பெண் குழந்தை பிறந்தால் முத்தரசி என்று பெயர் வைக்க ஆசைப்பட்ட அம்மாவிற்கு , விவசாயத்தை மூச்சாகக் கொண்ட தன் பெற்றோருடன் மதுரை மண் வாசனையில் தை பொங்கல் கொண்டாடி பொங்கல் சுவைத்த அம்மாவிற்கு அன்றைய தினத்தைக் கூட முழுமையான மகிழ்ச்சியில் நெகிழவைக்காமல்,இக்கரைக்கு அக்கரை பச்சை என கருவறையின் சுகம் அறியாமால் கல்லறைக்கு போகும் நாட்களை எண்ணுவதற்கு அன்றே முயற்சித்த என்னை பிரசவிக்க வாடிப்பட்டி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அம்மாவிற்கு மகளாய் வெள்ளிக் கிழமை உழவர் தினத்தன்று(மட்டுப் பொங்கலன்று) உத்திர நட்சத்திரத்தில் பிறந்தேன்.
‘ப’ வரிசையில் பெயர் வைக்க ஜோசியர் சொல்லிவிட்டதால் மகள்தான் தன் உயிர்,தன் மகள்தான் வாழ்க்கை என்றிருக்க,’முத்தரசி ‘ என்ற பெயர் அம்மாவின் ஆசையிலிருந்து நீக்கப்படப் போவதில் துளி வருத்தமும் அடையாமால் அம்மாவும் அப்பாவும் ‘ப’ வரிசையில் பெயர் தேட துவங்கியதில் ஒருமனதாக குலதெய்வத்தின் பெயாரான “பரமேஸ்வரி” என்ற பெயர் வைக்கப்பட்டது.
நாகையில் என் பெற்றோர் வசித்த பகுதியில் அனைவரும் செட்டியார்கள் (ஜாதிப் பெயரைக் குறிப்பிடுவதற்கு மன்னிக்கவும்).என் பெற்றோர் மூன்று வருடம் குழந்தை இல்லாமல் சொந்தங்களால் பல துன்பங்களுக்கு ஆளான போதிலும்,நண்பர்களாய்,உறவினர்களாய் என் பெற்றோருக்கு ஆதரவாக இருந்தவர்கள் தங்கள் பிரிவிற்கே உரித்தான ‘ஆச்சி’ என்றழைக்க என் பெற்றோருக்கும் இந்த பெயர் வித்தியாசமாக தெரியவில்லை.அன்று முதல் ஆச்சிதான். பள்ளியிலும் கல்லூரியிலும்தான் பரமேஸ்வரி, இன்றுவரை ஆச்சி என்று சொன்னால்தான் என் உறவினர் அனைவருக்கும் தெரியும்.தாத்தா விவசாயி,அப்பாவிற்கு மின் வாரியத்தில் பணி.இருவரும் தன் உழைப்பில் உயர்ந்தாலும் ஆச்சி உயர உயர தம் வாழ்க்கை உயர்வும்,பணி உயர்வும் அடைவதாக நம்பிக்கை.
மூன்று வருடம் கழித்து நாகையிலேயே அப்பாவின் வேலை மாற்றம்.வசிப்பிடமும் மாற்றியாகிவிட்டது.அங்கு ஒரு அன்பு உள்ளம் கொண்டவர் bhamme என பெயரிட்டு அழைக்கத் தொடங்கினார்,அருகருகே சிலர் bhamme என்று அழைத்தாலும் ஆச்சியை அசைக்க முடியவில்லை.
பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை எனது வகுப்பில் முதல் மதிப்பெண்தான்.பரமேஸ்வரி என்றால் எல்லோருக்கும் தெரியும்.
ஒன்பதாம் வகுப்பிலிருந்து முதல் ரேன்க் வளர்ந்து ரெண்டாம்
ரேன்க்காகிவிட்டது,......ஹா,ஹா....கல்லூரியில்
ஆவரேஜ் ஸ்டுடன்ட்டுதான் அதே சமயத்தில் எனது பெயரைக் கேட்டால் எனக்கே அலர்ஜி ஆகும் அளவிற்கு சில வேதனையான சம்பவங்களும் நடந்ததுண்டு.
கல்லூரியில் படிக்கும் போது சக தோழிகளுடன் சில தோழிகள் சவால் விட்டுக் கொண்டோம்.என்னவெனில் திருமணம் ஆனாலும் இத்தனை நாள் இருந்த அப்பாவின் இனிசியலைத்தான் வைத்திருப்போம்,தற்செயலாக வருங்கால கணவர் பெயரும் அப்பாவின் பெயரும் முதல் ஆங்கில எழுத்து ஒன்றாக அமைந்து விட்டால் அவரவர் அதிர்ஷ்டம்.ஆட்டோகிராப் டைரியில் கூட அப்படியே வாக்குறிதி எழுதினோம்.வெவ்வேறு இனிசியல் அமைந்தாலும் அப்பாவின் இனிசியல்தான் வைத்துக் கொள்வோம் என்றோம்.சிலர் அப்பாவிற்கு பின் கணவர்தான்.எனவே கணவர் இனிசியல் வைத்துக் கொள்வதுதான் சரி என்றனர்.
என அப்பா பெயர் செல்வராஜ்.என் கணவர் பெயர் (அனைவரும் அறிந்ததே) ஸ்ரீதர்.எனவே இனிசியலில் மாற்றமில்லை,மற்றொரு தோழிக்கும் அப்பாவின் இன்சியல் மாற்றத் தேவை இல்லாமல் கணவர் பெயர் அமைந்து விட்டது,ஆனால் மீதி சவால் விட்ட தோழிகள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை.
திருமணமாகி வசிப்பிடம் பெற்ற போது எங்கள் பகுதியில் மூன்று ஸ்ரீதர்.
சில சூழ்நிலையில் பலருக்கும் குழப்பம்.எனவே இவர்களுக்கு இனிசியளிலும்,வீட்டின் வகை பிரிவை சொல்லியும் அடையாளம் சொல்ல வேண்டிய சூழ்நிலை.
வலைப்பதிவிற்கு வந்த போது பரமேஸ்வரி என்ற பெயரை தெரியப் படுத்த விரும்பாததால் மிஸ்சஸ் bs ஸ்ரீதர் என்ற பெயரை திருமதி bs ஸ்ரீதர் என்று வைத்துக்கொண்டேன்.
பெயர்க் காரணம் பதிவிட அழைத்த தோழி,சகோதரி ராஜி அவர்களுக்கு நன்றி.