*வணக்கம் வருகைக்கு நன்றி*

Mar 21, 2013

ஜவஹர்லால் நேருவின் குடும்பத்தை பார்ப்போம் வாங்க

கடந்த ஞாயிற்று கிழமை (17/3/2013)எங்கள் குடியிருப்பு பகுதியில் ஒரு நாள் சுற்றுப் பயணமாக தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையின் முகல் கார்டன்,ஜவர்ஹர் லால் நேரு மீயுசியம்(தீன் மூர்த்தி பவன்),இந்திரா காந்தி மீயுசியம்,இந்தியா கேட் மற்றும் கரோல் பக் வணிக வளாகம் சென்று வந்தோம்.

முகல் கார்டன்

ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை குறிப்பிட்ட  நாட்களில் பொது மக்களுக்கு ஜானாதிபதி மாளிகையின் தோட்டமான முகல் கார்டன் பார்க்க இலவச அனுமதி அளிக்கப்படுகின்றது.2006 ஆம் ஆண்டு முகல் கார்டன் சென்றுள்ளேன்,பிறகு இந்த முறை சென்றபோது எதுவுமே மாறலையே என்று நினைக்கத் தோன்றியது.கழிப்பறைகள் கட்டப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளது மட்டும் மாற்றமாக தெரிந்தது.ஏனெனில் 2006 ல் சென்றபோது குடியரசு மாளிகையின் தோட்டத்திற்கு வந்த மக்களுக்கே இவ்வளவு கேவலமான கழிப்பறை வசிதியா என்று நினைக்க வைத்தது.ஏற்கனவே பார்த்ததாலோ என்னவோ பூக்களைக் கண்டு  முதல் முறை அடைந்த குதுகலம் இல்லை.சென்ற முறை பார்த்த கனகாம்பரமும் தும்பை பூவும் கண்ணில் தென்படவில்லை.இங்கு புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை.


தீன் மூர்த்தி பவன்(ஜவஹர் லால் நேரு மீயுசியம்)

இங்கு நுழைந்த போது ஐ!!!!!! நேரு மாமாவின் வீட்டிற்கு போகிறோம் என்ற குதுகலம் உள்ளே சென்று அனைத்தையும் பார்த்தபோது இனம் புரியாத துக்கமாக மாறியது.வாழ்க்கை வரலாற்று நினைவிடமும்,புகைப்படங்களும் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.இப்போது உள்ள அரசியல் தலைவர்களின் நிலையை நினைத்து நொந்து கொள்ளவும் வைத்தது.தேசத்திற்காக பாடுபட்ட எத்தனையோ பேர் மக்கள் மற்றும் அரசாங்கத்தால்  அடையாளம் தெரியாமல் பாதுகாக்கப் படாமல் போய்விட்டனரே என்றும் நினைக்க வைத்தது.

 பிரிட்டிஸ் ஆட்சியில் பிரிட்டானிய படைத்தளபதி வாழ்ந்த இந்தக் கட்டிடம், பின்னர் விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் வசிப்பிடமாக இருந்தது. நேரு இறந்ததின் பின்னர் இக் கட்டிடம் தேசிய நினைவுச் சின்னம் ஆக்கப்பட்டுள்ளது .அழகான தோட்டம்,ஏகப்பட்ட அறைகள்,முக்கிய ஓவ்வொரு அறைக்கும் இரு வழிகள்,நூலகம்  மற்றும் நேரு அவர்களுக்கு கிடைத்த விலை மதிப்பற்ற பரிசுப் பொருட்கள் பிரமிப்பை ஏற்படுத்தியது.அலுவலக அறைகள் கண்ணாடிக் கதவால் அடைக்கப்பட்டு உள்ளே அனுமதியின்றி காட்சிக்கு மட்டும் இருந்தது,சிறிய விற்பனை நிலையமும் இருந்தது.

கோளரங்கமும் உள்ளது.1984 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி  ஜவகர்லால் நேருவின் மகள்  இந்திரா காந்தி அவர்கள் அதனைத் திறந்து வைத்தாராம் .காட்சி நேரம் எங்களுக்கு ஒத்து வராததால் கோளரங்க காட்சிக்கு செல்லவில்லை.இந்தியாவின் முதல் விண்வெளிவீரரான ராகேஷ் சர்மா பயணம் செய்த விண்கலமான சோயுஸ் டி 10 இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அனைத்தையும் புகைப்படங்கள் எடுக்க அனுமதித்தனர்.எதை படம் பிடிப்பது,விடுவது என்ற மலைப்பும் எல்லாத்தையும் படம் பிடித்து என்ன செய்ய போகிறோமென்ற நினைவில் மனம் கவர்ந்த படங்களை கிளிக்கினேன்.

அடுத்து சப்தர்ஜங் சாலையில் அமைந்துள்ள இந்திராகாந்தி மியுசியத்திற்கு சென்றோம்.அவர் வாழ்ந்த இடம் காட்சிக்கு விடப்பட்டுள்ளது.இந்திரா அவர்கள் கொல்லப்பட்ட முதல் நாள் நடந்து வந்த காலடித் தடம்,எழுதிய கடிதங்கள்,அவரின் இளமை மற்றும் அரசியல் வாழ்க்கையின் புகைப்படங்கள்,தனது கணவர் ,மகன்கள் ,பேரப்பிள்ளைகளுடன் படங்களும் ராஜீவ் காந்தி உபயோகித்த பொருட்களும் படங்களும் ,குண்டுவெடிப்பில் இறந்த ராஜீவின்  மிஞ்சிய ஆடை காலணிகள் காட்சிக்கு உள்ளது.

 இணைப்பை கிளிக்கி படங்களை பார்க்கவும்   
**************************************************







தற்சமயம் பல பிரச்சனைகளுடன் காங்கிரஸ் இருந்தாலும் இந்த மியுசியங்களின் காட்சிக்கு உள்ளவைகள் எப்படியிருந்த குடும்பம் என இனம் புரியாத துக்கத்தை ஏற்படுத்தியது.நான் இங்கு தந்திருக்கும் படங்களும் விடியோக்களும் மிகவும் குறைவானதுதான்,ஆனால் அனைத்தும் நானே  எடுத்தது.

Mar 8, 2013

மாபெரும் சாதனைப் பெண்கள்

கல்வி,கலை,விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் அல்லது வீர தீர செயல்கள் அல்லது ஒரு இளம் பெண் தனது ஆண் நண்பர்களுடன் சுற்றுவது அல்லது எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது கற்பு/ஆபரணங்கள் சூரையாடப்படாமல் இருப்பது இவைகளில் சாதனை படைப்பதெல்லாம் சாதனை எனில் ஆயிரக்கணக்கில் கொடுக்க வழியில்லாத காரணத்தினால் அடிப்படை வசதியான படுக்கை,கழிவறை,சுகாதாரம் இல்லாத அரசு மருத்துவமனைகளில்  உயிரை பிரசவித்து மறு ஜென்மம் எடுக்கும் பெண்கள்தான் எனக்கு சாதனை பெண்கள்.

தலை வலியும் வயிற்று வலியும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும்.பிரசவ வேதனை பிரசவிக்கும் பெண்கள் மட்டுமே உணர முடியும்.மகள் அல்லது மனைவியின் பிரசவ வேதனை கண்டு  மனசாட்சி உள்ள ஆண்கள் மனம் அல்லது கண்கள் கலங்குவதும் இந்த தருணம்தான்.


குண்டு வைத்து கொல்லப்படும் ஈழத் தமிழர்களின் வேதனைகளை தொலைக்காட்சியில் மட்டும்தானே பார்த்து கலங்கியிருப்பீர்கள்.மற்ற மாநிலங்களை விடுங்கள் நம் தமிழ்நாட்டில் ரெண்டு,மூன்று அரசு மருத்துவமனைகளைத் தவிர மற்ற அனைத்து அரசு பொது மருத்துவமனைகளின் பிரசவ வார்டுகள் பக்கம் வலம் வாருங்கள்.நம் பெண்களின் நிலை உள்நாட்டிலே எப்படியிருக்கின்றது என்று பாருங்கள்.

தகர கட்டில்கள்,தகர தொட்டில்கள் தேங்காய் நார் மெத்தைகள்,குறைவான பஞ்சு மெத்தைகள்,அனைத்து கட்டில்களுக்கும் மெத்தை கிடையாது,பெட்சீட்டுகள் மடுமே அதிகம் கிடைக்கும்.கட்டில்களின் எண்ணிக்கைகளை விட கர்பிணிப் பெண்கள் அதிகம் வந்துவிட்டால் அந்த பெண்களுக்கும் அவர்கள் பெற்றெடுக்கும் இந்நாட்டு குடிமகனுக்கும் கட்டாந்தரைதான்.வெயில் அல்லது மழை காலங்களில் இந்த நிலையை நினைத்துப் பாருங்கள்.

உதிர வாசனை பால் வாசனையில் ஈக்களும் கொசுக்களும் போட்டி போட்டுக்கொண்டு படையெடுக்கும்.தனி அறை இல்லாட்டாலும் இன்ஸ்டட்  ஸ்க்ரீன் தருவார்கள்.அதுவும் தேவைப்படும் நேரங்களில் கிடைக்காது.பக்கத்து அல்லது எதிர் பெட்டிற்கு தகப்பன்,ஆண் விசிட்டர்கள் யார் இருந்தாலும்  நம் குழந்தைக்கு பசி அவர்கள் சென்ற பிறகா வரும்.

எந்த மரப்பு மருந்தும் கொடுக்கப்படாமல் பிரசவ வலியோடு வலியாக மைனர் ஆப்ரேசன் என்று சொல்லப்படும் பிறப்புறுப்பை கிழித்து குழந்தை எடுத்த பின் அதே ரணத்தில் தையல் போட்டு கிடந்தாலும்,சிசேரியன் செய்திருந்தாலும் கழிவறைக்கு பக்கத்தில் பெட் கிடைக்கவில்லையெனில் துரதர்ஷ்டம்.10 மீட்டருக்கு அப்பால் கழிவறை இருந்தாலும் ஸ்ட்ரெக்சரில் செல்ல முடியாது.படுக்கையிலே சிறு நீர்,மலம் கழித்து எடுத்து செல்ல பிளாஸ்டிக் /அலுமினிய கோப்பைகள் வைத்திருப்பார்களே அதுவும் ஒவ்வொரு படுக்கைக்கும் கிடையாது.யார் கட்டிலுக்கு அடியில் இருக்குனு தேடனும் அல்லது அவசரத்தைப் பொருத்து நர்சம்மாக்கள் அல்லது துப்புரவாளியிடம் கேட்டு கெஞ்சனும்.

துப்புராவாளிகள் உதிர கவுச்சியில் வெறி கொண்டு செந்தமிழில் பேசுவதையும்,நமது பரம்பரைக்கே மகுடம் சூட்டுவதும் நொடியில்  கிடைக்கும் பரிசுகள். நமக்கு பின் எவளோ எப்படியோ வந்துட்டு போகட்டுமென்று கழிவறைகளை உபயோகிக்கும் நமது பெண்மணிகள் இருக்க தண்ணீர் வசதியும் இல்லாமல் போவது கொடுமையின் உச்சம்.



லேபர் வார்டில் மருத்துவர் நர்ஸ்களின் ஆராய்ச்சியில் கர்ப்பிணிக்கு பிரசவிக்க நேரமாகுமெனில் அவரை அனுப்பிவிட்டு அடுத்த பெண்ணிற்கு முயற்சிகள் நடக்கும்.அனுப்பிவிடப்பட்ட பெண் நல்ல நிலையில் இருந்தால் நடந்து செல்வார் அல்லது லேபர் வார்டு வாசலில் வலியில் தவித்துகொண்டிருப்பார்.தலைப் பிரசவத்தினர் பிரசவிக்க ஒத்துழைப்பதில்   நேரம் எடுத்தால் மருத்துவர்/நர்ஸ்கள் தாம்பயத்தை கேவலப்படுத்தி திட்டுவதும் ,கர்ப்பிணிகளை தொடையில் சற்று கோபத்துடன் அடிப்பதும் நடக்கின்றது.பெடிற்கு  வந்து நர்ஸ்கள் ஊசி போடுவது குறைவு.நர்ஸ்கள் உள்ள இடத்திற்கு வேதனையுடன் நடந்து சென்று வரிசையில் நின்று ஊசி போடுக்கொள்ள வேண்டும்.

நமது குழந்தை உறங்கும்போது அனைத்து குழந்தைகளும் உறங்கிவிடுமா?வீல்லென்று அழு குரல் சப்தத்தில் கண் அயர்ந்த குழந்தை பயத்தில் உடல் குலுங்கி அழுகத் தொடங்கும்.சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை.எதோ ஒரு கர்ப்பிணியின் அலரலும், மகளின் உதிரக் கைழிவுகளை எடுத்துச் செல்லும் தாய்,குழந்தையின் மலத்தை சுத்தம் செய்யும் காட்சிகள்,நம் அருகே துப்புரவாளி சுத்தம் செய்வதையும் பார்த்துக்கொண்டேதான் நாம் சாப்பிட முடியும்.
எல்லாவற்றையும் விட இவ்வளவு பாடுபட்டு பெற்ற குழந்தை காணாமல் போக 100% வாய்ப்பும் உண்டு.பிரசவத்தில் தாய்க்கு ஆபத்து,குழந்தைக்கு ஆபத்து குறைகள் என்றால் போதுமான வசதி இல்லாமல் தவிக்கும் காட்சிகள் இன்னும் கொடுமை.



ஓரளவு பண வசதி கொண்டவர்களும்  ஒரு வார அவஸ்தைக்கு எதற்கு ஆயிரகணக்கில்  செலவு செய்ய வேண்டுமென்று துணிச்சலாக அரசு மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்த்துக்கொள்கின்றனர். தனியார் மகப்பேறு மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தாலும் அரசு மருத்துவமனைகளில் பல மடங்கு பிரசவங்கள் நடைபெறுகின்றது.இங்கு கிடைக்கும் துன்பங்களை சகித்துக்கொண்டு புன்முகத்தோடு குழந்தைக்கு பாலூட்டி வளர்க்கத்  தயராகும் தாய்மார்களே சாதனைப் பெண்கள்.

பெண்ணுரிமை பேசுபவர்களே,பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர்களே,பணம் படைத்தவர்களே! இங்கு எதாவது உதவுங்கள்.
இன்று ஒரு நாளாவது அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டுக்கு முகம் சுளிக்காமல் செல்ல முடிந்தால் மகளிர் தினத்தை கொண்டாடுங்கள்.