*வணக்கம் வருகைக்கு நன்றி*

Oct 21, 2011

தீபாவளி வந்துவிட்டதா?

                                           Diwali Diyas Happy DiwaliDiwali Graphic #11Happy DiwaliHappy Diwali

                                           Diwali Graphic #90
 
                                         Diwali Graphic #57
Diwali Graphic #53Diwali Graphic #66
                              
                                                          


அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
அனைத்து படங்களும் இணையத்திலிருந்து திரட்டியது.
சில வாரங்களுக்கு பிறகு சந்திக்கிறேன்.

Oct 19, 2011

பாண்டி நாட்டு தமிழ் - பாகம் 2

முதல் பாகம்  பதிந்த பின் மேலும் சில வார்த்தைகள் நினைவிற்கு வந்தன.

அவைகள் :
இடுப்பு பகுதியை குறுக்கு என்பார்கள்.என் தாத்தா அம்மாச்சியின் கிராமத்தில் பலரும் வேலை பார்த்த அலுப்பில் அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது முதுகு,இடுப்பு வலியெடுத்தால் குறுக்க வலிக்கிதென்று சொல்வதை கேட்டிருக்கிறேன்.


நாகப்பட்டினத்தில் நான் பட்டைய படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும்போதுதான் முதல்வன் திரைப்படம் வெளிவந்தது.அந்த வருட ஆண்டுவிழாவில் முதல்வன் திரைப்படத்தின் குறுக்குச் சிறுத்தவளே பாட்டிற்கு மாணவிகளின் நடனம் நடைபெற்றது.இந்த பாடல் எல்லோருக்கும் பிடித்த பாடல் .கைத்தட்டல்கள் ஆரவாரம் அதிகம் கிடைத்திருந்தது.


கலைநிகழ்ச்சிகள் நிறைவுபெற்று விழாவைப்பற்றி பின்னுட்டமிட்டபடி  குதுகலத்துடன்    பேருந்து நிலையம்   சென்றோம். என்னுடன் வந்த சக மாணவி குறுக்குச் சிறுத்தவளே பாட்டு நல்லாதனிருக்கு மீனிங் இல்லாம பாட்ட ஆரம்பிச்சிருக்கார் பாடலாசிரியர் என்று சொன்னாள்.அவள் சொன்னது குறுக்குச் சிறுத்தவளே என்றால் என்ன அர்த்தம்,அது அர்த்தமற்ற வார்த்தை என்பதுதான்.


அந்த வார்த்தைக்கு அர்த்தமுண்டு.குறுக்கு என்றால் இடை(இடுப்பு).இடை சிறுத்தவளேனு பாட்டு ஆரம்பிக்குதுனு சொன்னதும் சின்னதாய் ஏற்றுக்கொண்டாள்.எனக்கும் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பை விளக்கியது போல ஒரு சந்தோஷம்.


சளி(ஜலதோஷம்) பிடித்திருந்தால் தடுமம் பிடிச்சிருக்கு என்பார்கள்.


கொத்தவரங்காயை சீனி அவரைக்காய் என்பார்கள்.(இதை ஒரு சகோதரி நினைவுபடுத்தினார்கள்).


கரும்பில் தோகை இருக்குமே அதனை சோகை என்பார்கள்.சோக உரிக்க போறேன் என்று கேள்விப்பட்டதுண்டு.


வீட்டில் அறை(ரூம்) இருந்தால் மச்சி வீடு (அறை உள்ள வீடு) என்பார்கள்.


குதிப்பதற்கு தவ்வுதல் என்பார்கள்.சிறு பிள்ளைகள் குதிக்கும்போது தவ்வாதப்பா என்று சொல்வதை கேட்டிருக்கிறேன்.


 நாளாவது அல்லது ஐந்தாவது பெண்குழந்தை பிறந்தால் போதும்பொண்ணு என்றே பெயர் வைப்பார்கள்.இந்த பெயரை கடைசிவரை  மாற்றமாட்டார்கள்.


களவு (திருட்டு) போய்விட்டது என்பார்கள்.களவாண்ட்டாங்கே (திருடிவிட்டார்கள்) என்பார்கள்.திருடனை களவானி என்பார்கள்.திருட்டுப்பைய என்று திட்டுவதை களவானிப்பைய என்பார்கள்.


வயிறு வலிக்குதென்றால்  வகுத்த/வவுத்த வலிக்குதுன்னு சொல்லுவார்கள்.செம சிரிப்பு வரும்.


மிகையாகப் பேசுபவர்களை அல்லது பிதற்றுபவர்களை அல்லது ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது பக்கத்திலிருப்பவர் அவர் பற்றி கவலைப்படாமல் தன் புகழ்,பெருமை பேசுபவர்களின் நிலையை பகுமானம் என்பார்கள்.பெருமை பேசும்போது பகுமானத்த பாரு என்பார்கள்.


ஒரு சமயம் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்குச் சென்றோம்.
பொதுவாக வெட்ட பயன்படும் கத்தியை என் தாத்தா வெட்டுக்கத்தி என்பார்.அங்கு பலரும் அறிந்த வார்த்தைதான் இந்த வெட்டுக்கத்தி.வீட்டிலிருந்து புறப்படும்போதே மற்ற பொருள்களுடன் அந்த வெட்டுக்கத்தியையும் எடுத்து வைக்க சொன்னார்.பூசாரி இல்லையென்றால் நாமேதான் எல்லாம் செய்யனும்.பக்கத்திலே வாழை மரங்கள் இருக்கும்.வாழை இலைகள் வெட்ட உதவும் என்றார்.
கோவில் அமைந்திருக்கும்  கிராமம் தொன்மையான மிக அழகான கிராமம்.மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்காது. கண்ணுக்கெட்டிய  தூரம்  வரை  வீடுகள்  கிடையாது.  சுற்றிலும்   மலைகளும், கரும்பு,கம்பு, நிலக்கடலை,துவரம்பருப்பு, எள், வெங்காய விளைநிலங்கள் இருந்தன. அங்கிருந்த இயற்கை சூழலே அருமையாக  இருந்தது.

எங்கெங்கிருந்தோ அந்த கோவிலுக்கு வருபவர்களே அதிகம். கிராமத்து பூசாரி தமிழ் பாடலை பாடி அபிசேக அர்ச்சனை செய்தார்.கோவில் வாசலில் நான்கு வயது முதல் பத்து வயதுவரை மதிக்கத்தக்க பிள்ளைகள் பிரசாதத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.அந்த கிராமத்து பிள்ளைகளாக இருக்கலாம்.

என் அம்மா அந்த பிள்ளைகளுக்கு கொடுப்பதற்காக தட்டில் தின்பொருட்கள்,பிராசதங்களை பிரித்துக்கொண்டிருந்தார்.சிறுவர்கள் கூடினர்.என் தாத்தா சற்று உரத்தக் குரலில் அந்த வெட்டுக்கத்திய எடும்மா என்றதும் ஒரு சிறுவன் எடுத்தானே ஓட்டம்.அலரி அடித்துக்கொண்டு ஓடினான்.யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.என் அம்மா வேறு ஓடுபவனை நில்லுப்பா,நில்லுப்பாங்கிறாங்க.

வெட்டுக்கத்திய எடுன்னு சொன்னவுடன் ஓட்றேயான் (ஓடுறான்) போலருக்கும்மான்னு தாத்தா சொன்னவுடன் எல்லோருக்கும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை,அதே நேரத்தில் பாவமாகவும் இருந்தது.என் தாத்தா தேங்காய் கீறுவதற்குதான்  வெட்டுக்கத்தி கேட்டாராம்.ஓடிய சிறுவனின் பங்கை மற்ற சிறுவன் ஒருவனுக்கு சேர்த்து  கொடுத்து ஓடியவனிடம் கொடுத்துவிட சொன்னோம்.மறக்க முடியாத நிகழ்வு அது.

மேலும் பாண்டி நாட்டு தமிழ் நினைவிற்கு வந்தால் 3 ஆம் பகுதியாக சந்திப்போம்.

Oct 15, 2011

வாழ்க்கை

மனிதனாக பிறந்துவிட்டோம்.வாழும் மற்றும் வளரும் சூழ்நிலையில் பல வித மனிதர்களுடனும்,நட்புகளுடனும், உறவினர்களுடனும் வாழ்க்கைப் பயணம் செல்லுகிறது.புதிரான வாழ்க்கைப் படகில் துடுப்புகளாக  நாமும் நம்மால் இயன்றதை செய்து வாழ்நாளெனும் நீர் நிலையை கடந்து வருகிறோம்.எண்ணங்களை எதிர்பார்ப்புகளை மீறி அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது யாரும் அறியா நியதி.

நாம் நல்ல எண்ணங்களுடன் பயணம் மேற்கொண்டாலும் முன்போ,பின்போ,அருகிலோ எப்படிப்பட்டவர் வருகிறார் என்பது நமக்குத் தெரியாது.பழகிப் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்.அங்கனம் மதிப்பும்,அன்பும் வழங்கப்படும்போது அதனையே கிடைக்கப்பெறுவோம்.மாறாக மிதிக்கப்பட்டால் அனுபவப் பாடமாக கற்றுக்கொள்வோம்.நம்மிடமிருந்து கசப்பான அனுபவத்தை மற்றவருக்கு தர நாம் காரணமாக இருக்க வேண்டாம்.

நமது தேவைகள் நிறைவேற நமது சக்திக்கு உட்பட்டு வாழ்ந்தாழும், முயற்சித்தாலும் கிடைக்கப்பெறுவோம்.முடியாதபட்சத்தில் கிடைப்பதை ஏற்கிறோம் அல்லது தவிற்க்கிறோம்.நம் வாழ்க்கை பயணத்தில் நாமே ஆசிரியர்,அனுபவங்களே பாடம்.வாழ்நாட்கள் என்ற நீர்நிலையில் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை என்னும் படகு சவாரியில் சுழல் வருமா,சுனாமி வருமா என்பதை அறிய வாய்ப்பில்லை.

அனைத்து சூழ்நிலைகளிலும் அன்பாகவும்,விட்டுக்கொடுத்தும் வாழ்தலும்   சாத்தியமில்லை. மனிதனுக்குரிய பண்புகளோடு  வாழ்வோம். தீயவைகளை விடுத்து நல்லனவற்றை கற்போம்.வாழ்வின் முடிவே கற்றது போதாது என்ற குறையுடன்தான் நிறைவடையப்போகிறது.

Oct 13, 2011

புராணக் கதை - 2011

கண்ணையா(கிருஷ்னர்) நிறைய சீப்(செம்மறி ஆடு) வச்சிருந்தாராம்.
 பீகாக் வச்சிருக்க முருகர் வந்து கண்ணையாகிட்ட உம்பேரு என்னானு கேட்டாராம்.எம்பேரு கண்ணையா னு சொன்னாராம்,எம்பேரு முருகர் னு சொன்னாராம்.

ஹை! நிறைய சீப் வச்சிருக்கியே அவங்க பேர்லாம் என்னனு கேட்டாராம் முருகர்.
இது பேரு முன்னா.இது பேரு முன்னி.இது பேரு ஜீகி...அப்பின்னு(அப்படின்னு) சொன்னாராம்.

கண்ணையா... உங்க அம்மா அப்பா எங்கனு கேட்டாராம் முருகர்.
எங்க அம்மா அப்பாவ காணும்னு சொன்னாராம் கண்ணையா.

முருகர் ஜாது(மேஜிக்)செய்து கண்ணையா அம்மா அப்பாவ அழைச்சுட்டு வந்துட்டாராம்.கண்ணையா முருகருக்கு தூ தோ பகுத் அச்சா பச்சி ஹே(நீ ரொம்ப நல்ல பிள்ளை) பகுத்(ரொம்ப/நிறைய) தேங்ஸ் - அப்பின்னு சொல்லிட்டாராம்.

பீகாக்ல ஏறி முருகர் க்ளவுடுக்கு (வானம்)போய்ட்டாராம்.ஹனுமான் பெரிய வாலுடன் சுத்தி,சுத்தி வந்தாராம்.டைகர் வந்து ஹனுமான் வால கடிச்சிட்டாம்.கண்ணையா,கண்ணையா,முருகா,முருகா அப்பின்னு ஹனுமான் கத்தினாராம்.

கண்ணையாவும்,முருகரும் அடிச்சிடுவாங்கன்னு டைகர் ஓடியே போய்ட்டாம்.

அவ்ளதான் கதை முடிஞ்சிட்டு.

பொறுமையா இந்த கதைய நான்  ம்...ம்...னு கேட்டதில் ஹே..ஹ்ஹே..ஹே..என்று கதை சொல்லி முடித்துவிட்ட சந்தோசத்தில் சிரிப்பை முழுசா சிரிக்க முடியாதளவிற்கு (எல்.கே.ஜி. படிக்கும்) என் மகளுக்கு தூக்கம் கண்களை கட்டியது.மம்ம(நம்ம) இன்னொரு கத சொல்லுவோம்னு சொன்னவளை இந்த கதையே சூப்பரா இருக்கு,நான் ஒரு கத சொறேன்னு  சொல்லி தட்டிக் கொடுத்து தூங்கவச்சிட்டு இந்த கதைய ஒரு பதிவாக்கிட்டேன்.

இதுவரை மகள் பார்த்த தொலைக்காட்சி புராணக் கதைகள்,கார்ட்டூன் புராணம் மற்றும் நாங்கள் அவ்வப்போது சொல்லிய புராணக் கதைகளின் கலவையில் அவளுக்கு தோன்றிய கற்பனையாக இருக்கலாம். 

Oct 11, 2011

தனிமையே!

இரவில் தனியே நடமாடும்போது
பயமில்லை.எதோ பின்தொடர்வதாக
சந்தேகிக்கையில் சாத்தானக வருவது
 தனிமை.

நான் தனியே செல்லுகையில்
தனிமையில்லை.எதிரில் இருவர்
சுவாரசியமாக பேசி,மகிழ்ந்தபடி
வருகையில் என்னுடன் வருவது 
 தனிமை.

எதிபார்த்த அன்பு கிடைக்காதபோது
துணையாவது  தனிமை.

மகிழ்ச்சியில் தனிமை இல்லை,
அதனை பகிர உண்மையானவர்கள்
இல்லாதபோது மகிழ்ச்சியடைவது
தனிமை.

தனிமையில் அமைதி இல்லை.
அமைதியில் தனிமை இல்லை.

சந்தேகம்,ஒப்பிடுதல்,ஏக்கம்,எதிர்பார்ப்புடன்
பிறந்திருக்கும் தனி்மையே நீ
தனிமையாக இல்லை.

Oct 3, 2011

தாழ்மையான அறிவிப்பு

   இன்று முதல் தொடங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளேன்.

நாளை முதல் அறிமுகப்படுத்தவிருக்கும் பதிவாளர்களுக்கும் பதிவுகளுக்கும் தங்களின் ஆதரவை தெரிவிக்கவும்.

இன்றைய சுய அறிமுகத்திற்கான லின்க் இதோ