புதிய சேலைகள் சேர்ந்து விட்டால் உபயோகத்தில் இருந்த ஏதாவது ஒரு சேலை நம் கண்ணுக்கு பழசாகத் தெரியும்.வேண்டாமென்று ஒதுக்கி வைப்போம்.அணியும் சேலை ஒரு நாள் பழசாகத்தான் போகும்.அப்படி பழைய சேலைகள் அல்லது எதிலாவது மாட்டி கிழிந்து விட்ட சேலைகள்,எந்த விதத்திலோ அணிய விரும்பாத/முடியாமல் அல்லது பழைய சேலைகளை என்ன செய்வோம்?
குப்பையில் போட மனசில்லாமல் வைத்திருந்து ,வைத்திருந்து ஒரு நாள் குப்பையோடு போட மனம் வந்து விடலாம் .
யாரிடமாவது தர்மத்திற்கு கொடுத்து விடலாம்.
பழைய புடவை போட்டு பிளாஸ்டிக் பாத்திரம் வாங்கலாம்.
காட்டன் புடவையானால் வீட்டில் தூசி துடைக்க,சமையலறையில் பாத்திரப் பிடி துணியாக வைத்துக் கொள்ளலாம்.
சேலையின் தன்மையை பொறுத்து தலையணை உறை,பெண் குழந்தைகளுக்கான உடை,சுடிதார் கூட தைக்கலாம்.
அவரவர் விருப்பம்,கற்பனைக்குத் தகுந்தது போல அணிய விரும்பாத/முடியாத அல்லது பழைய சேலைகளை உபயோகிப்பார்கள் .
எங்க பகுதியில் அந்த மாதிரியான சேலைகளை இப்படியும் உபயோகப் படுத்துகிறார்கள், எப்படியெனில் மிதியடியாக அல்லது தரை விரிப்பானாக,தடுக்காக. படத்தில் காணப்படுவது,சேலையால் செய்யப்பட்ட தடுக்கு.இதற்கு தேவையான பொருட்கள்:
வேண்டாத சேலை ,
கத்தரிக்கோல்,
குரோசியா ஊசி அல்லது ஸ்வெட்டர் பின்ன பயன்படும் ரெட்டை ஊசிகள்.
ஆனால் இங்கு உள்ள படங்கள் அனைத்தும் ஸ்வெட்டர் பின்ன பயன்படும் ரெட்டை ஊசிகளால் செய்யப்பட்டது.குரோஷியாவில் பின்னும்போது வேற வடிவத்தில் பின்னல்கள் அமையும்.
சேலையை நீளவாக்கில் ஒரு இன்ச் அகலத்திற்கு கத்தரித்து (கிழித்து) கொள்ளவேண்டும்.அடுத்த ஒரு இன்ச் அகலம் கிழிக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக சிறு சிறு முடிச்சிட்டு இணைத்து கிழே படத்தில் உள்ளவாறு வைத்துக் கொண்டால் பின்னுவதற்கு சுலபமாக இருக்கும். 

ஒன்றுக்கும் மேற்பட்ட சேலைகள் இருந்தால் தனித்தனியாக கத்தரித்து, எடுத்து வைத்துக்கொண்டோ அல்லது அந்தந்த சேலைகளின் டிசைனுகேற்பவும்,நமது கற்பனைத் திறனுக்கேற்பவும் செய்து கொள்ளலாம்.தரை விரிப்பா ன்,தடுக்கு,மிதியடியாகவும் வைத்துக் கொள்ளலாம்,வட்ட வடிவம்,செவ்வக வடிவத்திலும் செய்யலாம்.
செய்முறை (பின்னும் முறை)நேரில் வருபவர்களுக்கு கற்றுத்தரப்படும்.(பதிவில் சொல்லித் தருமளவிற்கு திறமை பத்தாதுங்க )
நானும் இந்த கை வண்ணத்தைக் கற்றுக்கொண்டேன்.அம்மா வீட்டுக்கு ஒன்று ,மாமியார் வீட்டுக்கு ஒன்று செய்து கொடுத்ததில் அக்கம் பக்கத்தினர் உட்பட எல்லோரும் ஆச்சரியமும்,சந்தோசமும் அடைந்தார்கள்.கடைகளில் பல டிசைனிலும்,பல மெட்டீரியளிலும் தரத்திற்கேற்ப விலைகளில் கிடைத்தாலும் நம் கைகளால் செய்யப்படும் போது(பின்னப்படும்) இந்த மாதிரி கலை வண்ணங்கள், மனதிற்கும் சந்தோஷம்,நமது சேலையும் பல வருடம் நம்முடன் வேறு வடிவத்தில்,உபயோகத்தில் இருக்கும்.

