ஹிந்தி அலைவரிசை ஒன்றில் திவ்ய சக்தி என்ற திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கையில் தெலுங்கு திரைப்படம் ஹிந்தி மொழிமாற்றம் செய்துள்ளது தெரிய வந்தது,தெலுங்கு திரையுலக முகங்களுக்கிடையே தமிழக கோவில் அமைப்பில் அமைந்துள்ள சந்நிதியில் கே.ஆர்.விஜயா அம்மன் வடிவத்தில் பேசிக்கொண்டிருக்க, திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த,ஹிந்தி நன்றாக தெரிந்த என் நான்கு வயது மகள் “ அம்மா, கோயில்ல நின்னு சாமி ஹிந்தி பேசுது பாரும்மான்னு “தமிழில் என்னிடம் சொல்லியபோது குழந்தையின் அறியாமையை நினைத்து ஒரு நொடி நகைத்து விட்டாலும்,எதோ பெரிய விசயத்தை உணர்த்திவிட்டாள் என்பது போல உணர்ந்து சாமிக்கு எல்லா மொழியும் தெரியும்,உனக்கு ஹிந்தி தெரிவது போல என்று சொல்லி அமர்த்தினேன்.
அதே கனத்தில் எனது சிறு வயது நினைவும் வந்தது.சிறு வயதில் தொலைக்காட்சியில் மகாபாரதம் மற்றும் சில புராண கதைகள் நாடகங்களாக ஒளிபரப்பான போது அப்பாவிடம் “என்னப்பா கடவுள் ஒன்று வாயசைக்கிறார்,அதற்கு முன்னோ,பின்னோதான் பேசுவது கேட்கிறது “ என்று நான் கேட்டதும்,ஹிந்தி மொழியில்,எடுக்கப்பட்ட கதை தமிழில் ஒளிபரப்பாகிறது என்று என் அப்பா விளக்கமளித்தாலும்,தமிழும் ஆங்கிலமும் அல்லாத மற்றொரு மொழி ஹிந்தி எனவும் அது கடவுள் மட்டுமே பேசக்கூடியது என்று வெகு நாட்கள் நினைத்ததுண்டு.வீட்டில் கேலிக்கும் ஆளானதுண்டு. பிறகு காலப் போக்கில் விபரம் தெரிந்து கொண்டேன்.
இப்போ என் மகள் கேட்டதில் கதை பல்ட்டி என புரிந்து கொண்டேன்.
கடவுள் இல்லை. போகட்டும் !
கடவுள் இருக்கிறார்.ஆகட்டும் !
கடவுள் நான்தான். ஒழியட்டும் !
ஒவ்வொரு உயிரும் கடவுளாய்
வாழட்டும்!
உருவமும்,மொழியும் அற்றவர்
!!கடவுள்.!!