக்குதுங்க,என் அம்மா ஃபோனில் பேசினாங்க,அம்மாவும் சொன்னாங்க.தென்,வேறென்ன விசேசம் என்றார் மஞ்சுவின் கணவர்.என்னங்க இப்படி சொல்றீங்க.மார்கழி பிறந்தால் எவ்ளோ ஜாலியா இருப்பேன் தெரியுமா!ஊதக்காற்றிலும்,குளிரிலும் விடியகாலையில் கோலம் போடுறதே தனி சந்தோசம்.

அப்ப கோலம் போடுவதில் வித்தகின்னு சொல்லு,மார்கழி மாத குளிரில் நல்லா தூங்கதான் எனக்கு பிடிக்கும் என்றார் மஞ்சுவின் கணவர்.என்னையவிட என் அம்மாதான் சூப்பரா கோலம் போடுவாங்க,எனக்கு கலர் அடித்து கோலத்தை அலங்கரிப்பதுதான் ரொம்ப பிடிக்கும்.கலர் மாவை டப்பாக்களில் சேகரித்து வச்சிருப்பேன்,கடை கடையா போய் கலர் பொடி வாங்குவேன்,எங்க தெருவில் வரும்  கலர் பொடி விற்பவரையும் விடமாட்டேன்.இல்லாத மற்றும் வித்தியாசமான கலர்களை வாங்கிப்பேன்.

கலர் மாவுடன் வெளைக் கோலமாவை கலந்து அடித்தாலும் நல்லாருக்கும்.  அப்படியே அடித்தாலும் நேச்சுரலா இருக்கும்.கோலத்திற்கு கலர் கொடுப்பதிலும்,கலர் காம்பினேசன் கொடுப்பதிலும்,பிறகு வெளிக்கோடு கொடுப்பதிலும் எவ்ளோ டெக்னிக் இருக்குத் தெரியுமா?எங்க தெருவில் யாரு சீக்கிரம் எழுந்து கோலம் போடுறாங்கன்னு போட்டி போட்டு கோலம் போடுவோம்.கோலத்த போட்டு கலர் கொடுத்திட்டு அக்கம்பக்கத்து வீட்டு கோலத்தை போய் பாத்திட்டு யாரோட கோலம் நல்லாருக்குன்னு வாக்கு வாதம் செய்வோம்.

பள்ளி படிக்கும்போது கூட படிக்கிறவங்க சொல்றத கேட்டு நானும் செங்ககல்லை அறைத்து அதை ஒரு கலரா வச்சுக்குவேன், ஃபில்ட்டர் காப்பித்தூளை உலர்த்தி அதையும் ஒரு கலரா போடுவேன்.நாளைக்கு என்ன கோலம்,கலர் என்னென்ன கொடுக்கலாமென  முதல் நாளே முடிவு செய்திடுவோம்.பக்கத்து வீட்டிற்கு கூட நாளை போடப்போகும் கோலத்தை தெரியாமா ரகசியமா வச்சுக்குவோம்.பூசனி,அல்லது பரங்கிப் பூவை கோலத்தின் நடுவே வைப்போம் பாருங்க,அது தனி அழகு.ஆனா பொழுது விடிந்ததும் ரோட்டில ஆடு,மாடு போனுச்சுனா அந்த பூவை தின்னுட்டு போய்டும்.

எங்க வீட்டுக்கு பக்கத்தில கோவில்,குளம் இருக்குல்ல,கோவில்ல திருவெம்பாவை,திருப்பாவை பாட்டு போடுவாங்க,அந்த பக்கம் உள்ள மாரியம்மன் கோவில்ல பாட்டு கேக்கும்,அந்த பாட்டுக்களை கேட்டுகிட்டே,அம்மா வாசலில் ஏற்றி வச்சிருக்கும்,விளக்கு,அகர்பத்தி வாசனை,காலங்காத்தால அய்யப்ப சாமிக்கு மாலை போட்டவங்களெல்லாம் குளத்திற்கு,குளிக்க போவாங்க,படிதுறையிலிருந்து  குளிரில் சாமியோ,அய்யப்போன்னு சொல்லிக்கிட்டு வருவதும்,அவர்களின்  சந்தன வாசனையும் மணக்க,மணக்க கலர் கொடுப்போம்.ரோட்ல போறவங்க,வர்றவங்க எங்க வீட்டு கோலத்தை எப்படி பாக்குறாங்க,மிதிக்காம போறாங்களான்னு பள்ளி,கல்லூரி போகும் வரை அப்பப்ப வாசலில் வந்து வந்து பாப்பேன்.

சைக்களில்,பைக்கில் போறவங்க நாம நின்னா கோலத்தில் ஏத்தாம போவாங்க.ஆனா சில நல்லவங்க ஆள் இருந்தாலும்,இல்லன்னாலும் கோலத்தை வீணாக்காம ஒதுங்கி போவாங்க.சாய்ங்காலம் நான் வரும் வரை வாசலை பெருக்கிடாதம்மான்னு சொல்லிட்டு போவேன்.எங்க தெருவில் மட்டுமில்லாம பள்ளி,கல்லூரி போகும்போது மற்ற வீடுகளிலும் என்னென்ன கோலம்,எப்படி கலர் கொடுத்திருக்காங்கன்னு பாத்துக்கிட்டே போவேன்.ஃபிரண்ட்ஸ்ங்களுடனும் காலையில் அவங்கவங்க போட்ட கோலத்தபத்திதான் முதல்ல பேசுவோம்.அன்றைய கோலம் அன்றே மறைந்துபோவதில் எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கும்னு பட,படன்னு சொல்லி முடித்தாள் மஞ்சு.

நானும் கோலங்களை பாத்திருக்கேன்,ஆனா இவ்ளோ விசியம்,அதுவும் நீ இத்தனை ஆர்வம்மா இருப்பன்னு இப்பதான் தெரிஞ்சுகிட்டேன் மஞ்சு.ஆனா இப்போ நீ நம்ம வீட்டு வாசலில் எட்டு புள்ளிலகூட கோலம் போட முடியாதே,சரி பரவாயில்ல நாளையிலிருந்து சின்ன,சின்ன கோலம்,பூ வரைந்து கலர் கொடுத்துவை.நீ போடும் கோலம் அழியாமல் நான் ஃபோட்டோ எடுத்து வச்சுடறேன் என்றார் மஞ்சுவின் கணவர்.மஞ்சுவிற்கு ஆனந்தம் உச்சிக்கு போனது.ஆனால் வருத்தமுடன் கலர் பொடி இல்லைங்க என்றாள்.ஓகே ரெடியாகு,கடெத்தெரு போய் கலர் பொடி எங்கு கிடக்கும்னு விசாரிச்சு உனக்கு பிடித்த கலர்களை வாங்கிட்டு வந்திடலாம்னு கணவர் சொன்னதும் உடனே தயாரானாள் மஞ்சு.பத்து கலர்,கலர் மாவு வைக்க டப்பாக்களுடன் வந்தனர்.வந்தும் ஆர்வமுடன் டப்பாக்களில் போட்டு,இடுவதற்கு சிறிய  துணிகளை ரெடி செய்து அனைத்து கலர் டப்பாக்களுக்கும் கொண்டை போட்டது போல வைத்தாள்.

அன்று இரவு மஞ்சுவிற்கு கை,கால் புரியவில்லை.நாளை என்ன கோலம் போடலாம்,கலர் கொடுக்கலாம்னு நினத்துக்கொண்டே வேலைகளை சுறுசுறுப்பாக முடித்தாள்.வாசலை போய் பார்ப்பதும் உள்ளே வருவதுமாக இருந்தாள்.இந்த சின்ன வாசலில் சின்ன கோலம் போட்டாலும் பாக்கிறவங்க எல்லோரும் சூப்பரா இருக்குன்னு சொல்லனும்னு நினைத்துக்கொண்டாள்.நாலரைக்கு அலாரம் வைத்துவிட்டு படுத்தவளுக்கு தூக்கமே வரவில்லை.திடீர்னு விழித்துப் பார்த்தாள்.ஓ! தூங்கிட்டேன்னா, அப்பா இன்னும் நாலரை ஆகல.சே இந்த கடிகாரம் நமக்கு வேணுங்கும்போது ஓடாதுன்னு புலம்பிகிட்டே மூன்று மணிக்கெல்லாம் எழுந்தவள் காலை வேலைகளை துவங்கினாள்.குளித்துவிட்டு வந்து விளக்கேற்றினாள்.


சிமெண்ட் தரையான சின்ன வாசலை ஈரத்துணியால் தேய்த்து,தேய்த்து சுத்தம் செய்தாள்.அலாரம் அடித்தபின் நிறுத்திவிட்டு கோல மாவு மற்றும் கலர் மாவுக்களை சீர்வரிசை எடுத்து வருவது போல எடுத்து வந்து, ஆலோசித்து வைத்திருந்த ஒரு ரோஜா,இருபக்கமும் அதைவிட குட்டி ரோஜாப்பூவை வரைந்து மூன்று ரோஜாக்களையும் ஒரே வட்டத்திற்குள்  இருப்பதாய்   சுற்றிலும் அலங்கரித்தாள்.பூக்கள் சிறியதாய் இருந்தாலும் பெரிய ரோஜா சிவப்பு கலரும்,இரு பக்க குட்டி ரோஜாக்களுக்கு ரோஸ் கலரும் மெகந்தி டிசைன் போன்ற வட்ட வடிவிற்கு மற்ற வண்ணங்களும் பிரிண்ட் போட்டது போல அழகாய் மிளிர்ந்தது கோலம்.

கணவனை எழுப்பி கோலத்தை பார்க்க சொல்லனும்,தன் வீட்டுக்கு ஃபோன் பன்னனும்னு யோசித்துக்கொண்டே கலர் சீர் வரிசைகளை பத்திரமாக வீட்டிற்குள் எடுத்துச்சென்றாள்.வாசலில் காலடி சப்தம் கேட்டு அவசரமாக ஓடிப்போய் பார்த்தாள்.பக்கத்து வீட்டு அன்கிள்  தன் கால் செருப்பில் கோலம்  ஒட்டிவிட்டதை முகம் சுழித்து  பார்த்துக்கொண்டிருந்தார். இடிந்து போன மஞ்சு அன்கிள் என்றதும்,வாக்கிங் போக கிளம்பினேன்,சாரி மஞ்சு நான் கவனிக்கல, என்று நடந்து போனவர் சில அடிகள் மிதித்த பிரிண்டை வலது  பக்கத்து வீடு வரை இட்டுச்சென்றார்.

லேசாக அழிந்திருந்த இடத்தை  மீண்டும் நிரப்புவோமா என்று நிலையோடு நிலையாக நின்று மஞ்சு யோசித்துக்கொண்டிருக்கையில் இடது புற மூன்றாவது வீட்டிலிருந்து சைக்களை தள்ளிகிட்டு  ட்யூசனக்கு புறப்பட்ட  ஜனனி ,ஹை சூப்பரா இருக்குக்கா ரெங்கோலி என்றாள்.மஞ்சுவிற்கு இப்பதான் தெளிவே வந்தது.மஞ்சு அக்கா இப்ப நான் சைக்களுடன் எப்படி ஓரமா போறது என்றதும் மஞ்சுவிற்கு நெஞ்சடைத்துவிட்டது.ஜனனி உன் சைக்களை நானே இந்தப் பக்கம் எடுத்து வச்சுடறேன்,நீ ஓரமா தாண்டிப் போம்மா என்றாள்.பத்திரமாக கோலத்தைக் காப்பாற்றி சைக்களை இந்தப் பக்கம் இழுத்து,எடுத்து வைத்தாள் மஞ்சு.ஓரமாகத் தாண்டினாலும் ஆறாவது படிக்கும் ஜனனியின் கால் மூன்றாவது குட்டி ரோஜாவின் காம்பினை சுத்தமாக அழித்துவிட்டது.மஞ்சுவிற்கு துக்கம் தொண்டையில் அடைத்தது,ஜனனியும் சாரி சொல்லிவிட்டு சைக்களுடன் புறப்பட்டாள்.

மீண்டும் கலர் மாவை எடுக்க போனவளை மஞ்சு... என்று கூப்பிடும் குரல் கேட்டு வாசலுக்கு வந்தாள் மஞ்சு.பக்கத்து வீட்டு ஆன்ட்டிதான் கூப்பிட்டுள்ளார்.மஞ்சுவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி.அவள் ஆசை,ஆசையாய் வரைந்திருந்த சிவப்பு ரோஜாவை சிதைத்தபடி செய்தித்தாள் சுருள் கிடந்தது. நியூஸ் பேப்பர் எடுக்க வந்தேன் மஞ்சு,அந்த கடங்காரந்தான் கீழிருந்தபடி விட்டெறிவானே,பேப்பர தூக்கிப்போட்டு உன் கோலத்தை வீணடிச்சிட்டான்பாரு,நீ இங்க குடித்தனம் வந்து கோலம் போட்டபோதே சொன்னேன்ல பெயிண்ட்ல கோலம் போடு,இல்லைன்னா ஸ்டிக்கர் கோலத்தை ஒட்டிவைன்னு சொல்லியிருக்கேன்ல என்றார் ஆன்ட்டி.

வாசலை சுத்தம் செய்ய வந்த வலதுபுற பக்கத்து வீட்டு பெண்மணி வேதனையுடன் நின்ற மஞ்சுவை  ,என்ன மஞ்சு எங்க வீட்டுக்கும் சேத்து கோலம் போட்ருவ போலருக்கு,உன் கோலத்தை மிதிச்சவங்க என் வீட்டு வாசல் வரை தடவிட்டு போய்ருக்காங்க போலருக்கு,இனி எல்லோரும் ட்யூட்டிக்கு கிளம்புற நேரம்,உனக்காக உன் வீட்டு வாசலில் குதிச்சு,குதிச்சு போவாங்களா?,அப்படி போகலைன்னா இன்னைக்கு முழுதும் நானும் வாசலை தொடைச்சிகிட்டே இருக்கனும் போலருக்கே என்றார்.

அதற்கு மேல் மஞ்சுவால் தாங்க முடியவில்லை.மேலும் மற்றவர்கள் தன் கோலத்தினை கலைப்பதைவிட,காலத்தின் கோலத்தினை மனதில் கொண்டு ஆசையாக வரைந்த கோலத்தை ஈரத்துணியால் துடைத்தெடுத்தாள்.
**************************************************************** முற்று.*********

இந்த கதை 31/12/2011 அன்று அதீதம் மின்னிதழில் வெளிவந்துள்ளது.

இந்த கதையை மின்னிதழில் வெளியிட  வழிமுறைகள் தெரியாது.
மின்னிதழில் வெளியிட உதவிய சகோதரருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

May 20, 2011

வாழ்வியல் கதைகள் 20/5/2011

(1)   ஒரு சாது முப்பது வருடங்களாக இமாலயத்தில் தியானத்தில் இருந்தார்.முப்பது வருடங்களில் தன் ஆன்மாவின் அகங்காரம் முற்றிலும் அழிந்து அமைதியாகிவிட்டதாக,முக்தியடைந்து விட்டதாகத் தோன்றியது.அவரை சந்திக்க வந்த சீடர்களில் ஒருவன் மலை அடிவாரத்தில் திருவிழா நடைபெறுவதால் பங்குபெற அழைத்தான்.
அழைப்பை ஏற்று திருவிழாவிற்கு சென்ற சாதுவின் காலை கூட்ட      நெரிசலில் மனிதன் ஒருவன் மிதித்துவிட்டான்.மிதித்த வேகத்திற்கு அந்த சாதுவிற்கு சுல்லென்று கோபம்,வலி தலைக்கேறியது.சாது தன் நிலை கண்டு வியப்படைந்தார்.முப்பது வருட இமாலய வாழ்நாளில் காண முடியாதது,இன்று ஒரு மனிதன் கால் பட்டதால்  நிதர்சனம் ஆயிற்று.
(2)
சிறப்பாக ஆட்சி செய்துகொண்டிருந்த அரசனுக்கு வெகுநாட்களாக தமது எல்லையில் வாழும் சந்நியாசி ஒருவரை தனது அரண்மனைக்கு அழைத்து விருந்து உபசரிக்க ஆசைப்பட்டார்.சந்நியாசி ஒருவரை தரிசித்து,வணங்கிதாங்கள் இங்கு வெகுநாட்களாக வாழ்கிறீர்கள்,தியானம்,தவம் செய்கிறீர்கள் என்பதை அறிவேன்.தாங்கள் எனது அரண்மனையில்  தங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்என்றார்.அதற்கு சந்நியாசி மறுப்பேதும் இல்லாமல் சரி வா போகலாம்,உன் விருப்பம்படியே தங்குகிறேன் என உடனே சம்மதம் தெரிவித்தார்.

அரசனுக்கு ஆச்சர்யம்.இவர் என்ன சந்நியாசி?கேட்டவுடன் சம்மதித்துவிட்டாரே!இவர் உண்மையான சந்நியாசிதானா என்ற சந்தேகம் எழுந்தது.பற்றற்றவனுக்கு அரண்மனை தேவயில்லையென சந்நியாசி வாதிடவில்லையே என்ற குழப்பத்துடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.
அரண்மனையில் சந்நியாசிக்கு அரசனுக்கு நிகரான மரியாதை,ஆடை ,அலங்காரம்,உணவு ,உபச்சாரம் வழங்கப்பட்டது.சந்நியாசி அனைத்தையும் எற்றுக் கொண்டார்.வயிர் நிரம்ப உண்டார்,அரச ஆடைகள்,அணிகலன்களை அணிந்துகொண்டார்,ஆடம்பர படுக்கையில் உறங்கினார்.பல நாட்கள் சென்றது.அரசனுக்கு சந்தேகம் அதிகரித்தது.இத்தனை நாள் அரண்மனையிலே இருக்கிறாரே,மீண்டும் தனது பழைய நிலைக்கு,இடத்திற்கு செல்ல சந்நியாசிக்கு விருப்பமில்லையா?அரண்மனை வாசியாகிவிட்டாரே?என தன் சந்தேகத்தை சந்நியாசியிடமே கேட்டுவிட முடிவு செய்தான் அரசன்.

சந்நியாசியிடம் சென்றுஐயா எனக்கு ஒரு சந்தேகம்என்றான் அரசன்.என்னை அழைத்த முதல் நாளே உனக்கு சந்தேகம்  வந்துவிட்டது. ஆயினும் கேள்  என்றார் சந்நியாசி.நீங்கள் எப்படிப்பட்ட சந்நியாசி? என்பதே என் சந்தேகம் என்றான் அரசன்.பதில் வேண்டுமாயின் என்னுடன் வா என்று அரசனை அழைத்துச் சென்றார் சந்நியாசி.அரண்மனையிலிருந்து வெகுதூரம் சென்றும் சந்நியாசி பதில் சொல்லவில்லை.ஊர் எல்லை வந்தவுடன் எங்கு அழைத்துச் செல்கிறீகள் என்றான் அரசன்.உன் கேள்விக்கு பதில் சொல்லத்தான்,மேலும் என்னுடன் நட என்று வெகு தூரம் அழைத்துச் சென்றுவிட்டார் சந்நியாசி.பொழுதும் போய்விட்டது.

அரசன் மீண்டும் சந்நியாசியை நிறுத்தி பொழுதே போய்விட்டது,எங்கே போகிறீர்கள்,என் கேள்விக்கு பதிலும் சொல்லவில்லயே என்றான்.இனி நான் திரும்ப போவதில்லை என்பதே என் பதில்,தொடர்ந்து செல்லப் போகிறேன் விரும்பினால் என்னுடன் வா, என்றார் சந்நியாசி.அரசன் அதிர்ச்சியடைந்து,என்னால் வர முடியாது,என் நாடு,மக்கள்,என் குடும்பம்,அரசாட்சி உள்ளது.அனைத்தையும் விட்டு என்னால் எப்படி வர இயலும் என்றார்.
உன் கேள்விக்கு பதில் கண்டுகொள்ள முடிந்தால் உணர்ந்துகொள்,நான் தொடர்ந்து செல்லப் போகிறேன்,எனக்கு என்னுடையது என்று எதுவும் இல்லை,எனக்கு சொந்தமானது எதுவும் இல்லை.இத்தனை நாள் உன் அரண்மனையில் நான் இருந்தேனே தவிர எனக்குள் உன் அரண்மனை  இல்லை என்றார் சந்நியாசி.

சந்நியாசியின் காலில் விழுந்து, என் பிரேமை விலகியது,என் வாழ்நாள் முழுவதும் பச்சாதாபம் ஏற்படும்,எனவே என்னுடன் வந்து அருள்புரியுங்கள் என்றான் அரசன்.மீண்டும் வர தயார்,ஆனால் மீண்டும் உனக்கு சந்தேகம் தோன்றும்.எனக்கு ஒரு பேதமும் இல்லை.உன்னிடம் கருணை கொண்ட அனுதாபம் என்னை நேராகச் செல்லப் பணிக்கிறது என்று பதிலளித்து சந்நியாசி தன் வழியில் சென்றார்.
*********************************************************************************************************************

Apr 23, 2011

வாழ்வியல் கதைகள் (23/4/2011)

[1]
.கெளதம புத்தர் ஒரு கிராமத்தில் இருந்தபோது ஒருவன் புத்தரிடம் சென்று “ மனிதன் அனைவரும் மோட்சத்தை அடைய முடியும் என்கிறீர்கள்,ஆனால் எவரும் மோட்சத்தை அடைவதில்லை,அடைவதாகத் தெரியவில்லையே ”என்று கேட்டான்.
புத்தர், நண்பரே ! ஒரு வேலை செய் ! கிராமத்தினுள் சென்று எல்லோரிடமும் அவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள்? என்பதைக் கேட்டு  பெயர் வாரியாக அவர்களின்  பதிலை பட்டியலிட்டு வா என்று அனுப்பிவைத்தார்.அவனும் கிராமத்தில் அனைவரிடமும் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதைக்  கேட்டு பெயர் வாரியாக விருப்பங்களை எழுதினான்.இந்த பட்டியலை புத்தரிடம் சமர்ப்பித்தான்.
இதில் எத்தனை பேர் மோட்சத்தை அடைய விரும்புகிறார்கள் பட்டியலைப் பார்த்து சொல் என்றார் புத்தர்.அவன் பதில் இல்லாமல் தவித்தான்.ஏனெனில் ஒருவரும் மோட்சத்தை அடைய விரும்புவதாகக் கூறவில்லை.
புரிந்துகொள் நண்பனே ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடைய முடியும் என்று கூறினனே தவிர ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடைய விரும்புகிறார்கள் என சொல்லவில்லை.விரும்புகிறவன் மட்டுமே விரும்பியதை அடைய முடியும் என்றார் புத்தர்.  
[2.]
ஒரு பெளர்ணமி இரவு.நதியோரம் சிலுசிலுவென காற்று ரம்மியமாக இருந்தது.நான்கு நண்பர்கள் இதை ரசித்த வண்ணம் மது அருந்தினார்கள்.நதியில் படகில் செல்ல முற்பட்டனர்.நல்ல போதையில் பெளர்ணமி இரவை ரசித்தபடி துடுப்பை நீருக்குள் வலித்து,வலித்து படகுப் பயணம் மேற்கொண்டனர்.
பொழுது விடிந்தது,சூரிய ஒளி ஒளிர போதையும் தூக்கமும் தெளிந்தது.இரவு முழுதும் பயணம் செய்தோமே எங்கு வந்துள்ளோம்,வழி என்ன ,எப்படி வீடு போய் சேருவது என ஒருவருக்கொருவர் கலந்துரையாடிய போது, ஒருவன் சொன்னான்  டேய் நாம் நம்ம ஊரில்தான் இருக்கிறோம்,இதோ பார் இது நம்ம ஊரு ஆற்றங்கரைதான் என்றான்.
பிறகுதான் கவனித்தனர் இரவு படகுப் பயணம் துவங்கும் முன் நதிக்கரையில் கட்டப்பட்டிருந்த படகை அவிழ்த்துவிடாமலே  போதையில் துடுப்பை மாங்கு மாங்குனு வலித்து இருந்துருக்கின்றனர்.
தனது படகைக் கரையினின்று அவிழ்த்து விடாதவர்கள் முடிவற்ற பரம்பொருளின் சாகரத்தில் எத்தனை தவித்தாலும்,கூக்குரலிட்டாலும் அவர்களுக்கு கதி எதுவும் கிடையாது.

Apr 15, 2011

விடலைப் பருவத்தினிலே - பகுதி 6


தாயும் மகளும் மறுநாள் காலை புறப்பட்டனர், அம்மாவின் நடவடிக்கையால்ஆர்த்திக்கு சந்தோஷ் மாமாவை பாக்கப் போகிறோமென்ற சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.ஆர்த்திக்கு மனதில் பல சந்தேகங்கள்,கேள்விகள் தோன்றினாலும் அம்மா நேத்திக்கடனை செலுத்திவிட்டு  நாளையே புறப்பட்டுவிடுவோம்னுதான் கூட்டிட்டுப் போறாங்க ,எனவே நாளைக்குள் சந்தோஷ் மாமாவிடம் எப்படியாவது மனமார பேசிடனும்,ஸ்வாதி சொன்னது போல சந்தோஷ் மாமா மனதில் நான் இருக்கிறேனா என்பதை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டுமென்ற உறுதியுடன்,நிச்சயமா சந்தோஷ் மாமாவும் தன்னை  விரும்பிக் கொண்டிதானிருப்பார் என்ற நம்பிக்கையுடன் பயணித்தாள் ஆர்த்தி.
பயணம் முடிந்து பேருந்தை விட்டு இறங்கி இருவரும் சந்தோஷ் வீடு நோக்கி நடந்தனர்.தேடினால் தேடியது கிடைக்கும் என்பது போல ஆர்த்தியின் கண்களுக்கு தன்னைச் சுற்றி இருப்பது எதுவும்  தெரியவில்லை, சந்தோஷ் தன் வீட்டு வாசலில் யாரோ ஒரு பெரியவருடன் பேசிக்கொண்டிருந்ததுதான் ஆர்த்தியின் கண்களுக்குத் தெரிந்தது.தூரத்திலிருந்து பார்த்த ஆர்த்தி, நறுமணம் மிகுந்த தோட்டத்தில் சிறகு விரித்து பறந்து செல்ல இயலாத பட்டாம்பூச்சியாய் பூரித்த முகத்துடன் அம்மாவிற்கு தன்னிலை தெரிந்துவிடக் கூடாதென்று பவ்யமாய் நடந்து சென்றாள் ஆர்த்தி.சந்தோஷ் வீட்டின்  அருகே இருவரும் சென்றதும்,சற்றும் எதிர்பார்க்காத சந்தோஷ் ஆச்சரியத்துடன் வந்தவர்களை  வாய் நிறைய ” வாங்கத்த,வா ஆர்த்தி “ என்றதும் ஆர்த்திக்கு இதயத் துடிப்பு நின்றே போனது.

சந்தோஷின் அழைப்பிற்கு புன்னகையுடன் தலையசைத்த ஆர்த்தியின் அம்மா, சிலையாய் நிற்க முயலுகிற தன் மகளின் தோல்பட்டையை அசைத்து  போமா என்று வீட்டினுள் அழைத்துச் சென்றாள் ஆர்த்தியின் அம்மா.உள்ளே சென்றதும் வரவேற்த்த அத்தை,மாமா முன் தன்னை சாதரணமானவளாகக் கஷ்டப்ட்டுக் காட்டிக்கொண்டாள் ஆர்த்தி.அவள் கண்கள் சந்தோஷ் மாமாவை பார்த்தும் பார்க்காதது போல அவன் இருக்கும் இடத்தையே வட்டமிட்டுக் கொண்டிருந்தாலும்,மனமெல்லாம் சந்தோஷ் மாமாவிடம் எப்படி,எங்கு,என்ன பேசுவது,வாய்ப்பு கிடைக்கனுமேனு படபடத்துக் கொண்டிருந்தது.மனதுக்குள் வேண்டாத சாமிகளையெல்லாம் வேண்டிக் கொண்டாள்,எந்த மாரியம்மனுக்கு நேத்திகடன் செலுத்துவதற்காக வந்திருக்கிறாளோ அந்த மாரியம்மனிடமும் சந்தோஷ் மாமாகிட்ட பேசி,எல்லாம் நல்லபடியா நடந்து சந்தோஷ் மாமாவின் மனைவியாகிட்டா தினமும் உன்னை தரிச்சு வழிபடுவேன்னு மனதிற்குள் வேண்டிக்கொண்டாள்.  
கடுதாசி போட்டுருந்தீனா பஸ்ஸ்டாண்டுக்கு வந்து அழச்சுட்டு வந்திருப்பேனே,வந்ததில் சந்தோசம்,திடீர்னு வந்திருக்க,எதாவது முக்கியமான விசியமா நாங்க தெரிஞ்சுக்கலாமா ? என்று ஆர்த்தியின் அம்மாவிடம் விசாரித்தார்,சந்தோஷின் அப்பா.ஒண்ணுமில்லண்ண போனதட இங்க வந்திருந்த போது பக்கத்துல உள்ள மாரியம்மன் கோவிலில் ஆர்த்திக்கு இன்ஜினியரிங் படிக்க சீட் கிடைக்கனும்,கிடைச்சிட்டால் மனங்குளிர அபிஷேக ஆராதனை செய்கிறேனு வேண்டிக்கிட்டேண்ண,இன்ஜினியரிங் சீட் கிடைத்து  இப்ப ஆர்த்தியும் ரெண்டாவது  வருஷமும் படிக்கப்போறா,நாளைக்கு வெள்ளிக்கிழமையே அபிஷேகத்த செய்துட்டு நாளை மதியமே கிளம்பிடலாம்னு இருக்கோம்  என்றாள் ஆர்த்தியின் அம்மா.அப்படினா இன்னைக்கு சாய்ங்காலமே கோவிலுக்கு போய் அய்யர்கிட்ட சொன்னாதான் ஏற்பாடு செய்வார்,என்னென்ன வேணும்னு சொல்வார்,நாம சாய்ங்காலம் போய் சொல்லிட்டு வந்திடுவோம் என்றாள் சந்தோஷின் அம்மா.கடவுளே 24மணி நேரம் கூட நமக்கில்லயேனு 
தவித்துக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.

கலந்துரையாடல்கள் ,உணவு முடிந்து.நான் எதிர் வீட்டு சாந்திய பாத்துட்டு வர்றேனு ஆர்த்தியின் அம்மா கிளம்பினாள்.சந்தோஷ் தன்னை  பொருட்டாக மதிப்பது போல  ஆர்த்தி உணரவில்லை என்றாலும் மீனுக்காக் காத்திருக்கும் கொக்கு போல சந்தோஷிடம் மனம்விட்டு பேச
காத்துக் கொண்டிருந்தாள்.சந்தோஷ் அலமாறியில் எதோ தேடிக் கொண்டிருந்தான்,தைரியத்தை வரவழைத்து அருகே சென்ற ஆர்த்திக்கு  சந்தோஷை மாமானு கூப்பிட்டு பேச்சை ஆரம்பிக்க ஆசை. சந்தோஷ் தன்னை பார்த்தவுடன்   ஆர்த்திக்கு  குரலே இல்லாமல் போய்விட்டது.உடனே   அங்கிருந்து போகிற சந்தோஷை நில்லுங்க மாமானு கூட  அவளால் சொல்ல இயலவில்லை.சந்தோஷை நேரில் பாக்கும் பாக்கியம் கிடைத்தாலும் இந்த ரண வேதனைக்கு நம்ம ஊர்லையே இருந்திருக்கலாம் போலருக்கேனு நொந்துகொண்டிருந்தாள் ஆர்த்தி.சாந்தி அக்கா வீட்டுக்கு போன அம்மாவும் திரும்பி வந்துவிட்டாள்.பிறகு சந்தோஷ் எங்கிருக்கிறானு ஆர்த்தியால் கண்டுபிடிக்க முடியவில்லை.பெரியோர்களுக்குள் அந்த கதை,இந்த கதையெல்லாம்  நடைபெற்றது.பொழுது போகப்போகுது வாங்க அய்யர்ட்ட போய் விபரம் சொல்லிட்டு வந்திடலாம்னு கூப்பிட்ட சந்தோஷ் அம்மாவுடன் புறப்பட்டாள் ஆர்த்தியின் அம்மா.

இதைவிட்டால் வேற சந்தர்ப்பம் அமையாது,எப்படியாவது சந்தோஷ் மாமவிடம் பேசிட வேண்டும்னு சந்தோஷைத் தேடினாள் ஆர்த்தி. சந்தோஷின் அப்பா எதோ எழுதிக் கொண்டிருந்தார்,ஆர்த்தி அங்குமிங்கும் உலாவது கண்டு,என்னம்மா அம்மாவ பாக்குறியா,அவங்க வர பதினஞ்சு நிமிசமாவது ஆகும்,எதாவது புக்கு படிக்கிறியா,உள்ள அலமாறியில புக்ஸ்லாம் இருக்கு,இல்ல டீவீ பாறேன் என்றார்.பரவாயில்லனு ஆர்த்தி சொல்லி முடிப்பதற்குள்  யாரோ ஒருவர் வந்து சந்தோஷ் அப்பாவிடம் பேசத்தொடங்கினார்.சில விநாடியில் ஆர்த்தி வீட்லயே இரும்மா,நான் இவர் வீடு வர போய்ட்டு வந்துடுறேன்,கொஞ்சம் வேலயிருக்கு,சந்தோஷ் சாந்தி வீட்டுக்குதான் போயிருக்கான்,வந்துடுவான்,அம்மா,அத்தயும் இப்ப வந்திடுவாங்க,சரி நான் போயிட்டு வந்திடுறேம்மானு கிளம்பினார் சந்தோஷின் அப்பா.

சாந்தி அக்கா வீட்டுக்கு போய்டுவோமானு நினைத்தாள் ஆர்த்தி.அதற்குள் சந்தோஷ் வீட்டிற்குள் நுழைந்து தோட்டப்பக்கம் சென்றான்,வழி தவறிய  
ஆட்டுக் குட்டி தன் தாயைப் பார்த்ததும் பின்னடியே செல்வது போல ஆர்த்தியும் சந்தோஷ் பின்னே சென்றாள்.ஆர்த்தி வந்து நிற்பது தெரிந்தும் நிமிர்ந்து பாக்காமல் கை கால்களை கழுவிக் கொண்டிருந்தான் சந்தோஷ்.முக்கி முனகி,கஷ்டப்பட்டு ஏன் என்னை அலட்சியப்படுத்றீங்கனு ஆரமித்தாள் ஆர்த்தி,நிமிர்ந்து பார்த்த சந்தோஷ் புன்னகைத்தது, பேருக்கு புன்னகைக்கப்பட்டதாகத் தெரிந்தது, நாளைக்கு நான் ஊருக்கு போய்டுவேன் மறுபடியும் உங்கள எப்ப பாப்பேனு தெரியலனு ஒரு பக்க முகத்தை சுவற்றில் சாய்த்து கண் கலங்கத் துவங்கினாள் ஆர்த்தி.

உம் மனசுல என்ன நினப்புல இருக்க ஆர்த்தி என்றான் சந்தோஷ்.மாமானு உரிமையா கூப்பிட்டு பேசவோ,நான் உங்கள விரும்புறேன் மாமானு சொல்லவோ ஆர்த்திக்கு வாய் வரவில்லை.அழுகை கலந்த அமைதி காத்தவள் என்னை ஏமாத்திடாதிங்க,பதில் சொல்லுங்க என்றாள்.முதல்ல அழுகுறத நிறுத்து,நான் என்ன ஏமாத்தப் போறேன்,உங்கிட்ட பண விசியம்மா எதாவது ஏமாத்தினேனா,இல்ல எதாவது ஆசகாட்டி ஏமத்திட்டேனா என்றான்,நீங்க இப்படிலாம் பேசுறத என்னால தாங்க முடியல,உங்க மனசுல நான் இருக்கேனா இல்லயா? பதில் சொல்லுங்க என கண்ணீர் மல்க கேட்டாள்.நீ தப்பான நினைப்போட இருக்கேனு புரியுது ஆர்த்தி,உன்ன விரும்புறேனு உன்கிட்ட எப்பயாவது சொல்லியிருக்கேனா?நீ என்னய நினச்சிட்டுருனு எப்பாவது சொல்லியிருக்கேனா என சந்தோஷ் கேட்டதும் ஆர்த்தி வெடித்து சிதறாததுதான் பாக்கி,அப்படியே மண்ணில் புதைந்து போக முடியாமல் துன்பத்தில் உழன்றாள் ஆர்த்தி.தனது இரு கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டு குரலையும் வந்த கண்ணீரையும் அடக்கி அழுதாள்.அதற்கு மேல் சந்தோஷிடம் தன் காதலை பேரம் பேச அவளுக்கு மனம் வரவில்லை.

நான் இப்போ சாந்தி அக்கா வீட்ல உன்ன பத்திதான் பேசிட்டு வறேன் என்றான் சந்தோஷ்.விமோட்சம் கிடைத்தது போல கைகளால் மூடிய முகத்தை   விளக்கி சந்தோஷை பார்த்தாள் ஆர்த்தி.இதோ பார் ஆர்த்தி,நீ நினைப்பது போல நான் உன்ன நினைக்கல,உன் படிப்பு வேற, என் படிப்பு வேற.என் படிப்பு சம்மந்தமா படிச்ச பொண்ணுதான் அம்மாவும் தேடிட்டுருக்காங்க.என் அப்பா அம்மாவுக்கு இதுவர எந்த சந்தோசமும் நான் கொடுக்கலனு நினைக்கிறேன்,அவங்க பாத்து ஏற்பாடு செய்ற பொண்ணயே கல்யாணம் செய்தாவது பெத்தவங்கள சந்தோசப்படுத்துறேனே என்று சந்தோஷ் சொன்னதைக் கேட்டு தூக்கி வீசி எறிந்த கண்ணாடியாய் நொறுங்கிப் போனாள்.

நாம சொந்தம்தானே அந்த பொண்ணு நானா இருக்கக் கூடாதா?என கெஞ்சாத குறையாக மன்றாடினாள் ஆர்த்தி.என்ன பெத்தவங்களுக்கோ உன்ன பெத்தவங்களுக்கோ இந்த எண்ணமில்ல என சந்தோஷ் சொன்னதும்,இல்ல எங்க அம்மா என்னப்பத்தி எதோ கண்டுபிடிச்சிடாங்கனு நினைக்கிறேன்,அவங்க முயற்சி இல்லனா,இப்போ நான் இங்க உங்க முன்னாடி நின்னேருந்திருக்க முடியாதுனு வெதும்பினாள்.

நான் போனதட வந்தபோது நீங்க பிகேவ் பன்னது நடிப்பா?இல்ல இப்ப நீங்க பிகேவ் பன்றது நடிப்பா என்றாள் ஆர்த்தி.நான் எப்போதும் ஒரே மாதிரிதானிருக்கேன்,உனக்குதான் புத்தி பேதலிச்சிட்டு,அழுகையை நிறுத்து,போ  முகத்தை கழுவு,நல்லா படி,படிக்கிற வேலய பாரு என்றான் சந்தோஷ்.நான் நம்ப மாட்டேன்.நீங்க ஏமாத்றீங்க.நான் போனதட இங்கு வந்துட்டு ஊருக்கு போனபோது கூட என்னய பாக்கதான பஸ்ஸ்டாண்டுக்கு வந்தீங்க,பஸ் ஏறியபோது ஜன்னல் பக்கமா பாத்தபோது போய்ட்டுவானு  தலையசச்சீங்களே,ஸ்மைல் செய்தீங்களேனு கண்ணீரீல் அடுக்கினாள்      ஆர்த்தி.நினைவுப்படுத்திப் பார்த்தவனாய் ஆமாம் அப்போ என் ஃப்ரண்டும் நானும் பஸ்ஸ்டாண்டில் பேசிட்டுருந்தோம்,அப்ப உங்கள பாத்தேன்,உள்ள போயும் நீ என்ன பாத்ததால் அதற்கு ரஸ்பாண்ட் பன்னேன் அவ்ளவுதான்,அதுக்கு நீ என்ன பேரு வச்சுகிட்டனு சந்தோஷ் கேட்டதும் இத்தனை நாள் தான் சுமந்த காதல் கொச்சைப்படுத்தப்படுவதாக உணர்ந்த ஆர்த்தி பட்ட துன்பத்திற்கு அளவேயில்லை.இப்போ உன்னோட பேச்சைப் பாக்கும்போது நீ  என்னய காதலிக்கிறனு சொல்ற,பதிலுக்கு நான் உன்னய காதலிக்கனும்னு எதிர்பாக்குற அப்படிதானே என்றான் சந்தோஷ்.இதே வார்த்தயை காதல் உணர்வுடன் சொல்லியிருந்தால் ஆர்த்தியின் ஆனந்தமே வேறு.ஆனால் அதற்குமேல் காதல் பிச்சை எடுக்க விரும்பாத ஆர்த்தி,ஓடிப்போய் சாமிபடத்துக்கு முன் கவிழ்ந்து அழத் தொடங்கினாள்.பின் வந்த சந்தோஷ்,முகத்தை கழுவு,அப்பா,அம்மா வந்து கேட்டால் என்ன பதில் சொல்றது உன் நினைப்பை மாத்திக்கோ,எனக்காக விதிக்கப்பட்டவள் நீயில்லை.என் வாழ்க்கைத் துணைவியாக  உன்னை நினைத்துப் பார்த்ததில்லை,நீயா எதொ கற்பனை செய்து கொண்டதற்கு
நான் பொறுப்பில்லை என தான் விரும்பியவனே சொன்னதும்  விரக்தியின் உச்சத்துக்கே சென்ற ஆர்த்தியின் உணர்வு முழுதும் செத்தேபோனது,மரத்துப் போனவளின் கண்ணீரும் நின்று விட்டது. 



Apr 13, 2011

விடலைப் பருவத்தினிலே - பகுதி 5

முன் பகுதி

என் சந்தோஷ் மாமாவைப் பார்த்து ஒரு வருடம் ஆகப்போகிறது,அவரும் என்னைப் பார்க்கவோ,என்கிட்ட பேசவோ முயற்சி செய்யல,அவரைப் பாக்க எனக்கும் எந்த வாய்ப்பும் கிடைக்கல,என்னைப் போலவே அவரும் என்னய விரும்புவார்,விரும்பனும்,நான் அவரப் பாக்கனும்னு அழத் தொடங்கினாள் ஆர்த்தி.

ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்து விரும்பினாலே பல பிரச்சனைகள் இருக்கும்,உன் காதல் ஒரு தலைக் காதல்தான் ஆர்த்தி,உன் மாமாவும் விரும்பியிருந்தால்,அதுவும் சொந்தமாக இருக்கும் பட்சத்தில் இந்நேரம் எதாவது ஒரு விதத்திலாவது உன்னை சந்திக்க,பேச  முயற்சி செய்திருக்கலாம்,இன்று வரை எந்த முயற்சியும் இல்லாத பட்சத்தில் நீ மட்டும் உன் காதலில் புழுங்குவது பைத்தியக்காரத்தனம்தான்,சந்தோஷும் உன்னை விரும்புறார்னு எத வச்சு நீ இப்படிலாம் உன்னைய நீயே கஷ்டப்படுத்திட்டுருக்க  ,காதல் ஸ்லோ பாய்சன்னு நீயும் நிருபிச்சிட்ட என்றாள் ஸ்வாதி.  

நெகடிவா சொல்லாத ஸ்வாதி,சந்தோஷ் மாமா நிச்சயாமா என்னை விரும்புவார் என்று தேமி,தேமி மூச்சடைத்து  சொன்னாள்  ஆர்த்தி.
இங்கபார் ஆர்த்தி,உன் சந்தோஷ் மாமாவும் உன்னய விரும்பினால்தான் உன் காதலுக்கு அர்த்தமுண்டு.அவர் மனசுல நீ இருக்கியானு  தெரிஞ்கிறதுக்கான வழியப்பாரு,சரி டைமாயிடுச்சு,வீட்ல தேடுவாங்க,அப்றம் பஸ் கிடைக்காது,வா போகலாம்,உன் மாமாகிட்ட மனம் திறந்து பேசினால் எல்லாம் சரியாகிடும்,இத நினைச்சு படிப்ப விட்டுடாத என்றாள் ஸ்வாதி.பார்க்கிலிருந்து இருவரும் வீடு திரும்பினர்,ஸ்வாதியிடம் பகிர்ந்து கொண்டதில் ஆர்த்தியின் மனபாரம் சற்று குறைந்தது.

வீங்கிய முகம்,சிவந்த கண்கள்,கேட்பதற்கு பொருந்தாத பதில்,தடுமாற்றங்கள் கொண்ட ஆர்த்தியை  பெற்றோரும் கவனித்தும் கவனிக்காதது போலவே இருந்தனர்.இனம் புரியா ஏகத்திலும்,குழப்பத்திலும் செமஸ்டரை முடித்தாள் ஆர்த்தி.படிப்பின் இரண்டாமவது ஆண்டு துவங்கும் முன் சந்தோஷ் மாமாவின் மனதில் நீ இருக்கியானு தெரிந்துகொண்டு வா என விடைபெற்றாள் ஸ்வாதி.ஆர்த்திக்கு சரியான சாப்பாடு,தூக்கம் குறைந்து கொண்டிருக்க,  வீட்டை விட்டு எங்கும் பயணம் போவது பற்றி  பெற்றோரிடத்தில் எந்த பேச்சும் அடிபாடாதது கண்டு வெதும்பிக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.

ஒருநாள் அப்பாவிடம் சென்று அப்பா எனக்கு வீட்டுல இருக்க போரடிக்குது,அத்த மாமாவ பாத்தும் ஒரு வருசமாயிட்டு அத்த வீட்டுக்கு போலாமாப்பா என்றாள் ஆர்த்தி.என்னடா ஆர்த்தி நீ இன்னும் குழந்தையில்ல,அத்த வீட்டுக்கு போலாம், ஆட்டுக்குட்டி  வீட்டுக்கு போலான்றதுக்கு,அதோட அத்தயும் முன்ன மாதிரி இல்லடா,சந்தோசுக்கும் படிப்பு முடிஞ்சுட்டு,கல்யாணத்துக்கு பொண்ணு பாத்திட்ருக்காங்கனு வேற கேள்விப்பட்டேன்,இந்த நேரத்ல நாம அங்க போறது சரியில்லடா ஆர்த்தி,வேற எங்காவது கோயில் கொளத்துக்குனா ரெண்டு நாள் ட்ரிப்மாதிரி போவோமானு ஆர்த்தியின் அப்பா சொல்லிக் கொண்டிருக்க ஆர்த்தி உறைந்தே போனாள்,என்னடா ஆர்த்தி மூடவுட் ஆயிட்டியானு அப்பா கேட்க,இப்பவும் குளியல்றைக்குள் சென்று எனக்கு ஏன் இந்த உயிரென உருகிப்போனாள்,உருகியது உடல்தான் உயிரல்ல.   

படாரென்று குளியலறையின் கதவைத் திறந்து விட்டாள் ஆர்த்தியின் அம்மா,சற்றும் எதிர்பார்க்காத ஆர்த்தி செய்வதறியாமல் திகைத்து நின்று,ஒன்னுல்லம்மா,ஒன்னுல்லமா என அம்மாவை நேருக்கு நேர் பார்க்க தைரியமில்லாமல் சமாளித்தாள் ஆர்த்தி.ஆர்த்தியின் கையைப் பிடித்து    இழுத்து குளியலறையிலிருந்து வெளியில் நிறுத்திய ஆர்த்தியின் அம்மா,    ,  ஆர்த்தி நீ நாங்க பெத்த பொண்ணுதானா,நாம் ஃபிரண்டு மாதிரிதான பழகினோம்,உனக்கு எந்த விதத்ல என்ன குறை வச்சோம்,எங்க உயிரே  நீதான் ஆர்த்தி,எங்க சக்திக்கு மீறி உன்னய படிக்க வச்சிட்டுருக்கோம்,இப்போ நீ படிச்சிட்டுருக்க,உன்கிட்டேருந்து எதுவும் எதிர்பாத்து உன்னய படிக்க வைக்கல,நீ நல்ல படியா படிச்சு உன் வாழ்க்கை நல்லபடியா  அமையனும்னுதான் நானும் உன் அப்பாவும் எதிர்பார்க்கிறோம்,இப்ப நீ என்ன கஷ்டத்த கண்ட , உலகத்த புரிஞ்சுக்க உனக்கு அனுபவம் பத்தாது,நீ தெரிஞ்சுக்க வேண்டியது எவ்ளவோ இருக்கு, போய் முகத்த அலம்பிட்டு விநாயகர் கோவிலுக்கு போ,முடிஞ்சா அங்கயும் உக்காந்து அழு,தெளிந்த மனசக் கொடுனு  விநாயகர்ட்ட வேண்டிக்க என்று ஆவேசமாய் வீட்டிற்குள் போனாள் ஆர்த்தியின் அம்மா.

தன் நிலைக்கு என்ன காரணம்னு கேள்வி கேக்காமலே அம்மா பேசிய உண்மை  ஈட்டிகள் ஆர்த்தியை துளைத்து எடுத்ததில் சந்தோஷ் மாமாவின் நினைவு பின் தள்ளப்பட்டுள்ளதையும் உணர்ந்தால் ஆர்த்தி.அம்மாவின் முகத்தை ஆர்த்தியால் நேருக்கு நேர் பார்க்க தைரியமில்லை.அன்று இரவு சாப்பிட பெற்றோருடன் அமர்ந்தாள் ஆர்த்தி.உணவு பரிமாறி சாப்பிட ஆரம்பிக்கும்போது, ஆர்த்திக்கு இன்ஜினியரிங் காலேஜ்ல படிக்க வாய்ப்பு கிடைக்கனும்,கிடச்சுட்டுனா சகல அபிஷேகமும் செய்து ஆராதிக்கிறேனு அண்ண வீட்டுக்கு போயிருந்த போது பக்கத்துல  உள்ள மாரியம்மன் கோவிலில் பிராத்தனை செஞ்சிருந்தேன்,ஆர்த்தி ரெண்டாவது வருஷமும் போகப்போறா, ,நாளைக்கு காலையில அண்ணன் வீட்டுக்கு போனா நாளான்னைக்கு வெள்ளிக்  கிழமை நேத்திக்கடன நிறவேத்திட்டு வந்துடலாம்னு இனிய குண்டைப் போட்டாள் ஆர்த்தியின் அம்மா.

பழைய ஆர்த்தியாக இருந்திருந்தாள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருப்பாள் ,ஆனால்  தனக்கு வேப்பிலை அடித்த அம்மா இப்போ மயிலிறகாய் தொடர்வது எதற்கு என்று புரியாமல் தன்னையும் கூட்டிட்டு போவாங்களா என்ற கேள்வியில் நீர்க்குமிழியானாள் ஆர்த்தி. என்ன திடீர்னு சொல்ற,இத்தன நாளா இத பத்தி எதுவுமே பேசல,எனக்கு  கொஞ்சம் வேலயிருக்கு,அடுத்த வாரம் பாக்கலாமா,ஆர்த்தி கூட அத்த வீட்டுக்கு போலாம்னு சொல்லிட்டுருந்தா,நாந்தான் அங்கலாம் இப்ப போனால் சரியிருக்காதுனு சொல்லிட்ட்ருந்தேன்  என்றார் ஆர்த்தியின் அப்பா.இல்லங்க சாமி நேத்திக்கடன்,நாளாயிட்டு வேற,உங்களுக்கு வேல இரு்க்குன்னா, நானும் ஆர்த்தியும் நாளைக்கு   காலையில போய்ட்டு வெள்ளிக்கிழமை இரவுக்குள் வீட்டுக்கு வந்துடுறோமே என்றாள் ஆர்த்தியின் அம்மா.

ஆர்த்தி எதுக்கு,நீ மட்டும் போய்ட்டு வாயேன் என்றார் ஆர்த்தியின் அப்பா.இல்லங்க ஆர்த்திக்காகத்தான் அந்த வேண்டுதலே,அவதான் முக்கியாமா வரனுங்க என்றாள் ஆர்த்தியின் அம்மா.சரி,நாளைக்கு புறப்பிடுங்க,பத்திரமா போய்ட்டு பத்திராமா வாங்க  என்று அனுமதி தந்தார் ஆர்த்தியின் அப்பா.

உள்குத்தாக தர்மடி வாங்கி பல நாள் பட்னி கிடந்தவனுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கிடைத்தது போலிருந்தது ஆர்த்தியின் நிலை.

                                                                                                 
                                                                                                     தொடரும்.........

Apr 12, 2011

விடலைப் பருவத்தினிலே - பகுதி 4

அண்ணன் ஏன் தபால் கூட போடல,ஒரு நாளைக்கு நாம அண்ண வீட்டுக்கு போய் என்ன ஏதுனு விசாரிச்சிட்டு வந்திடுவோங்க என்றாள் ஆர்த்தியின் அம்மா.அடுத்த மாசம் உங்க பெரியப்பா பொண்ணு கல்யாணம் வருதுல,அப்ப மச்சான கலந்துபேசிக்குவோம் என்றார் ஆர்த்தியின் அப்பா.மாமா வீட்டுக்கு நானுந்தானே என்று நூல் விட்டுப் பார்த்தாள் ஆர்த்தி. நீ இப்பொ பெரிய படிப்பு படிக்கிற,அங்க போறது,இங்க போறதுனு இன்னும் சின்னப் பிள்ளையாவே யோசிச்சிட்ருக்காத,இனி  உன் கவனமெல்லாம் படிப்பிலதான் இருக்கனும்,என்றவுடன் அமைதியாக நகர்ந்தாள் ஆர்த்தி.இனி சந்தோஷ் மாமாவ எப்படி,எப்போ பார்ப்பேன்,எப்படி பேசுவேன் மாமா வீட்டுக்கு லெட்டர் போடலாமா,சந்தோஷ் மாமாவத் தவிர வேற யாராவது படிச்சிட்டால் பிரச்சனையாகிடுமே என்ன செய்வதுனு   மனமும்,கண்களும் கலங்கி புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள் ஆர்த்தி.அர்த்தியின் நடவடிக்கையில்  சின்ன சின்ன தடுமாற்றங்களை கவனித்த   ஆர்த்தியின் அம்மா மகள் மீது அதிக கவனம் செலுத்தினாள்.


 முன்னலாம் பாடங்களை  ஆர்வமாக கவனிப்ப,என்னுடனும் நிறைய டிஸ்கஸ் செய்வ,இப்போ க்ளாஸ் டெஸ்ட்ல கூட  மார்க் கம்மியா  வாங்கிட்டுருக்கியே , என்னாச்சுனு ஸ்வாதி கேக்கத் தொடங்கினாள்.தன் மனக் குழப்பத்திற்கும்,தடு மாற்றத்திற்கும் காரணம் என்னவென்று ஆர்த்திக்கு நன்றாகத் தெரியுமென்றாலும் ஸ்வாதியிடம் சொல்லத் தயங்கினாள்.படிப்பிலும் முடிந்தவரை கவனம் செலுத்தி வந்தாள்.


.திருமணாத்திற்கு சென்றுவந்த பெற்றோர் சந்தோஷ் மாமா குடும்பத்தைப் பற்றி எதாவது பேசிக்கொள்வார்கள் விபரம் தெரிந்து கொள்ளலாமென ஆர்த்தி ஆவலாக இருந்தாள்.வந்த பெற்றோர் தான் எதிர்பார்த்தபடி எதுவும் பேசிக்கொள்ளாததைக் கண்டு சில நாள் கழித்து ,அம்மா.... அத்த,மாமாலாம் எப்படயிருக்காங்க,என்ன சொன்னாங்க,வேற யாரார கல்யாணத்ல பார்த்தீங்கனு  ஆரம்பித்தால் ஆர்த்தி.ஏன் இத்தனை நாள் கழித்து இப்படி விசாரிக்கிறாளென்ற கேள்வியுடன்,எந்த அத்த மாமாவ கேக்ற என்றாள் ஆர்த்தியின் அம்மா.தைரியமில்லா குரலில் சந்தோஷ் மாமா ,.........என்று ஆரம்பித்து முடிக்கும் முன் ஏம்மா அவங்க பேச்ச எடுக்கிற,நாம ஒன்னு நினைத்தால் கடவுள் ஒன்னு நினைப்பான்,சரி எல்லாம் நல்லதுக்குதான் என்றதில் குழம்பிய ஆர்த்தி, என்னாச்சும்மா என்று மேலும் வினவினாள் .


நீ நல்லா படிக்கனும் ஆர்த்தி,உங்கிட்ட இந்த விசயத்த சொல்லலாமா என்னனு தெரியல,உன் படிப்பு முடிந்த பின்,அண்ணங்கிட்ட பேசி சந்தோசையே நம்ம வீட்டு மருமகப்பிள்ளையா ஆக்கிடலமானு நானும் உன் அப்பாவும் நினைச்சிட்டுருந்தோம். வேல எப்ப கிடைக்குதோ கிடைக்கட்டும்,இந்த வருசம் சந்தோசுக்கு படிப்பு முடிந்த கையோடு எதாவது பொண்ண பாத்து கல்யாணத்த முடிச்சிட்டால் மருமக வந்தால் தனக்கு உதவியா இருக்கும் எதாவது பொண்ணு இருந்தா சொல்லுனு எங்கிட்டயே அண்ணி(சந்தோஷின் அம்மா)சொல்றாங்க,இதுக்கு என்ன அர்த்தம்  நம்மளுடன் சம்பந்தகார சம்பந்தம் வச்சுக்க அண்ணிக்கு விருப்பமில்லனுதான அர்த்தம்,உன்ன மருமகாளாக்கனும்னு நினச்சிருந்தா அவங்க விசாரிச்ச விதமே வேற மாதிரி இருந்திருக்குமே,ஆர்த்திய நம்ம மருமகாளாக்காம போயிட்டோமேனு அண்ணி நினைகிறளவுக்கு நீ படிச்சு முன்னேறனும்.வாழ்க்கையில் பக்குவப்படனும்.என்று போட்டு உடைத்தாள் ஆர்த்தியின் அம்மா.


இதைக் கேட்ட ஆர்த்தி  தலை மேல் பல நூறு இடி விழுந்து,பூமியே தலைகீழ் கவிழ்ந்துவிட்ட உணர்வில் மூச்சு அடங்கிய சடலாமாய் நின்றவளை, ஆர்த்தி...ஆர்த்தி...அங்க புத்தகத்தெல்லாம்  அப்படியே கிடக்கு பாரு,எல்லாத்தையும் எடுத்து வை.தோச சாப்பிடுறியா இல்ல உப்மா செய்யவா என ஆர்த்தியின்    அம்மா,   கேட்டபடி     சென்றதில் மின்னலாய் சுயநினைவிற்கு    வந்தவள்       முட்டிக்         கொண்டு       வந்த          கண்ணீரை
கட்டுப்படுத்த       முடியாமல்,வாய் விட்டு அழ இடம் தெரியாமல் ஓடோடிப் போய் குளியலறையில் நின்று வாயார ,மனமார அழுது தீர்த்தாள்.டைம் ஆகுது இன்னும் என்ன பன்ற என அம்மா கேட்டவுடன்,சிவந்த கண்களுடன் வெளியில் வந்தவளைப் பார்த்து,மனது பொறுக்கவில்லை ஆர்த்தியின் அம்மாவிற்கு.என்னாச்சு ஆர்த்தி என்றதும் ஒன்னுமில்லமா சோப்பு கண்ணுல பட்டுட்டு என்றாள் ஆர்த்தி.நேரம் ஆயிட்டு இனி நீ எப்ப காலேஜ்க்கு கிளம்புவ,வேணும்னா இன்னைக்கு ஒருநாள் லீவு போட்டுடேன்னு சொன்ன மாத்திரத்தில்,சரிம்மா நாளைக்கு காலேஜுக்கு போய்க்கிறேன் என்றாள் ஆர்த்தி.படிப்பிலும்,கல்லூரிக்கு செல்வதிலும் மிகவும் ஆர்வம் கொண்ட மகளின்  இன்றைய முடிவு ஆர்த்தியின் அம்மாவிற்கு வேதனயை அதிகப்படுத்தியது.

இன்னும் ஒரு வாரத்தில் செமஸ்டர் வரப்போகிறது,சொல்லாம கொள்ளாம ஏன் நேத்தி லீவு போட்டுட்ட ஆர்த்தி என்ற ஸ்வாதியிடம்,இன்று மாலை நம்ம பஸ்டாண்டு பக்கத்திலிருக்கும் பார்க்குக்கு போகலாமா என்று ஆர்த்தி கேட்டவுடன்,வாவ் ..ஒரு நாள் லீவுல உன்கிட்ட இப்படியொரு மாற்றமா?எனக்கு ஓகே,ஆமாம் படிப்பு,வீடுனு இருப்ப இப்ப என்ன திடீர் ஞானோதயம்னு ஸ்வாதி கேட்டவுடன்,ஆர்த்தியின் கண்கள் கசிந்ததைக் கண்டு பதறிப்போனாள் ஸ்வாதி.ஆர்த்தியின் கைகளைப் பிடித்து,சரி,சரி நான் எதுவும் கேக்கல கல்லூரி முடிந்ததும் நாம பார்க்கிற்கு போகலாம் என்ற ஸ்வாதி, ஆர்த்தி தன் கைகளை இருக்கமாகப் பிடித்திருந்ததின் வலிமையில் ஆர்த்தியின் எதோ ஒரு பிரச்சனையும் அத்தகைய  வலிமையுடைது என்று உணர்ந்தாள்.


மாலை இருவரும் பார்க்கிற்கு சென்றனர்,என் மனசில இத்தனை நாள் புதைத்து வைத்திருந்ததை உன்கிட்ட சொல்லனும்னு நேத்துதான் முடிவு செய்தேன், என்ற அர்த்தியை இங்கபாரு ஆர்த்தி என்கிட்ட உனக்கு  எந்த தயக்கமும் வேணாம்,நேரா மேட்டருக்கு வா,என்னால் சஸ்பன்ஸ்  தாங்க முடியல என்றாள் ஸ்வாதி.சரி என்று ஆரம்பித்த ஆர்த்தி

காதலை பத்தி என்ன நினைக்கிற, ஸ்வாதி ?என்றாள்  ஆர்த்தி.ஓ காட்!! என்ன கேக்ற ஆர்த்தி?அப்டின்னா நீ காதலில் விழுந்துவிட்டாயா?அல்லது எவனாவது உன்னைய காதலிக்கிறேன்ற பேரில் தொல்லை கொடுக்கிறானா?என்றாள் ஸ்வாதி.இப்ப நீ கேட்ட ரெண்டு கேள்வியும் எனக்கு பொருத்தம்தான்,ஆனா நீ என்ன நினைக்கிறேனு சொல்லு என்றாள் ஆர்த்தி.

காதல் சுகமானதுதான்,என்ன பொறுத்த வரை காதல் ஒரு சைலண்ட் கில்லர்,ஸ்லோ  பாய்சன்,உண்மையா காதலிச்சு கல்யாணம் வரை போய் திருமண வாழ்விலும் வெற்றி பெறுபவங்க மிகக் கம்மி ஆர்த்தி,இன்பமோ துன்பமோ நம்மள பெத்தவங்க பாத்து தேர்வு செய்றவங்களையே காதலிச்சுக்குவோமே, ஏன் முன்னடியே ரிஸ்க் எடுக்கனும்னு  சொன்னபடி தோழியின் மனப்புதையலை  அள்ள ஆர்த்தியை நோக்கினாள் ஸ்வாதி.இந்தளவுக்கெல்லாம் நான் யோசிக்கல ஸ்வாதி என்று ஆரம்பித்த ஆர்த்தி தன் காதல் பற்றியும்,தன் சந்தோஷ் மாமா பற்றியும்,தற்போது சந்தோஷ் மாமாவிற்கு பெண் தேடும் விசியம் கேள்விப்பட்டது வரை  A to Z  சொல்லி முடித்து இதெல்லாம் ஏன், எதற்கு,எப்படினு கேட்டால் ’தெரியல’ என்பதுதான் என் பதில்.

 கல்லூரியின் முதல் தினத்தன்று பஸ்ஸில் கோபுர வாசலிலே பாடலைக் கேட்டுதும் என்னவோ தெரியல, அந்த பாடலின் வரிகளும்,பயணத்தின்  சுகமும் சந்தோஷ் மாமாவை நினைத்து வந்த அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.அதற்கு பின் எத்தனையோ சூழல்கள் என்னை இதே நிலையில்,எதோ ஏக்கத்தில் ஆட்டிப்படைத்துள்ளது்.அன்று ஜன்னலோரத்தில் சந்தோஷ் மாமாவைப் பார்த்ததிலிருந்து பஸ்ஸில் ஜன்னலோரம் உக்கார மாட்டேன்,அப்படி ஜன்னலோரத்தில் உக்கார இடம் கிடைத்துவிட்டால் கூட வெளிப்பகுதியில் யாரையும் பாக்கமாட்டேன், நீ கவனிச்சிருக்கியா நம்ம கல்லூரி வளாகத்தின் வெளியே ஸ்டேஸ்னரி திங்ஸ் கிடைத்தாலும்,நான் பஸ்ஸ்டாண்டில் உள்ள ஸ்டேஸ்னரி கடைக்குதான் போவேன்.ஏன்னா பஸ்ஸ்டாண்டு கடை பேரு சந்தோஷ் ஸ்டேஸ்னரி ஸ்டோர்.ஸ்ரீராம ஜெயம் போல  சந்தோஷ் மாமா ,   சந்தோஷ் மாமா னு தான் எழுதுவேன்.எத்தன நோட்ல எழுதி வச்சுருக்கேன் தெரியுமா?அழகா இல்லாதவங்களெல்லாம் தன்னை அழகுப் படுத்திக் கொள்ளும்போது,நீ ஏன் இப்படி வரனு நீ கூட கேட்டிருக்க,என் சந்தோஷ் மாமாவிற்கு மட்டும்தான் நான் அழகாத் தெரியனும்னுதான் எந்த அலங்காரமும் செஞ்சுக்கமாட்டேன்,நான் என்ன செய்தாலும்,பார்த்தாலும் என்றாவது சந்தோஷ் மாமாவிடம் பேச நேரம் கிடைக்கும் போது மறக்காம சொல்லனும்னு ஞாபகம் வச்சுக்குவேன் , என முகம் தேய்ந்து போகுமளவிற்கு வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.

அடப் பைத்தியக்காரி இதெல்லாம் உன் சந்தோஷ் மாமாவிற்குத் தெரியுமா?உன் காதலைப் பாக்கும்போது எனக்கு காதல் மீது காதல் வருகிறது ஆர்த்தி என்றாள் ஸ்வாதி. 
                    
                          
                                                                                                             தொடரும்..........