*வணக்கம் வருகைக்கு நன்றி*

Dec 28, 2011

விடைபெறுகிறது : 2011,வரவேற்புகள் : 2012

குடும்ப உறுப்பினர்களாய்
நொடிகள்,நிமிடங்கள்,மணித்துளிகள்,
நாட்கள்,வாரங்கள்,மாதங்களை  
சுமந்து வரும்
வருடமே!

எங்களுடன் பயணிப்பதில்
உனக்கு சுகமோ,சுமையோ?
நீ சுகமாவதும்,சுமையாவதும்
பகுத்தறியும் உயிர்களுக்கு
மட்டுமே!

தான் பிறந்த வருடமே
பெற்றவரோ,மற்றவரோ
சொன்னால்தான் அறிந்துகொள்ளும்
மனிதனே!

சோகமாய் வழியனுப்பாவிடினும், 
புத்தாண்டை வரவேற்ப்போர்களை
அவ்வளவு பாரமாகிப் போனேனா?
கேட்கிறது, இந்த வருடம்!

வருடக் கடைசி நொடியில்  
எங்களைவிட்டுச் செல்கிறாயே
என்று நினைத்தாலும் உன் நன்றியை
பாராட்டி விடைபெறும் இந்த வருடம்!

நிதர்சணங்களை உணர்த்தவே
வரவேற்பையும் வழியனுப்புதலையும்
எதிர்பார்க்காமல்,எதற்காகவும் காத்திராமல்
வந்து செல்கின்றது வருடங்கள்!

அன்றாட பிழைப்பிற்கு விழிபிதுங்கும்
மனிதனும் இருக்கிறான்.வருட வரவேற்பு
கொண்டாட்டங்கள் சக உயிர்களை
பாதிக்காமல் இருக்கட்டும்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Dec 14, 2011

இந்த திறமை எங்கிருந்து உதித்திருக்கும்

நூறு  சதவீத  நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை.தன்னை  மற்றவர்  மனதில்  நல்லவிதமாக  பதிய  வைக்க, நட்புடன் ,மதிப்புடன்  வாழ  பல்வேறு வழிகள் இருந்தாலும் அவரவர் குணநலன்களும் முக்கிய காரணிகளில்   ஒன்றாகும்.குணநலன்கள் மரபணுக்களிலும்,வளர்ப்பிலும் துளிர்த்தாலும்,  அமையும் சமுதாய சூழ்நிலையிலும், சந்தர்ப்பங்களிலும், வாழ்நாள் முழுதும் குணநலன்கள் என்பது ஆலமர விழுதுகள் போல ஒரு மனிதனுக்கு பல்வேறு வடிவங்களுடன் துளிர்த்து அந்த மனிதனை தாங்கிப்பிடிப்பது போலான  காட்சியாகிறது. அது தனியொரு மனிதனின் அடையாளமாகிறது.

நமது சுபாவங்களை மற்றவருக்கு அடையாளம் காட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது நமது வாய்தான்,அதாவது நாம் பேசுவது.பேசும் விதங்கள்தான்  மற்றவரிடம் எப்படி பழகுகிறார்கள்,தனக்கான அடையாளத்தை,மதிப்பை பெறுகிறார்கள் என்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.இதில் எனக்கு கிடைத்த அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்துகொள்கிறேன்.

இனி இந்த பதிவில் ஒவ்வொரு பத்தி முடியும்போதும் பதிவின் தலைப்பை ஒருமுறை நினைவில்கொள்ளுங்கள்.

 சிறுவயதில் என் குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன்.பள்ளி படித்துக்கொண்டிருந்த எனக்கு ஆலசனையோ,முடிவோ சொல்லத் தெரியாத அந்த காலகட்டத்தில் வீட்டில் நடப்பதை அப்படியே என் வகுப்புத் தோழிகளிடம் சொல்வேன்(ஒப்பிப்பேன்).அவர்களிடமிருந்து எந்த கருத்தையும் நான் எதிர்பார்த்து சொன்னதில்லை.அவர்களிடமிருந்து ம்...,அப்படியா என்பதில் மட்டும் ஏற்ற இரக்கங்கள்,பரிதாபங்கள் வெளிப்படும்.சக வயதினர் என்ன ஆலோசனை சொல்லிவிட முடியும்.

ஒரு சமயத்தில் ம்...அப்படியா என்றவர்களில் யாரோ ஒருத்தி நான் சொல்வதை வைத்து என்னையே ஏளனப்படுத்தியபோது,ஒருவன் என் வீட்டினரை கேளிக்குள்ளாக்கியபோது பலமுறை ”ம்” மட்டும் போட்டவர்களின் குணநலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணரமுடியவில்லை.ஆனால் அவர்களின் மாற்றம்/வளர்ச்சி , இத்தனை நாள் நாம் ஏன் இவர்களிடம் நம் வீட்டு பிரச்சனைகளை சொல்லிக்கொண்டிருந்தோம்,இதனால் என்ன பலன்?இப்போது கிடைத்திருப்பது என்ன?என்ற யோசனை வந்தது.

அதிலிருந்து என்ன நடந்தாலும் யாரிடமும் எதுவும் சொல்வதில்லை.எதை சொல்ல வேண்டும்,எதை  சொல்லக்கூடாது என்பதனை கற்க வைத்தது இந்நிகழ்வு.ஆனால் காலமும் மனமும் பழகி வடிகட்டி நமக்கு ஏற்ற குணநலமுடையோரை நமக்கு அடையாளம் காட்டும்.அவர்களிடமும் நூறு சதவீத ஏற்பு இருப்பதில்லை.நட்போ,உறவோ வேண்டுமெனில் அனுசரிப்பு கட்டாயம் வேண்டும்,குற்றம் பார்க்கும் குணம் குறைய வேண்டும்,விட்டுக் கொடுத்தல்,மன்னித்தல் நம் தன்மானம் குறையாதவரை வேண்டும் என்பதையும் அதற்கு பிறகான காலங்களும்,மனிதர்களும் கற்றுத்தந்தனர்..

ஒன்றுமே இல்லாத அதாவது உப்பு சப்பு பொறாத ஒருவரி செய்தியை அரைமணி நேரம் பேசும் அல்டாப்பு ராணிகளை பிறகான காலத்தில் பார்த்து வியத்தும் போயிருக்கிறேன்,வியர்த்தும் போயிருக்கிறேன்.தனக்குள்ள சந்தோசங்களை,நல்ல விசியங்களை சொல்லாமல் பிரச்சனைகளை,கஷ்டங்களை மட்டுமே பகிர்ந்துகொள்ளும் மகாப் பிறவிகளிடமும் மாட்டியதுண்டு.இவர்களை விட்டு விலக வழி தெரியாமல் விழித்ததுண்டு.


சிலர் நம்மிடம் பேசுவதை வைத்தே விளையப்போவதை யோசிக்காமல் எல்லாத்தையும் உலருவோம், அவர்கள் கேட்பதை விட அதிகம் பகிர்ந்துகொள்வோம்.நன்மை விளையும்வரை ஒன்றும் தெரியாது.அவர்களால் துன்பம் வரும்போதுதான் அவர்களைப்பற்றி சிந்திப்போம்.இதிலும் சிலரை விட்டு எளிதில் விலகிட முடியாது.அதிலும் சில கில்லாடிகள்,நான் நல்லதுக்குதான்,செய்தேன்/சொன்னேன் இப்படியாகும்னு எனக்குத் தெரியாது,என்னை தப்பா நினச்சிக்காதன்னு சொல்வாங்க பாருங்க........

என்னை பேசவிடாமல் தனது விசியங்களை மட்டுமே பேசி அல்லது புலம்பிக்கொண்டிருப்போரிடமிருந்து நாம் ஒருவரிடம் பேசும்போது நாம் மட்டுமே பேசாமல் மற்றவருக்கும் பேச வாய்ப்பு தர வேண்டும் என்பதை உணர்ந்தேன்.பிறருக்கு வாய்ப்பு தரும்போது நான் சொல்ல வந்ததை சொல்ல மறப்பதும் உண்டு.சில சமயம் அரைகுறையாக விசியங்களை பகிர்ந்து குழப்பத்திற்குள்ளானதும் உண்டு.


நாம் என்ன விசியங்கள் சொன்னாலும் இதைவிட நல்லதா/சிறந்ததா நான் செய்வேன்,சொன்னேன்,பாத்திருக்கேன் அதாவது தற்பெருமை பேசுபவர்களிடம் முகம் சுழிக்க முடியாமல் கேட்கவேண்டிய தருணங்கள் கொஞ்சம் வேதனைதான்.இவர்களுக்கு மேல்  மோசமான ஆசாமிகள் யார் தெரியுமா என்ன சொன்னாலும் மட்டம் தட்டி பேசுபவர்கள். தாழ்மையுணர்ச்சியைத் தூண்டுவார்கள்.

மற்றொரு மோசமான ரகம் நாம் சொல்வதை வழிமொழிந்துவிட்டு நாம் சென்றபின் நாம் சொன்னதை வைத்து கிண்டலடிப்பது.குத்திகாமிச்சு/சொல்லிக்காமித்து பேசுபவர்களிடம் எதிர்த்தும் பேசமுடியாமல்,விவாதிக்கவும் முடியாமல் தவித்ததுண்டு.இவர்களிடம் முன்னடி போனாலும் முட்டும்,பின்னாடி போனாலும் உதைக்கும் என்ற பழமொழிதான்.இப்படிபட்டவர்கள் என்னிடம் பேசினாலே இவங்க சாதாரணமாதான் பேசுறாங்களா அல்லது எதாவது உள்குத்துடன் பேசுறாங்களான்னு மைண்ட் வாய்ஸ் கேக்கும்.

நல்லாதான   பழகினாங்க,நான் என்ன தப்பு செய்தேன்னு திடீர்னு இப்படி குத்தலாவே பேசுறாங்க,அல்லது இவங்க எப்போதுமே இப்படித்தானா, நாந்தான் தாமதமா புரிஞ்சுட்ருக்கேனா?நான் சரியாதான் பேசிட்ருக்கேனா?அதிக உரிமை எடுத்துக்கிட்டேனா?இத்தனை யோசனைகளுடன் இந்த நட்பு அவசியமா என்று சிந்திப்பது மட்டுமல்ல,மனநிலை குழம்பியேபோயிடும்.என் தவற்றை திருத்திக்கொள்ள இவங்களிடம் என் குற்றம் என்னனு கேட்டுத் தெரிந்தாகனும்னு நான் எதாவது தவறாக சொல்லியிருந்தால் வெளிப்படையா சொல்லிடுங்கனும் கேட்டும்விட்டேன்.பதில் இல்லை.சில நாட்களுக்கு பின் பிரிவுதான் ஏற்பட்டது.

சிலர் நாம் என்னதான் பழகினாலும்,மனம்விட்டு பேசினாலும் நம்முடன் ஒட்டமாட்டார்கள்.மேற்சொன்ன விதங்களை சந்திப்பதைவிட இப்படி தாமரை இலை தண்ணீர்போல யாருக்கும் பிரச்சனை இல்லாமல் இருப்பது மிகவும் சிறந்தது.முடியாதபட்சத்தில் மட்டுமே மற்றவர்களின் உதவியை நாடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் எனக்கு சில மனமொத்த நட்புகளும் உண்டு.நட்பானாலும் எந்த உறவானாலும் இருவருக்கான அனைத்து குணங்களும் ஒன்றிவிடுவதில்லை.சில பண்புகள் இயற்கையாக ஒன்றிவிடும்,சில பண்புகளை ஒன்றவைக்க முயற்சித்து வெற்றியோ தோல்வியோ பெறலாம்.அல்லது இருவரின் தன்(ம)மானம் பாதிக்காத வரை அவரவர் போக்கிலே அன்பை பகிர்ந்துகொள்ளலாம்.
***********************************************************************முற்று.

15 வருடங்களாக பொதுநலப்பணியில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவர் வலைப்பூ எழுதி வருகிறார்.சில விசியங்களை  ஊடகங்களிலிருந்தும்  பகிர்ந்துகொள்கிறார்.பின்னூட்டங்கள்,பின் தொடர்வோர் இல்லாமலே 233 பதிவுகள் வெளியிட்டுள்ளார்.இவர் செயல்படும் பொதுநலப்பணிகள் சம்மந்தமான வலைதளங்களின் முகவரிகளும் அந்த வலைப்பூவில் உள்ளது.இரண்டு நாட்களுக்கு முன் அவரின் அனுமதி பெற்று அவரின் வலைப்பூவை அறிமுகம் செய்கிறேன்.விருப்பமும்,நேரமும் இருப்பின் இங்கே கிளிக் செய்து அவர் தளம் செல்லலாம்.


Dec 8, 2011

இந்திய கலைப்பொருட்களின் பெருமை சொல்லும் இந்திய அரசால் நடத்தப்படும் கண்காட்சியகம்

தில்லியில் ஜன்பத் என்ற இடத்தில் ஜவகர் வியாபர் பவன் என்ற முகவரியில் சென்டரல் காட்டேஜ் இண்டஸ்டரிஸ் எம்போரியம் உள்ளது.இங்கு நம் இந்தியர்களின் பெருமையை பறைசாற்றும் கைவினைப்பொருட்களும்,கலைநயம் மிக்க பொருட்களும் காட்சிக்கு உள்ளது.பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த பொருட்கள் முதல் தற்போழுதுள்ள பொருட்கள் வரை காட்சிக்கும் விற்பனைக்கும் உள்ளது.


1948 ஆம் ஆண்டு முதல் நம் இந்திய அரசாலே நடத்தப்படும் இந்த காட்சியத்திற்கு விடுமுறை கிடையாது.நுழைவு கட்டணமும் கிடையாது.ஆனால் பொருட்களின் விலையிலும் மலிவு இல்லை(இதை முக்கியமாக சொல்ல வேண்டுமே).ஆனால் விலை கொடுத்தாலும் கிடைக்காத சில அரிய பொருட்களை காணும்போது,தேடி அலையாமல் ஒரே இடத்தில் கிடைக்கும்போது விலை இப்படித்தானிருக்குமென தோன்றியது.இந்த காட்சியகம் கானாட் ப்ளேஸிற்கு அருகில்தான் உள்ளது.

இந்திய சுற்றுப்பயணம் வருபவர்கள் தில்லியில் இந்த இடத்திற்கு வந்தாலே இந்தியாவின் அனைத்து மாநில கலைநுணுக்கங்களையும் தெரிந்துகொள்ளலாம். விரும்பியதை விலை கொடுத்தும் பெறலாம்.அனைத்து இந்திய சிறப்பான ஓவியங்கள், ஆடைகள்,அலங்காரப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், சில மூலிகை பொருட்கள், குழந்தைகளுக்கான பொருட்கள், புத்தகங்களும் இடம்பெற்றுள்ளது. சிற்றுண்டிக்கான வசதியும் உள்ளது.
நுழைவுவாயில்
 ஆள் உயரத்திலிருக்கும் இந்த நடராஜர் சிலையை கடந்துதான் உள்ளே செல்ல வேண்டும்.இவரும் விற்பனைக்குதான்.விலை பதினாறு லட்சத்து நாற்பதாயிரத்து சொச்சம்.வாசலில் இதை பார்த்தவுடனே திரும்பி வீட்டுக்கு போய்டலாம்னு எனக்கு தோனுச்சு.என்னதான் மேலும் இருக்குன்னு பாத்துட்டு வருவோம்னு உள்நுழைந்தோம்.கடந்த ஞாயிற்றுக் கிழமை 4/12/2011 அன்றுதான் சென்றோம்.சுற்றிப்பார்க்க இரண்டிலிருந்து இரண்டரை மணி நேரம் தேவைப்பட்டது.ஆனால் அங்கு வருகை தந்திருந்தவர்களில் பத்து இந்தியர்கள் கூட இல்லை.அதிக வெளிநாட்டினரே வந்திருந்தனர்.நமது கலைநயத்தை ஒன்றுவிடாமல் ஃபோட்டோ எடுத்தபடியும்,நிறைய பொருட்களை வாங்கிக்கொண்டும் இருந்தனர்.

ஒவ்வொரு பிரிவிலும் நாம் வாங்கும் பொருள்களுக்கு கணினி பில்லின் காப்பி கொடுக்கப்பட்டது.ஒரிஜனல் பில்லும், பொருளும் டெலிவரி பிரிவில் அவர்களே சேர்த்துவிடுகின்றனர்.நாம் கண்காட்சியகத்திலிருந்து வெளியே செல்லும்போது காப்பி பில்லும்,பணமும் கொடுத்துவிட்டு ஒரிஜனல் பில்லுடன் பொருளைப் பெற்று வெளியேறலாம்.பார்சல் அனுப்ப வேண்டுமெனிலும் அவர்களே அதற்குத் தகுந்தாற்போல பேக்கிங் செய்து தருகிறார்கள்.

பழங்காலத்து கதவுகள்,அணிகலன்கள்,கோவில்களில் காவல் தெய்வங்களாக இரு பக்கமும் பெரிய சிலைகள் இருக்குமே,அப்படியான சிலைகள்,பெரிய பல கடவுள் சிலைகள் ,இவற்றிலும் வெவ்வேறு மூலப்பொருளகளால் செய்யப்பட்ட வடிவ விதங்கள்,பழங்காலத்து மட்பாண்டங்கள்,பழங்காலத்தில் நோய்வாய்பட்டவர்கள் இறக்காமல் நீண்டநாள் அவதிப்படுபவர்களை பெரிய மண்பானையில் உள்ளே வைத்து மூடிவிடுவார்களே!அத்தகைய பானைகளும் இருந்தன.

  

பித்தளை அண்டா, குண்டாக்கள், பித்தளை, வெள்ளி, தங்க பாத்திரங்கள், பித்தளை பொருட்களின் மீது தங்க கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ள பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள், ஆபரணங்கள், நவரெத்தினங்கள், பல வகை மரத்தினாலான பொருட்கள்,பீங்கான்,பிளாட்டினம்,மார்பிள் மற்றும் பலவகை கற்களால் செய்யப்பட்ட அனைத்தும் பல்வேறு மாநிலங்களுகான கலைத்திறன்களுடன் காணப்பட்டது.தங்க,வெள்ளி நாணயங்களும் விற்பனைக்கு இருந்தன.

அன்று அங்கு ஒரு கிராம் தங்கத்தின் விலை 2820 ரூபாயாக இருந்தது.ஆடைகள்,கம்பளிகள்,சால்கள்,பட்டு மற்றும் ரெடிமேட் உடைகளின் விலைகள் அந்தந்த மாநிலத்திற்கே சென்று வாங்கும் போக்குவரத்து செலவையும் சேர்த்து பில் போட்டிருக்கிறார்கள் என்று நினைக்க வைத்தது.பெரிய மற்றும் சிறிய பொருட்களின் கலை நயமும், வண்ணமும் வியக்கும்படிதான் இருந்தது. இங்குள்ள பொருட்களை இணையத்தின் வழியே ஆன்லைனிலும் விலை கொடுத்து வாங்கலாம். 


தலையனை உறை







.


பல வெளிநாட்டினரும் மற்றும் சிலரும் இங்கு வந்திருகின்றனராம்.கீழே உள்ள படங்கள் இணையத்தில் கிடைத்தது.