*வணக்கம் வருகைக்கு நன்றி*
Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Aug 16, 2013

என் கணினி அனுபவங்கள்

.கம்ப்யூட்டர்,கம்ப்யூட்டர்......

அப்படின்னா தீவிரவாதி/வில்லன்/திருடனை படம் வரைந்து கண்டுபிடிப்பாங்களே சினிமாவில்,அதனால் நான் முதன் முதலில் கம்ப்யூட்டரை பார்த்தது சினிமாவில்தான்.எங்க ஊரு பிரபல ஜவுளி/மளிகைக் கடைகளில் கம்ப்யூட்டர் பில் போடுவதை பார்த்திருக்கின்றேன்.

டாக்டர்/நர்ஸ் உடை அணிந்துகொள்ளவே டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்ட நான்,பாலிடெக்னிக்கில் படித்தால் விரைவில் வேலை கிடைக்குமென்று 10 ஆம் வகுப்பு முடித்தவுடன் பாலிடெக்னிக்கில் சேர முற்படுகையில் எந்த துறையை தேர்ந்தெடுப்பதென்று தெரியவில்லை.தனியார் கணினி மையங்கள் பிரபலமாகத் துவங்கிய சமயம் அது.அப்பா சொன்னதால் எலக்ட்ரானிக்ஸ்&கம்னியுகேசனில் சேர்ந்தேன்.

கல்லூரியில் கணினி லேபை க்ராஸ் பன்னும்போது  மனதை ஈர்க்கும் எதோ ஒன்று ஜில் அறையில் வரிசையாக நிற்பதாக உணர்வேன்.அதில் படித்து கற்க அப்படி என்ன இருக்கும்னு யோசித்திருக்கின்றேன்.முதலாம் ஆண்டு நிறைவடையும் நேரத்தில் அவைஸ் என்ற தனியார் கம்யூட்டர் நிறுவனம் கணினி கண்காட்சி வைத்திருந்தார்கள்.அனைத்து மாணவர்களுக்கும் இலவச அனுமதி.நானும் சென்றிருந்தேன்,அங்கு கணினி பற்றின ஏற்பட்ட  மாய அதிர்ச்சி என் மனதை விட்டு இன்னும் அகலவில்லை.

கண்காட்சியில் எங்களுக்கு காண்பிக்கப்பட்டது ms-word & basic launguage கோபால் லாங்வேஜும் இருந்தது என நினைக்கிறேன்.நமது பெயரை எழுதி ஸ்கிரீன் சேவரில் ஓடி ஆட விட்டதும்,font  size,bold,underline இதெல்லாம் செய்து காமித்தபோது வாயை பிளந்துகொண்டு பார்க்காத  குறையா பிரமித்தேன்.என் பேரை எழுத அன்றுதான் ரொம்ப கஷ்டபட்டேன்,ஏன்னா என் பேருக்கு ஸ்பெல்லிங் கீ போர்டில் தேடித்தேடி அழுத்துவதற்குள் கர்சர் ஒரு பக்கம் துள்ளுவதும்,ஒரு லெட்டருக்கு பக்கத்து லெட்டரையும் சேர்த்து அழுத்திவிட்டதும்,தவறான லெட்டரை நீக்க கஷ்டபட்டு கீ போர்டில் நீட்டிய ஆள்காட்டி விரலுடன் வலம் வந்ததும் பக்கத்தில் இருப்பவர் அசிங்கமா நினைச்சிடுவாங்கன்னு நெளிந்ததும் மறக்க முடியாது.

அடுத்துms paintword,ms dos,games வகை வகையா கலர் ,டிசைன்ஸ்,கம்ப்யூட்டரில் படம் வரைவது பவர் பாயிண்டில் விதவிதமா ஸ்லைட் ஷோ என்று எதோ மாய உலகிற்குள்  கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்ட எபஃக்ட்.அந்த கண்காட்சியை விட்டு வர மனதே இல்லை.கம்ப்யூட்டர் கத்துக்கனும்னு என் வாழ்க்கையிலே முதல் உறுதிமொழி எடுத்துக்கொண்ட நாள் அது.

கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் basic languge ,ms dos வந்தது.ஆசையா கணினி லேபிற்குள் சென்ற எனக்கு  மல்டிமீடியா,விஸ்வல் எஃபக்ட் எதுவும் இல்லாமல் ப்ரோக்ராம் கோடிங் எழுது,லாஜிக் கிரியேசன் என்று காய வைத்துட்டாங்க.எனக்கும்  லாஜிக்கும் சம்மந்தமே இல்ல.......லைப்ரேரியில் பேசிக் லாங்வேஜ் புத்தகம்(பாலகுருசாமி அவர்கள் எழுதியதுனு நினைக்கிறேன்) எடுத்து அதில்   ஒரு முக வடிவம் ரிசல்ட்டிற்கு ஒரு பக்கத்திற்கும் மேல் கோடிங்ஸ்களை காப்பி செய்து அவுட்புட் கொண்டுவந்ததை நானே ப்ரொக்ராம் கோடிங் கண்டுபிடிச்ச மாதிரி சந்தோசப்பட்டேன்.அப்போ ஸ்டோர் செய்ய ஃப்ளாப்பி ட்ரைவ்தான் இருந்தது.

ப்ரோக்ராமிங் கோடிங்ஸ்/லாஜிக் என்பது  கசந்ததால் கணினி மீதான ஆர்வம் எனக்கு குறைந்துவிட்டது.மூன்றாம் ஆண்டில் எந்த கணினி சப்ஜக்ட்டும் கிடையாது.ஆனால் இறுதியாண்டில் அருகில் உள்ள இன்ஜினியரிங் காலேஜில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்துகொண்டேன்.அங்குதான் ,dvd,cd,net,mail பற்றி அறிந்தேன்.பிரமிப்பை உண்டாக்கினாலும் அய்யோ எப்பா ஷோவில் ஜாலியாதான் இருக்கும் நாம் ப்ரசண்ட் ஆகும்போதுதான் அதன் கஷ்டம் தெரியும்னு நானே ஒரு புல்ஸ்டாப் போட்டுகிட்டேன்.

animated computer photo: Net computer_animated_globe.gif ஒரு நாள் என் தோழி ஒருவருடன் இண்டெர்நெட் மையத்திற்கு சென்றபோது இணையம் மெயில்,சாட்டிங் என்பது கண்ணை கட்டி காட்டில் விட்டதாய் இருந்தது.கீபோர்டை பார்த்தாலே எரிச்சலாகியது.மானிட்டரில் வருவதை படிச்சு தெரிஞ்சுக்கனும்னு மெயிலை சுற்றிலும் உள்ள விளம்பரங்களையெல்லாம் படிச்சேன்.என் தோழி விரைவா டைப் பன்னுவா நான்  டைப்புவதற்குள் ஸ்க்ரீன் சேவரே வந்துவிடும்.எப்பபாஆஆஆஆஆ கம்ப்யுட்டரும் வேணாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம்னு நினைச்சேன்.


animated computer photo: Animated Computer AnimatedComputer_zps799eba3c.gif  இன்ஜினியரிங் படிக்க முயற்சித்தேன்,என் 82% க்கு சீட் கிடைக்கவில்லை.வருசத்துக்கு 65000 கட்டி மேனெஜ்மெண்ட்டில் படிக்கதான் முடியும் என்றனர்.அந்தளவுக்கு பண வசதி இல்லாததால் அடுத்து ஒரு பிரபல தனியார் கணினி மையத்தில் சேர்ந்தேன்.ms.dos,ms.office  கற்க 8000 கட்டினேன் என்றால் உங்களால் நம்ப முடியுமா ?பட் அதுதான் உண்மை.

வகுப்பு பற்றின என்கொய்ரிக்கு போகும்போதே குளு குளு அறையில் உக்காரவைத்து சாப்பிட கேக் கொடுத்து என்னை கவிழ்த்துவிட்டார்கள்.மற்ற கணினி மையங்களில் கட்டணம் எவ்வளவென விசாரிப்போம் என்றார் அப்பா,விசாரித்ததில் இங்குதான் டபுள் கட்டணம் என்பது தெரியவந்தாலும் நான் பிடிவாதமாக கேக் கொடுத்த மையத்திலே சேர்ந்துகொண்டேன்.

animated computer photo:  stoel.gifகணினி முன் வீலிங் சேரில் அமர்ந்தபோது பெரிய கம்பேனிக்கு ஓனர் போல மனதில் துள்ளல்.அந்த செண்டரில் என்கொய்ரிக்கு வந்ததிலிருந்தே எனக்கு ஒரு டவுட்டு,இங்கிருப்பவர்களுக்கு குரல் சப்தம் குறைவாகவே இருந்ததுதான்.எனக்கு டிஜிட்டல் குரல்,நான் பேச ஆரமித்தாலே மெதுவா பேசுங்க,பி கொய்ட் னு  ஃபேக்காலிட்டி சொல்லி சொல்லி என்னையும் பூனை மாதிரியே பேச வச்சாங்க.அதுதான் மேனரிசமாம்.

animated computer photo: computer surfing computer_surfing_hw.gifடைப்பிங் கற்கவில்லை.கல்லூரியில் கணினி லேபில் கீபோர்டுக்கு பல்விளக்க ஆள்காட்டி விரலை உபயோகிப்பது போல இங்கும் ஆரம்பித்தேன்.நாட்கள் கடக்க கீபோர்ட் என்னுடன் பழகியது.சுமாராக டைப்புவேன்.ms,office,ms dos கற்றதில் செமினார் க்ளாஸ் எடுத்ததில் என் மீது நம்பிக்கை கொண்ட அந்த கணினி மையம் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் ஃபேக்காலிட்டியாக வாய்ப்பு தந்தது.எனக்கு வேலை கிடைத்துவிட்டதென்று அன்று நான் மகிழ்ந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.(2000 ஆம் ஆண்டு)

தினமும்  பள்ளிக்கு கணினி ஆசிரியராக ஒரு மணி நேரமும் கற்கவும் செல்வேன்.சம்பளம் இவ்வளவென்று சொல்லவில்லை,மாதம் 500 ரூபாயாவது கொடுப்பாங்கன்னு எதிர்பார்த்தேன்.குழந்தைகளுக்கு கணினி சொல்லித்தருவதும்,நானே தேர்வு வைத்து அதனை நான் கற்கும் மையத்திற்கு சப்மிட் பன்வதும் இனிமையான,புதுமையான அனுபவமாக இருந்தது.கணினி என்பதால் பள்ளி மாணவர்களும் மற்ற ஆசிரியர்களைவிட என்னை எதிர்பார்த்திருப்பதும்,நான் வந்ததும் குதுகுலமாவதும் மற்ற ஆசிரியர்களுக்கு என் மீது ஒரு பொறாமைப் பார்வையைத் தூண்டியது.

அப்பாவிடம் பிடிவாதம் பிடித்து அடுத்த 6 மாத கோர்ஸில் 9 ஆயிரத்திற்கு மேல் கட்டணத்துடன் இணைந்தேன்.அப்போதுதான் மேலும் பல மறக்க முடியாத சம்பவங்கள் நடந்தன.கணினி நிறுவனம் எனக்கு ஒரு மாதமும் சம்பளம் தரவில்லை,கேட்டதற்கும் 6 மாதத்திற்கு சேர்த்து கொடுத்துவிடுகிறோம் என்றார்கள்.கணினி மையத்திலும் செய்வதறியாமல் யாரும் மறக்க முடியாதளவிற்கு   தேவையில்லா பிரச்சனைகளை   நானே இழுத்துக்கொண்டேன்.இத்தனைக்கும் ஆறுதலாக தேவதை வந்துவிட்டாள் என்னைத் தேடி என்பதாய் புது வரவாய் கணினி கற்க வந்த மாணவி  இனிய தோழியாய் அமைந்தார்.இன்று வரை எங்கள் நட்பு தொடர்கின்றது(13 வருடங்கள் ஆகிறது,திருஸ்டி போடனும்).

எனக்கு ப்ரோக்ராமிங் நாலேட்ஜ் 50% கூட இல்லை.பட் அந்த பெண் c++ ல் வெளுத்துக்கட்டுவார்,நான் வேடிக்கைப் பார்த்துவிட்டு அவர் உழைப்பை
animated computer photo: Computer Head Banging Animated frustratedPC.gifரெண்டு பேரும் சேர்ந்து செய்ததாக காண்பித்துக்கொள்வோம்.ms-acsses ல் திருபார்கவி பிரைவேட் லிமிட்டட் என்ற பெயர் வைத்து இன்வைசிங் ப்ராஜக்ட் செய்தோம்.இன்னொரு ப்ராஜக்ட் என்ன செய்தோம்னு நினைவில்லை.ஆனால்  முதல் 6 மாத கோர்சில் என்னுடன் படித்த மாணவர் ஒருவர் 2 கணினி வாங்கிப்போட்டு dtp ஜாப் துவங்கிவிட்டார்,இன்னொருவர் இண்டெர்நெட் மையமே துவங்கி இன்றுவரை நடத்தி வருகின்றார்.

எனக்கு பள்ளியில் 6 மாதம் முடிந்தவுடன் சம்பள செக் கவருடன் கொடுத்தார்கள்,கவரை பிரித்துப் பார்க்காமல் அம்மா அப்பவிடம் காண்பிக்க மகிழ்ச்சியில் பஸ்ஸில் ஏறி வீட்டிற்கு ஓடாத குறையாக சென்றேன்.அம்மா அப்பாவும் பிரிக்காமல் சாமி படத்திற்கு கீழ் வைத்து பிரார்த்தனை செய்து பெருமிதமாக என்னிடம் கொடுத்தார்கள்.பிரித்துப் பார்த்தால் செளத்துப்போன புஸ்வானமா போயிட்டுப்பா.1000 rs only  என்ற செக் தான் உள்ளே இருந்தது.அம்மா அப்பாவும் சரி விடும்மா என்றே சொன்னார்கள்.

6 மாதத்திற்கு 1000 ரூபாய்.நானும் மேற்கொண்டு அந்த நிறுவனத்தில் எதும் கேக்கவில்லை.எனக்கு செக் கொடுத்த பிறகு அந்த வேலைக்கும் வேறு நபரை நியமித்தார்கள்.என்னுடைய இரண்டாவது 6 மாத கோர்சை நானும் காப்பியடித்தே கழித்தேன்.அதற்குபின் கணினியைத் தொட்டதே இல்லை.


நான் சென்ற கணினி மையத்தின் நிறுவனர் சொன்ன ஒன்று எங்களால் மறக்க முடியாது.  அது

என்ன செய்ய நினைத்தாலும் 1000 காரணம் சொல்லலாம்
எதை செய்யாட்டாலும் 1000 காரணம் சொல்லலாம் .

என்பதுதான்.

2009 ல் கணவர் வாங்கிய லேப்டாப்பில் தான் மறுபடியும் கணினி நட்பு தொடர்கின்றது.அப்போ என் மூத்த மகளுக்கு 2 வயது.அப்போதே அவள் எளிமையாக எளிமையாவற்றை கணினியில்  கற்றுக் கொண்டாள்,31/2 வயதில் password டைப்பி விண்டோஸ் ஒப்பன் செய்து பெயிண்டிங்,கேம்ஸ் விளையாடுவாள்.

இப்போ என் இளைய மகளின்  கணினி அனுபவத்தை பாருங்கள்.



நம்ம மதுரை தமிழர்(அவர்கள் உண்மைகள்) மற்றும் கோவை 2 தில்லி ஆதி அவர்கள் கணினி அனுபவங்கள் தொடர் பதிவிட அழைத்ததினில் இந்த பதிவினை சமர்ப்பித்து அவர்களுக்கு நன்றியும் தெரிவிக்கின்றேன்

இதுவரை கணினி அனுபவங்களை பகிரவில்லையெனில் இனி தங்களது கணினி அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

Mar 13, 2012

வாழ்வியல் கதைகள்&படங்களும்@13/3/2012

தென்காசி சுவாமிநாதன் அவர்கள் சொன்னதாக Zதமிழ் அலைவரிசையில் ஒருத்தர் சொன்ன கதை:


*காந்தியடிகளின் மகன் தங்களது காரை (அந்த காலத்து நான்கு சக்கர வண்டி) சர்வீசுக்கு அனுப்பியிருந்தாராம்.இன்று கார் தயாராகியிருக்கும்,நானும் முக்கிய நிகழ்ச்சிக்காக செல்ல வேண்டியுள்ளது காரை எடுத்து வா என்று மகனிடம் சொன்னாராம் காந்தியடிகள்.காரை எடுக்க சென்றவருக்கு மாலை வாருங்கள் என்று பதில் கிடைத்ததாம்.

மாலை வரை நேரத்தை போக்க காந்தியடிகளின் மகன் சினிமாவிற்கு போய்விட்டாராம்.வெகு நேரமாகியும் மகன் வராததால் கார் சர்வீசை தொடர்பு கொண்ட காந்தியடிகளுக்கு “தங்கள் மகனை மாலை வந்து எடுத்துச் செல்ல சொல்லியிருந்தேன்.காரும் தயாராகிவிட்டது,மாலைப் பொழுதும் போய்விட்டது.தங்கள் மகன் இன்னும் வரவில்லை” என்று பதில் வந்ததாம்.

வெகு நேரம் கழித்து காருடன் காந்தியடிகளின் மகன் வந்து சேர்ந்தாராம்.ஏன் இத்தனை தாமதம்,எங்கே சென்றிருந்தாயென கேட்ட காந்தியடிகளிடம் “தான் சினிமாவிற்கு சென்றதை மறைத்து, இப்போதுதான் வண்டி ரெடியானது,காத்திருந்து எடுத்து வர நேரமாகிவிட்டது அப்பா " என்றாராம்.


மகன் பொய் சொல்வதைக் கேட்ட காந்தியடிகள்,நான் வளர்த்த மகன்,என் கொள்கைகள் அறிந்த மகன்,தன்னிடமே உண்மை சொல்ல தைரியமில்லாமல் பொய் சொல்கிறான்,மறைக்கிறான்,தவறு உன் மீது இல்லை,வளர்த்த என் மீதுதான் தவறு,என் வளர்ப்பு  சரியில்லாமல்  போனதில்  வெட்கமடைகிறேன்,இதற்கான தண்டனையை நான்தான்  அனுபவிக்க வேண்டுமென தான்   செல்லவிருந்த  இடத்திற்கு  நடந்தே  சென்றாராம்.


அந்த சம்பவத்திலிருந்து காந்தியடிகளின் மகனும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டாராம்.




*பிரம்ம  குமாரிகள் குழுவில் ஒருவர் சொன்ன கதை.


திரைப்படம் என்றால்  பலருக்கும் தெரிந்திருப்பது, ஹீரோ,ஹீரோயின்,வில்லன் இருப்பார்கள்.வில்லனால் வரும் பிரச்சனைகளை ஹீரோ எதிர்த்து சமாளித்து வெற்றி பெறுவார் என்பதாக இருக்கலாம்.ஹீரோவால் பெறப்படும் வெற்றியும் கடைசியாக காண்பிக்கப்படலாம்.அத்தோடு திரைப்படமும் நிறைவுபெறலாம்.


ஒரு திரைப்படம் நிறைவுறும் சமயத்தில் கடைசிக் காட்சியில் வில்லனை ஹீரோ வெலுத்து எடுக்கிறார், திரைப்படத்தில் பார்ப்பவர்களும்,திரைப்படத்தை பார்ப்பவர்களும் ஆர்வமுடன் பார்க்கின்றனர்,குதூகலிக்கின்றனர்.ஹீரோ வெற்றி பெறுகிறான்.அடி வாங்கி துவண்டு விழுந்த வில்லனை போலீசும் இழுத்துச் செல்கிறது .படத்தில் மக்கள் ஹீரோவை தூக்கி   வைத்து  கொண்டாடுகின்றனர் ,திரைப்படம் நிறைவுற்றது. படத்தை பார்த்தவர்களும்   நெகிழ்வுடன் செல்கின்றனர்.


திரைப்படம் பற்றின எந்த ஒரு கருத்தும் தெரியாத ஒருவன் முதல் காட்சிகளை பார்க்காமல்  இந்த கடைசிக் காட்சியை பார்க்க நேரிடுகிறது.அவன் கருத்து எப்படிப்பட்டதாக இருக்கும்..." இவன் அடிக்கிறான்,அவன் அடி வாங்குறான்,மக்களில் தடுப்பார் யாருமில்லை.மாறாக மக்களும் மகிழ்ச்சியாக பார்க்கின்றனர்.திரைப்படத்தை பார்ப்பவர்களும் மகிழ்ச்சியாக  பார்க்கின்றனர்.அடிப்பவன் வில்லனாகவும்,அடி வாங்குபவன் அப்பாவியாகவும் இந்த அப்பாவி புரிந்துகொள்கின்றான்.கடைசியில் வந்த போலீசும் அடித்தவனை விட்டுவிட்டு அடி வாங்கியவனை இழுத்துச்செல்கிறதே" என்றும்  பிரம்மிக்கிறான்    .


இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது,மாய உலகில் என்ன நிகழ வேண்டுமோ அதுதான் நிகழ்கின்றது.நாம்   பார்த்து புரிந்துகொள்வதும், வாழ்வதும்,நமது அறியாமையையும் சிந்தனையையும் பொறுத்துள்ளது.


* குட்டி ஒட்டகம் தன் அம்மா ஒட்டகத்திடம் கேட்கிறது,


அம்மா நமக்கு ஏன் இந்த திமில்?


பாலைவனத்தில் உணவு, தண்ணீர் கிடைப்பது அரிது, கிடைக்கும் நீரை பல நாட்களுக்கு சேமித்து  வைக்கவே இந்த திமில் இயற்கையிலே நமக்கு வரமாக அமைந்துள்ளது.


கண் இமைகள் ஏன் இவ்வளவு நீளமாக உள்ளது?
மணற் புயல்களிலிருந்து காத்துக்கொள்ளவே!


நமது பாதம் ஏன் வீங்கி உப்பலாக உள்ளது?
பாலைவனங்களில் வேகமாக நடப்பதற்கு!


இத்தனையும் இருந்தும் நம்மை ஏன் இந்த மிருகக்காட்சி சாலையிலே வைத்துள்ளார்கள்?


இதற்கு என்ன பதில் சொல்லும் தாய் ஒட்டகம்?


இப்படித்தான் மனிதனிடம் இல்லாதது ஒன்றுமில்லை,முடியாதது ஒன்றுமில்லை,தேவையானவைகள் கிடைத்தாலும் பல சமயம் பயனற்றதாகிறது.நம் திறமைகளும்,வாழ்வும் எப்படியோ,எங்கோ,யாராலோ முடக்கப்படலாம்.


படங்களையும் பார்ப்போம் :








கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை தலைய விரிச்சுப் போட்டுக்கிட்டு ஆடுச்சாம்.

ஐயோ !பாவம்னு இரக்கப்பட்டா ஆறு மாச பாவம் நம்மள பிடிச்சுக்கும்மா!!

இடம்,பொருள் தெரிந்து சரியான நேரத்தில் சரியான வகையில் உதவனும்.

இதையும் மீறி,மனக் கஷ்டமோ,அசம்பாவிதமோ ஏற்பட்டால் "உன் குத்தமா?,என் குத்தமா?" ன்னு பாட வேண்டியதுதான். 


Mar 7, 2012

நிரந்திரமில்லா வாழ்க்கை

வாழ்க்கை என்னும் நிரந்திரமில்லா பயணத்தில் நாம் சந்திப்பது பலவகை.நினைவும் உணர்வும் இல்லையெனில் மனிதனும் இல்லை வாழ்வு என்ற வார்த்தைக்கு அர்த்தமும் இல்லை என்றே கருதுகிறேன்.கடந்த சில நாட்களில் நடந்தவற்றை பகிர்ந்துகொள்கிறேன்.

உடல் நிலை குணமின்றி இருந்த பதிவர் ஏஞ்சலின் அவர்களின் அம்மா இறந்துவிட்டதாக மெயில் அனுப்பியிருந்தார்கள்.துக்கத்தை பகிர்ந்துகொள்ள ஏஞ்சலின் அனுமதிப்பார்கள் என்றெண்ணி தெரிவிக்கிறேன்.முகம் தெரியாமல் பழகினாலும் ஒரு உயிரின் இழப்பு அதுவும் அன்னையின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது.அன்னையின் ஆத்மா சாந்தி அடையவும்,ஏஞ்சலின் அவர்கள் மன தைர்யமும் ஆறுதலும் அடைய பிராத்திப்போம்.


என் மகள் எல்.கே.ஜி படிக்கிறாள்.குளிர் கால விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததிலிருந்து காய்ச்சல்,ஜலதோசம்,கால் வலி இப்படி ஒன்று மாற்றி ஒன்று எதாவது தொந்தரவு இருந்துகொண்டே இருந்தது.பள்ளி டைரியில் எழுதி அனுப்பி ஆசிரியைக்கும் தெரிவித்துக்கொண்டிருந்தோம்.ஆசிரியையும் பார்த்துக்கொள்வதாக எழுதி அனுப்புவார்.சில நாட்கள் நன்றாக இருந்தாள்.பிப்ரவரி 29 லிருந்து முழு ஆண்டுத் தேர்வு துவங்கியது.மார்ச் 1 ஆம் தேதி என் மகளுக்கு பிறந்த நாள்.


சிறு வயதில் எனக்கு பிறந்தநாளென்றால் புது உடை,சாக்லேட் அல்லது வேறு எதாவது இனிப்பு வாங்கித் தருவார்.தெருவில் பழகியவர் வீட்டுக்கு மட்டும் கொடுப்போம்.வீட்டில் சாமி படம் முன் உள்ள திருநீரு,குங்குமம் இட்டுவிடுவார்கள்.கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்வோம் அவ்ளவுதான்.பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது கல்லூரி சென்றபின்தான்.கணவருக்கும் இப்படித்தான் பிறந்த நாள் கொண்டாடி பழக்கமில்லை.பெற்றெடுக்கும் சிரமம்,குழந்தை வளர்ப்பை அனுபவித்த பின் என் அம்மாவிற்கு என் பிறந்த நாளன்று “அம்மா ஹேப்பி பெத்த டே” என்பேன்.”போம்மா போ” என்று என் அம்மா லேசான சிரிப்புடன் சொன்னதை போனில் கேட்டிருக்கிறேன்.ஊருக்கு போகும்போது எதற்காகவாது என் அம்மா சற்று மனம் வருந்தியிருக்கும் நேரத்தில் “அம்மா ஹேப்பி பெத்த டே” என்று சொன்னால் பளிச்சுன்னு சிரிச்சுடுவாங்க.அப்போதைய வருத்தமும் விலகி ரிலாக்சா பேச ஆரமிப்பாங்க.என்ன செய்ய என் மகள் பிறந்தபோது என்னை தன் கண்களில் வைத்து கவனிச்சாங்க,என் மகளின் 3 பிறந்த நாட்களன்றும் எங்களுடன் இருக்க முடியவில்லை.நான்கவது பிறந்த நாளில் என் அம்மா உலகத்திலே இல்லை.இப்போ என் மகளின் 5 வது பிறந்த நாள்.


எங்கள் குடியிருப்பு பகுதியில் தற்போழுது ஆறு வருடங்களாக பார்க்கிறேன்,வீட்டில் வேறு என்ன விசேசங்களுக்கு அழைக்கிறார்களோ இல்லையோ பிள்ளைகளின் பிறந்த நாளுக்கு அழைத்துவிடுகிறார்கள்.பெரியவர்களை அழைக்கிறார்களோ இல்லையோ உங்கள் குழந்தையை அனுப்பிவையுங்கள் என்பார்கள்.இங்கு வந்து இன்னமும் நான் பார்க்காத கேள்விப்படாதது, ஒரு வீட்டில் உள்ள இளம் வயது பெண் எப்போது பருவம் அடைந்தாள்,பருவம் வந்தால் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாது.நம்மூரில் பருவம் வந்தால் ஊரைக் கூட்டாவிட்டாலும் உறவுகளைக் கூட்டி சடங்கு செய்வார்களே!.இங்கு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது.ஆனால் பத்தாவது படிக்கும் பெண்ணிற்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடப்பதும்,ஆண்ட்டி நாளைக்கு எனக்கு பர்த்டே உங்க பெண்ணை அனுப்பிவைங்க என்று அந்த பெண்ணே அழைப்பதும் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.


இப்படி பலரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கு கொண்ட பிள்ளைகள் விளையாட்டில் பிறந்த நாள் கொண்டாடுவதும்,வேறு விளையாட்டில் இருக்கும்போதோ,பள்ளியிலோ சண்டை வந்தாலும் (என்றோ வரப்போகும் பிறந்த நாளுக்கு) “ஏய் நீ என் பர்த்டேக்கு வரக்கூடாது,நான் உன்னை அழைக்கமாட்டேன் ”என் பர்த்டேக்கு உன்னை கூப்பிடமாட்டேன்,ஆனா இவளை /இவனை கூப்பிடுவேன்னு வெறுப்பேற்றுவதும் நடக்கிறது.இப்படிபட்ட மனநிலை உருவானதற்கு யாரை என்ன சொல்றதுன்னு  தெரியவில்லை.


பலரின் பிறந்த நாளுக்கு சென்றுவந்த என் மகளுக்கும் தனக்கும் இது போல எல்லோரும் வரனும்னு ஆசை வந்து தனது நட்பு வட்டத்தாரை அழைக்கும்படி கேட்டுக்கொண்டே இருந்தாள்.கடந்த வருடங்களில் வீட்டில் மட்டும்,நன்கு பழகியவர்களை மட்டும் அழைத்ததுண்டு. எங்களுக்கு இதில் விருப்பமில்லை,பழக்கமும்  இல்லை என்றாலும் அவளின் ஆசைக்காக சிலரை மட்டும் அழைத்து சிற்றுண்டி ஏற்பாடு செய்திருந்தோம்.இனிதே முடிந்தது.மறுநாள் மார்ச் 2 அன்று  விடியற்காலையிலிருந்து மகளுக்கு உடல் நிலை சரியில்லை.அன்று இங்கிலிஸ் ஓரல் எக்சாம் இருந்தது,லீவ் போட முடியாதே என்று அரை க்ளாஸ் பாலை குடிக்கவச்சு பள்ளிக்கு அனுப்பிவிட்டேன்.உடல் நிலை சரியில்லாததை டைரியிலும் எழுதி அனுப்பியிருந்தேன்.எப்படி திரும்பி வருகிறாளோ என்ற நினைப்புத்தான் இருந்தது.பத்தரை மணிக்கெல்லாம் பள்ளியிலிருந்து போன் வந்துவிட்டது “உங்கள் மகளுக்கு காய்ச்சல் வந்துள்ளது,வாமிட் செய்துவிட்டாள்,உடனே வந்து அழைத்துச் செல்லுங்கள் ”என்று.நான் வருவதற்கு குறைந்தது அரைமணி நேரமாவது ஆகிவிடும்.இன்றைய தேர்வை முடித்துவிடுங்கள் நான் வந்ததும் அனுப்பிவிடுங்கள் என்றேன்.கணவருக்கும் தெரிவித்துவிட்டு அப்படியே ஆட்டோவில் சென்றேன்.


பள்ளிக்கு போய் பார்த்தால் என் மகள் மிகவும் பலகீனமாக இருந்தாள்,இவளின் நிலையில் அடுத்த நாளுக்கான கணித ஓரலையும் முடித்துவிட்டதாக ஆசிரியை சொன்னார்.அதற்கு அடுத்த நாள் ரைம்ஸ்தான்,இரண்டு ரைம்ஸ் காம்படீசன்களிலும் கலந்துகொண்டிருக்கிறாள்,A+ கிரேடில் இருப்பதால் நம்பிக்கை உள்ளது,எனவே உடல் நிலை சரியானால் அனுப்புங்கள் இல்லையெனில் 9ஆம் தேதி நடைபெற உள்ள ரிட்டன் எக்சாமிற்கு அனுப்பினால் போதும் என்றார்கள்.அப்பா இது போதும்னு நினைத்து நன்றி சொல்லி பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பட்டலுக்கு  குழந்தை மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன்.அட்மிட் செய்யுங்கள் ஒரு பாட்டில் சலைன் ஏற்றனும்னு சொல்லிவிட்டார்.கையில் நரம்பு கண்டுபிடித்து ஊசி ஏற்றுவதற்குள் பட்ட பாடு !!!பார்க்கவே கொடுமையாக இருந்தது.கணவரும் வந்து சேர்ந்தார்.தொண்டையும் வலிப்பதாக அழுதாள்,இன்ஃபெக்சந்தான்னு டாக்டர் சொன்னார். 


அன்றைய தினம் ஹாஸ்பிட்டலிலே சென்றது.அன்று இரவு டிஸ்சார்ஜ் ஆனாலும் கையில் இருந்த ஊசிப்பட்டையை கழற்றிவிடவில்லை.3 நாட்களுக்கு தொடர்ந்து காலை மாலை ஊசி மருந்து ஏற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார் டாக்டர்.இனி பிறந்த நாள் கொண்டாடுவியான்னு ஆயிரம் முறை மனசாட்சி கேட்டது.வீட்டிற்கு வந்ததும் விசயம் தெரிந்த பலரில் சிலர் கேட்டது “என்னை நீ பர்த்டேக்கு கூப்பிடலைல்ல,இப்ப உன்ன பாக்க வச்சுட்ட பாத்தியா”.இந்த மனிதர்களை என்ன சொல்றது,இதான் காலக்கொடுமை.ட்ரீட்மெண்ட்டில் குணமாகிவிட்டாள் மகள்.


பூமாதேவியின் ஆட்டம்


மார்ச் 5 ஆம் தேதி மதியம் லேட்டாகத்தான் சமையல் செய்யத் துவங்கினேன்,தரையில் அமர்ந்து காய் வெட்டிக்கொண்டிருந்தேன்,என் மகளும் பக்கத்து வீட்டு பையனும் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.எனக்கு தலை சுற்றி மயக்கம் வருவதாகவே உணர்ந்தேன்,பஸ்ஸில் போவது போலவே இருந்தது,சிலிண்டர்,பிரிட்ஜ்லாம் கட,கடன்னு ஆடுவதை உணர்ந்துதான் பூகம்பம் வந்துள்ளதை உணரமுடிந்தது.அடுப்படியிலிருந்து எழுந்து நடந்து வர முடியவில்லை,விளையாடும் பிள்ளைகளை வெளியில் போங்கன்னு சொல்லிக்கொண்டே ஓடி வருகிறேன்,தண்ணிருக்குள் நடப்பது போலவே இருக்கிறது,பிள்ளைகள் நாற்காலி,டீ.வீ ஆடுவதையும்,நான் உலருவதையும் வேடிக்கை பார்க்கிறார்கள்,தாழிட்ட கதவை திறந்தும்,வெளியில் காற்றில் கதவு இழுப்பது போல இருந்தது,ஸ்ட்ரெயின் பண்ணிதான் கதவை திறக்க முடிந்தது.அப்போது வந்த நிலநடுக்கமும் நின்று போனது.


ஒரே பதட்டம்,வெளியில் மக்களின் பதட்டமான பேச்சுக்கள்,காய் வெட்டின கத்தியுடன் பிள்ளைகளை பிடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.தேர்வுக்கு போன பிள்ளை என்னாச்சோன்னு ஒரு தாயின் அலறல்,என் மகளுடன் விளையாடிய சிறுவனின் தாய் தனது கைக் குழந்தையுடன் ஓடி வந்து என்னிடமிருந்த அவனை இழுத்து அனைத்துப் பதறியது,இதோடு எத்தனை முறை நிலநடுக்கம் வந்துவிட்டது,என்றாவது ஒரு நாள் ஒரு நொடியில் இடிந்து விழுந்தால் என்ன செய்ய முடியும்னு ஒருவருக்கொருவர் பேசியது இன்னமும் நடுங்க வைக்கிறது.


10 வினாடிகள் நிலநடுக்கம் இருந்ததாகவும் எங்கள் ஊரை மையமாகக் கொண்டுதான் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும்,வேறு எங்குவரை இந்த அதிர்வு உணரப்பட்டது என்பதையும் டீவியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டோம். 


இது நிரந்திரமில்லா வாழ்க்கைதானே....


நடப்பது நடக்கட்டும் என்று இன்று ஹோலி பூஜைக்கு ரெடியாகிக்கொண்டிருக்கிறார்கள்.நாளை கலர் தூவி விளையாடும் ஹோலி விளையாட்டு.நம்மூர் தீபாவளி பரபரப்பு போல இங்கு ஹோலி,ஹோலி என்று  மக்கள் மகிழ்ச்சியாகவும்,ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணமும் இருந்தாலும் பூமாதேவியின் அதிர்வும் மனதில் ஒலித்த வண்ணமாகவே உள்ளது. 

Jan 29, 2011

எதை நினைத்து வேதனைப்பட ?

பணக்கார வீட்டு நாய்கள் கூட
விலையுயர்ந்த உணவு சாப்பிட,
ஒரு வேலை உணவிற்கு
தெரு நாயோடு சேர்ந்து குப்பைத்
தொட்டியை துழாவுவர் பற்றியா?
பொது இடங்களில் குப்பை
போடுபவர் பற்றியா?அல்லது
அந்த குப்பைகளை  பொறுக்கித்தான்
 (பெருக்கித்தான்) சம்பாதிப்பவர் பற்றியா?
உயர் கல்விக்கு சில ஆயிரங்கள் இல்லாமல்
போனதால் திசை மாறியவர் பற்றியா?
பிரிகேஜிக்கே பல ஆயிரங்கள்
கேட்போர் பற்றியா ?
பிள்ளைகள் இல்லாதோர் பற்றியா?
ஊதாரி பிள்ளைகள் பற்றியா?
பெருகி வரும் முதியோர் இல்லம் பற்றியா?
அதிலும் சேர முடியாமல் துன்புருவோர் பற்றியா?
வீடு இல்லாதோர் பற்றியா?
இலவசமாய் கிடைத்த அரசாங்க வீட்டையும்
வாடகைக்கு விட்டுவிட்டு  மீண்டும்
சாலையோர வாசியனவர் பற்றியா?
மாற்றுத் திறனாளிகள்பற்றியா?
அவர்களில் பலருக்கு ஆதரவு
கிடைக்காமல் போனது பற்றியா?
அவர்களில் சிலர் அந்த குறை
ஒன்றையே வைத்து தானம்
கேட்பது பற்றியா?
வர வேண்டிய தண்ணீர்
வராமளிருந்தாலும் அடித்து
பிடித்து விவசாயம் செய்பவன் பற்றியா?
அவன் அனுமதியின்றி அதிக லாபத்துக்கு
பங்கில்லாமல் விற்பவர்  பற்றியா?
தெய்வ தரிசனமாக வருகிற குடிநீர் 
லாரி முன் பல அவதாரமெடுத்து
கொண்டு போய் குடிப்போர் பற்றியா?
உணவகத்தில்  சாப்பிடும் போது
மினரல் குடிநீர் வாங்கிக் குடிப்பவர்
சாதா நீரைக் குடிக்கும் பக்கத்திலிருப்பவரை
ஏளனப் பார்வை பார்ப்பது பற்றியா?அல்லது
அடுத்துள்ளவர் சாப்பிட்ட எதோ ஒன்று
பல்லில் மாட்ட இடது கையால் மாட்டியதை
பிடுங்கி சரி செய்துவிட்டு உணவக நீரை
சப்  சப்னு பருகுவது பற்றியா?அல்லது
பன்னிரண்டு ரூபாய் தண்ணீரை 
இஷ்டப்பட்ட விலைக்கு விற்பவர் பற்றியா?
ஆசையாய் இனிப்பு வாங்கும்போது
இனிதான அலங்கரிப்பு அடுக்கல்  முன்
நிற்பவர் ஹச்சுனு தும்மிவிட்டது பற்றியா?
அல்லது இனி அதை வாங்கப் போகிறவர் பற்றியா?
நான் வாங்குவது சுத்தமானதா என்பது பற்றியா?
தன் வேலையை செய்ய லஞ்சம் கேட்பவர் பற்றியா?
வேலை ஆனால் சரினு ஒத்துக் கொள்பவர் பற்றியா?
நம்பிக்கை துரோகம் பற்றியா?துரோகத்துக்குள்ளானவர் பற்றியா?
புகழ் பெற்றோர் பற்றியா?கேலி செய்வோர் பற்றியா? 
உதவி செய்யாட்டாலும் உபத்திரம் செய்பவர் பற்றியா?
சரி இப்ப இது போதும்{ஒவ்வொரு வரி பற்றியும் ஒரு பதிவு போடலாம் போல இருக்கே}
வாழ்க்கை என்னவென்று வாழ கற்றுக்கொள்வதற்குள் வாழ்க்கையே முடிந்து விடும் என்று யாரோ சொன்னது சரிதான்.