*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 27, 2011

பஹாய் சமயமும் லோட்டஸ் டெம்பிளும்


பல சமயங்கள் பற்றி அறிந்திருப்போம்.அவற்றுள் பஹாய் சமயம் ஒன்று உள்ளதை அனைவருக்கும்  தெரியப்படுத்தவே இந்த பதிவு.
புது தில்லியில் நேரு ப்லேஸ் என்ற இடத்தில் லோட்டஸ் டெம்பிள் என்ற வழிபாட்டு இல்லம்,அனைத்து பிரிவினருக்கான தியான ஸ்தலம் ஒன்று உள்ளது.இதன் வடிவம் தாமரை மலர் போன்றது.இந்த வழிபாட்டு இல்லம் ஒன்பது பெரிய நீர் குளங்களால்


                      சூழப்பட்டுள்ளது,இது வழிபாட்டு இல்லத்திற்கு அழகை உயர்த்துவதோடு பிரார்த்தனை அறைக்கு இயற்கையான குளிர்ச்சியைத்  தருகிறது.அருகே அலுவலகம்,கருத்தரங்கு அறைகள்,நூலகம் மற்றும் ஒலி,ஒளி அறைகள் உள்ளது.ஏற்பாடு செய்கிற நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப பிரார்த்தனை அறையில் பஹாய் சமயம் மற்றும் முன்புவந்த வெளிப்பாடுகளின் புனித  நூல்களிலிருந்து பிரார்த்தனைகள் மற்றும் வாசகங்கள் வாசிக்கப்படும் அல்லது சொல்லப்படும்.மற்ற நேரங்களில் அமைதியான முறையில் தியானம் செய்ய அனைவரும் வரவேற்க படுகிறார்கள்.சொற்பொழிவுகள்,சமயச் சடங்குகள் பிரார்த்தனை அறையில் செய்வதற்கு அனுமதிக்கப் படுவதில்லை.

பஹாய் சமயம் :
பஹாய் சமயம் 1948 ஆம்  ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகத்தில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும்  அதிகாரம் பெற்ற அரசு சார்பற்ற NGO ஸ்தாபனமாக அங்கத்துவம் வகிக்கின்றது.சமூக பொருளாதார சபையிலும்(ECOSOC), ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியகத்திலும்(UNICEF),ஆலோசனை கோரும் அந்தஸ்த்தை பெற்றுள்ளதோடு ஐக்கிய நாடுகள் தகவல் தொடர்பு மையத்தின் அலுவலகத்துடன் பல தேசிய சபைகளின் பதிவுகள் அதிகாரப் பூர்வமாகப் பதியப்பட்டுள்ளன.இந்த சமயம் 360 நாடுகள்,ராஜ்யங்கள்,தீவுகள்,என்பவற்றில் 2112 க்கும் அதிகமான பிரிவுகளைக் கொண்டுள்ளது.
லோட்டஸ் டெம்பிள் :
·         1953 ல் கட்டுமான பணிக்காக நிலம் வாங்கப்பட்டது.
·         26.6 ஏக்கர்
·         34.27 மீட்டர் உயரம்
·         1300 பேர் ஒரே சமயத்தில் அமரலாம்
·         27 (தாமரை) இதழ்கள் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது .
·         9  குளங்கள்
·         70 மீட்டர் விட்டம்
·         திரு பர்பூர்ஷ் சபா என்பவர் கட்டிடத்தை வடிவமைத்துள்ளார்.
·         ஏப்ரல 21,1980 ல் தொடங்கப்பட்டது.
·     டிசம்பர் 24,1986 ஆம் ஆண்டு கடவுள்,மதங்கள்,மற்றும் மனித குலத்தின் ஒற்றுமைக்காக  இந்த வழிபாட்டு இல்லம் துவங்கப்பட்டுள்ளது.
·    இதழ்கள் வெள்ளை சிமென்ட் கலவையால் செய்யப்பட்டு,மேல்பகுதி வெள்ளை நிற கிரேக்க சலவை கற்களால் பதிக்கப்பட்டுள்ளது.
·     இந்தியாவிலும் உலகத்தின் மற்ற பகுதியில் உள்ள பஹாய் சமுதாய மக்கள் தாங்களாக முன்வந்து கொடுத்த நன்கொடையின் மூலம் இந்த வழிபாட்டு இல்லம் கட்டப்பட்டுள்ளது.
·    இந்த லோட்டஸ் டெம்பிள் இந்தியாவின் சுற்றுலாத்    தளமாக      உள்ளது.
·   மேற்கு சமோவா,ஆஸ்திரேலியாஉகாண்டா,பனாமா,ஜெர்மெனி,இலி நியாஸ் போன்ற நாடுகளில் பஹாய் சமயத்திற்கான நினைவு மற்றும் வழிபாட்டு இல்லம் வெவ்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

பஹாய் கொள்கைகள்

·         மனித ஒற்றுமை
·         உண்மையை  சுயேட்சையாக ஆராய்தல்
·         அடிப்படியில் சமயங்களெல்லாம் ஒன்று.
·         சமயமும் விஞ்ஞானமும் ஒத்து இயங்க வேண்டும்
·         ஆண் பெண் சமத்துவம்
·         எல்லாவித துவேசங்களையும் நீக்குதல்
·         சர்வதேச கட்டாயக் கல்வி
·         உலக அமைதி

இங்கு சென்று வந்த அனுபவம்.
தில்லி வந்த புதிதில் ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு இடங்களுக்கு சுற்றிப் பார்க்க சென்றதில் லோட்டஸ் டெம்பிளும் ஒன்று.  உள் நுழைந்த போது அழகான அமைதியான சுத்தமான நீண்ட தோட்டத்தின் தொலைவில் தாமரை வடிவத்தில் கட்டிட அமைப்பு தெரிந்தது.நடந்து போகவே ஆசையாக இருந்தது.கொஞ்சம் தாழ்வான பகுதி வந்தது,எதோ நீண்ட அறை போல இருந்தது,அது காலணிகளை பாதுகாக்கும் இடம்.கட்டணம் இல்லை.மக்கள் கூட்டம் அதிகம் என்றாலும் காலணிகளை வாங்குபவரும் கொடுப்பவரும் காலணிகளை ஒப்படைக்கும் பொது மக்களிடம் கனிவாக நடந்து கொண்டதை அங்குதான் முதன் முதலில் பார்த்தேன்.அது மட்டுமல்ல.பக்கத்திலே சாக்குப் பைகள் கிடந்தது,இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் காலணிகளை ஒப்படைப்பதாக இருந்தால் அந்த சாக்குப் பையில் போட்டு தர வேண்டும்.இந்த முறையை இங்குதான் முதலில் பார்த்தேன்.
சிறிது தூரத்தில் உயரமான பகுதி வந்தது,அதில் தாமரை வடிவ கட்டிடத்திற்குள் ஒரு இதழின் உள் செல்வதற்கான வழி சிவப்பு கம்பள விரிப்புடன் இருந்தது.  சுற்றிலும் (நீச்சல் குளம்) போல வருபவர்களை  வரிசையாக,அமைதியாக வரவேற்க,  வரிசையாக ஆண் பெண்கள் நின்றனர்.அவர்கள் வருபவர்களின் புறத் தோற்றத்தை வைத்து      எந்த  மொழியினர்    என்று  கண்டுபிடித்து         விடுகின்றனர்,          எங்களை     "வணக்கம் வாருங்கள்" என்று வரவேற்த்தது ஆச்சர்யமாக இருந்தது.உள் நுழைந்தோம், அமைதியையும் சுத்தத்தையும் பார்த்து பிரமிப்பாக இருந்தது.தியான நிலையில் சிலர்,வேடிக்கை பார்த்த வண்ணம் சிலர்.வெள்ளை நிற ஆடையில் இருவர் வந்தனர் .சில மொழிகளில் எதோ படிக்கப் பட்டதாக உணர்ந்தோம்.மீண்டும் அமைதி,சற்று நேரத்தில் அங்கிருந்து வெளியில் வர வேறு இதழின் வழியாக வந்தோம்.வரும் வழியில் முக மலர்ச்சியுடன் துண்டு பிரசுரங்களும்,வழிபாட்டு இல்லம் பற்றிய  வரலாற்று பிரசுரங்களும் வழங்கப்பட்டது.பக்கத்தில் அலுவலகம்,சிறிய நூலகம்.இருந்தது.பல இன,மொழி,மாநிலத்தவரும்,வெளிநாட்டினரும் வந்து போவதை பார்க்க முடிந்தது.
அந்த பிரசுரங்கள் அப்போதே படிக்கப்பட்டு குப்பைத் தொட்டியில் போட்டாகி விட்டது.சென்ற வாரத்தில் நண்பர் ஒருவர் இங்கு சென்று வந்து அதே பிரசுரங்களை கொடுத்தார்.சரி பதிவாகப் பதிவோமென்று அதைப் பார்த்துதான் பஹாய் சமயம் மற்றும் லோட்டஸ் டெம்பிளின் விபரங்களை தெரிவித்துள்ளேன். இந்த பிரசுரங்கள் பல மொழிகளிலும் வழங்கப்பட்டது.          அதில்   தமிழ் மொழியிலும் இடம் பெற்றுள்ளது,   மேலும்                விபரங்களுக்கு    என  சென்னை        தி.நகரின்   விலாசம்    ஒன்றும்,  தொலைபேசி   எண், மெயில்   ஐடி   கொடுக்கப்பட்டுள்ளது.   அப்படியெனில்     இந்த                             சமயத்தினர் / சமந்தமானவர்கள்         சென்னையிலும்   இருக்கிறார்கள். .படங்கள்      இணைய தளத்திலிருந்து பெற்றுள்ளேன்.

Feb 25, 2011

புத்தரும் அங்குலிமாலனும்

அங்குலிமாலன் ஒரு கொடியவன்.உலகிலேயே தான்தான் பலசாலி என்ற எண்ணமுடன் ஆயிரம் பேரைக்  கொன்று பலத்தை நிருபிக்க சபதம் கொண்டான்.தொளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது பேர்களைக் கொன்று அனைவரது விரல்களையும் மாலையாக அணிந்தாகிவிட்டது.எண்ணிக்கை ஆயிரத்தை பூர்த்தி செய்ய இன்னும் ஒருவர்தான் மீதி.
அந்த ஒரு மனிதனை அங்குலிமாலன் தேடி வருவதை அறிந்த ஊர் மக்கள் அங்கும் இங்கும் பதுங்க, அந்த வழியாக புத்தர் செல்வதைக் கண்ட ஊரார் இந்த வழியில்   அங்குலிமாலன் ஆயிரமாவது மனிதனை கொல்ல வருகிறான்,தாங்கள் தயவு செய்து செல்லும் பாதையை  மாற்றிச் செல்லுங்கள் என்றார்களாம்.இறக்கப் போவது யார் என்று பாருங்கள் என்று சொல்லி புத்தர் தான் சென்ற  பாதையிலே சென்றாராம்.
அங்குலிமாலனும் புத்தரும் எதிர் எதிரே சந்தித்தனர். அங்குலிமாலன் புத்தரிடம் எச்சரித்தான்,நீ ஒரு பிட்சு, சந்நியாசி என்பதால் உயிர் பிழைக்க வாய்ப்பளிக்கிறேன்,அருகே வராதே திரும்பிச் செல்,நான் தயவு காட்ட மாட்டேன் என்று கோடரியுடன் முன் வந்தவனிடம் நானும் தயவு காட்ட மாட்டேன்,சந்நியாசி எப்படி திரும்பிச் செல்ல முடியும் என்ற புத்தரிடம் மரணத்தை நீயே வலிய வந்து ஏற்கிறாய் என்று புத்தரை கொல்ல முற்பட்டான்  அங்குலிமாலன்.
என்னைக் கொல்லும் முன் ஒரு சிறு வேலை செய்து விடு என்றாராம் புத்தர்.என்ன வேலை என்று கேட்ட  அங்குலிமாலனிடம்  எதிரே உள்ள மரத்திலிருந்து நான்கு இலைகளைப் பறி என்றாராம் புத்தர்.நான்கு இலை என்ன இந்தா நாலாயிரம் இலைகள் என கோடாரியால் ஒரு பெரிய கிளையையே வெட்டிச்  சாய்த்தான் அங்குலிமாலன்.
வெட்டிய கிளையையோ,விழுந்த ஒரு இலையையோ உன்னால் பழையபடி அதே மரத்தோடு இணைக்க முடியுமா என்றாராம் புத்தர்.ஒரு நிமிடம் யோசித்த  அங்குலிமாலன் இதை என்னால் செய்ய இயலாது என்றானாம்.பறிப்பதும்,வெட்டுவதும் குழந்தைகள் கூட செய்யும்,இணைக்க முடிந்தவன்தான் புருஷார்த்தம் கொண்டவன்.சக்தியுள்ளவன்,நீ மிகவும் பலமற்றவன்,பலமுள்ளவன்,சக்திசாலி  என்ற எண்ணத்தை விட்டுவிடு என்றார் புத்தர்.
ஒரு கணம் தீவிரமாக யோசித்த அங்குலிமாலன்,இலையை  மீண்டும் இணைக்க ஏதாவது வழி இருக்கிறதா?என்ற   அங்குலிமாலனிடம் அந்த வழியில்தான் நான் செல்கிறேன் என்றார் புன்னகையுடன்.
அழிப்பதை எந்த பலவீனனும் செய்ய முடியுமெனில்  நான் பலவீனன் அல்ல,நான் என்ன செய்ய வேண்டுமென்ற அங்குலிமாலனை என்னுடன் வா என அழைத்து  சென்றார் புத்தர்.புத்தருடன் சென்ற  அங்குலிமாலனை ஊர் மக்கள் கற்களால் அடித்து துன்புறுத்திய போதிலும் அவன் தான் தவறை உணர்ந்தவனாய் எதிர்க்கவும் இல்லை,கோபம் கொள்ளவும் இல்லை.தவறை உணர்ந்த நீ மனிதனாகி விட்டாய் என்றார் புத்தர்.
அங்குலிமாலன்  சாது ஆகிவிட்டதை கேள்விப்பட்ட பிரசெனஜித் என்பவர் புத்தரை சந்தித்து அங்குலிமாலன் எங்கே எப்படி உள்ளான் என்று கேட்ட போது இதோ என் அருகில் அமர்ந்திருக்கும் இந்த பிட்சுதான்  அங்குலிமாலன் என்றாராம்.
உலகில் எவரும் நல்லவரும் அல்ல,கெட்டவரும் அல்ல,சக்தியின் வடிவம் மட்டுமே பிரச்சனை.இந்த உடலில் மாபெரும் சக்திகள் உள்ளன.உடற்சக்தியை ஆக்கமுள்ள முறையில் உபயோகியுங்கள் என்கிறார் புத்தர்.    
 

Feb 23, 2011

ஞாயிறு தோறும் சாலையோரத்தில் புத்தக சந்தை – தில்லி

தலைநகர் தில்லியில் காண்பதற்கு அறிய  பல இடங்கள் இருப்பதை பலரும் அறிந்திருந்தாலும்,புத்தப் பிரியர்களுக்கான ஒரு இடம் உள்ளது. ஞாயிறு தோறும் புத்தக சந்தை நடைபெறுகிறது தில்லியின் ஒரு பகுதியில்,அதுவும் செகண்ட் ஹேண்ட் புத்தகம்.அதாவது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட எவராலோ உபயகோப்படுத்தப்பட்டு  மீண்டும் விற்பனைக்கு போடப்பட்ட புத்தகங்கள்.சில பகுதிகளில் பழைய புத்தகக் கடை இருக்கும் பார்த்திருப்போம்,அது போல ,மற்றும் இங்கு புதிதாக அச்சிட்ட புத்தகங்ள் இடம்பெறாது,ஆனால் அச்சில் பிழை,கிழிந்த போன்ற குறையுள்ள புதிய புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும்.ஒரு கடை ,இரண்டு கடை அல்ல,சந்தையாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக சாலையோரத்தில் அவரவர் கடை விரித்து வைத்திருப்பார்கள்,அந்த சந்தை (கண்காட்சியாக) நடைபெறும் இடம் தரியா கன்ஜ்.கிதாப் என்றால் ஹிந்தியில் புத்தகம் என்று பொருள்.கிதாப் மார்கெட் ஞாயிற்றுக் கிழமைகள் மட்டுமே.

இங்கு கிடைக்காத புத்தகங்கள் இல்லை,கிடைக்காத வகைகளும் இல்லை.சில புத்தக நிலையங்களில் கிடைக்காத புத்தகங்கள் கூட இங்கு கிடைக்கும்.நமக்குத் தேட முயற்சியும்,பொருமையும்,நேரமும்தான் வேண்டும். அந்தந்த புத்தகங்களின் பாதி விலையில் ஐந்து ரூபாய் விலையுள்ள புத்தகத்திலிருந்து ஆயிரம் ஆயிரம் ரூபாய்க்கு மேலும் விலையுள்ள புத்தகங்கள் கிடைக்கும்.விலைகள் பேரம் பேசியும் பெறலாம்.சில கடைகளில் ஒரே விலைதான் .குழந்தைகளுக்கான புத்தகம் முதல் விவசாயம்,தொழில்நுட்பம்,இலக்கியம்,கணினியல்,பொது அறிவு,நாவல்,வார இதழ்கள்,மாத இதழ்கள்  போன்ற  உலகில் எத்தனை பிரிவில் புத்தகங்கள் உள்ளதோ அத்தனையும் கிடைக்கும்.

ஆங்கில,ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழி புத்தகங்கள் மட்டுமே கிடைக்கின்றது.தமிழ் மொழியில் கிடைப்பது மிக அரிது.உருது,ஜெர்மனி,இத்தாலியன் மொழி புத்தகங்களும் கிடைக்கின்றன.சில கடை விரிப்பாளர்கள் குறிப்பிட்ட வகை புத்தகங்களையும்,குறிப்பிட்ட பதிவகத்தாரின் புத்தகங்களை மட்டுமே விற்பனை செய்கிறார்கள்.பல புத்தகப் பிரியர்களும், புத்தகப் புழுக்காளானவர்களும்,மாணவர்களும்,வருகிறார்கள்.சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகவும் இந்த புத்தக சந்தை இடம் பெற்றுள்ளது. இந்த பகுதியில் பல பதிவகங்களும்,மொத்த விலை புத்தக நிலையங்களும் அதிகம்.

தரியா என்றால் நதி எனவும்,கன்ஜ் என்றால் சந்தை எனவும் சொல்லப்படுகிறது.இங்கே அருகில் யமுனை நதி செல்கிறது.இந்த தரியா  கன்ஜ் பழைய தில்லி எனப்படும் சாஜஹான்பாத் பகுதியில்,நேதாஜி சுபாஷ் சாலை அல்லது அசாப் அலி சாலை பக்கம் என விசாரித்து வரலாம்.இந்த சந்தை ஐம்பது வருடங்களை கடந்து விட்டதாம்.   படங்கள் இணையத்திலிருந்து பெறப்பட்டவைகள்.  

Feb 20, 2011

வட மாநிலத்தவரின் சமையலகம்

பொதுவாக வட இந்தியர்கள் நம் அளவிற்கு எண்ணை,புளி,காரம் சேர்ப்பதில்லை.மற்ற எண்ணைகளை விட அதிகம் கடுகு எண்ணையைதான்  உபயோகிக்கிறார்கள்,இங்கு கடுகு எண்ணை மலிவாகவே கிடைக்கிறது, புளி எந்த ஒரு உணவிலும் சேர்ப்பதே இல்லை,புளிப்பு தேவை என்றால் எலுமிச்சம் பழச்சாரைதான் உபயோக்கிறாங்க,காரத்திற்கு மிளகு,மிளகாய் என்றாலும் காரத்தின் சாரம் குறைவுதான்.இஞ்சி,பூண்டு அதிகம் சேர்க்கிறார்கள்.தேங்காவும் சேர்ப்பதில்லை.

நம் பகுதியில் சாம்பார் பொடி(குழம்பு மிளகாய் பொடி ) இல்லாத வீடு இருக்காது,ரெடிமேட் பொடி வந்துவிட்டாலும் இன்னமும் பெரும்பாலான வீடுகளில் மிளகாய்,மல்லி அவரவர் விருப்பத்திற்கும் சுவைக்கும் ஏற்ப பொருட்களை சேர்த்து வெயிலில் காய வைத்து மில்களில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்வோம்.இங்கு அப்படி ஒரு மிளாகாய் பொடியும் இல்லை,அரைப்பதற்கு மெஷினும் இல்லை,வெறும்  கோதுமை,கடலை  மாவு தயார் செய்ய மட்டுமே அரவை இயந்திரங்கள் உபயோகப் படுத்துகின்றன.மிளகாய்ப் பொடி,மல்லிப் பொடி தனித்தனியாகவும்,கரம் மசாலா அதிகமாகவும்  உபயோகிக்கிறார்கள்.   
மூன்று வேலையும் ரொட்டி (சப்பாத்தி) சாப்பிடுபவர்களும் உண்டு,கூடவே சாஸ்திரத்திற்கு கொஞ்சம் சாதம் சாப்பிடுபவர்களும் உண்டு.காலை,மாலை ரொட்டி,மதியம் சாதம் சாப்பிடுபவர்களும் உண்டு.ரொட்டிக்கு மாவு பிசையும் போது,பாத்திரத்தின் வடிவம் எந்த அளவினாலும் சரி,மாவின் அளவு அதிகமோ,குறைவோ துளி கூட சிந்தாமல் பிசைந்து மிருதுவாக ரொட்டி இடுவதில் வல்லவர்கள் .சிலர் ரொட்டி  இடும்  குழவியை உபயோகிக்காமல்  கையிலே தட்டி தவாவில் ரொட்டி சுடுவதுண்டு,தவா இல்லாமல் நேரடியாக நெருப்பில் வாட்டி இடுவதும் உண்டு.ஆன்னால் இந்த வகையில் மிருதுவாய் எதிர் பார்க்க முடியாது.  நாம் தயிர் சாதம்,தக்காளி சாதம்,புளி சாதம்,பொங்கல்னு சாத வகைகள் செய்வது போல ரொட்டி சாப்பிடும் இவர்கள் ரொட்டியில் பல வகை செய்கிறார்கள்.நமது வெஜிடபிள் ரைஸ் போல,வெஜிடபிள் ரொட்டி செய்வதற்கு தயாராக உள்ளது.பெரும்பாலும் மாவு பிசைய படத்தில் உள்ளது போன்ற தட்டையே(தாம்பாளத்தை)உபயோகிக்கிறார்கள்.உருளைக் கிழங்கு வாய்வு என்று நம்மில் பலர் ஒதுக்குவோம்,இவர்களின் உயிர் பிரதானமாய் உருளைக்கிழங்குதான் உபயோகிக்கிறார்கள்.எந்த காய்களும் எண்ணை விட்டு முறுக முறுக வறுத்து,பொறித்து செய்வதில்லை.
 நம்ம இட்லி,தோசை,சாம்பார் பற்றி தெரியாதவர்களும் உண்டு,தெரிந்தவர்களுக்கு,ருசி அறிந்தவர்களுக்கு அதன் மீது விருப்பமும் உண்டு.அப்படி சுவைத்த பீகாரைச்  சேர்ந்த சகோதரி ஒருவர் பல நாட்களாக தனது சமயலறைக்கு வந்து சாம்பார் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்,மற்றவர் வீட்டு சமையலறையில் சமைக்க சங்கடப்பட்ட நான் ஒரு நாள் துணிந்து சென்றேன்,என் வீட்டு  சாம்பார் பொடி,புளியுடன்.
குக்கரில் சாதம் வைத்துவிடுகிறேன்,அதன் பின் சாம்பார் வைக்க துவுங்கு என்று சொல்லியவர்,குக்கரில் அரிசி,நீர்  போட்டு  தயாரானவர் ஸ்டவ்வில் குக்கரை வைத்தவுடன் சில வினாடிகள் எதோ பிரார்த்தனை செய்தார்,ஆச்சர்யமாக இருந்தது,என்ன பிரார்த்தனை என்று கேட்டபோது “சமையல் செய்யத் துவங்கும் போது  படைத்த பிரம்மா,அன்ன பூரணி,அக்னி பகவானை வழிபட்டுவிட்டுதான் துவுங்குவேன்,இது எங்கள் மரபு வழி பழக்கம்” என்றார்.நல்ல பழக்கம் என்று சொல்லி சாம்பார் வைக்கத் துவங்கினேன்,எங்க வீட்டு மிளகாய் பொடி சேர்ப்பதில் பிரச்சனை இல்லை,ஆனால்  புளி சேர்க்க அந்த பெண் ஒற்றுக்கொள்ளவே இல்லை,கொஞ்சம் புளி சேர்த்தால்தான் நல்லாயிருக்கும்னு வலுக்கட்டாயமாக சேர்த்தேன்,கொதியல் வந்து விட்டது,அடுத்து அடுப்பை நிறுத்த வேண்டியதுதான் பாக்கி,அதற்குமுன் வழக்கம்போல நான் கரண்டியில் கொஞ்சம் சாம்பார் எடுத்து உள்ளங்கையில் ஒரு துளி விட்டு சுவை சரிபார்க்க சென்ற என்னை வேகமாக தடுத்தார்.எச்சில் செய்கிறோம் என நினைத்து தடுக்கிராறோ என விழித்த வண்ணம் ‘சாரி’என்றேன்.
அதற்கு அவர் “பரவாயில்லை,எங்களுக்கு உணவு பரிமாறும் முன் சுவை சரி பார்க்கும் பழக்கம் இல்லை” என்றார்.மேலும் “சமைக்கும் போது சரியாக சமைக்க வேண்டும்,சாப்பிடும்  போதுதான் சுவைக்க வேண்டும்.சமையல் என்பது நாம் படைப்பது(சமைப்பது)உண்பதற்கு முன் சந்தேகித்து சுவை சரி செய்தால் “நீ மற்றவரிடமும்,மற்றவர் உன்னிடமும் பாசமுடையவராகவும்,நம்பிக்கை உடையவராகவும் இருக்க முடியாது “என்று கடவுள் சாபம் தருவாராம்” என்றார்.
உங்க வீட்டுக்கு வந்து இன்று நல்ல ,நல்ல பாடம் கற்றுக் கொண்டேன் என்று சொல்லி சாம்பார் எப்படி இருக்கோ என்ற சந்தேகமுடன்  விடை பெற்றேன்.அந்த சகோதரி ஒரு மணிநேரத்தில் என் வீட்டிற்கு வந்து தன் கணவர்,கொழுந்தனார்,பிள்ளைகள் எல்லோரும் மிக சுவையாக இருக்குன்னு பாராட்டினார்கள்,எனக்கும் பிடிச்சிருக்கு, நான் இன்று கவனித்ததை வைத்து அடுத்தமுறை நானே  சாம்பார் செய்து உங்க வீட்டுக்கு எடுத்து வர்றேன்னு சொல்லிவிட்டுப்  போனார்.அனால் புளி மட்டும் சேர்க்க மாட்டேன் என்றார்.
நம்மில் சிலருக்கு உணவு சமைத்த பின் சிறிது காக்கைக்கு வைத்து விட்டு உணவு பரிமாறும் பழக்கமிருக்கும்.அந்த சகோதரி தினமும் எத்தனை   வேலை  ரொட்டி செய்தாலும் பிசைந்து வைத்திருக்கும் மாவில் ஒரு சின்ன உருண்டை எடுத்து ஸ்டவ்வின் மீது ஒரு கார்னரில் வைத்திருப்பார்.ரொட்டிகள் செய்து முடித்தபின் அந்த உருண்டை காக்கைக்கு வைக்கப் படுவாதாக நினைத்து வீட்டு குப்பைத் தொட்டியிலே போடுவார்.(காகத்தை அழைத்து போடும் வசதி இருக்கும் பகுதியில் இல்லை.)
சீசனில் மலிவாக கிடைக்கும் முள்ளங்கி,கேரட்,குடை மிளகாய், போன்றவற்றில் ஊறுகாய் போட்டு வைத்துக் கொள்கிறார்கள்.முள்ளங்கியை பச்சையாக சாப்பிடுபவர்கள் அதிகம்.வெந்தியக் கீரையை காய வைத்து டப்பாவில் போட்டு வைத்துருகிறார்கள்.உலர்ந்த கீரையை ரொட்டியிலோ,சப்ஜியிலோ சேர்த்துக் கொள்கிறார்கள்.வீட்டிலே நெய் தயாரிப்பதில் கில்லாடிகள்.நிறைய எளிய இனிப்பு வகைகளும் வீட்டிலயே செய்வார்கள்.                             

Feb 19, 2011

மொழியும் உருவமும் அற்றவர் _ பகுதி இரண்டு

கோவில்கள் நிறைந்த ஊரில்தான் வளர்ந்தேன்,மசுதியும் சர்ச்சும்   உண்டு.அந்த காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் விரும்பிய  இடத்தில் கட்டப்படவில்லை,வான சாஸ்திரப்படியும்,கிரகங்களின் நற்பலன் அந்த குறிப்பிட்ட பகுதியில்  கிடைக்கும் தன்மை,அளவைப் பொருத்து கட்டப்பட்டது,வடிவமைக்கப்பட்டது . அதனால்தான்  இந்த கோவிலுக்கு இந்த நாளில் சென்றால் இன்ன நன்மை என்பது அந்த ஸ்தலத்திற்குச் செல்லும்போது  அங்கு  குவிக்கப்பட்டிருக்கும் கிரக சக்தி அலைகளை பெற்று வருகிறோம் என்பதுதான்.
அந்த அலை வீச்சுகளுக்கு  பாதிப்பு வரக்கூடாதுனுதான் கோவிலுக்குள்  செல்போன்  பேசினால் இந்த அலை வீச்சினால் கோவிலின் சக்திக்கு பாதிப்பு ஏற்படுமென  பேசத் தடை விதிக்கப்படுகிறது.அவ்விடத்தில்  நன்மைகளை மட்டுமே நினைக்கும் போதும் மன நிலை ஒன்று படும் போதும் நாம் எண்ணுவது நியாயமானதான பட்சத்தில் நடந்தேரும்.பலரும் பலவித பிரார்த்தனைகள்,அர்ப்பணிப்புகள்,செய்முறைகள், கோவில் திருவிழாக்கள் செய்வது தங்களை விளம்பர படுத்திக்கொள்ள அல்ல,தங்களின் பண வசதியை தெரிவிக்க அல்ல,மனம் ஒன்றி செய்யும்போது நமக்கு நாமே பாசிடிவ் சக்தியை பெறுகிறோம்..
கற்பூரம் ஏற்றல்,(தற்போது பல கோவில்களில் அனுமதி இல்லை)
அகர்பத்தி ஏற்றல்,
நல்லெண்ணெய் விளக்கு,
நெய் விளக்கு,
கலப்பு எண்ணை விளக்கு,
அர்ச்சனை,
மாவிளக்கு,
பூ மாலை,
 சாமிக்கு உகந்த பொங்கல்,சுண்டல்,கூழ் இத்யாதி செய்து படைத்து மற்றவருக்கும் கொடுப்பது,
சுமங்கலி தானம்,
அபிஷேகம் செய்வது,
வஸ்திரம் அற்பணிப்பு,
உபவாசம்,
(இதுவரை சாந்தம்,இனி அதிரடி)
அங்கப்பிரதர்ஷ்ணம்,
அலகு குத்துவது,
தீ மிதித்தல்,
மொட்டை அடிப்பது,
விரும்பும் எண்ணிக்கையில் சந்நிதானம் சுற்றுவது,
கையில் சூடம் ஏற்றுவது,
காவடி எடுப்பது,(நூறு வகை),
உயிர் பலி கொடுப்பது,
மண் சோறு சாப்பிடுவது,

இவை அனைத்தும் தங்களின் சூழ்நிலைக்கேற்ப,பண மற்றும் மன வசதியைப் பொறுத்து செய்யக்கூடியது.
இதெல்லாம் கோவிலுக்கு வந்து போவோர்கள் ,வாழ்வில் நன்மை வேண்டுபவர்கள் செய்வதேனில் இவர்களை விட அதிக நேரம் அதே கோவில் வாசலில் தவம்  கிடக்கிறார்களே பிச்சைகாரர்கள்,அவர்களுக்கு ஏன் அந்த நல்ல சக்தி கிடைக்கவில்லை ,கடவுளை நினைக்காமல்,கோவிலுக்கு வருபவர்கள் மேலே கண்ணாக இருப்பதாலா?அந்த சக்தி வட்டத்திற்குள் செல்லாததாலா? அல்லது பிச்சைக்காரனுக்கு சுக்கிர திசை வந்தால் நல்ல பிச்சை பாத்திரம் கிடைக்கிறதா?
நான் இதை செய்தால்
இது கிடைக்குமேன  
பேரம் பேசும், கடவுள்
 பணி,ஆன்மீகம்
வேண்டாம்.
தற்பெருமையும்,
கண்மூடித்தனமும்
 கடவுள் நம்பிக்கையில்
வேண்டாம்.
எனக்கு முதலில் பாதித்த சம்பவமாக நினைவிருப்பது
எங்கள் மட விளாகத்தில்  பட்டாச்சாரியார் குடும்பம் ஒன்று இருந்தது,காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை பூஜை  புனஸ்காரம்,சுத்தம், சாஸ்த்திர சம்பிரதாயம் எல்லாம் கடை பிடித்த குடும்பம்.துவைத்து காயும் ஆடைகள் அந்த வழியாக சென்றவர் மீது காற்று வாக்கில் பட்டு விட்டால், கொடியில் காய்ந்த ஆடை மீண்டும் தண்ணியில் நனைக்கப்பட்டு உலர்த்தப் படும்.அடுத்த வீட்டு பிராமினர் மீது பட்டாலும் அந்த காய்ந்த ஆடைக்கு மீண்டும் குளியல்தான்.
ஒரே நீர் குழாயில் குடி நீர் எடுப்போம்.அந்த குடும்பத்தினரின்  பாத்திரம் நீர்   நிறைந்து   வழிந்தோடினாலும்,மற்றவர் தொடக்கூடாது,தொட்டு தூக்கி விட்டால் ஒரு குடத்து நீரும் கீழே ஊற்றப்பட்டு,மீண்டும் தண்ணீர் பிடிக்கப்படும்.
பெருமாளுக்கும்,ஆஞ்சநேயருக்கும் சேவகம் செய்து காலத்தை கழித்த குடும்பத் தலைவருக்கு சர்க்கரை நோய் வந்தது,கட்டை விரல் எடுக்கப்பட்டது,உடல் நிலை மோசமானது,இரண்டு நாள் வரை இழுத்து பறித்து கிடந்தவரை பார்த்தபோது இத்தனை ஆச்சாரத்துடன்,கடவுளுக்கு சேவகம் செய்தவருக்கா இந்த நிலை ?பக்கத்தில் பாட்டியிடம் கேட்டபோது “அதிகப் பிரசங்கித்தனமாக பேசாதே,அந்த சேவகமும் செய்ததால்தான் பகவான் இத்தோடு விட்டார்”    என்ற பதில் வந்தது. 
அவர் இறந்தும் போனார்,ஆச்சாரங்கள் தொடர்ந்தது,பிள்ளைகளுக்கு திருமணம் ஆனது,பிள்ளைகள் ஆளுக்கொரு இடம் பெயர்ந்தனர்.அவரின் துணைவியார் மட்டும் தனித்திருக்க இன்று அவருக்கு தூரத்தில் உள்ள பிள்ளைகள் வந்து       உதுவதுக்கு முன் உதவுபவர்கள் அன்று ஆச்சாரம் பார்த்ததால் மனம் காயப்பட்டவர்களில் தற்போது மீதி உள்ளவரும்,இவர்களது பிள்ளைகளும்தான். .இப்போது அவர் சகவாசியாகி விட்டார்,அன்று இருந்த அதே கடவுள்தான் இன்றும் இருக்கிறார் ,இப்போ கடவுள் எங்கு இருக்கிறார்?யார் பக்கம் இருக்கிறார்?

என் தோழி ஒருவரின் தந்தை சொல்லியது:

இறை வழிபாடு என்பது உன் தலை மீது ஒரு கல் அதி வேகத்தில் விழப்போகிறது என்பது விதி எனில் இறை வழிபாட்டின் மூலம் அதி வேகமாக விழ இருக்கும் கல் மெதுவாக வந்து விழுமே தவிர,விழும் கல்லை தடுத்து நிறுத்த முடியாது.

Feb 16, 2011

உருவமும்,மொழியும் அற்றவர் ?


ஹிந்தி அலைவரிசை ஒன்றில் திவ்ய சக்தி என்ற திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கையில் தெலுங்கு திரைப்படம் ஹிந்தி மொழிமாற்றம் செய்துள்ளது தெரிய வந்தது,தெலுங்கு திரையுலக முகங்களுக்கிடையே தமிழக கோவில் அமைப்பில் அமைந்துள்ள சந்நிதியில்  கே.ஆர்.விஜயா அம்மன் வடிவத்தில் பேசிக்கொண்டிருக்க, திரைப்படம்   பார்த்துக் கொண்டிருந்த,ஹிந்தி நன்றாக தெரிந்த என்  நான்கு வயது மகள் “ அம்மா, கோயில்ல நின்னு சாமி ஹிந்தி பேசுது பாரும்மான்னு “தமிழில் என்னிடம் சொல்லியபோது குழந்தையின் அறியாமையை நினைத்து ஒரு நொடி நகைத்து விட்டாலும்,எதோ பெரிய விசயத்தை உணர்த்திவிட்டாள் என்பது போல உணர்ந்து சாமிக்கு எல்லா மொழியும் தெரியும்,உனக்கு ஹிந்தி தெரிவது போல என்று சொல்லி அமர்த்தினேன்.
அதே கனத்தில் எனது சிறு வயது நினைவும் வந்தது.சிறு வயதில் தொலைக்காட்சியில் மகாபாரதம் மற்றும் சில புராண கதைகள் நாடகங்களாக ஒளிபரப்பான போது அப்பாவிடம் “என்னப்பா கடவுள் ஒன்று வாயசைக்கிறார்,அதற்கு முன்னோ,பின்னோதான் பேசுவது கேட்கிறது “ என்று நான் கேட்டதும்,ஹிந்தி மொழியில்,எடுக்கப்பட்ட கதை தமிழில் ஒளிபரப்பாகிறது என்று என் அப்பா விளக்கமளித்தாலும்,தமிழும் ஆங்கிலமும் அல்லாத மற்றொரு  மொழி  ஹிந்தி எனவும் அது கடவுள் மட்டுமே பேசக்கூடியது என்று  வெகு நாட்கள் நினைத்ததுண்டு.வீட்டில் கேலிக்கும் ஆளானதுண்டு.  பிறகு காலப் போக்கில் விபரம் தெரிந்து கொண்டேன்.
இப்போ என் மகள் கேட்டதில் கதை பல்ட்டி என புரிந்து கொண்டேன்.
                     
                                                     கடவுள்  இல்லை.   போகட்டும் !
கடவுள் இருக்கிறார்.ஆகட்டும் !
கடவுள் நான்தான்.   ஒழியட்டும் !
ஒவ்வொரு உயிரும் கடவுளாய்
வாழட்டும்!
உருவமும்,மொழியும் அற்றவர்
 !!கடவுள்.!!