*வணக்கம் வருகைக்கு நன்றி*

Sep 22, 2011

வடமாநிலங்களில் இவைகளும் நடைபெறுகின்றது

கலாச்சாரம்,உணவு,பழகும் முறை இன்னும் பல்வேறு வகையிலும் வேறுபாடுடைய வட மாநிலங்களில் போக்குவரத்துகளின்போது வித்தியாசமாக தென்பட்ட காட்சிகளில் சாலையோர சலூன்பார்களும்   ஒன்று.
சாதாரண மற்றும் ஆடம்பரம்மிக்க சலூன்பார்கள்,ஆண்கள்,பெண்களுக்கு அழகு நிலையங்களை எங்கும் பார்த்திருப்போம்.குறைந்தபட்சம் ஒரு வாசல்,இருபக்க சுவர்,மேற்கூரையாவது இருக்கும். ஒரு அறை போன்ற அமைப்பாவது இருக்குமல்லவா?

சாலையோர வியாபாரிகள் போல மரத்தடியிலும்,பாலங்களுக்கு அடியிலும்,சில தெருவோரங்களிலும்,மக்கள் புலக்கம் அதிகமாக இருக்கும் கடைவீதிகளிலும் திறந்தவெளிகளில் சவரம்,முடிதிருத்தம்,மொட்டையடித்தல் வரை நடைபெறுகிறது .
எந்தளவுக்கு இது சுகாதாரம் என்று தெரியவில்லை.ஆனால் இந்த தொழிலாளிகள் எப்போதும் பிஸிதான்.அதே சமயத்தில் அதிகநேரம் காத்திருக்கவும் அவசியமில்லை.சில காட்சிகளைப் பாருங்கள்.


  

இந்த படத்தை பாருங்கள்.என்ன நடைபெறுகிறதென்று புரிகிறதா?மஞ்சள் நிற பேனருக்கு கீழே குட்டிச்சுவரில் வரிசையாயாக அமர்ந்திருப்பவர்களில் ஒருவரின் தலையப்பிடித்தவாறு ஒருவர் நிற்கின்றாரே,அவர் என்ன செய்கிறார் தெரியுமா?அமர்ந்திருப்பவர் காதில் அழுக்கு எடுத்து காதுகளை சுத்தம் செய்கிறார்.        நம்ம ஊர்பக்கம் கிளிஜோசியக்காரர்கள் ஒரு பெட்டியுடன் வலம் வருவது போல சில இடங்களில் காது சுத்தம் செய்பவர்கள் வலம் வருவார்கள்.விரும்பியவர்கள் தங்கள் காதுகளை அந்த ஆசாமியிடம் கட்டணம்  கொடுத்து சுத்தப்படுத்திக்கலாம்.அவர்களின் காதுகள் பிறகு சரியாகத்தான் வேலை செய்யுமா என்பது தெரியவில்லை.போக்குவரத்தில் பார்த்த காட்சிதான் .

இணையத்தில் எடுத்த படம்.
இதுபோல மாலிஸ்வாலாக்களும் வலம் வருகின்றனர்.மசாஜ் என்பதுதான் ஹிந்தியில் மாலிஸ் ஆகும்.மாலிஸ் செய்பவர்கள் மாலிஸ்வாலாக்கள்.இந்த மாலிஸ்வாலாக்கள் கையில் பெட்டி அல்லது பைகளில் மூலிகை எண்ணெய்களை பாட்டிலில் வைத்திருக்கின்றனர்.போலி எண்ணெய்களா என்னவென்று தெரியவில்லை.விரும்புவர்கள் சாலையோரத்திலோ அல்லது வீட்டிற்கு அழைத்தோ  மசாஜ் செய்துகொள்கின்றனர்.இதுவும் எந்தளவுக்கு பயனுள்ளது,கட்டணம் பற்றி விபரம் தெரியவில்லை.ஹிமாச்சல பிரதேசத்தில் இந்த மாலிஸ்வாலாக்களை அதிகம் காணமுடியும்.பலரும் நம்பிக்கையுடன் கை,கால்,தலைக்கு மசாஜ் செய்துகொள்வதை சாலையோரத்தில் பார்த்திருக்கின்றேன்.மக்கள் உடல் நலத்தை கெடுத்துவிடாமலும்,ஏமாற்றாமலும் இருந்தால் நல்லது.

Sep 18, 2011

கனவு நிறைவேறுமா ?

தழுவிச் செல்லும் மெல்லிய குளிர் காற்று
மூடியிருக்கும் ஜன்னல்,வாசல் வழியாக இளம் காலைப் பொழுதின் வெளிச்சம்  தூக்கத்தை துளைத்து விழிப்பை தூண்டுவதை விரும்பாத செல்வி கண்களை திறக்காமல் அருகே கிடக்கும் போர்வையைத் தேடிப்பிடித்து முகத்தோடு உடல் முழுவதும் போர்த்தி செல்லமாய் உறங்கினாள். விடியல் நேரத்தில் பறவைகளின் சப்தங்கள்,கோழியின் கக்கரிப்பு,அடுப்பங்கறையில் வேலை செய்யும் அம்மா பாத்திரங்களை புலங்கும் சப்தம்,அவள் போர்வைக்குள்ளும் துளைத்தது.
என்னம்மா இன்னைக்கு ஞாயித்துக்கிழமைம்மா இன்னைக்குகூட நிம்மதியா தூங்க விடமாட்றீங்களேனு போர்வைக்குள் முனகினாள் செல்வி.எழுந்திரிம்மா செல்வி,மணியாகிட்டுஇப்ப கிளம்பினாதான் பத்துமணிக்காவது உங்க அத்த வீட்டுக்கு போகலாமென்று அம்மாவின் குரல் ஒளித்தது.அங்கிருந்து சாய்ங்காலமா பீச்சுக்கு அழைச்சுட்டுபோறேன் தங்கத்தை,எழுந்திரிடா பட்டு என அப்பாவின் குரல் ஒளித்ததும்,விழிக்கவும் மனமில்லாமல்,தூங்கவும் மனமில்லாமல் போர்வைக்குள் சுருண்டுகிடந்தாள் செல்வி.
செல்வி …..எழுந்திரிம்மா..அப்பா சொல்றார்ல எழுந்திரிம்மா செல்லம் என்ற அம்மாவை அம்மா முதல்ல அந்த கோழிய தெறத்திவிடும்மா காலங்காத்தால கத்திகிட்டுச்சேஎன்று போர்வைக்குள் இருந்தபடியே தூக்கம் கலையாமல் அதட்டினாள் செல்வி.இப்பதாண்டா அரிசி நொய் போட்டேன்,இங்க வந்து பாரு கோழிக்குஞ்சுகள் எவ்ளோ சமத்தா தன் அம்மா கொத்தி சாப்பிடுவதை பாத்து,பாத்து அழகா கொத்தி சாப்பிடுதுங்க பாருடா..எழுந்திரிம்மா செல்வி..உனக்கு பிடிச்ச டிரஸ் போட்டுக்க,உனக்கு பிடிச்ச மாதிரி தலை வாரிவிடுறேன்,செல்லத்துக்கு மேகி செஞ்சு தரவா,பூரி செஞ்சு தரவா
கொஞ்சலான சினுகளுடன் போர்வையைக் கலைந்து எழுந்திரித்த செல்விக்கு வெளிச்சத்தில் கூசிய கண்களை கசக்கி விழிக்க முற்பட்டவளை படாரென்று முதுகில் தட்டி ஏ ஜென்மமே எத்தனதட கத்துறேன்,எப்பதான் எந்திரிப்ப,தொண்டதண்ணிய வாங்குதுங்களே ஜென்மங்கள்னு கத்திய ஆயாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்துகொண்டாள் செல்வி.ஏய் எந்திரி உனக்கு தனியா கத்தனுமா,எந்திரிச்சு சீக்கரம் ரெடியாவுங்க,இன்னைக்கு ஞாயித்துக்கிழமை, பெரிய மேடம் வருவாங்க,சீக்கிரமா கிளம்பி ப்ரேயர் ஹாலுக்கு வாங்க ஜென்மங்களானு அடுத்த பிள்ளையிடம் கத்திக்கொண்டிருந்தாள் ஆயா!
 பெரிய மேடத்தின் தலைமையில் நடைபெற்ற ப்ரேயரில் கண்களை மூடி கலைந்துபோன கனவை மீண்டும் நினைவுபடுத்தி   கனவில் வந்த பெற்றோரின் முகங்களை தேடிக்கொண்டிருந்தாள் பன்னிரெண்டு வயதான செல்வி,ஆதரவற்ற சிறுவர்கள் காப்பகத்தில்.
                                                                                                                        .முற்று. 

Sep 15, 2011

குண்டு குழிகளில் அசம்பாவிதங்களை தடுக்க

ஊர்களில் பிடித்த இடங்களில் இருக்கும் துறையினர்கள் ஆளுக்கொரு குழி தோண்டி வேலை முடிந்ததோ இல்லையோ அரைகுறையாக குழிகளை மூடாமல் செல்ல,அப்பாவி குழந்தைகள் அதில் விழுந்து பலியாகும்.எத்தனை குழந்தைகளை பலி கொடுத்தாலும் யாரும் திருந்துவதாகத் தெரியவில்லை.ஒவ்வொருமுறை இந்த செய்தியை கேள்விப்படும்போதேல்லாம் வேதனையுற்ற மனங்களை ஆறுதல்படுத்த பின்வரும் காட்சிகள். 








 

Sep 11, 2011

பாண்டி நாட்டு தமிழ்

பாண்டிய நாடு என்றாலே மதுரைதானே நினைவிற்கு வரும். தமிழ்நாட்டிற்குள்ளே மண்வாசம் மிகுந்த,உச்சரிப்பிலே பாசத்துடன் பேசும் தமிழாக எனக்குத் தெரிந்த,பிடித்த தமிழ், மதுரை மாவட்ட தமிழ். பள்ளி விடுமுறையில் மதுரையில் ஒரு கிராமத்தில் வசிக்கும் என் தாத்தா அம்மாச்சி(அம்மாவின் பெற்றோர்) வீட்டிற்கு செல்வது வழக்கம். நான் லண்டனிலிருந்து மதுரை செல்லவில்லை.நாகப்பட்டினத்திலிருந்து மதுரை சென்ற எனக்கு தமிழ் பேசும் வித்யாசத்தில் புரியாமலிருந்ததென்றால் நம்பமுடியுமா?
எனக்கு நினைவில் இருப்பதை பகிர விரும்புகிறேன்.

தூக்குப்பனிய எடுத்துட்டு வா என்றால் என்னவென்று தெரியாமல் விழித்ததுண்டு.தூக்குப்பனி என்றால் பிடி உள்ள சின்ன சில்வர் வாலி போல ஒரு பாத்திரம்.

இந்த பெண் தலைமேல்
துணிசுற்றி வைத்திருப்பது
பெயர் சுறுமாடு என்பார்கள்.
சுறுமாட்டிற்கு மேலிருக்கும்
பாத்திரம்தான்,தவளைப்பானை.

குடிநீர் குழாய்கள் அல்லது எந்த குழாய்களானாலும் ,ஆங்கில சொல் என்பது தெரிந்தோ தெரியாமலோ பைப் என்று சொல்வதுதான் வழக்கம்.ஆனால் என் அம்மாச்சி ஊரில் கொலாயில் கொண்ட பானைய வைனு சொன்னபோதும் புரியாமல் விழித்ததுண்டு.அடி பைப்பை  அடிக்கொலாய் என்பார்கள்.மேலும் எனக்குத் தெரிந்தது மண்ணினால் செய்யப்பட்ட பானைதான் பானை.அம்மாச்சி ஊரில் குடம்,தவளை பேர்தான் பானை.தெருவிலும் சாக்கடையிலும் ஓடுது பாரு அது பேர்தான் தவளை,இது பேர் பானை என்பார்கள்.அப்போ அந்த பானைய என்னான்னு சொல்வாங்கன்னா மம்பானை (மண்பானை) என்பார்கள்.

மிக்சி,கிரைண்டர் வருவதற்கு முன் அந்த காலத்தில் கல்லால் ஆன இயந்திரம் இருக்குமே,அதன் பெயர் கொடக்கல்லுனு நாங்க சொல்லுவோம்.அதை ஆட்டுக்கல்லுனு அம்மாச்சி சொல்வாங்க.அம்மிக்கல்லுக்கு பேரு அம்மிக்கல்லுதான்.

ஒண்டியமா போகனுமா என்றால் அவர்களுக்கு புரியாது.தனியா போகனுமா என்றால்தான் புரியும்.ரொம்ப எட்டி(தொலைவில்) இருக்குல என்றாலும் புரியாது.அதென்ன எட்டி?தொலவா இருக்குனு சொல்லு,அல்லது வெகு தூரம்னு சொல்லு என்பார்கள்.

நாம் எழுதும்போதுதான் வந்தேன்,போனேன்,சொன்னேன், என்று எழுதுவோம்.ஆனால் மதுரையில் இன்றும் வந்தேஏ....போனேஏ..., சொன்னேஏ...என்றுதான் பேசுவார்கள்.கேட்கவே ஆசையாக இருக்கும் . நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது என் அம்மாச்சி ஊரில் பள்ளியில் சேர்ந்து படிக்கும்படியான சூழ்நிலை வந்தது.எனக்கு மறக்க முடியாத நாட்கள் அவைகள்.பெரிய ஆலமரங்கள்,அரசமரங்கள்,வரிசயாக தென்னைமரம்,பனைமரம் பார்டர் போல மலைகள் இவைகளை ரசித்துக்கொண்டே பள்ளிக்குச் செல்வேன்.அங்கு ஆசிரியர்களும் மதுரைத் தமிழில் பேசுவதைப் பார்த்து ரசிக்கவும் முடியாது,சிரிக்கவும் முடியாது.

உதாரணமாக புதுசா வந்திருக்க பிள்ளையா நிஈ.எழுத்துக்கூட்டி வாசிப்பியா?என்றார். என்னவோ வாசிக்கத் தெரியுமான்னு கேக்குறார்னு நினைத்து தெரியாதுனுட்டேன்.நாகப்பட்டினம்ங்கிற வாசிக்க சொல்லித்தரலையா வாத்தியார்க என்றார்.திருதிருன்னு முழித்துக்கொண்டிருக்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணை வாசிக்க சொன்னார்.புத்தகத்தைப் பார்த்து அந்த பெண் சத்தமாக படிக்கத் துவங்கினாள்.அப்பதான் எனக்கு புரிந்தது சாரு படிக்கத் தெரியுமாங்கிறதைதான் வாசிக்கத் தெரியுமானு கேட்டிருந்திருக்கிறார்.படிக்கத் தெரிந்தும் தெரியாதுனு சொல்லிட்டேனேனு அழ ஆரம்பித்துவிட்டேன்.பயத்தில் அழறேன்னு என்னை சமாதனப்படுத்தினார்.சில மாணவர்கள் படித்த பின் நானும் படிக்கிறேன்னு கஷ்டபட்டு சொன்னேன்.ஆசிரியர் புரிந்துகொண்டு    ம்.. என்றதும் படிக்கத் துவங்கினேன்.தமிழ் பாடம்தான் என்ன பாடம் என்று நினைவில்லை.ஒரு பத்தி படித்து முடித்தவுடன் நல்லாதான வாசிக்கிற,ஏன் வாசிக்கத் தெரியாதுன்ன? என்றவுடன் இன்னும் அழுகைதான் வந்தது.

ப்ரேயரில் நிக்கும்போது ஒரு அழகான டீச்சர் ,கிசும்பு பன்றவங்கே தோல உரிச்சிடிவீண்டா,ஒத்தையில நிக்காதடா,வரிசையில நில்லுங்கடானு சொன்னது எனக்கு புரியல.விசாரித்ததில் கிசும்புனா சேட்டைனு ஒருத்தன் சொன்னான்.சேட்டை என்றால் விசமத்தனம்.பத்து நாள் மட்டுமே அங்கு படித்தேன்.இது போன்று பல வார்த்தைகள் தெரிந்துகொண்டேன்.இப்போது நினைவில் இல்லை.என் அப்பா மீண்டும் நாகப்பட்டினத்து பள்ளியிலே சேர்த்துவிட்டார்.

அதற்கு பின் அம்மாச்சி தாத்தா வீட்டிற்கு விடுமுறைக்கு வருவோம்.
அவற்றில் சில நினைவுகள்:

 தெருவில்  சைக்களில் சாக்கு பைகள் வைத்து    கொடி முந்திரி, கொடி முந்திரி என்று சத்தமிட்டு வியாபாரி வருவது கண்டு முந்திரிபருப்பைதான் விற்கிறார் என தப்பு கணக்கு போட்டுவிட்டேன்.அருகில் வரவும் பார்த்தால் அது திராட்சைப்பழம்.கொடி முந்திரி என்றால்  திராட்சைப்பழமாம்.

ஏதாவது பொருட்களை முறத்தில்  போட்டு சுத்தப்படுத்துவோமே அந்த முறம்  பெயர் சொலகு   என்பார்கள்.
மண்ணெண்ணையை (கரோசின்) சீமஎண்ணைய்  என்பார்கள்.

விளக்கேற்றுவதை -  தீபத்த பொறுத்து என்பார்கள்.
சணலை சரடு என்பார்கள்.பேப்பர் என்றே அனைவரும் சொல்லுவோம்.ஆனால் காகிதம் என்றுதான் சொல்லுவார்கள்.தபால் வந்தால்  கடுதாசி வந்திருக்கு  என்றுதான் சொல்வார்கள்.லெட்டர்னு சொல்லமாட்டார்கள்.
பாலிதீன் பைகளை சவுக்காயப் பை என்பார்கள்.


உண்டனா  செலவழிக்காத என்றால் நிறைய  செலவழிக்காத என்று அர்த்தம்.

என் தாத்தா வெஞ்சனம் வைம்மா என்றால் எனக்கு சிரிப்பு வந்திடும்.வெஞ்சனம் என்றால் என்னனு கேட்டபோது கடிச்சிக்கிறதுதான் என்றார்.அப்படினா சைடிஷ்.சாப்பிடும்போது  சைடிஷ் சேர்த்து சாப்பிடுவோமே அதன் பெயர்தான் வெஞ்சனம்.நல்லா மென்னு சாப்பிடுனு சொல்வதற்கு நல்லா மெண்டு தின்னு என்பார்கள்.மீதமாகும் உணவை குளுதாடியில் கொட்டு என்பார்கள்.குளுதாடி என்றால் மாட்டுக்கு தண்ணீர்,உணவு வைப்பதற்கான தொட்டி.

கூதடிக்குது என்பார்கள்.அப்படியென்றால் குளுருகிறது என்று அர்த்தம்.என் மாமாவுடன் கடைக்கு சென்றேன்,அப்போது சாலையோரம் பைசா புதைந்துகிடப்பது போல் மேல் தோற்றம் தெரிந்தது.அருகில் வந்து பார்த்தால் சோடாமூடி  புதைந்துகிடந்தது.இந்த சிங்கி என்னைய பலதடவை ஏமாற்றியிருக்கு என்றார்.சிங்கி என்றால் என்னவென்று கேட்டால் அந்த சோடாமூடி பெயர்தான் சிங்கி என்றார்.
 
நாம் செல்லப்பெயர் வைத்து அழைப்பது போல் அந்த கிராமத்தில் ஒவ்வொரு வீட்டினரை அடையாளம் சொல்ல தனித்தனி பட்டபெயர் இருக்கும்.அதாவது களத்து மேட்டுக்காரேன்,கூலாச்சி,மற்றும் பூர்வீக ஊர்களின் பெயர்கள் -கோவில்பட்டியா,கொண்டையம்பட்டிக்காரி,அய்யனம்பட்டியா....மற்றும் ஜாதிகளின் பெயர்களும் இடம்பெறும்.

சில வார்த்தைகள் புரியாமல் இருந்தாலும் ’வாம்மா....’’ச்சொல்லுப்பா’அடி ஆத்தே,அவுக சொன்னாக,வந்தாக,அவங்கே வாந்தாய்ங்கே,போனாங்கே,பிள்ள,எம்புட்டு,இம்புட்டு,எத்தே மொக்கம்(எவ்வளவு பெரிய),எத்தே தண்டி(எவ்வளவு கனம்/நீளம்/பெரிய), அங்கிட்டு,இங்கிட்டுஅம்மாச்சி,அம்மத்தா(அம்மாவின் அம்மா),அப்பத்தா(அப்பாவின் அம்மா),மதினி(அண்ணி),பைய நட(மெதுவா நட) இப்படி பல தமிழ் வார்த்தைகளுக்கு எனக்கு தமிழிலே மொழிபெயர்ப்பு செய்ய வேண்டியிருந்தது.இப்போதைக்கு இவைகள் மட்டுமே நினைவில் உள்ளது.

தற்போழுது காலமாற்றத்தில் சில பேச்சு வழக்குகள் மாறியிருக்கலாம்.சமீபமாக தேனீ மாவட்டம்,மதுரை,உசிலம்பட்டி தமிழை,அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவரும் திரைப்படங்களை பார்த்திருப்போம்.அதுக்காக மதுரைக்காரவுக தலை வாராம,பரட்டையாகவே இருப்பாங்கன்னு முடிவுபன்னிடாதீக.ரொம்ப பாசக்கார பயபுள்ளைக!உழைப்பாளிக!வம்புக்கு போகமாட்டாங்கே,வந்த வம்ப விடமாட்டாங்கே,நியாயமா நடந்துப்பாங்கேனு சொன்னேஏ....

Sep 5, 2011

மூன்று முத்துக்கள்

இன்று ஆசிரியர் தினம்.
என் பள்ளி,கல்லூரி ஆசிரியர்களை நினைவில் கொண்டும்,மற்ற பிற அனைத்து ஆசிரியர்களுக்கும் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  

தொடர் பதிவு எழுத அழைத்த சகோதரி  ஏஞ்சலின் அவர்களுக்கு நிறைந்த நன்றிகளை தெரிவித்து தொடங்குகிறேன்.

1. நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?          
         என் குடும்பம்
      * உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரம்      செய்யாமல் வாழ வேண்டும்.
      * எதிர்பார்ப்பில்லாத நட்பு

2. நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
      * ஏமாற்றுதல்
      * குத்தல் பேச்சுகள்
      * அவதூறு பேசுதல்

3. பயப்படும் மூன்று விஷயங்கள்?
     சிறுபிள்ளையில் இரவில் நாய் அழுவதைக் கேட்டால் அதிகம் பயப்படுவேன்.எதுவாக இருந்தாலும் சகித்துக்கொள்ளும் மனநிலை வந்துவிட்டதால் தற்போழுது எதற்கும் பயம் என்று தோன்றுவதில்லை.

4. உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
     * மரணமும், மரணத்திற்கு பின் ஆன்மா என்னாகிறதென்று ஆளுக்கொரு கதை சொல்றாங்களே!(இறந்துதான் தெரிஞ்சுக்கனும் போல)
    *  எதுவாக இருந்தாலும் நிறையபேருக்கு உடனே புரிந்துடுதே?
    *  அரசியல்

 5. உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
  * மடிக்கணினி மற்றும் கணினி சம்மந்தப்பட்டவைகள் மட்டும்.

6. உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
   * ஃப்ரண்ட்ஸ் திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகள்
   * என் மகளின் குறும்புகளும் மழலைப் பேச்சுகளும்.
   * முதன் முதல் எதற்காக சிரித்திருப்பேன் என்பது
நினைவில்லை.ஆனால் துன்பம் ஒன்று நிகழ்ந்ததில் சிரிப்பு என்பதையே மறந்திருந்த காலத்தில் சிரிக்கும் சூழ்நிலை வந்தாலும் உதட்டளவில் சிரித்த காலத்தில் பதிவர் ஒருவரின் பதிவை எதார்த்தமாக படித்த போது மனதார சிரித்தேன்.உண்மையில் எனது  வேதனையின் கனம் குறைந்ததாய் உணர்ந்தேன். துன்பத்திலிருந்த என்னை சிரிக்க வைத்த அந்த பதிவை
நேரமிருப்பின் நீங்களும் படித்து பாருங்களேன்

7. தாங்கள் தற்போது செய்து கொண்டு  இருக்கும் மூன்று காரியங்கள்?
     * என் குடும்பத்தின் பொறுப்பாளர்
     * தையற்கலையை ஒழுங்காக செய்வதற்கான முயற்சிகள்
     * இலக்கியம்,கதை,கவிதை,பொதுநலம்,சமூகசிந்தனை,நகைச்சுவை மற்றும்  பல பிரிவுகளிலும் பதிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பதிவுலகில் நானும் பதிவு எழுதுகிறேன்,மறுமொழியிடுகிறேனென்று வலம் வந்துகொண்டிருக்கிறேன்.

8.வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
    * எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்ய வேண்டும்.(நான் அவ்வளோ மந்தம்)
மற்றபடி என் வலைதளத்தின் தலைப்பில் குறிப்பிட்டுள்ளது போல் “நல்லபடியாக விடிந்த இன்றைய பொழுதில்,நல்ல எண்ணங்களுடன்,நல்ல வழியில் சென்றால் நாளையும் நல்லபடியாகவே விடியும்”என்பதுதான்

9. உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயஙகள்?
     * என்னை வேதனைக்கு உள்ளாக்கியவர்களிடமும் இன்முகத்துடன் பழகுவேன்.
     *  என்னை சார்ந்தவர்களுக்கும் நட்புகளுக்கும் தொல்லை கொடுக்காதிருப்பது(பிறகு ஏன் பதிவு எழுத வந்தனு யாரோ முனுமுனுக்கிறாங்கப்பா…)
    * எளிமையான கைவினைப் பொருட்கள்

10. கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?.
     * பொய்கள்
     * புறம் பேசுதல்
     * தெரிந்தே செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது

11. கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
     * உள்நோக்கங்களை  புரிந்துகொள்வது எப்படி?
       *    கணினி &
வண்ணமற்ற தலையணி உறையின் பூக்கள்,இலைகளில் ஃபேப்ரிக் பெயிண்டிங் கொண்டு வண்ணமிட்டுள்ளேன்
இதில் உள்ள பச்சை நிற கொடிகளும்,முக்கோணங்களும்,29 சிறிய பொம்மைகளும் நான் வரைந்தது
 
வரைபடங்களை  ட்ரேசிங்  செய்து  வண்ணமிடும் புத்தகத்தை  என் தோழி ஒருவர்  கொடுத்திருந்தார்.அதில் உள்ள இந்த பெண் வரைபடம் ஒன்றை சேலையின் முந்தானை பகுதியில் ட்ரேசிங் செய்து  3டி கலர்&ஃபேப்ரிக் பெயிண்ட் கொடுத்துள்ளேன்.

இது போன்ற பல வேலைப்பாடுகள் கற்றுகொள்ள விரும்புகிறேன்

12.  பிடிச்ச மூன்று உணவு வகை?
     * அம்மா சமைத்து தந்த உணவுகள் அனைத்தும்
     * ருசியான,சுத்தமான அனைத்து சைவ உணவுகளும்,இனிப்புகளும்

13. அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
     * தற்சமயம் விக்ரம் நடித்த தெய்வத் திருமகன் பாடல்கள்
     * மெலடியான பாடல்கள்.(எந்த பாடலானாலும் ரெண்டுவரிக்கு மேல்  ராகம் வராது)

14. பிடித்த மூன்று படங்கள்?
    * காதலர் தினம்(தோழிகளுடன் முதன் முதலாக பார்த்த படம்)
    * அலைபாயுதே
    * மொழி

15. இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்   
    * தேவையான உணவு,உடை,தங்குமிடம்,பணம்,
    * ஆரோக்கியமான உடல்
    * நல்ல உள்ளம்

16. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
     * எனக்கு பதிவுலகில் நட்புகள் மிகக் குறைவு.எனக்கு தெரிந்த நட்புகள் அனைவரும் இந்த தொடர் பதிவினை முடித்துவிட்டார்கள்.பிறரை அழைக்கலாம் என்றால் அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதா அல்லது கட்டாயத்தினால் தொடர்வார்களா அல்லது மறுத்துவிடுவார்களா என யோசிக்கவேண்டியுள்ளதால் நமக்கான நேர்காணல் போன்ற இந்த மூன்று முத்துக்கள் தொடர் பதிவை விருப்பமிருக்கும் பதிவர்கள் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Sep 1, 2011

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு ரூபங்களில் என் வலைதளத்தில் விநாயகர் காட்சி தருகிறார்.நடைபெறும் பூஜையிலும் அனைவரும் பங்குபெற அன்புடன் அழைக்கிறேன்.

வாருங்கள் !மேள தாள,இசை வாத்தியங்களுடன் தங்களை விநாயகர்கள்  வரவேற்கின்றார்கள்
இங்கிருக்கும் இருக்கையில் அமருங்கள்.இனிப்பை எடுத்துக்கொள்ளுங்கள்.  தரிசனங்களைக்  காணுங்கள்.

















இதுவரை  கண்டுகளித்தமைக்கு நன்றி.அபிசேக ஆராதனையிலும் பங்குபெறுங்கள்
தீபாராதனை முடிந்து அலங்கரிக்கப்பட்டுள்ள பெருமானுக்கு படையலும் நடைபெறுகிறது.பிரசாதங்களை எடுத்துக்கொள்ளவும்.மறக்காமல் தாம்பூலமும் எடுத்துக்கொள்ளுங்கள்.
பல்வேறு ரூபங்களில் இவ்வளவு நேரம் நமக்காக தரிசனம் தந்த விநாயகர் கொழுக்கட்டை சாப்பிட்ட அசதியில் உறங்கிக்கொண்டுள்ளார்.சற்று இளைப்பாரட்டும்.உறக்கத்திலும் நம்மை கவனித்துக்கொண்டிருப்பார்.விநாயகரின் அருள் அனைவருக்கும் உரித்தாகட்டும்.
போற்றி,போற்றி
******வாழ்க வளமுடன்.******

அனைத்து படங்களும் இணையதளத்திலிருந்து  எடுக்கப்பட்டவைகள்.