*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 25, 2012

கரடி பொம்மை செய்வோமா?...


நாம் உபயோகிக்கும் சாக்ஸில் அழகான கரடி பொம்மை செய்யலாம்.எனக்கு மெயிலில் வந்த இந்த செய்முறை படங்களை பகிர்கின்றேன்.இறுதியில் அட்டகாசமான ரசிக்கும்படியான வீடியோ கிளிப்பிங் ஒன்றும் உள்ளது.அது என்னவென்று கட்டாயம் பாருங்கள்.


.

.
குழந்தைகள், பெரியவர்கள் அணியும் சாக்சில் செய்யலாம்.படங்களை பார்த்தால் செய்முறைகள் புரியும் என்று நினைக்கிறேன். 


                                                                    அவ்ளவுதான்.
                                              நானும் இன்னும் செய்து பார்க்கவில்லை.

மெகா டீ.வீ  அலைவரிசையில் தினமும் காலை 11 டு 12 மணிக்கு பெண்கள்.காம் என்ற நிகழ்ச்சியில் 11.45 டு 12 மணிக்கு கைத்தொழில் பகுதியில் வீட்டிலிருந்து எளிமையான கைத்தொழில்,கைவினைப் பொருட்கள் செய்ய கற்றுத்தருவார்கள்.அதில் இந்த கரடி பொம்மை செய்ய கற்றுக் கொடுத்தனர்.இரண்டு வருடங்களுக்கு முன் அந்நிகழ்ச்சியிலிருந்து பார்த்து நான் செய்த கரடி பொம்மை.உல்லன் நூலினால் செய்யப்பட்டது,எல்லாம் கட்டிங்,ஒட்டிங்தான்.லேமினேட் செய்து ஃப்ரேமில் செமிக்கிகளை ஒட்டியுள்ளேன்.
                                                                

இந்த வீடியோ கிளிப்பிங்கையும் ரசிக்கலாமே>....


Feb 23, 2012

என்றும் மறக்க முடியாத பேருந்து நினைவுகள்-5(முற்றும்)

பேருந்து,ரயில் பயணங்களில் காலம் காலமாக இடம்பெறும் பலவகை திருட்டு,உணவுப் பொருட்களில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து கொள்ளையடித்தலும் நிகழ்ந்து வருகிறது.உழைக்காமல் பொருள் சேர்க்க எத்தனை விதங்களாக யோசித்து தைர்யமாக அத்தனை பேரையும் முட்டாளாக்கி கார்யம் சாதிப்பது கள்வர்களின் கலை.செய்தித்தாள்களிலும்,தொலைக்காட்சியிலும்,அக்கம் பக்கத்திலும் திருட்டுகள் நடப்பதை கேள்விப்பட்டாலும்,பயணங்களில் ஜாக்கரதையாக பயணித்தாலும் திருட பகவான் பார்வை நம்மீது பதிந்துவிட்டால் நம்மளால் தப்பமுடிவதில்லை.


பயணங்களில் யாராவது உணவுப் பொருட்களை கொடுத்தால் தவிர்ப்பது நல்லது.ஆனால் குழந்தைகளுடன் பயணிக்கும்போது இதில் சிரமம் ஏற்படும்.நாம் எதாவது சாப்பிடும்போது எதிரே அல்லது பக்கத்தில் குழந்தைகள் இருந்தால் பார்க்க வைத்து சாப்பிட முடியாது.அப்படி நாம் எதாவது கொடுக்கும்போது நம்மை சந்தேகித்து வேண்டாமென்று மறுத்தால் நம் மனது சங்கடப்படும்.அதே சங்கடத்துடன்தான் நமக்கோ நம் குழந்தைக்கோ எதிரில் உள்ளவர்கள் உணவுப் பொருள் கொடுத்தால் எப்படிப்பட்டவராக இருந்தாலும் மறுத்தாக வேண்டும்.பயணங்களில் நட்பும் கிடைக்கும்,ஏமாற்றங்களும் கிடைக்கும்.

செல்ஃபோன் இல்லாத காலத்திலே நீண்ட தூர பயணமெனில் என் அப்பா எப்போதும் எதில் பயணித்தாலும் நமது முகவரி,நாம் சென்றடைய வேண்டிய முகவரியையும் எழுதி நம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பார்.யார் எங்கு பயணித்தாலும் தேவையானவைகளை எடுத்து வச்சுட்டியா என்ற கேள்விக்கு அடுத்து அட்ரஸ் எழுதி வச்சிருக்கியா என்றுதான் கேப்பார்.வழியில் என்ன வேணும்னாலும் நடக்கலாம்.எதாவது ஒரு நல்லவன் கண்ல இந்த அடர்ஸ் பட்டு நம்மை உரியவங்க இடத்தில் சேக்க மாட்டானா,தகவல் தெரிவிக்கமாட்டானா... என்பார்.

என் தாத்தா அம்மாச்சி கிராமத்தை சேர்ந்தவர்கள்.பயணத்தில் பக்கத்திலிருப்பவர் கொஞ்சம் பேச்சு கொடுத்தால் போதும் தனது பூர்வீகம் வரை ஒப்பித்துவிடுவார்கள்.பக்கத்தில் கிடைப்பவரும் இவர்களது பேச்சை கேட்டு சலிக்கிற மாதிரி தெரியாது,அப்படிப்பட்டவர்தான் அமைந்துவிடுவார்.சில நேரம் இப்படி எல்லா கதையும் ஏன் சொல்றீங்கன்னு திட்டுவோம், சில நேரம் அருகில் போய் நிறுத்துங்கன்னு சொல்ல முடியாது.

எங்க வீட்டில் லேண்ட் லைன் ஃபோன் இருந்த காலத்தில் ஒருமுறை என் தாத்தா மதுரையிலிருந்து நாகைக்கு தனியே இரவு நேர பஸ்ஸில் வந்திருக்கிறார்.விடிய காலையில் ஃபோன் வந்தது,நான்தான் பேசினேன்,அதில் “நான் ஆட்டோ டிரைவர்,மதுரை பஸ்சிலிருந்து ஒரு பெரியவரை நாகை பஸ்டாண்டின் நடுவே இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.அவர் போதையில் கிடக்கிறார்.அவரது சட்டைப் பையில் இந்த நம்பரும் அட்ரசும் இருக்கிறது,இன்ன பேர் உடைய இவரை உங்களுக்குத் தெரியுமா? ”என்றார்.

மற்ற அடையாளங்களும் சொன்னதில் அவர் என் தாத்தாதான். தான் வருவதாக எங்களுக்கு தகவலும் சொல்லவில்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேனே தவிர என்ன பேசனும்னு தெரியவில்லை,என் அப்பாவும் அப்போது வீட்டில் இல்லை.என் அம்மாவிற்கும் நம்புவதா வேணாமான்னு புரியாமல் இந்த முகவரிக்கு அழைத்து வாருங்கள்,உடல் நிலை சரியில்லையென்றால் வழியில் ஹாஸ்பிடலில் சேர்த்துவிடுங்கள் ஆகும் செலவை நாங்கள் ஏற்கிறோம்,அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.
 அவர் போதையில் இருக்கிறார் என்பதைதான் எங்களால் நம்ப முடியவில்லை என்று அம்மா சொல்லிவிட்டு என் அப்பாவிற்கும் தகவல் தெரிவித்தார்.

பத்து நிமிடங்களில் ஆட்டோ என் வீட்டிற்கு வந்தது.சுய நினைவின்றி சட்டை ட்ராயருடன் உள்ளிருந்தது என் தாத்தாவேதான். அந்த கோலத்தில் பார்த்தால் என் அம்மாவிற்கு எப்படியிருக்கும்,என்னாச்சுப்பா,என்னாச்சுப்பான்னு கதறினார். ஹாஸ்பிடலில்  சேர்த்தோம், அந்த ஆட்டோ ட்ரைவருக்கும் நன்றி தெரிவித்து பணம் கொடுத்தபோது அவர் வாங்க மறுத்துவிட்டார்.ஹாஸ்பிடலில் தாத்தாவிற்கு முற்றிலும் நினைவு இழந்துவிட்டது,கோமா ஸ்டேஜ் என்கிறார்கள்.எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.தாத்தா ஏன் புறப்பட்டு வந்தார்,எதற்கு எங்கே கிளம்பினார் ஒன்றும் தெரியவில்லை.மதுரையில் இருக்கும் என் அம்மாச்சிக்கு தகவல் தெரிவித்ததும் விபரம் புரிந்தது,தாத்தா எங்களை பார்க்க உசிலம்பட்டி பஸ்ஸில் வந்திருக்கிறார்.அம்மாச்சி மற்ற உறவினர்களுடன் கதிகலங்கி வந்து  சேர்ந்தார்.

ஊருக்குள்ளும் ஒரே பரபரப்பு,தாத்தாவை பார்க்க பலரும் வந்தவன்னம் இருந்தனர்.சீடி ஸ்கேன் எடுத்தார்கள்,எல்லா டெஸ்ட்டுகளும் நார்மலா இருக்கு,அவர் கடைசியாக உண்ட உணவினால் இந்த பிரச்சனையிருக்கலாம்,வேற ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போயிடுங்கனு டாக்டர் சொல்லிட்டார்.அன்று முழுவதும் அதே நிலையிலிருந்த தாத்தா மறுநாள் காலை கண் விழித்தார்.அவருக்கும் சற்று நேரம் தான் எங்கிருக்கிறோம்,தனக்கு என்னாச்சுன்னு புரியவில்லை,பேச்சும் வரவில்லை.சற்று நேரம் கழித்து பேச்சு வந்தது.நாங்களும் விபரங்கள் சொல்ல என் அம்மாச்சி அப்போதுதான் கேட்கிறார் ” தாத்தா கொண்டுவந்த பைகள்,கையில் போட்ருந்த மோதிரம்,வைத்திருந்த பணம் “ இல்லையா?ஆட்டோவில் தாத்தா மட்டும்தான் வந்தாரா என்கிறார்.சூழ்நிலையின் கட்டாயம் அப்போது லேசான சந்தேகம் அந்த ஆட்டோ டிரைவர் மீது வந்தாலும்  முதலில் இன்றும் அதே நேரத்திற்கு வரும் உசிலம்பட்டி பஸ் டிரைவரை விசாரிப்போம் என்று என் அப்பா சொன்னார்.

அதற்கிடையில் என் தாத்தாவும் பேச ஆரம்பித்தார்.பஸ்ஸில் தன்னுடன் வந்தவருடன் பேசிக்கொண்டு வந்ததாகவும்,கோவில் பிரசாதமென்று பொங்கல் கொடுத்ததாகவும்,அதை சாப்பிட்ட பின் என்ன நடந்ததுன்னு தெரியவில்லை என்றும் சொன்னதில் விபரம் புரிந்தது.தான் கொண்டு வந்த பொருட்கள் களவாடப்பட்டதை விட தன்னால் எல்லோரும் இவ்வளவு சிரமத்திற்குள்ளானதிலும்,பொங்கல் சாப்பிட்டு ஏமாந்ததிலும் என் தாத்தாவிற்கு பெரும் வருத்தம்,அவமானமாகவும் நினைத்தார்.என் அப்பாவும் பஸ் டிரைவர் ஓட்டுனரை விசாரித்ததில் என்ன நடந்ததென்று எங்களுக்குத் தெரியாது,எல்லோரும் இறங்கியும் இவர் மட்டும் இறங்காமல் மயக்கத்திலே இருந்தார்,நாகைதான் கடைசி நிறுத்தம்,டிக்கெட்டும் நாகைக்குதான் எடுத்திருந்தார் எனவே எங்களுக்கு வம்பெதற்கு,அடுத்த ட்ரிப் போகனும்னு அவரை இறக்கி கீழே போட்டுவிட்டோம்.வேட்டி அவிழ்ந்த நிலையில்தான் இருந்தார்,என்றும் தெரிவித்திருந்திருக்கின்றனர். இந்த நிகழ்வு தெரிந்த அனைவருக்கும் பாடமானது.அதற்கு பிறகு என் தாத்தா அம்மாச்சி பயணத்தில் சக பயணிகளுடன் வெகு ஜாக்கிரதையாக பயணிப்பார்கள்.


பயணங்களில் எவ்வளவோ பொன் பொருட்களை பரிகொடுத்தவர்களின் நிலை  எப்படிப்பட்டதாக இருக்கும்!


பேருந்து மட்டுமல்ல அனைத்து பயணங்களும் நாம் வாழும் உலகின் மறுபக்கங்களில் ஒன்றை உணர்த்துவதாகவே அமைகிறது.
கள்வர்களே!


வீரமும்,மானமும் உள்ள கள்வர்களாயின் ஸ்விஸ் பேங்கிற்கு போய் இந்தியப் பணத்தை களவாடிட்டு வாங்க பாப்போம்!இந்தியா பாராட்டும்.(இந்தியா டு ஸ்விஸ் ரயில், பஸ் இன்னும் விடலையோ).இந்தியாவின் பேங்குகளில் அப்பாவி மக்கள் அதுவும் அப்பாவி பேங்குகளில் சேர்த்து வைத்திருப்பதில்   கை வைத்தால் என்கவுண்டர்தான்.


பீ கேர்ஃபுல்...........................................


மக்களை சொன்னேன்,,,,

Feb 21, 2012

என்றும் மறக்க முடியாத பேருந்து நினைவுகள்-4

இந்த பதிவில் பஸ் காதல்களை,வயதுக்கோளாறுகளை,சில சில்மிஷங்களை பகிர்கின்றேன்.
காதல் எங்கும் நிகழ்கிறது.படிக்கும் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளாகட்டும் பயணிக்கும் சக பயணியாகட்டும் பயணம் செய்ய மட்டுமே அதுவும் நடுத்தர வர்க்கத்தினர்களின் போக்குவரத்து பகவான் பல வித குணங்களுடைய பயணிகளை சுமந்து செல்வதோடு  காதலையும்,சில்மிசங்களையும் சுமக்கத் தவறுவதில்லை.எங்கிருந்தோ புறப்பட்டு,எங்கெங்கோ நிறுத்தப்படுவது போல பல காதல்களும் நிறுத்தப்படுகிறது.காணாமல் போகிறது.இதற்கு பெயர் காதலா என்று பார்ப்பவர்களால் பேசப்பட்டு,தோல்வியோ ஏமாற்றமோ ஏற்படும்போது மட்டுமே அந்த காதலர்களுக்கும் காதல் மீது சந்தேகம் வருகிறது.காலம் கடந்து உணர்வது மட்டுமே மிச்சப்படுகிறது.

தினமும் பார்க்க நேரிடும்போது எதோ ஒரு ஈர்ப்பில் பழகப்படுவதே பயணத்தின் நட்பு.பெண்ணுக்கும் பெண்ணுக்கும் ஆணுக்கும் ஆணுக்கும் பயண நட்பு அப்படியே இருக்கிறது.ஆண்,பெண் நட்புதான் 80% காதல் நாடகமாகிறது.இதில் திருமணம் ஆனவர்களா/ஆவாதர்களா என்ற கேள்வி வந்தால் அதுவும் 90% திருமணம் ஆகாதவர்கள்தான் இந்த பயணக் காற்று காதலில் சிக்குபவர்கள். நம்மை பார்க்கும் மனிதர்களின் குணங்கள் புரியாவிட்டாலும்   கண்களின் இரண்டு பார்வையிலே பார்வையின் அர்த்தங்கள் புரியக்கூடும்.எதார்த்தமாக இருக்கலாம்,மீண்டும் பார்த்து புரிந்துகொள்வதில் தவறில்லை,வேணுமென்றே பார்க்க வைக்கப்படுவதுதான் தவறு.

உடையாகட்டும்,பேச்சாகட்டும் எனக்குத் தெரிந்து நான் பார்த்தவரை அப்படி வேணுமென்றே பார்க்க வைப்பதில் பெண்கள்தான் முதலிடம் பிடிக்கின்றனர்.இதை எவரேனும் எதிர்ப்பார்களாயின் என் ஊர் மட்டுமில்லை,பல ஊர்களில் என்ன நடைமுறை நிகழ்கிறது என்பதை நேரில் காண்பிக்க என்னால் முடியும்..எனக்கு இப்படிபட்ட பெண்கள் விட்டில் பூச்சிகளாய் தெரிகின்றனர்.வழிகாட்டுதல் தேவையில்லை என்ற நினைப்பு,ஊடகங்களின் தாக்கம்,எதையும் சமாளித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை,தனக்கு கிடைத்த புது உறவினால் இது நாள்வரை வளர்த்தவர்களையும் சமாளித்துவிடலாம்,எதிர்க்கலாம் என்று நினைக்கிறார்களே தவிர,தாம் வயதென்ன,பக்குவமென்ன,இப்போது இது தேவைதானா,தனது நண்பன்/காதலன் எனப்படுபவன் எப்படிப்பட்டவன்,இந்த உறவு எதுவரை,எத்தனை நாட்களுக்கு  இதெல்லாம் யோசிப்பதும் கிடையாது,தனக்கே தெரியவந்தாலும் தனக்கு எந்த கெடுதலும் இருக்காது,வராது என்ற நம்பிக்கை.

படிப்பில்,உத்யோகத்தில் ஆர்வமுள்ளவர்கள்,தன்  குடும்ப மற்றும் சமூக சூழலை உணர்ந்தவர்கள் மட்டுமே யோசித்து செயல்படுகின்றனர்.இப்போதும் ஊர் பக்கம் மளிகைக் கடையிலும்,ஜவுளிக் கடைகளிலும் வேலை பார்க்கும் சில பெண்கள்,படிக்கும் சில பெண்கள்  பஸ்ஸில் தன் ஆண் நண்பர்களுடன் மறைந்து,மறைந்து,தயங்கி தயங்கி பேசி வருவதை பார்க்கும்போது “அடி பேதையே! என்ன மயக்கத்தில் இப்படி நடந்துகொள்கிறாய்,வெற்றியும்,ஏமாற்றமும் எதிலும் உண்டு,ஆடவனுக்கு ஆயிரம் வழி உண்டு,உன் கதி என்ன?, எப்படியும் இணைந்துவிடுவோம் என்ற உன் நினைப்பு,நம்பிக்கை வெற்றி பெற்றால் நீ அதிர்ஸ்டசாலி” என்றே சொல்லத் தோனுகிறது.

ஃபேசனுக்காகவும்,டைம் பாஸிற்காகவும் நட்பும்,காதலும் கொண்டுள்ளவர்கள் எந்த காலத்திலும் எதையும் எதிர்கொள்ளும் பிறவிகள்.
என் காலத்தில் பஸ்ஸில் தினமும் பயணி்த்த பெண் ஒருவர் வீட்டிற்கு தெரியாமல்  நடத்துனரை திருமணம் செய்துகொண்டார்.மற்றொரு பெண் ஏற்கனவே திருமணமான ஓட்டுனரை திருமணம் செய்துகொண்டார்.அவர்களின் வாழ்க்கை தற்பொழுது எப்படி உள்ளது என்பதெல்லாம் தெரியவில்லை.தினமும் பஸ்ஸில் பயணித்த மாணவன் மாணவிக்கும் காதல் வந்து பல அவமானங்களை சந்தித்தபோதும் தைரியமில்லாத ஆடவனால் கைவிடப்பட்ட பெண்களை பார்த்திருக்கிறேன். காதலிக்கும்போது வரும் தைர்யம் இரு குடும்பத்தார்களையும் எதிர்கொள்ளும்போது மனம் திடமற்று முடிவை மாற்றிக்கொள்ளும்  பெண்ணையும், ஆண்களையும் பார்த்திருக்கிறேன். ஒரு தலைக்காதலும் உண்டு. 

நான் கல்லூரி சென்ற காலத்தில் ஆட்டோ மொபைல் என்பதுதான் தெரியும்.மொபைல் ஃபோன் பற்றி யாருக்கும் தெரியாது.இப்போ எல்லோரிடமும் மூன்றாவது கை போல செல்பேசி உள்ளது.செல்பேசி இல்லாத அந்த கால பயணத்தை நினைத்துப் பார்க்கும்போது உடனடித் தொடர்பிற்கு சிரமங்கள் இருந்தாலும் அது ஒரு அமைதியான காலமாகவே இருந்தது.அப்போது வாகனங்களின் சப்தம்,நடத்துனரின் விசில் சப்தம் மட்டுமே இருக்கும்.இப்போது பயணிக்கையில் திடீர்,திடீரென்று ரிங்டோன்கள் ஒலிப்பதும்,பாட்டி முதல் பள்ளி மாணவர்களிடத்தும் இந்த செல்பேசி உபயோகம் தற்கால மாற்றமே!

தகவல் தொடர்பில் நவீனம் கண்டு உலகம் சுருங்கிவிட்டது போல,காதலை அனுபவிப்பதும் நவீனமாகிவிட்டது.தற்போழுது பேசவோ பார்க்கவோ தனியிடமும்,பொது இடமும் தேவைப்படுவதற்கு முன்னர் வேண்டியவர்களின் நம்பர் பரிமாற்றம் இருந்தால் போதும் .யாருக்கும் பயந்தோ,அருகே வந்தோ அன்பை,விருப்பத்தை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.முக்கால்வாசி காதல் தொலைபேசியிலே முடிந்துவிடுகிறது.தனக்கு முன் நாலு பேருக்கு முன்னால் நிற்கும் பெண்ணிடம் மாலை சந்திப்போம்னு சொல்வதற்கு பட்ட பாடும்,அரை மணி நேரம் பயணித்தாலும் பார்வையிலே காதல் பரிமாற்றம் நடந்தாலும் மனதில்பட்டதை உடனே சொல்ல முடியாமல் தவித்ததும் இப்போ மலையேறிப்போச்சு.முன்பு தகவல் தொடர்பு சரியில்லாததால் சங்கடம்,பிரிவு,முறிவு வரும்.இப்போ தகவல் தொடர்பு அதிகமானதால் பிரிவு,முறிவு அதிகமாகிறது.

பிற்காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறியாத அப்போதைய பல பெண்களும், இப்போது சில பெண்களும் காதல் தோல்வி,ஏமாற்றம் அடைந்தாலும் இனி யாருக்கும் என் மனதில் இடமில்லை, யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என்பார்கள்.
இவர்கள் மறுமணத்தை  ஆதரித்தாலும்  ஆதரிப்பார்களே  தவிர மறு காதலை ஆதரிக்கமாட்டார்கள்.

சமீபத்தில் விஜய் டீவி   நீயா நானா நிகழ்ச்சியில் காதல் தலைப்பில் பேசிய இளம் பெண்கள் பலர்  காதல் ஒரு முறை மட்டும்தான் வரும் என்பது பொய்.காதலில் தோல்வியுற்றால் காலப்போக்கில் சந்திக்கும் மற்றவரிடத்தும் காதல் வரும்,ஏற்பதில் தவறில்லை என்று பேசியதில் வியந்துபோனேன்.திருமணம் ஆகாத அந்த பெண்கள் அந்த சபையில் பேசியது வியப்பாக இருந்ததைவிட தற்கால பெண்களின் மன மாற்றத்தைக் கண்டு வியந்தேன்.எனினும் ஒரு முறை வந்த காதலி்ல் தோல்வியும் ஏமாற்றமும் இல்லாமல் இருக்கட்டும்.  

அடுத்து உரசல் மன்னர்கள்:

இவர்களால் பாதிக்கப்பட்ட,இம்சைகளை அனுபவித்த பெண்களுக்கு மட்டுமே இவர்களின் தரம் தெரியும்.வழக்கமான வசனம்தான் கேக்க  நினைக்கிறேன் ”உன் சகோதரி அல்லது உன் அம்மாவிடமும்” இப்படி நடந்துகொள்(வாயா?). 

எனக்கு கேல்(girl) ஃப்ரண்ட் இருக்குடா மச்சி,இன்னைக்கு என் ஆளிடம் இன்னது பேசினேன்,அல்லது இங்கே சென்றோம்,அல்லது இன்னைக்கு ஒரு சூப்பர் ஃபிகரை பார்த்தேன் என்று தன் நண்பர்களிடம் பெருமை பிதற்றும் சில ஆண்கள் இருப்பது போல இந்த உரசல் மன்னர்களில் சிலர் தன் நண்பர்களிடம் எதாவது பெண்களை உரசி தன் சாதனையை பெருமை பேசுவதும் நடக்கிறதாம்.

சேலையில் முள் விழுந்தாலும்,முள்ளில் சேலை விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் என்பது போல பேருந்தில் மட்டுமல்ல இது போன்ற நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதிகம்  பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே.

Feb 18, 2012

என்றும் மறக்க முடியாத பேருந்து நினைவுகள்-3

சில மாதங்கள் வித்யாசமாகவே இருந்த பேருந்து பயணம் பிறகு எந்த பேருந்தாக இருந்தாலும் சொந்த வீட்டிற்குள் போவது போன்று சகஜமாகிவிட்டது.நடைமுறையில் ஓட்டுநர் எந்த நிறுத்தத்திலிருந்து எந்த நிறுத்தம்வரை செல்ல வேண்டும்,இடையே எங்கெங்கு நிறுத்த வேண்டுமென்பதில் கவனமாக இருக்கிறாரோ அப்படித்தான் பெரும்பாலான பயணிகளும் ஏறி,இறங்க வேண்டிய ஸ்டாப்பிங்குகளை மட்டும் கவனித்தில் கொண்டு பயணிக்கிறோம்.ஆனால் அந்த பயணத்தில் பலவற்றை பார்க்கிறோம், அவற்றில் சில மனதில் பதியும்,பல காற்றோடு காற்றாக போய்விடும்.சிலருக்கு பயணத்தில் என்ன நடந்தாலும் தன் உள்மனதோடு,சொந்த உணர்வுகளோடு மட்டும் பயணிப்பார்கள்.அதாவது வெளி உலகோடு ஒன்றமாட்டார்கள்.இது அனைத்து வகை பயணத்திற்கும் பொருந்துமென்று நினைக்கிறேன்.


ஒரு நாள் பயணத்தில் இடம் இல்லை,ஓட்டுனர் இருக்கைக்கு பின் கம்பிகளை பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தேன்.ஒரு ஸ்டாப்பிங்கில் மிக அழகான சுடிதார் அணிந்த அழகான பெண் ஒருவர் பொம்மை போல நின்றார்.என் தோழியிடம் அந்த பெண்ணை எவ்ளோ அழகா இருக்கு பாருன்னு காண்பித்தேன்,அதற்கு அந்த ஓட்டுனர் ”அழகா,இல்லையான்னு நாங்க சொல்லனும்”னு சொல்லிகிட்டே அவர்பாட்டுக்கு வண்டி ஓட்டிகிட்டிருந்தார்.நம்ம சொன்னதை காதில் வாங்கிட்டு பதில் சொல்றார்ன்னு சின்ன நகைப்பு.


ஒரு நாள் மாலை பயணத்தில் ஒரு ஸ்டாப்பிங்கில் பஸ் நிறுத்தப்பட்டபோது இறங்க வேண்டியவர்கள் இறங்கியாச்சு,ஏற வேண்டியவர்கள் ஏறியாச்சு,பஸ்ஸூம் சற்றே கிளம்பிவிட்டது,சற்று வயதான பெண்மணி ஒருவர் அவசரமாக ஓடிவந்து ஏறினார். ஏறின வேகத்துக்கு படியில் நின்ற ஒரு கல்லூரி மாணவன் அவ்வை... சண்முகி... என்று அந்த பாடலில் வருவது போலவே சொல்லிவிட்டு வேடிக்கை பார்த்து வந்தார்.எங்களுக்கு செம சிரிப்பு.ஆனால் அந்த பெண்மணிக்கு எதுவும் புரியவில்லை.

பஸ் பயணத்தில் அமர்ந்திருக்கும்போது என் பக்கத்தில் வயதானவர்கள்,குழந்தை வைத்திருக்கிறவர்கள் நின்றால் அவர்கள் கேக்காமலே என் இடத்தை தருவதுண்டு .(இப்போதும் அப்படித்தான்)பிரச்சனை என்னவெனில் கைக் குழந்தையென்றால் அம்மாவும்தான் உட்கார்ந்தாக வேண்டும்.சற்று வளர்ந்த குழந்தையெனில் கொடுங்கள் மடியில் வச்சிக்கிறேன்னு சொன்னால் சிலர் குழந்தைகளை தந்துவிடுவார்கள்,நம் பக்கத்திலும் உக்கார வைத்துக்கொள்ளலாம்.சில குழந்தை அம்மாவை விட்டு வராது.அதனால் பரவாயில்லம்மா என்று நின்றே வருவார்கள்.

பாவம் பார்த்த குற்றத்திற்கு,உரிமையாக அவன் பயப்டுவான்/ அழுவான்/ தேடுவான் நீ எந்திரிச்சுக்கன்னு சிலர் சொல்லிடுவாங்க,மறுத்து சொல்ல முடியாம நின்னுகிட்டு வரவேண்டியதுதான். சிலர் குழந்தைய கொடுங்கன்னு சொன்னால் இத்துனூண்டு இடத்தில தானும் உட்காந்து நெருக்கித் தள்ளி என்னைய நோயாளி மாதிரி உட்கார வச்சிடுவாங்க.
சில நேரம் நமக்கு முன் சீட்டில் அல்லது பக்கத்தில் குழந்தை இருந்தால் அந்த குழந்தையை சீண்டி லைட்டா கொஞ்சுவதுலாம் பிடிக்கும்.என்னவோ சில குழந்தையைப் பார்த்தால் கொஞ்சத் தோன்றாது.


சில யுவன்,யுவதிகள் தங்கள் பாய்/கேள்(girl) ப்ரண்ட்ஸ்களுடன் பேசுவதற்காக இடம் இருந்தாலும் நின்றுகொண்டே வருவார்கள்,அவர்கள் பேசிக்கொண்டு வருவதை பார்க்கும்போது சுவாரஸ்யமாக இருக்கும்.
யாருக்கும் பயப்ட வேண்டிய அவசியமில்லாத,யாருடைய அனுமதியும் தேவையில்லாத தம்பதிகள் சிலர் பக்கத்திலே அமர்ந்திருந்தாலும் வேற்று மனிதருடன் அமர்ந்திருப்பது போல கம்முன்னு வருவார்கள்.வீட்டில் பேசிப் பேசி போரடிச்சுடுமோ அல்லது கண்ணியமோ தெரியல.


எனக்கு உப்புத் தடவிய வெள்ளரிக்காய் வாங்கி தோழிகளுடன் பேசிக்கொண்டே சாப்பிட பிடிக்கும்.சுண்டல், வேர்கடலை, வெல்லரி, பனங்கிழங்குகளை சீசனுக்கு வருபவைகளை சைக்கிள்,ட்ராலிகளில் வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பஸ்டாண்டில் பஸ்நிற்கும்போது ஜன்னலோரம் குரல் கொடுப்பார்கள். ஒரு நாள் நான் அமர்ந்திருக்கும் பஸ்சின் வெளிப்புறம் ஒரு வியாபாரி சுற்றி, சுற்றி குரல் கொடுத்துக்கொண்டிருந்தார்.திடீரென பனங்கொரங்கு,பனங்கொரங்கு என்று கூவினார். எல்லோருமே திரும்பி பார்த்தோம், எங்கள் பார்வையின் சந்தேகத்தை புரிந்துகொண்டு, பனங்கிழங்குன்னு கத்தினா யாரும் கண்டுக்கமாட்றீங்க,இப்ப பாத்தீங்கள்ல,சரி ஆளுக்கொரு பனங்கிழங்கு கட்டு வாங்கிக்குங்க என்றார்.அவரின் வியாபார ட்ரிக்கை ரசித்து சிலர் வாங்கினார்கள்.

பெரும்பாலும் தனியார் பஸ்களில்தான் பாடல்களை கேட்டபடி பயணிக்க முடியும்.அதற்காகவே நாங்கள் பல நாட்கள் அரசுப் பேருந்து வந்தாலும் அதில் பயணிக்கமாட்டோம்.அப்படியொரு நாள் பாடல் இசைத்துக்கொண்டிருந்த பஸ்ஸில் ஏறியாச்சு,இடமும் கிடைத்துவிட்டது.அந்த பஸ் கிளம்ப 4,5நிமிடங்கள் இருந்தது.அதற்குள் என் தோழிக்கும் எனக்கும் பக்கத்தில் உள்ள கடையில் சாக்லேட் வாங்கிட்டு வந்திடலாம்னு ஆசை வந்துவிட்டது.உடனே ரெண்டு பேரும் இறங்கி கடைக்கு ஓடிப்போய் சாக்லேட் வாங்கிட்டு திரும்பி பார்க்கிறோம் அந்த பஸ்ஸைக் காணும்.அடப்பாவி அதுக்குள்ளையும் அவன் கடிகாரத்தில மணியாகிட்டு போலன்னு,ஒரு சாக்லேட்டுக்காக பாட்டு பாடுற பஸ்ஸை விட்டுவிட்டோமேன்னு புலம்பிக்கொண்டோம்.நீண்ட நேரத்திற்கு பின்னரே அடுத்த பஸ் வந்தது பாடலுடன்.

Feb 16, 2012

என்றும் மறக்க முடியாத பேருந்து நினைவுகள்-2

தினமும் அதே வழியில் பஸ்ஸில் பயணிக்கும்போது சாலையின் இரு புறத்திலும் பெரும்பாலான கடைகளும்,அங்கிருக்கும் மனிதர்களின் முகமும் பதிந்துவிடும்.ஆனால் அவர்களுக்கு நம்மை தெரிந்திருக்காது.ஒரே நேரத்தில் ஒரே பஸ்ஸில் பயணம் செய்யும்போது நான் கல்லூரிக்கு செல்வது போல பல மாணவ,மாணவிகள் கல்லூரிக்கும்,பள்ளிக்கும் வழக்கமாக அதே பஸ்ஸில் வரும்போதும்,உத்யோகத்தில் இருக்கும் நபர்களும் அதே பஸ்ஸில் வரும்போதும் முகங்கள் ஒருவருக்கொருவர் நன்கு பரிச்சையமாகும்.


பரிச்சையமாகி என்ன புண்யம்?சிலரை பாக்கும்போது நம்ம பஸ்ஸில் வருபவர்ன்னு மைண்ட் வாய்ஸ் அறிமுகம் தரும்,கொஞ்சம் நல்லவங்களா இருந்தால் நம்முடன் வருபவர்களிடம் “ஏய் அவங்க  நல்ல டைப்“னு சொல்லிக்கலாம்,இல்லைன்னா அது ஒரு கொரங்குன்னும் சொல்லிக்கலாம்.எங்கையாவது வழியில் பார்த்தால் சின்ன புன்னகைக்கு கூலி கொடுக்கனும்,இல்ல சிலரின் வழிசல பார்த்து நம்முடன் வருபவர் ஏன் இப்படி பட்டவங்ககிட்டலாம் பேச்சு வச்சுக்கிறன்னு கேக்கும் அளவிற்கு இருக்கும்.அதனால நாமே தெரியாத மாதிரி போயிடனும்.இதனால் இன்னொரு வியாதியும் வரும்.யாரபாத்தாலும் எங்கையோ பார்த்த மாதிரியே தோனுவதுதான் அந்த வியாதி.


நான் சென்ற பஸ்ஸில் வழக்கமாக வரும் மனிதர்களில் அவ்வப்போது காய் வியாபார மூட்டை வரும்,சில நாட்களில் பூக்கூடை வரும் ஆனால் தினமும் டிக்கெட் எடுக்காம ஒருத்தர் வருவார்,வந்து நம்மகிட்டயே காசு கேப்பார்,அவர்தாங்க பிச்சக்காரர்.யாராவது நடத்துனரான்னு யோசிச்சிங்களா?அதுக்கு நான் பொறுப்பில்லை.இப்படி சொல்ல வச்சதே ஒரு நடத்துனர்தான்.


நாகையின் மெயின்  பஸ்டாண்டை இன்னமும் எல்லோரும் பெரிய பஸ்டாண்டுனுதான் சொல்வாங்க. நாகூர் செல்லும் வழியில்தான் எங்க கல்லூரி.எங்க ஊரிலிருந்து வரும் பஸ்கள் அந்த பெரிய பஸ்டாண்டு வந்து சற்று நேரம் நிக்கும் அதற்கு பிறகுதான் பஸ் கிளம்பும்.அப்போ அங்க தினமும் கண்ணு தெரியாத ஒரு பிச்சைக்காரு எம்.ஜி.ஆர் பாட்டுகள பாடிகிட்டு பஸ்ஸுக்குள் வருவார்,அவர போனா போவுதுன்னு விட்டுவிடுவாங்க.அவ்வப்போது வேற்று பிச்சைக்காரர்கள் வரும்போது நடத்துனர் அல்லது ஓட்டுனரால் சற்று விரட்டப்படுவார். ஒரு நாள் வேற ஒரு பிச்சைக்காரர் வந்தபோதுதான் நடத்துனர் சொன்னார் “ போய்யா இப்பதான் நான் எடுத்துட்டு வந்தேன்,அடுத்து நீ போ” என்றார்.இந்த வசனத்தை எப்படி மறக்க முடியும்.அந்த பிச்சைக்காரர் எதையும் காதுல வாங்கல,பஸ்ஸிற்குள் ஒரு ரவுண்ட் போயிட்டுதான் வந்தார்.

பார்வையற்ற மற்றும் பார்வையுள்ள  பிச்சைக்காரருக்கும் வித்யாசம் என்னவெனில் இதே பஸ்ஸில்தான் நாமும் தினமும் வருகிறோம்னு பார்வையற்றவருக்கு தெரியாது.பார்வையுள்ள பிச்சைக்காரர்கள் இதுங்களும் தினமும் வருதுங்கன்னு நம்மகிட்ட நிக்காமல் போய்டுவாங்க. ஆனால் பார்வையற்றவர் எப்படி தினமும் அதே நேரத்திற்கு அதே பஸ்ஸிற்குள் வருகிறார்ன்னு ஆச்சர்யமா இருக்கும்.


நாம தினமும் அதே பஸ்ஸில் போறதால சிலரை நமக்குத் தெரியும்,நம்மூரார் ஒருத்தர் திடீர்னு அந்த பஸ்ல வர்றார்னு வச்சுகங்க,தினமும் பே...பே..ன்னு போனாலும் அன்னைக்குன்னு பாத்துதான் அந்த தின பஸ் பயணிகிட்ட பேசும் சூழ்நிலையோ,அல்லது புன்னகைக்கும்படியோ வரும்.உடனே ந்யூஸ் பிபிசி வழியா ஊருக்குள்ள புகுந்திடும்.இந்தருப்பா இந்நாரு பொண்ணு அந்த பஸ்சுல யார்கிட்டயோ பேசுது,டன்,டன்,.டன்ன்ன்ன்ன்...........


இதனாலையே படு உஷாரா இருப்பேன்,இருந்தாலும் ஊருக்கெல்லாம் செய்தி சொல்லும் பல்லி தவள பானைக்குள்ள விழுந்து தத்தளிக்கும்மா,நாம சும்மாயிருந்தாலும் நம்ம சுத்திருக்கிறவங்க சும்மா இருக்கமாட்டாங்க என்பதையும் அனுபவச்சிருக்கேன்.ஆனாலும் ஒரு சந்தேகம் சில இளைஞர்களும்,இளைங்கிகளும்  தன்னை தனியா காமிச்சிக்க பேசுவாங்களே பேச்சு,விடுவாங்களே பந்தா இதெல்லாம் யாரு எப்ப கத்துக்கொடுத்தாங்கன்னே தெரியாது.அவங்களுக்கு அது சந்தோசமாதான் இருக்கும்,பயணிக்கும் சக பயணிகள் சிலர் இவர்களின் நடவடிக்கைகளை பாக்கும்போது  தான்பிள்ள என்னாகும்மோன்னு பயப்டுறாங்களோ இல்லையோ இந்த அல்டாப்புகளை  பார்த்து முனங்குவதோடு இல்லாமல் பெத்தவங்களையும் சேத்து  திட்டுவாங்க. இதப்பத்திலாம் யோசிச்சிட்டிருக்க அந்த யுவன் யுவதிகளுக்கு ஏது அவகாசம்,காதில் விழுந்தாலும் அந்த சோசிலிசவாதிகளுக்கு வேற வேலையில்ல,சொன்னா சொல்லிட்டு போகட்டும்.டேக் இட் ஈசி........ங்றவங்க காதுல சங்கூதினாலும் கேக்காது.


ஒரு நாள் என் தோழிகளுக்கும் சேர்த்து டிக்கெட் எடுப்பதாக இருந்தேன்,மொத்த டிக்கெட் பைசாவை கூட்டி கணக்கு பார்க்க அழுப்பு,அதனால் நடத்துனர் அருகில் வந்ததும் இறங்குமிடத்தை சொல்லி 3 டிக்கெட் எவ்ளதுன்னு கேட்டேன்.நடத்துனர் இந்தா இவ்ளதுன்னு தன் ரெண்டு கைகளையும் விரிச்சு காட்டினார்.சிரிப்பும் கோபமா வந்தாலும் கம்முன்னு நின்னேன்,அப்றம் அவரே எவ்ளோ பைசான்னு சொல்லிட்டாரு.டிக்கெட் எடுத்தாச்சு.என்னவோ இதுவும் இன்னமும் நினைவிருக்கு.

 பணம் ( நோ காசு) கையில வச்சிருந்தாலே அநிச்சை செயலா அந்த பணத்தை சுருட்டி சிகரெட் மாதிரி வச்சுக்குவேன்,இப்படி செய்யாதன்னு என் பெற்றோர் என்னை எத்தனையோ வாட்டி திட்டிருக்காங்க,நானும் செய்யக் கூடாதுன்னு நினைப்பேன்,என்னை மறந்து மறுபடியும் சுருட்டி வச்சுக்குவேன்.ஒரு நாள் பஸ்ஸில் பத்துரூபாயை அப்படி என்னையறியாமலே சுருட்டி வச்சிருந்திருக்கேன்,நடத்துனர் அருகில் வரவும் அப்படியே சுருட்டிய பணத்தை கொடுத்துட்டேன் போல,இவ்ளோதான் சுருட்ட முடியுமான்னு  கோபமா  கேட்டாரு,பிறகுதான் நானே கவனிச்சேன் அவர் சுருட்டிய பணத்தை விரிச்சு மடிச்சு விரலுக்கு இடையில் வச்சிகிட்டுருந்தாரு.இந்த பழக்கத்தை விடுன்னு அம்மா அப்பா சொன்னபோதுலாம் உரைக்காத எனக்கு அந்த நிகழ்விற்கு பின் பணம் கையில் வச்சிருந்தால் சுருட்டாமல் இருக்க ரொம்பவே கவனமா இருந்தேன்.நாளடைவில் சுத்தமாக அந்த பழக்கம் என்னிடம் மறைந்துபோனது.

Feb 15, 2012

என்றும் மறக்க இயலாத பேருந்து நினைவுகள்- 1

பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு பல அனுபவங்கள் கிடைத்திருக்கும்.ஜன்னலில் வேடிக்கை பார்ப்பது,ஜன்னலோரம் இடம் கிடைக்கலைன்னா வருந்துவதும்,லேசா ப்ரேக் போட்டாலே பக்கத்தில் இருப்பவங்க மேல விழுந்திடாம ஆர்மியில் பயிற்சி எடுப்பது போல உறுதியாக நிற்கவோ உக்காந்திருக்கவோ முயற்சிப்பதும்,வீசும் காற்றில் தூங்கிக்கொண்டே போவதும் ரொம்ப பிடிக்கும்.

பயண நேரத்தில் புது மனிதர்களையும்,வெளிப்படும் சிலரது குணங்களை பார்க்கமுடிவதும்,அவரவர் நிறுத்தங்களில் இறங்குவதும்,மற்ற மனிதர்கள் வருவதும்,இதில் நடத்துனரின் குணமும்,அவர் நடமாடுவதும்,பயணிகளுக்கும் நடத்துனருக்குமிடையே நடைபெறும் கதை தனிக் கதையாக இருக்கும்.பயணிப்பவர்கள் அனைவருக்கும் நடத்துனரின் முகம் தெரிந்திருக்கும்,பலருக்கும் ஓட்டுனர் முகம் தெரியாது.முகம் தெரிந்தால் மட்டும் கோப்பையா கொடுக்கப்போகிறோம்,பயணிகள் இருக்கை எங்கிருக்கோ எங்க வேணாலும் உக்காரலாம்,நிக்கலாம்,நடமாடலாம் ஆனால் பாவம் ஓட்டுனர் எவ்ளோ தொலைவு சென்றாலும் அந்த ஒரு இருக்கை மட்டும்தான் அவருக்கு சொந்தம்,வேறு யாரும் அவர் இடத்தை பிடிக்கவும் முடியாது.

பத்தாம் வகுப்பு வரை உள்ளூர் பள்ளியிலே படித்தேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது சமூகஅறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர்  "பஸ்ஸில் பல நல்லவர்களையும் பார்க்க முடியும்,பல
கிறுக்குகளையும் பார்க்க முடியும்".என்பார்.பெற்றோருடன் பேருந்தில் செல்லும்போது வெளி வேடிக்கை மட்டும் பார்த்து பழக்கப்பட்ட நான், அந்த ஆசிரியர் சொன்னது நினைவிற்கு வரும்.உடன் பயணிக்கும் மனிதர்களையும் கவனிக்கத் தூண்டியது.அப்பாவுடனோ,அம்மாவுடனோ போகும்போது எனக்கு டிக்கெட் அப்பா,அம்மாதான் எடுப்பாங்க,என்னை பத்திரமாக அழைத்துச்செல்ல பெற்றோரின் பார்வை என் மீது இருக்கும்.கூட்டத்தில் எங்க இறங்கனும்னு தெரியாட்டாலும் என்னை அழைத்து வந்தவர் என்னை கூப்பிட்டோ ,தட்டி எழுப்பியோ அழைத்துச்செல்வார்கள்.


எதாவது பொருட்கள் வாங்கி வந்தாலும் எனக்கு சிரமம் இல்லாமல் பெற்றோரே எடுத்து வருவதால்  சுமையுடன் பயணப்பட்டும் பழக்கமில்லை.பேருந்து  பயணம்,பயணம் என்கிறேனே,என் பயணத் தொலைவு  எனது ஊரிலிருந்து 7 கி.மீ  அல்லது மதுரை,அல்லது சிலமுறை வெளியூர் கோவில் பயணங்கள் மட்டுமே.பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு ஆசிரியர் தனது பேருந்து பயணத்தின் அனுபவங்களை குறிப்பாக சில நகைச்சுவை அனுபவங்களை பாடத்தின் நடுவே சொல்வார்.


பத்தாம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன்,எனது ஊரிலிருந்து 12 கி.மீ.(இனி நோ பேருந்து ஒன்லி பஸ்)இனி தினம் பஸ்ஸில் போகப்போறோம்னு உற்சாகத்தில் காலை தூக்கம் கெடுவதும் பெரிதாகத் தெரியவில்லை.எனக்கு முன்னடியே எழுந்து அம்மா எனக்காக குளிக்க,குடிக்க வெந்நீர்,காலை,மதிய சாப்பாடு என ஆர்வமாக செய்து என்னை கல்லூரிக்கு அனுப்பிவிடுவாங்க,தெருமுனை திரும்பும் வரை அம்மா வாசலிலே நின்னு வழியனுப்புவாங்க,மாலை நேரத்திலும் என் வருகையை எதிர்பார்த்து அம்மா வாசலிலே காத்திருப்பாங்க.சில நாட்கள் அப்பாவும் பஸ்டாண்ட் வரை வந்து விட்டுட்டு போவார்.


இப்ப என் பஸ் பயண அனுபவம் என்னவென்றால்


பேக்கை(bag) பிடிச்சிகிட்டு பஸ்ஸில் ஏறனும்,ஏறியவுடன் எதாவது சீட்டு காலியா இருக்கான்னு கண்டுபிடிக்க சுத்திலும் ஒரு லுக் விடனும்,பேக்கை பிடிச்சுகிட்டு ஸ்டடியா நிக்கனும்,நகரனும்,பைசாவை நானே எடுத்து டிக்கெட் எடுக்கனும்,யாராவது என்னை வித்யாசமாக பார்த்தால் அழகா இருக்கேன்னு பாக்கிறாங்களா,அசிங்கமா இருக்கேன்னு பாக்கிறாங்களா,உடுத்தியிருக்கும் உடை சரியா இருக்கான்னு வேற அந்த பார்வை செக் செய்ய வைக்கும்,இப்படி பார்வை மாற்றங்கள் பல சந்தேகங்கள்,கேள்விகள்,பாடங்களை உணர்த்தும்.வெளியூரில் படிக்கும் பள்ளி மாணவர்கள்,சிறுவர்கள் என்னைவிட அதிக கனமுள்ள புத்தக மூட்டையை சுமந்து வருவதும்,பஸ்ஸில் சாதரணமாக இருப்பதும் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.


கிட்டதட்ட ஒரு மாதம்வரை பஸ் பயணம் போராட்டமாகவே இருந்தது.ஸ்டாப்பிங்கில் நிறுத்த பிரேக் போட்டாலே கம்பிகளில் முட்டிக்குவேன்,பேக்கை விட்டுவிடுவேன்,பாலிடெக்னிக் என்பதால் முதலாம் ஆண்டு புத்தகம் அதிகம் எடுத்துச்செல்ல வேண்டியிருந்தது.ட்ராஃப்டர் எடுத்துச்செல்லும் நாள் ரொம்ப மோசம்,யார்கிட்டயும் கொடுக்கவும் மாட்டேன்.டிக்கெட் எடுக்க பைசா எடுத்து கொடுப்பதும் டிக்கெட்டை வாங்கி பத்திரமா வச்சிருப்பதும் பெரிய சோதனையா இருந்தது.எத்தனையோ தட பைசாவ தவிறவிட்டிருக்கேன், அல்லது டிக்கெட்டை பறக்க விட்டுவிடுவேன்.


கல்லூரி முதல் நாள் முடிந்து மாணவிகள்  பஸ்டாண்டில் பஸ்ஸிற்காக காத்திருந்தோம்,எங்களுடன் ஒரு லேடியும் காத்திருந்தார்.இரண்டு பஸ் மாறிப்போகனுமா,அல்லது ஒரே பஸ்ஸில் போகும்படி இருக்கும்மான்னு விசாரித்துக்கொண்டிருக்கையில் சுந்தரராமன் வரும்,ரமேஷ் வருவான்னு மாணவிகள் சொன்னதில் எனக்கு ஒரே குழப்பம்,பிறகுதான் தெரிந்தது பிரைவேட் பஸ்களின் பெயர்கள்தான் ரமேஷும்,சுந்தரராமனும் என்பது.உண்மையா சொல்றேன் அப்போதுவரை அரசு பஸ் என்றால் சிகப்பு கலரில் இருக்கும்,டிக்கெட் பைசா குறைவு,தனியார் பஸ்கள் கலர் கலராகவும், டிக்கெட்  கட்டணம் சற்று அதிகமாக  இருக்குமென்றுதான் தெரிந்து வைத்திருந்தேன்.தனியார் பஸ்களுக்கு பேர் இருக்குன்னு அப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.


என் ஊர்வரை நேராக போகும் பஸ்ஸில் ஏறினேன்,யுவன் யுவதிகள் கூட்டம் அதிகம் இருந்தாலும் சின்ன பயமும் இருந்தது.பஸ்டாண்டில் பார்த்த லேடியும் எங்களுடந்தான் ஏறினார். சில நிமிட பயணத்தில் அந்த லேடி தன் பின்னிருப்பவர் தன்னை வேணுமென்றே முதுகில் கைவைத்து வம்பிழுப்பதாக சொல்லி அந்த ஆளிடம் சண்டையிடத் தொடங்கினார்.பார்த்து பயம் அதிகமானது.அந்த ஆளும் தான் அப்படி செய்யவில்லை இந்த லேடி பொய் சொல்கிறார் என்கிறார்,இத்தனை பேர் இருக்கும்போது உன்னை ஏன் சொல்லனும்,போலிஸில் கம்ப்ளைண்ட் செய்வேன்னு சப்தமிட்டார் அந்த லேடி.பலரும் சமத்துவம் பேசி அந்த ஆளை பாதி வழியிலே இறக்கிவிட்டு விட்டார்கள். அந்த ஆள் கிராஸ் செய்யும்போது பிராந்திவாடையும் வந்தது.அந்த லேடி நல்ல தைர்யமானவர் இப்படித்தான் இருக்கனும்னு  நினைத்தேன்.பிறகு கண்ணில்பட்ட  தனியார் பேருந்துகளின்  தலையில் பெயர்கள் எழுதியிருப்பதையும் கவனித்தேன்.அட ஆமா..இவ்ளோ பெரிசாதான் எழுதிருக்காங்க,இத்தனை நாளும் கவனிக்கலையேன்னு  நினைத்தேன்.

மறுநாள் கல்லூரியில் நேற்று பஸ்ஸில் சண்டையிட்ட லேடி அங்குமிங்கும் நடமாடுவதை பார்த்தபோது இவங்க எதாவது மேடமாக இருப்பாங்களோன்னு சந்தேகம் வந்தது.அன்று அந்தந்த சப்ஜெக்ட்களின் ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கத் துவங்கினார்கள்.லன்ச் ஹவருக்கு பின் முதல் வகுப்பு கெமிஸ்ட்ரி.கெமிஸ்ட்ரி எடுக்க வந்தவர் நேற்று பஸ்ஸில் தைர்யமானவர்னு நினைத்த அதே லேடிதான்.அந்த நிமிடம் எனக்கு ஏற்பட்ட பயத்த என்னனு சொல்றது...அதை விட கொடுமை அவர் ஆங்கிலத்திலேயே பேசியதும்,பாடம் எடுத்ததும் கண்ணை கட்டி காட்டில்விட்ட மாதிரியாகிட்டு.அவர் விளக்கிய சமன்பாடுகள் எனக்கு எதும் புரியாமல் அழுகை வந்துவிட்டது.தமிழில் சமன்பாடுகளை விளக்கினாலே எனக்கு புரியாது.என்னை எழுப்பி அவர் ஏன் என்னனு கேள்விகேட்டதும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.முதல் வகுப்பிலே என்னம்மா இப்படி பிஹேவ் பன்றன்னும் கேட்டார்.பிறகு எனக்கு பாடம் புரியலை என்றதும் மீண்டும் விளக்கம் தந்தார்.அன்றே எனக்கு கெமிஸ்ட்ரி பாடத்தின் மேல் மிகுந்த வெறுப்பு உண்டாகிவிட்டது. கெமிஸ்ட்ரி பிடிக்காமல் போனாலும் அந்த மேடமிற்கும் எனக்கும் நாளடைவில் நல்ல நட்பு உண்டானது.


பேருந்து நினவிலிருந்து தடம் மாறுவது போல உள்ளதா?ஆரம்பத்தில் அப்பாவியாக பேருந்தில் பயணித்த நான்  மூன்று வருட பயணத்தில் அறிந்தும்,அறியாமலும்   பல பிரச்சனைகளை சந்தித்தேன்,இனிமையான அனுபவங்களும் கிடைக்கப்பெற்றேன்.நினைவிருக்கும் சில நகைச்சுவையான பேருந்து தருணங்களை மட்டும் அடுத்த பதிவில் பகிர்கின்றேன்.

Feb 14, 2012

காதலன் தன் காதலிக்கு எழுதியது

வாடிய வார்த்தைகளில் கலங்கிப்போகிறேன்
வதங்கிப்போகிறேன்,வினையை என் சொல்வேன்
விரைந்து வர துடிக்கின்றேன்
வினை விரட்டிவர வெளிரிச் சிரிக்கின்றேன்!

சில்லென்ற மழைத்துளி தெளித்து
சிலிர்த்து எழும் ரோஜா முகையைப்போல
தினம்தினம் உன் உன் விழிகள் பார்த்து
உயிர்த்தெழுந்தது ஒரு காலம்!

செவ்விதழ் தேன் உறை கனி மேலே
சிரித்து நிற்கும் விளக்கினது ஒளிதெரித்து
வெட்கத்தில் குவிந்தும்,விரிந்தும்
முத்துக்களை தெரித்தும் என்னுயிரை
வெண்டாடி,திண்டாடி கால்பந்தாய் உதைத்திருந்தாய்!

மஞ்சள் முகம் வெட்கமேறி,மஞ்சள் வானம்
சிவந்தபோதெல்லாம் உன் மழை மேகக்
கண்களிலிருந்து என் உயிர்த்துளி அருவியாய்
முகிழ்த்தபோதெல்லாம் என்னுயிர் உருகி
ஒன்றுமில்லாமல் ஆனேனடி!

சிறு மழை சிரிப்பினிலே,சிறு மலரிதழ்
சுழிப்பினிலே உந்தன் பனி முகம் தோன்றுதடி
துடித்த மனம் ஏங்கித்தான் போனதடி
மொட்டுக்கள சிரித்தது போன்ற மலர்ந்த உன் முகத்தை
பார்த்தேனென்றால் சக்தி முழுவதும் பெறுவேனடி!

முகையாய் ,முழுமையாய் நிறைந்தவளே !
எத்தனை பிறவி அலைந்தேனோ!
எங்கெல்லாம் திரிந்தேனோ!
என்ன தவம் செய்தேனோ!
என்னவளை கண்டுகொள்ள!

வெறுமையில் உழல்கிறேன்,என் முன்னே
நீ என்றால் எல்லையில்லா உற்சாகம்!
நிறை அன்பின் வடிவாய் என்னுள் வளமோடு
நலமோடு வளர்கின்றாய்!வலி தரும் விருந்தே!
என் இதயத் தொட்டிலில் உறங்குபவளே!

நம் சுவாசம் இணையப்போவது எப்போது?


இந்த கவிதை நான் எழுதவில்லை.எழுதியவர் தன் பெயரை குறிப்பிட  மறுத்துள்ளார்.எனவே கவிதையை மட்டும் பகிர்ந்துகொண்டுள்ளேன்.

Feb 11, 2012

இதெல்லாம் எந்த ஊர்ல?.......

குரங்கால மட்டும்தான் மனுசனாக முடியுமா?
நாங்களும் மனுசனாகி சாதிக்கிறோ...ம்...மா இல்லையான்னு பாருங்க!!!

இந்த உணவகம் அவசியம்தான்.வெள்ளத்தில் தத்தளிக்கும் எத்தன பேர் பசி்யைத் தீர்க்கும்.உணவக ஓனருக்கு வாழ்த்துகள்.

இதைத்தான் பகுமானம்னு மதுரைத் தமிழில் சொல்லுவாங்க.

என்னம்மா  யாரோடையாவது சண்டையா?இல்ல வீட்ல தூங்க இடமில்லையா?இல்ல எதாவது சாதனை முயற்சியா?

என்ன ஒரு பாதுகாப்பு!இனிமே கண் எரியுதுன்னு சொல்ல முடியாதுல்ல!

இந்த ஐடியா உங்களுக்கு வருமா?

என்ன ஒரு கண்டுபிடிப்பு.......இப்படி போறவங்களுக்குத்தான் இதன் அருமை தெரியும்.

நிச்சயம் செருப்பு காணாப்போகாதுங்க,ட்யூப்பை கட் செய்துட்டாங்கன்னா கம்பெனி பொறுப்பு கிடையாது.

தலையறுத்து பிரியாணி ஆக்கினாலும் அடங்கமாட்டோம்!

பக்கத்து வீட்லையுமா  ஃப்ரிஜ் இல்ல போலருக்கு,இிதை பக்கத்து வீட்ல எப்படி வைக்கிறது... 

எழுதினவன்  தப்பா?உக்காந்திருக்கிறவங்க தப்பா?

கடலுக்குள்ள   போகும்போது    தாகம்மா இ்ருந்தா  கடல் தண்ணியவா குடிக்க  முடியும். இல்ல உப்பு நீர்  எடுக்கப் போறாங்களா?...ஓ மிதக்கப்போறாங்களா?....
அந்த அம்மா பக்கத்துல இருக்கிற நாற்காலிக்கும் ஆள் வல்ல போலருக்கே!உங்க பேச்சை கேக்க வந்திருக்கிறவருக்கு அந்த நாற்காலியைக் கூட கொடுக்கமாட்டிங்களா?  


ஃபோட்டோ எடுக்கும்போது தொல்ல செஞ்சா இதான் தண்டனை.
.

எல்லோரும் அவங்க வேலைய பார்ப்பாங்களா?உங்களுக்கு ஓடி வந்து உதவி செய்வாங்களா?....இவ்ளோ நல்ல ஆட்டோ வச்சிருக்கிற உங்களுக்கே இந்த நிலமைன்னா...உங்களவிட கில்லாடி ஒருத்தரு ஜம்முன்னு போறார் பாருங்க, அடுத்த படத்த பாருங்கப்பா.

                                   

இதற்கு நிகர் எதுவுமில்லை.எதோ புதுசா கண்டுபிடிச்சிருக்காறோ!!

அடடா! ஒரே ஏர் கூலரிலிருந்து இரண்டு ரூமிற்கு காற்று போறது புரியுதா?என்ன ஒரு சிக்கனம்,கண்டுபிடிப்பு....

இதுக்கு என்ன காரணம்னு நீங்களே யோசிச்சுக்கோங்க!


நீங்க மட்டும் என்னை கடிச்சு சாப்பிடுறீங்களே!எனக்கு எவ்ளோ வலிக்கும்.இனி நான் உங்கள கடிச்சு வச்சித்தான் வலின்னா என்னான்னு புரியவைக்கப் போறேன்னு ஆப்பிள் சொல்லுது.


இதான் முட்டை கண்ணுல பார்ப்பதா?.நான் தான் வாட்டர் மேன்

Feb 10, 2012

நம் பல் பிரச்சனை மருத்துவர்களுக்கு பலே!,பலே!உடலின் பாகங்கள் அனைத்தும் நலமுடன் இருப்பது அவசியமானதுதான்.நலம் குறையும்போது மருத்துவர்களை நாடுகின்றோம்.அனைத்து மருத்துவர்களும் பணம் சம்பாதிக்க மட்டுமே பணியாற்றுகிறார்கள் என்று சொல்லிவிட இயலாது. மருத்துவர்களும், மருத்துவமுறைகளும் பெருகிவிட்டதற்கு இணையாக நோய்களும் பெருகிவிட்டன. ஒரு சில அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இலவசமாக  நமக்கு நல்லபடியாக வைத்தியம் பார்க்கப்படுகின்றது.


 பல் நலக்குறைவும்,அதற்கு மருத்துவர்கள் வசூலிக்கும் பணமும் என்னை பாதித்ததில் மருத்துவர்களிடம் வாதிடுவதற்கு பதிலாக பதிவிடுகிறேன்.தற்பொழுது 20 ரூபாய் ,50 ரூபாய் மருத்துவக் கட்டணம் வசூலித்ததெல்லாம் மலையேறிப்போய் குறைந்த கட்டணம் 100ரூபாய் முதல் 600 ரூபாய் வரை உள்ளது.


 தெரிந்த சகோதரி ஒருவருக்கு லேசான தெத்துப்பற்கள் இருந்தது.பல் மருத்துவரிடம் சென்று பற்களை சமப்படுத்தும் கிளிப் அணிந்திருந்தார்.அதன் விலை 8000 ரூபாய் என்றதும் பகீரென்று இருந்தது.அதே மாவட்டத்தில் இதே அளவு பல் கிளிப்பிற்கு 3000 ரூபாய்தான் மற்றொரு மருத்துவர் வசூலிக்கிறார்.தரம் வேறுபாடு இருக்குமா என்பதுபற்றி  தெரியவில்லை.  

நகரங்களில் மற்றும் நவீன மருத்துவமனைகளில் கட்டணங்கள் எழுதப்படாத சட்டமாகவே உள்ளது.நான் தற்பொழுது வசிக்கும் பகுதியில் பல் மருத்துவத்திற்கு வசூலிக்கும் பணத்திற்கு எல்லா பற்களையும் கழற்றி வைத்துவிடலாம்னு தோன்றுகிறது.ஒருவர் தன் பற்களில் காரைப்பிடித்திருப்பதை சுத்தம் செய்ய சென்றிருக்கின்றார்.மருத்தவர் கட்டணம் தனி,காரை நீக்கம் செய்ய ஒரு பல்லுக்கு 200 ரூபாய் வீதம் 3 பற்களை ரூ600க்கு சுத்தம் செய்து வந்துள்ளார்.மாத்திரை,பேஸ்ட் என்று அது தனி விவகாரம்.


பல் வேர் சிகிச்சை ஒரு வாரத்தில் செய்திடலாம்.ஆனால் வசூலிக்கும் பணத்திற்கு வேலை காட்ட 10 அல்லது 15 நாட்கள் வரை அலையவைக்கின்றனர்.

பல் வேர் சிகிச்சை செய்து பொருத்தப்பட்ட பல் விழுந்துவிட்டால் மீண்டும் ஒரு பசையின் மூலம்தான் ஒட்டவேண்டும்,அந்த பசைக்கு ரூ150 செலுத்தவேண்டும். 

பற்குழி அடைக்க ஒரு பல்லிற்கு ரூ250 முதல் ரூ400 வரை வசூலிக்கப்படுகிறது,மருத்துவர் கட்டணமும்  செலுத்த வேண்டும்.

சமீபத்தில் 50 வயதிருக்கும் ஒரு பெண்மணி  கீழ்த்தாடை பற்களில் பிரச்சனை என்று வைத்தியம் செய்ய சிறிய பல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துள்ளார்.நான் கொடுத்த மருந்துகளை சரியாக உபயோகிக்கவில்லை,கிருமி அடுத்த பல்லிற்கு பரவிவிட்டது,நீங்கள் உங்கள் பற்களை சரியாக பராமரிக்கவில்லை என்று சொல்லி அந்த மருத்துவர் அந்த வைத்தியம்,இந்த வைத்தியமெல்லாம் பார்த்தும் அந்த பெண்ணிற்கு கீழ் பற்கள் அனைத்தும்  வலியெடுக்கத் துவங்கி,கீழ் பற்கள் முழுவதும் நீக்கப்பட்டுவிட்டு செயற்கைப்பற்கள் பொருத்தியாகிவிட்டது.இருப்பினும் விரும்பிய நேரத்தில் விரும்பிய உணவை சாப்பிட முடியவில்லை என்று வருந்துவார்.ஆன செலவு 60,000 ரூபாய் என்றால் நம்பமுடியுமா?உண்மைதான்.வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் அலைந்தது இல்லாமல் வலி,மன வேதனை,வீடு,கணவன்,பிள்ளைகளை கவனிக்க முடியாமல் போனதில் தவித்துப்போனார்.

பல் வேர் சிகிச்சை, பற்களை வெண்மையாக்குவது, சீரமைப்பது,செயற்கைப் பற்கள்  இவைகளுக்கு எக்ஸ்ரே இப்படி பல நவீன முறைகளுக்கும் மருத்துவர்,மருத்துவமனைகளின் தரத்தைப்பொறுத்து கட்டணங்கள் செலுத்த வேண்டியுள்ளது. இது அனைத்து நோய்களுக்கும் பொருந்தும். உண்மையில் இந்த கட்டணங்கள் இந்த மருத்துவமுறைக்கு தகுமா?அல்லது மக்களை ஏமாற்றுகிறார்களா என்று தெரியவில்லை.கேட்டால் உங்களை நாங்கள் அழைக்கவில்லை,எங்கு உங்களுக்கு சரி வருமோ அங்கு செல்லுங்கள் என்று பதில் வருகிறது.அதனால்தான் சிலர் இந்த செலவுகளுக்கு பயந்து அரசு மருத்துவமனை அல்லது நம் சொல் கேக்கும் தனியார் மருத்துவரிடம் சென்று இந்த பல்லை பிடுங்கிவிடுங்கள் என்று சொல்லி ஒரு நாள் வேலையாக முடித்துவிடுகின்றனர்.

எதுவும் நல்லபடியாக இருக்கும் வரை,இயங்கும் வரை அதன் அருமை நமக்கு விளங்குவதில்லை.பல் மட்டுமல்ல உடல் முழுவதையும் இயன்றவரை பேணிக்காப்போம்.முடியாமல் போகும்பட்சத்தில் கடவுள் மேல் பாரத்தை வைக்க முடியாது,கடவுளின் தூதர்களான மருத்துவர்களைத்தான் சரணம்  அடைய வேண்டியுள்ளது.

Feb 9, 2012

எனக்கு விருது வழங்கிய வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு நன்றிகள்7/2/2012 அன்று 


என்ற ஜெர்மன் விருதை

அன்புடன் எனக்கு வழங்கியுள்ளார்.

எனது நன்றிகளை தெரிவித்து
என்றும் அவரின் ஆசிர்வா்தங்களை
வேண்டும் -   ஆச்சி

Feb 4, 2012

சாலைகளிலும்,பாதைகளிலும் மட்டுமா பிரமிக்கும் ஓவியங்கள், உதட்டிலும்....
                                     

கைகளால் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகிறதா?

ஒரு பெண் தன்  உதடுகளாலும்   வரைகிறார்.  இங்கே பாருங்கள்.