*வணக்கம் வருகைக்கு நன்றி*

Aug 30, 2011

நிகழ்ந்தவைகளும் நிகழ்பவைகளும்

பேருந்தில் நடத்துனர் மீதி பணம்                     தரவேண்டுமெனில் நமக்கும் நடத்துனருக்கும் பார்வையிலும்,மனதிலும் பனிப்போர் நடக்கும்.தில்லியில் சில தனியார் பேருந்துகளில் டிக்கெட்டுக்கு பணம் வசூலிக்கிறாங்க,ஆனால் டிக்கெட் கொடுக்கமாட்றாங்க.கேட்டால் தருவோம்ங்கிறாங்க பிறகு அவ்ளவுதான் நம் ஸ்டாப்பிங் வந்துவிடும். மீதி பணமாக இருந்தாலும்அல்லது அலட்சியப் படுத்தப்டுகிறோம்.நின்னு கேட்டு வாங்கலாம்.டிக்கெட்டுதான போயிட்டுபோகுதுனு வந்துட வேண்டியதாக இருக்கு.ஆனால் இப்படியான பேருந்துகளில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சில்லரை ரெடியாக வைத்திருந்து மீதத்தை உடனே தந்துவிடுகிறார் நடத்துனர் .25 ரூபாய்  டிக்கெட்டாக இருந்தாலும் டிக்கெட் தருவதில்லை.

தமிழகத்தில் நான் பார்த்தவரை நமக்குத் தேவையான ஸ்டாப்பிங்களின் வழியாக பேருந்து செல்லுமா என விசாரித்து செல்லுவோம்.நடத்துனரும்   ஆம் இல்லை என்று பதில் சொல்லுவார்.ஸ்டாப்பிங்குகள் இல்லாத பட்சத்தில் பக்கத்து ஸ்டாப்பிங்கில் இறங்கினால் எளிதில் செல்லலாம் என்ற பட்சத்தில் மட்டுமே வேறு ஸ்டாப்பிங்குகளில் இறக்கிவிடப்படுவோம்.


தில்லியில் ஹிந்தி தெரியாதவர்கள் பேருந்துகள் மூலம் எங்காவது செல்பவர்கள்,ஹிந்தி தெரிந்திருந்தாலும் முற்றிலும் வழி தெரியாதவர்கள் பேருந்துகளில் விசாரிக்க செல்லும்போது உள்ளூர் பேருந்து நடத்துனர்கள்  ம்....போகும்,ஏறுனு சொல்லி செல்ல வேண்டிய இடத்திற்கு பக்கத்தில் இறக்கிவிட்டு இன்னும் தில்லியை நன்றாக சுற்றிப்பார்க்க  வைக்கிறார்கள்.


இதே போன்ற மக்களிடம் பொதுவாக ஆட்டோகாரர்களும் ,ரிக்‌ஷாகாரர்களும் அடுத்த தெருவிற்கு செல்வதற்கு  வேறு நாலாபக்கம் சுற்றிவிட்டு பிறகு வந்து இறக்கிவிடுவதும்,அதிக பணம் வசுலிப்பதும் நடைபெறுகிறது.இது பொதுவாக அனைத்து இடங்களிலும் நடக்கலாம்.

ரிக்‌ஷா சவாரி அதிகம் வடமாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.ஆட்டோ போகாத இடங்களுக்கும் ரிக்‌ஷாவில் போக முடியும்.என்னைப் பொருத்தவரை ரிக்‌ஷா சவாரி பாவமான செயலாகத் தெரியும்.தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே ரிக்‌ஷாவில் செல்லுவேன்.அரை கி,மீ அல்லது ஒரு கி,மீக்கு ஐந்து ரூபாய் வாங்குகிறார்கள் ரிக்‌ஷாகாரர்கள்.ஆனால் பலர்  குறைந்தபட்சம்  பத்து ரூபாய் வாங்குகிறார்கள்.செல்லும் தூரத்தைக்கொண்டும் பணம் கேட்பார்கள்.

இந்த காலத்தில் சின்ன குழந்தைக்கு கூட குறைந்தது பத்து ரூபாய்க்கு எதாவது வாங்கிக் கொடுத்தால்தான் கொஞ்சமாவது மதிப்புள்ளது போல தோன்றுகிறது.இந்நிலையில் அஞ்சுக்கும் பத்துக்கும் நமது முழு எடையையும் சுமந்து பெடல் மிதித்து செல்லும் தொழிலாளியிடம் பேரம் பேசுபவர்களை பார்க்கும்போது மனம் சங்கடப்படுகிறது.அதே நேரம் குறைந்த தூரத்திற்கு ரெண்டு மடங்கு வசூலிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு ரிக்‌ஷாவில் பருமனான இரண்டு பெண்களை ஏற்றிவந்த ரிக்‌ஷாகாரர் வளைவில் திரும்பும்போது எதிரே வந்த காரில் மோதிவிடாமல் திருப்ப முயன்றபோது தடுமாறி ரிக்‌ஷா அந்த காரின் மேலே மோதி பயணித்த பெண்கள் உட்பட கவிழுந்துவிட்டனர்.அருகிலிருந்தோர் கூடி உதவ முற்படுகையில் காரில் வந்த நபரும் இறங்கி வந்தார்.அவர் என்ன செய்தார் தெரியுமா?ரிக்‌ஷாகாரரை பளார்னு அரைந்தார்.தன் கார் கண்ணாடி சேதமாகிவிட்டதற்கு  அந்த ரிக்‌ஷாவை விற்றால் கூட ஈடுகட்ட முடியாதென்று கூச்சலிட்டார்.யாரும் காரில் வந்த நபரை கட்டுப்படுத்தவில்லை.அந்த ரிக்‌ஷாகாரர் மீண்டும்,மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார்.வழியில் வந்த மற்ற ரிக்‌ஷாகாரர்கள் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

மற்றொன்று:

 போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் கண்ணாடி டீப்பாயை மட்டும் ஏற்றிவந்தார்  ரிக்‌ஷாகாரர். சாலையின் மேடு பள்ளத்தில் ஏறி இறங்கும்போது அந்த டீப்பாய் சரிந்து விழுந்து மேல்தட்டு பகுதி சுக்குநூறாக உடைந்தது.அவ்ர் தவித்ததை நேரில் பார்த்தவர்கள் மட்டுமே உணரமுடியும்.அக்கம்பக்கத்தில் போகிற வாகனங்களை எப்படி அவர் நிறுத்த முடியும்.எல்லா வாகனங்களும் சாரை சாரையாக செல்லுகிறது.இவரால் ரிக்‌ஷாவை சற்றுகூட திருப்பமுடியவில்லை.நான் என்ன பன்னுவேன்,என்ன பதில் சொல்லுவேனு அவர் புலம்பியதை என்னவென்று சொல்ல...

அன்னா ஹசேரா அவர்களின் வெற்றி தோல்வியிலாம் ஒரு பக்கம் இருக்கட்டும்,இத்தனை நாள் போராட்டத்தில் பொது இடங்களில் கலவரம்,பொது மக்களுக்கு உயிர்சேதம் இல்லாமல் நடந்தவரை நல்லது.ஆனால் இப்போது போராட்டம் என்றால் உண்ணாவிரதம் நடத்தி எதிர்ப்பை தெரிவிக்கலாம்னு கத்துகொடுத்துவிட்டார்.கலவரம் இல்லா போராட்டங்கள் சிறந்ததுதான்.தொலைக்காட்சி சீரீயல்களில் கூட உண்ணாவிரதம் இருக்கப்போறேன்னு காட்சிகள் அமைப்பு வருகிறது.

ஒரு குட்டி  சந்தோஷம்

விடுமுறைக்கு சென்றுவந்த என் மகள் ஹிந்தி பேசுவதை மறந்துவிட்டாள்.விடுமுறை முடிந்து வந்த போது ஹிந்தி பேசினால் புரிந்துகொண்டாள்.ஆனால் பதில் சொல்ல கஷ்டபட்டாள்.இந்நிலையில்  பள்ளி வேன் டிரைவரை பையா என அழைக்க மறந்து அண்ணா என்று கூப்பிட டிரைவரும் காதில் வாங்கவில்லை போல.பிறகு பையா என்று அழைத்தாலும்  சக பிள்ளைகளும் அண்ணா அண்ணா என்று கேலி செய்துள்ளனர்.சக பிள்ளைகளின் பெற்றோர் வரை இந்த அண்ணா என்ற வார்த்தை தெரிந்து் ரெண்டு அம்மாக்கள் என்னை விசாரித்தார்கள்,அண்ணா அண்ணானு உங்க பொண்ணு சொல்லிச்சாமே என்று.பையாவின் அர்த்தம்தான் அண்ணா என்று சொன்னேன்.ஆனாலும் மனதிற்குள் சின்ன ஆதங்கம் இருந்தது.என்னவெனில் அண்ணன் என்று தமிழில் சொல்லும்போதே எவ்வளவு இனிமையாக இருக்கும்.இப்படி விளக்கம் கொடுக்குறோமேனு நினைச்சேன்.

தற்போது சில நாட்களாக வட மாநிலம் முழுவதும் எல்லோராலும் அதிகமாக உச்சரித்ததும், கோஷங்கள் முழங்கியதும் அன்னா,அன்னா(ஹஷேரா) என்றுதான்.(கொஞ்சம் ஓவரா இருக்கோ....?)

கோகுலாஷ்டமியன்று எங்க காலணியில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் அன்னா ஹசேராவாக வேடமிட்டு அவரின் வசனங்கள் பேசி அதிக கைதட்டல்களைப் பெற்றான்.இனி மாறுவேடப் போட்டிகளில் மாணவர்கள் மனதில் அன்னா ஹசேராவும் இடம்பெறுவார் .

Aug 24, 2011

பாரத பெண்களுக்கு சுதந்திரம் நிறைய கிடைத்துவிட்டது.

இந்த பதிவு பெண்கள் அனைவருக்கும் அல்ல. பொது மக்களில் ஒருவளாய் மனதில் தோன்றுவதை பதிய விரும்புகிறேன்.வயிற்றெரிச்சலுடனும் துவங்குகிறேன்.

சுதந்திரம் தருவதற்கு நமக்கான சுதந்திரத்தையும்,உரிமையையும்  யாரும் பிடுங்கி வைத்துக்கொள்ளவில்லை,.நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றாலும் நம் சக்திக்கும்,சமுதாய மரியாதைக்கும் உட்பட்டு இப்படித்தான் இருக்க வேண்டுமென சில நல்ல கட்டுப்பாடுகளும்,குணங்களும்,பழக்க வழக்கங்களும் தமக்குத்தானே தோன்றுமெனில்,வகுத்துக்கொள்ள முடியுமெனில் அவன் நிச்சயம் மனிதனாக இருப்பான்..ஆனால் உன் சுதந்திரம் அடுத்தவரை பாதிக்காமல் இருக்கும் வரை,உன்னை அடுத்தவர்கள் கேவலமாக நினைக்காதவரை எப்படி வேண்டுமானாலும்  வாழ்வதும் நம் சுதந்திரம்தான்.
தற்போதைய சில பெண்களின் ஆடை நாகரீகம் பற்றியதுதான் இந்த பதிவு.

இரண்டு வயதிலிருந்து பத்து வயது பெண் குழந்தைகள்  அரைக்கை சட்டை,அரை/முழுப்பாவாடை அணிந்து வந்தால் பார்க்க நன்றாகவே இருக்கும்.அதே குழந்தை 15 வயதுக்கு மேல் அரைப்பாவாடை அணிந்திருந்தால் அவளின் பெற்றோர்க்கு குழந்தையாகவே தெரியலாம்.மற்றவரின் கண்களுக்கு?...
அதே பெற்றோர் அழகாகதான் இருக்கிறது.இதை அணிந்து கொண்டு வெளியில் செல்ல வேண்டாம்,முழு உடையோ முக்கால் உடையோ அணிந்து செல் என்று சொல்பவர் சிறந்த பெற்றோர்.தனக்கே கூச்சம்,வித்தியாசம் தெரியவில்லை என்றாலும் பெற்றோர் இப்படி சொல்வதைக் கேட்டாவது எது அழகு,எது நாகரீகம் என்று புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கும்.யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை,என் இஷ்டம்தான் என்றால் அவர்களை ஒன்னும் சொல்ல முடியாது.

சட்டை அரைக்கையோ அரைப்பாவாடையோ ஆபாசாமில்லாமல் ஆடைகளை அணிய வேண்டும்.ஆபாசமான ஆடைகள் அணிவது என்ற வார்த்தையே பெண்களுக்குதான்.ஆண்கள் இந்த உடை அணிந்துள்ளதால் ஆபாசமாகத் தெரிகிறான் என்று யாருக்கும் இதுவரை தோன்றிருக்காது.
பாவடை தாவணி அழகுதான்.ஆனால் சுடிதாரில் இருக்கும் பாதுகாப்பு தாவணி அணிவதில் இல்லைதான்.பாவாடை தாவணி மலையேறிப்போய் இப்போ சுடிதாரையும் தாண்டி ஜீன்ஸ் அணியும் காலத்தில் இருக்கிறோம்.

எல்லோர்க்கும் தான் அழகாக இருக்க வேண்டுமென்ற உணர்விருக்கும்.எதை அணிந்தாலும் பார்ப்பவர்கள் ‘ ட்ரசையும்,ஆளையும் பாரு’ என்றோ,சபலத்தை தூண்டுமளவிற்கோ ஆடை அணிய வேண்டாம்.உடுத்திருப்பதை பார்த்தவுடன் கையெடுத்து கும்பிட வேண்டாம்,எதோ தெரியுதேனு பார்க்க வைக்க வேண்டாம். துப்பட்டா போடாத எல்லா பெண்களுமோ,கைப்பகுதி இல்லாமல் அணிந்திருக்கும் எல்லா பெண்களுமோ ஆபாசமாகத் தோன்றுவதில்லை.உடல் வாகைப் பொறுத்தும்,அணியும் உடையைப் பொறுத்தும் விகாரமும் ஆபாசமும் தெரிகிறது.

ஆடை குறைப்பு இல்லாமலும், அங்கங்களை உடை போர்த்தி கவர்ச்சியாக காட்டாமலும் ஒரு   பெண்ணால் ஒரு ஆணை கவரமுடியும் .திருமணம் ஆகாத மற்றும் திருமணமான சில பெண்கள்   மற்றவர்கள் பார்வையை ஈர்க்க அல்ல ஈர்க்க வைக்கவே அணிந்து கொள்கிறார்கள்.எனக்கு என்ன சந்தேகமெனில் இப்படிப்பட்ட பெண்கள் யாரோ ஒரு பெற்றோர்க்கு மகளாகவோ,சகோதரியாகவோ,மனைவியாகவோதானே இருப்பார்கள்.அப்படியிருந்தும் பார்வைகள் சலனப்படுமளவிற்கு ஆடை அணிபவர்களை கேட்க ஆளில்லையா?அல்லது கேட்பார் யாருமில்லையா?அப்படியா சுதந்திரம் முத்திப்போய்விட்டது.அல்லது இதற்கு பேர்தான் தண்ணி தெளிச்சு விட்டாச்சு என்பதா?

ஏற இறங்க பார்க்க வைக்கும் ஒரு பெண்ணை அந்த நிமிடம் ஒரு ஆண் பார்க்கலாம்.இப்படி நம் மகளை யாரும் பார்த்துவிடக் கூடாதுனு ஒரு அப்பாவிற்கு தோன்றுமே,நம் சகோதரியை இப்படி யாரும் பார்க்க கூடாதுனு சகோதரனுக்கு தோன்றுமே,தன் மனைவியை மற்றவர் ரசிக்க கூடாதென்று கணவனுக்குத் தோன்றுமே!!!!காமிப்பவர்கள் மேல் குற்றமா?பார்ப்பவர்கள் மேல் குற்றமா?

வட மாநிலங்களில் கேக்கவே வேண்டாம்.
பெற்றோருடனும்,சகோதரனுடனும்,கணவனுடனும் சில பெண்கள் இல்லை முக்காவாசி பெண்கள் மிக மாடன் ட்ரஸ்களும்,இருக்கமான உடைகளும் அணிந்து செல்வதைப் பார்க்கும்போது சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஆணுக்கோ,பெண்ணுக்கோ ஒரு பிரச்சனையும் இல்லை.உன் பொண்ணுக்கு எந்த ட்ர்ஸ் வேணும்னாலும் போட்டு அழகுப்பாரு,உன் சகோதரியை எவன் பாத்தா எனக்கென்னா,உன் பொண்டாட்டி எப்படி இருந்தா எனக்கென்னா?என் பிள்ள கெட்டுடக்கூடாது,என் சகோதரன் மனது வீணாகிடக்கூடாது,என் கணவன் யாரையும் ரசித்திடக் கூடாது,என் பெற்றோர் தர்மசங்கடத்திற்கு ஆளாகிடக்கூடாதென்பது சராசரி பெண்களின் எண்ணமாகும்.


பஞ்சாமிர்த்த்தைப் பார்த்தவுடன் அறுவறுப்பு கொள்பவர் யாருமில்லை. பிடிக்காதவன் வேண்டுமானால் வாங்க மறுக்கலாம்.வழியில் போறவனை கூப்பிட்டு கொடுத்தால், பிடிக்காதவன் கையில் வாங்கி கீழே போடலாம்.பிடித்தவன்……..?
வெளிநாட்டு கலாச்சாரமே வேறு.இந்தியாவின் கலாச்சாரம்? இந்த ஆடை நாகரீகம் எதுவரை போகும்?  
சமீபத்தில் ’துப்பட்டா போடாமல் இருப்பது ஏன்’ என்று ஒரு ஆண் பதிவரின் பதிவின் தலைப்பை பார்த்த்தும் அய்யய்யோ இப்படிப்பட்ட பெண்கள பத்தி ஆண் விமர்சிச்சு பதிவு எழுதி அதே போல கமண்ட்ஸ்களும் குவிந்து மானம் போகுமேனு நினைச்சு போய் பார்த்தேன்,நல்ல வேளை அதை தலைப்போடு நிறுத்திவிட்டு நல்ல கருத்துக்களை சொல்லியிருந்தார்.வேறு யாரும் இப்படிப்பட்ட பெண்கள் சம்மந்தமாக விமர்சித்திட வேண்டாமென எண்ணி இதை பதிந்துள்ளேன்.இந்த பதிவு சில பெண்களுக்காக இருந்தாலும்,யார் சொல்லியும் யாரும் கேட்கபோவதில்லை என்றாலும் பெண்ணுக்கு பெண் விட்டுகொடுக்க மனதில்லை.

ஒரு நாட்டிற்கு பெருமை பல விதங்களில் கி்டைத்தாலும்,அதனுள் அந்நாட்டு பெண்களும் அவர்களுக்கான சுதந்திரமும் அடங்குமென்று  எதிலோ படித்த நினைவாக உள்ளது.

Aug 22, 2011

அக்ஷர்தாம்-உலகின் 8 வது அதிசயம்.

நமது தலைநகரம் தில்லியின் கிழக்குப் பகுதியில் 100  ஏக்கர் பரப்பளவில் இந்த அக்ஷர்தாம் என்ற பிரம்மாண்ட கோவில் உள்ளது.கோவிலின் அழகும் கட்டிடக் கலையும் பார்ப்போரை பிரமிப்பில் பிரமிக்க வைக்கும்.நாம் தற்போழுது காணும் சிறந்த பல கோவில்கள் பண்டைய கால அரசர்களால் கட்டப்பட்டிருக்கும்.ஆனால் இந்த கோவில் 2000 மாவது ஆண்டு துவங்கி 2005 வரை கட்டப்பட்டு நமது அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த நிலையில் அப்துல் கலாம் மற்றும் மன்மோகன் சிங் அவர்கள் சிறப்பு விருந்தினராக கோவில் திறப்பு  விழாவில் பங்குபெற்றுள்ளது குறிப்படத்தக்கது.இந்தியாவிற்கு புகழ் சேர்க்கும் இந்த கோவில் ஸ்வாமி நாரயணன் என்பவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .இவர் நமக்கு தெரிந்த ஸ்வாமி நாரயணர் இல்லை.

1781ஆம் ஆண்டு   அயோத்தியில் பிறந்த  கன்சியாம் என்ற சிறுவன் தன் 3 வயதிற்குள் அனைத்து வேத,புராண,உபநிஷதங்கள்,தர்ம சாஸ்திரங்களையும் கற்று தேர்ந்தவராகியுள்ளார்.தனது 11 வது வயதில் மேலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு துறவறம் கொண்டு பாத யாத்திரை புறப்பட்டுள்ளார்.பல புண்ணிய ஸ்தலங்களுக்கும் பாத யாத்திரை சென்ற நிலையில் தனது 17 வது வயதில் நீலகண்ட வர்ணி என அழைக்கப்பட்டுள்ளார்.
 ஜீவ,ஐஸ்வர்ய,மாய,பிரம்ம,பரபிரம்மம் என்பதனின் அர்த்தம் தேடி புறப்பட்டவருக்கு குஜராத் மாநிலம் லாஜ் என்ற இடத்தில் ராமாநந்த ஸ்வாமி என்பவரால் நடத்தப்பட்ட ஆஸ்ரமத்தில் பதில் கிடைத்ததாய் உணர்ந்தார். ராமாநந்த ஸ்வாமியால்                                                                         சஹஜானந்த ஸ்வாமி என அழைக்கப்பட்டுள்ளார் .21 வது வயதில் அந்த ஆஸ்ரமத்தின் தலமை பொறுப்பு ஏற்றுள்ளார். ராமாநந்த ஸ்வாமியின் இறப்பிற்கு பின் சஹஜானந்த ஸ்வாமி நாரயணரின் மாகாமந்திரங்களை உபதேசித்தும்,வழிநடத்தியும் வந்துள்ளார்.அதற்கு பிறகு சஹஜானந்த ஸ்வாமி பகவான் ஸ்வாமி நாரயணன் என்று அழைக்கப்பட்டுள்ளார்.இவர் 1830 ஆம் ஆண்டு வரை வாழ்ந்துள்ளதாக  குறிப்படப்பட்டுள்ளது. 

 பகவான் ஸ்வாமி நாரயணரின் சீடராக,போதனைகளை பரப்பி,ஆன்மீக தொண்டாற்றும் முதல் குருவாக  அக்‌ஷர்பிரம்மா குணதிதாநந்தா வாழ்ந்துள்ளார்.இரண்டாம் குருவாக பக்த்ஜி மஹராஜ் என்பவரும்,மூன்றாம் குருவாக சாஸ்த்ரிஜி மஹராஜ் என்பவரும் வாழ்ந்துள்ளனர்.இந்த மூன்றாம் குரு   Bochasanvasi Aksharpurushottam Swaminarayan Sanstha (BAPS) என்ற அறக்கட்டளையை தோற்றுவித்து,ஐ.நா.சபையின் அங்கீகாரத்துடன் நடத்திவந்துள்ளார்.நான்காம் குருவான யோகி மஹராஜ் இந்த அறக்கட்டளையை கிழக்கு ஆப்பிரிக்கா,இங்கிலாந்து வரை நடத்திச் சென்று ஸ்வாமி நாரயணருக்காக லண்டன்,சிகாகோ போன்ற ஒன்பது நாடுகளில் கோவில்களும் எழுப்பியுள்ளார்.ஐந்தாம் குருவான பிரமுக் ஸ்வாமி மஹராஜ் தற்போழுது வாழ்ந்து வருகிறார்.இவரே தில்லியில் ஸ்வாமி நாரய்ணன் அக்ஷர்தாம் கோவில் தோன்ற காரணமும் பொறுப்புமாகும்.
 தில்லி அக்ஷர்தாம் தோன்றுவதற்கு முன்னதாகவே குஜராத் காந்திநகரிலும் ஒரு அக்ஷர்தாம் கோவில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.இங்கு ஒரு முறை குண்டு வெடிப்பு சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
அக்ஷர்தாமின் நிர்வாக பொறுப்பு வகிக்கும் baps 900 மையங்கள்,700 சாதுக்கள்,55000 தன்னார்வத் தொண்டர்கள்,10 லட்சம் பக்தர்கள் மூலம் ஆன்மீகம்,கல்வி,மருத்துவம்,சுற்றுச்சூழல்,கலாச்சாரம் போன்ற 160 க்கும் மேற்பட்ட துறைகளில் மனித வள மேம்பாட்டிற்காக பாடுபடுகிறது.

தாஜ்மஹாலை பார்த்தவர்கள் அக்ஷர்தாமை பார்வையிட வந்தால் நிச்சியம் அவர்கள் மனதில் தாஜ்மஹால் பின்னுக்கு தள்ளப்பட்டுவிடும்.அக்ஷர்தாமை முதலில் பார்த்துவிட்டு இரண்டாவதாக தாஜ்மஹாலை பார்ப்பவர்களுக்கு தாஜ்மஹால் நிச்சயம் பிரமிப்பாக இருக்காது.இது என் கருத்து.

வாருங்கள்!!!
நாம் இப்போழுது தில்லி அக்ஷர்தாமிற்குள் செல்வோம்.

நுழைவுக் கட்டணம் கிடையாது.செல்ஃபோன்,கேமிரா,எதாவது எலக்ட்ரானிக் சாதனங்கள் அனுமதியில்லை.மது அருந்தியுள்ளவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.புகைப்பிடித்தல்,பாக்கு போடுதல் கூடாது.நாம் கையில் வைத்திருக்கும் பொருட்களை க்ளாக் ரூமில் கொடுத்துவிட்டு அங்கிருக்கும் கேமராவில் நம் முகத்தை பதிவு செய்ய வேண்டும்.திருப்பதி பகவானை தரிசிக்க ஹாலில் காத்திருப்பது போல காத்திருக்க வேண்டும்.அவ்வளவு கூட்டமிருக்கும். வாகன நிருத்தங்களை பார்க்கும்போது வாகன தயாரிப்பு கம்பெனியில் கூட இத்தனை வாகனங்களை ஒரே சமயத்தில் பார்த்திருக்க முடியாது.ஆண்,பெண்களுக்கு தனித்தனியே தீவிர பரிசோதனை செய்கிறார்கள்.
மக்களுக்கு ஒரு வாயில் மட்டுமே நுழைவுவாயிலாக உள்ளது.கோவிலுக்குள் நுழைந்தவுடன் பத்து வாயில்கள் நம்மை வரவேற்கும்.பத்து திசைகளின் நல்லவைகள் நம்மை வந்து சேரட்டும் எனும் வேதசாரத்தை பிரதிபலிக்கிறது. பகவானுக்கும் பக்தனுக்கும் பிணைப்பை விளக்கும் மொத்தம் 208 சிற்பங்கள் உள்ளன.

அடுத்து மயூர வாயில் எனப்படுகிறது.இந்த வரவேற்பு வாயிலில் கண்ணைக் கவரும் மயில் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன.869 மயில் சிற்பங்கள் உள்ளனவாம்.
மயூர வாயிலைக் கடந்தவுடன் பகவான் ஸ்வாமிநாரயணின் அவதரிப்பை நினைவுகூறும் வகையில் அவரின் திருவடி 16 ரேகைகளுடனும்,நாற்புரங்களிலும் புனித சங்குகள் பாதங்களை சதா அபிஷேகம் செய்யும்வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
<><><><><><><><><><><> 
மஹாலயம்
செம்பளிங்கும்,   வெண்பளிங்கும் இணைந்து உயிரூட்டியுள்ள இந்த மஹாலயத்தில் கலைதெய்வம் களி நடனம் புரியும் 234 தூண்கள்,9 பிரமாண்ட விமானங்கள்,20 நாற்கோண கோபுரங்கள்,20,000கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன.141 அடி உயரம்,316 அடி அகலம்,356 அடி நீளம் உள்ளதாம்.இரும்பு உலோகத்தைப் பயன்படுத்தாமலே உருவாக்கப்பட்டுள்ள இந்த மஹாலயம் பழம்பெரும் பாரதீய சிற்பகலைக்கு புத்துயிர் ஊட்டியுள்ளது.11 அடி உயர பஞ்சலோக ஸ்வாமி நாரயணன் சிலை உள்ளது.

சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த சிம்மாசனத்தில் ஸ்ரீ லெஷ்மிநாரயணர்,கிருஷ்ணன்,ராதா,ராமன்,சீதா,சிவ பார்வதி பளிங்குச் சிலைகளாக காட்சியளிக்கின்றனர்.


24 கேசவாதி மூர்த்திகள்,பளிங்குத் தூண்களில் பளிச்சிடும் சாதுக்கள்,தூண்களின் உச்சியில் 500 பரமஹம்சர்களின் சிலைகள்,65 அடி உயர லீலா மண்டபம்,பக்த மண்டபம்,ஸ்ம்ருதி மண்டபம்,பரமஹம்ச மண்டபம்,ஸ்வாமி நாரயணனின் லீலைகளை விளக்கும் சிற்பங்கள் கொண்ட கனஷ்யாம் மண்டபம்,நீலகண்ட மண்டபம்,ஸஹஜானந்த மண்டபங்கள் உள்ளன.,ஸ்வாமி நாரயணனின் குங்கும பாதச்சுவடு,மாலை,பாதுகை,உடுத்திய உடை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
<><><><><><><><><><><> 
கஜேந்திர பீடம்
அக்ஷர்தாமின் அழகு 1070 அடி நீளமும்,3000 டன் எடையுள்ள கஜேந்திர பீடத்தின் மீது அமைந்துள்ளது.இதில் 148 யானைகளின் சிலைகளும்,மிருகங்களும்,பறவைகளும் விலங்கினத்திற்கு பாவாஞ்சலியாக விளங்குகின்றன.நாட்டுபுறக் கதைகள்,புராணக்கதைகள்,நீதிக்கதைகள் மொத்தம் 80 காட்சிப் படைப்புகள் கதையும் கருத்தும் சொல்கின்றன.

மண்டோவர்
                        
மஹாலயத்தின் மனோகரமான வெளிச்சுவர் மண்டோவர் எனப்படுகிறது.611 அடி நீளம்,25 அடி உயரம் உள்ளது.பாரதத்தின் புண்ணிய புருஷர்கள்,ரிஷிகள்,ஆச்சார்யர்கள் மற்றும் தேவர்கள் ஆகியோரி்ன் சிற்பங்கள் மொத்தம் 4287 உள்ளதாம்.


நாரயண ஸரோவர்

மஹாலயத்தை மூன்று புரங்களாலும் சூழ்ந்துள்ளது.மானசரோவர் முதல் இந்தியாவின் சகல திசைகளிலும் உள்ள 151 புண்ணிய இடங்களிலிருந்து தருவிக்கப்பட்டு நாரயண சரவோராக உள்ளது.நான்கு பக்கங்களிலும் நீர் சொரியும் 108 கோமுகங்கள் பகவானின் 108 திவ்ய நாமத்தை நினைவுறுத்துகின்றன.
அபிஷேக மண்டபம்

பால யோகி நீலகண்ட வர்ணியின் விக்ரஹத்திற்கு பொது மக்கள் கட்டணம் செலுத்தி கங்கை நீரால் அபிஷேகிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

மதில் கோபுரம்
அக்ஷர்தாமைச் சுற்றி செம்பளிங்குக் கற்களால் ஈரடுக்கு மதில் கோபுரம் உள்ளது.3000 அடி நீளமும்,155 கோபுரங்களும்,1152 தூண்களும்,145 மாடங்களும் மலர்மாலை போல காட்சியளிக்கிறது.

 இதய கமலம்

சீராக செதுக்கப்பட்ட புல்வெளியின் நடுவே எட்டு தாமரை இதழ்கள் வடிவில் அமைக்கப்பட்டு கோவிலின் வெளியே செல்லும் வாயிலாகவும் உள்ளது.ஒவ்வொரு இதழிலும் உலகில் தோன்றிய அவதாரபுருஷர்களின் இறை நம்பிக்கையும்,மனித நேயமும் பரிமளிக்கின்றன.சேக்ஸ்பியர் ,விவேகானந்தர் போன்றோர்களின் கருத்துகள் பதியப்பட்டுள்ளன.


கண்காட்சி அரங்கம்.
இங்கு கட்டணம் வசூளிக்கப்படுகிறது.முதலில் தன் கருமாவிற்கு தானே காரணம் என தன்னைத்தானே செதுக்கிக்கொள்ளும் சிலை விபரிக்கும்.
பிறகு  ரோபோட்ரானிக், அனிமேட்ரானிக்ஸ்,ஸரெளண்ட் டயோரமா போன்ற அதி நவீன ஒலி ஒளி கண்காட்சி மூலம் ஸ்ரத்தை,அஹிம்சை,கருணை, அமைதி போன்ற நல்லறங்களும்,ஸ்வாமி நாரயணன் பற்றிய குறும்படங்களும் 50 நிமிடங்களில் அற்புதமாக விளக்கப்படுகின்றன.கண்காட்சி அரங்கம் முழுவதும் குளிர்சாதனம் பொருத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 


15 நிமிட படகு சவாரி கண்காட்சி

இந்த சவாரி நம்மை 10,000 வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் செல்லும்.மயிலின் முக அமைப்பில்,நாம் மயிலின் உடலுக்குள் அமர்ந்து நீரோடையில் செல்வோம்.ஆட்டோமேட்டிக்காக படகு செல்கிறது.இரு புற கரையிலும் பழம்பெரும் பாரதத்தின் பண்பாட்டை விளக்கும் வகையில் சிலைகள் மூலம் காட்சி விளக்கம் காணப்படுகிறது.800 சிலைகள் உள்ளதாம்.சரஸ்வதி நதிக்கரையில் கிளைத்த பாரதநாட்டின் நாகரீக வளர்ச்சியை கண்முன்னே நிஜமாக்குகின்றன.வேத காலங்களை கண்முன் பார்க்க முடியும்.உலகின் முதல் பல்கழைக்கழகம் தசஷீலா,சுஸ்ருதரின் ஆயுர்வேத சாலை,நாகர்ஜுனரின் ரசாயன சாலை, வானவியல் போன்றவைகள் காட்சி தருகின்றன.


3.பிரமாண்ட திரையரங்கம்
ஸ்வாமி நாரயணின் வாழ்க்கை வரலாற்று படம் 85*65 அடி திரையில் காணலாம்.11 வயது பால யோகி வெற்றுப் பாதங்களுடன் இமயம் முதல் ராமேஸ்வரம் வரை 12,000கி,மீ பாத யாத்திரை செய்ததையும்,108 மாறுபட்ட காட்சிகளும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும்.


4.யக்ஞபுருஷ குண்டமும் இசை நீருற்றும் நடனமும்
300*300 அடி அளவில் இந்த யக்ஞபுருஷ குண்டம் பழம் பெரும் யாககுண்ட வடிவமைப்பின் மாதிரியாகும்.

இசை நீருற்று நடனம் துவங்கும் முன் நீலகண்ட வர்ணியின் 27 அடி உயர பஞ்சலோக சிலைக்கு ஆரத்தி காட்டப்படுகிறது பிறகு ஒவ்வொரு இடமாக லைட்டுகள் அணைக்கப்பட்டு இசையுடன் கலந்த நீருற்று நடனம் துவங்கப்படுகிறது.நடுவே தாமரை வடிவ தடாகத்தில் இசை வண்ண நீருற்று நடனமாக ஆக்கல்,காத்தல்,அழித்தல் மற்றும் பஞ்ச பூதங்களின் கலவைகளைக் காணலாம்.
குளிர் காலத்தில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே முடிவடைகிறது.

உணவகம்

சிற்றுண்டி உள்ளது.அஜந்தாவின் கலைநயத்துடன் விசாலமான உணவகமும் உள்ளது.
விற்பனைக் கூடம்
ஆன்மீக புத்தகங்கள்,குறுந்தகடுகள்,நினைவுச் சின்னங்கள்,பரிசுப்பொருட்கள்,ஆயுர்வேத தயாரிப்புகள் பூஜை பொருட்கள் போன்றவைகள் உள்ளன.
தங்களுக்கு அவகாசமிருப்பின் பத்து நிமிட   வீடியோ கிளிப்பிங்கில்   அக்ஷர்தாமை பாருங்கள்

பாரத் உபவன் கலாச்சாரப் பூந்தோட்டம்.
அக்ஷர்தாமின் எதிரே 22 ஏக்கர் பரப்பளவில் இந்த பூந்தோட்டம் புல்வெளிகள்,பசுமையான மரங்கள்,பல வடிவத்தில் செடிகள் அலங்கரிக்கின்றன.

பாரதத்தின் சிறந்த 65 மனிதர்களின் வெண்கல சிலைகள் .சூரியனின் ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்,சந்திரனின் 16 கலைகளைக் குறிக்கும் 16 மான்கள்பூட்டிய ரதம், புகழ் பெற்ற வீரர்,வீராங்கனைகள்,மழலை மேதைகள்,தியாகிகள் போன்றோரின் சிலைகளும் இடம் பெற்றுள்ளது.தில்லிக்கு சுற்றுலா வருபவர்கள் கட்டாயம் இங்கும் வரலாம். அக்ஷர்தாம்,அங்குள்ள கண்காட்சி,பூந்தோட்டம் பார்க்க ஒரு நாள் செலவிட வேண்டியதிருக்கும்.கோவிலை மட்டும் பார்ப்பதெனில் மக்கள் வரவைப் பொறுத்து குறைந்தது ஐந்து மணி நேரமாகலாம். திருப்தியாகவும்,வியப்பாகவும் பார்த்துவிட்டு வரலாமே தவிர மனதில் பக்தி தோன்றுவதாகத் தெரியவில்லை.நான்கு வருடத்திற்கு முன் இந்த கோவிலுக்கு சென்றிருந்தோம். இந்த மாதம் என் அப்பா வந்திருந்தார்.அப்பாவுடன் மீண்டும் அக்ஷர்தாம் சென்றிருந்தோம்.ஒரு புது மண்டபம் கட்டிக்கொண்டிருந்தார்கள்,மற்றபடி எந்த மாற்றமும் இல்லை.புதுசு மாறாமல் அப்படியே இருக்கிறது.இங்கு வாங்கிய புத்தகத்திலிருந்து விபரங்கள் பல பதிந்துள்ளேன். 
அக்ஷர்தாமிற்கு வாரந்தோறும் திங்கட்  கிழமை விடுமுறையாகும். 

Aug 18, 2011

நான் யார் தடுக்க?

1.எப்போதாவது ஒரு முறை திருமணம் செய்து கொள்வது நல்லது.

2.புத்திசாலியான ஒருவன் பெண்ணிடம் அவளை புரிந்துகொண்டதாக                 மட்டுமே சொல்வான்.முட்டாள் அதை நிருபிக்க முயல்வான்.

3.திருமணம் மூன்றும்களால் ஆனது.

முதல் ம் நிச்சியம்

இரண்டாவது ம் திருமணம்.

மூன்றாவது ம் துன்பம்

4.திருமணம் உலகத்தைச் சுழல வைப்பதாய் இருக்கலாம்.ஆனால் மூக்கின் மேல் விழும் குத்தும் அதைத் தரும்.

5.விவாகத்தை விவாகரத்திலிருந்து காப்பதற்கு ஒரே வழி திருமணத்தின் போதே தலை காட்டாமல் இருப்பதுதான்.

6.கடவுளின் முதல் தவறு ஆண்.இரண்டாம் தவறு பெண்.இரு தவறுகள் இணைந்து ஒரு சரியாக முடியாது.

7.பெண்ணிற்கு சுதந்திரமாக இருக்கவும்,வாழவும், ஆணை வேட்டையாடவும் உரிமை இருக்கிறது.நீ திருமணம் செய்ய விரும்பினால் நான் யார் தடுக்க?குதிக்கும் முன் யோசித்துக்கொள்.

ஓஷோ அவர்களின் பெண்ணின் பெருமை என்ற புத்தகத்தில் மேற்சொன்ன ஏழும் மர்பியின்  சூத்திரங்களென குறிப்பிடப்பட்டுள்ளதை பகிர்ந்துள்ளேன்.
ஒரு சின்ன கதை
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தோழியை பார்க்க சென்ற பெண்ணுக்கு ஒரே ஆச்சர்யம்.ஏனெனில் தன் தோழியின் முகம் மாறியிருந்தது.
விசாரித்ததில், முக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இயற்கையாகவே நல்ல நிறம்,முகம்,உடல் வாகு கொண்டிருந்த அந்த பெண் தன் அழகில் திருப்தி இல்லாமல் மேலும் தன்னை அழகுபடுத்த தன் உதடு,மூக்கு,தாடை பகுதிகளை  மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறாளாம். முன்பைவிட இப்போது மிக அழகாகவே காட்சியளிக்கிறாள்.
இப்பவும் அவளுக்கு தன் அழகில் திருப்தி இல்லை என்றாளாம்.ஏன் ? இதற்கு மேல் எப்படியிருக்க ஆசைப்படுகிறாய் என்று கேட்ட தோழிக்கு பதில் என்ன சொன்னாளாம் தெரியுமா?
நான் இப்போது கூடுதல் அழகாகவே இருக்கிறேன்,ஆனால் என் புது முகம் என் பழைய உடலுக்கு பொருந்தவில்லையே என வருத்தப்படுகிறேன் என்றாளாம்.
கதையின் கரு என்னவென்று யூகித்திருப்பீர்களென நம்புகிறேன்.
(இதுவும் அதே புத்தகத்தில் படித்த கதை) 

Aug 12, 2011

ஊர் பயண நினைவுகளில் சில

வணக்கம் .

மீண்டும் வருகை தந்துள்ளேன் அனைவருக்கும் எனது விசாரிப்புகள்.

எனது பெற்றோர் மற்றும் மாமியார் வசிப்பது ஊராட்சி கிராமமாகும். சில வருடங்களுக்கு முன்பே மாணவன் முதல் கடைநிலை மனிதன் வரை செல்ஃபோன் உபயோகித்ததை பார்த்திருந்தாலும் செல்ஃபோன் கையில் இருந்தாலும் இந்த நம்பரை போட்டு குடுப்பா என்றவர்களும்,தவறிய அழைப்பை பார்க்கத் தெரியாதவர்களும் தற்போது அடுத்தவர் உதவியின்றி செல்ஃபோனை உபயோகித்ததும்,தானே சென்று ரீசார்ச் செய்துகொள்வதும்,தான் உபயோகிக்கும் சிம் கார்டில் என்னென்ன ஆஃபர் இருக்கிறது பற்றி கேட்டுத் தெரிந்துகொள்வதும்,தொலைபேசி இல்லாத வீட்டில் கூட செல்ஃபோன் இருப்பதை விட, ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் இரண்டு செல்ஃபோன் வந்துவிட்டது முன்னேற்றங்களில் ஒன்றாக கருதினேன்.

வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றித் திரிபவர்கள் குறைந்துவிட்டனர்.பணம் சம்பாதிக்கும்,சேர்க்கும் ஆர்வமும் அதற்கான வழிகளிலும் ஈடுபாடு அதிகமாக காணப்பட்டது.பள்ளி சீருடை பெண்களுக்கு பாவாடை தாவணியிலிருந்து சுடிதாராக மாறியிருந்தது.பாட புத்தகங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஊடகங்களை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
விடலைப்பருவத்தினர் வழக்கம்போல காணப்பட்டனர்.

வாழ்க்கையின் அனுபவம் பெற துவங்கும் வயது,
பெரியோர் சொல்வதை ஏற்க சிரமப்படும் வயது.
உலகத்தில் தாம் மட்டுமே வலம் வந்து

 மேகத்தில் மிதக்கும் பருவம்.

 ஆண் பெண் நட்பு அதிகமாக தென்பட்டது.ரசித்து,மெய் மறந்து காதலிப்பது போன்ற பாவனையில் உண்மை காதலின் பெருமையும்,பொருமையும் இல்லாத காதல்கள் மலர காத்திருக்காமல் வழி தெரியாமல் வெடித்து சிதறிக்கொண்டிருக்கிறது.மெய் காதல்  எங்காவது துளித்திருக்கும்.அந்த காதல் வாழட்டும் பல்லாண்டு. ஆனால் முன்பைவிட படிப்பிற்காகவும்,வேலை பார்க்கவும் வசிக்கும் ஊரைவிட்டு வெகுதூரம் அனுப்பவும்,செல்லவும் தயக்கங்கள் குறைந்திருந்தது.

குறிப்பாக ஒன்றை சொல்ல வேண்டும்.

தமிழகம் வந்த சில நாட்களில் ஒரு நாள் ஷேர் ஆட்டோவில் சென்றபோது ஒரு ஸ்டாப்பிங்கில் முப்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஏற முயன்றவர் கணவருடன் உக்காந்திருந்த என்னை மாறி உக்கார சொன்னார்.பரவாயில்ல உக்காருங்க கொஞ்ச தூரம்தானேனு நான் சொல்லியும் அந்த பெண் கேக்கவில்லை.பிறகு என் கணவர் மாறி உக்காந்துகொண்டார்.ஐந்து நிமிட பயணத்திற்கு ஆண் பக்கத்தில் உக்கார மறுத்த அந்த பெண்ணின் முகத்தில் தோன்றிய சில வினாடி தயக்கம் லேசான வெட்கம் எனக்கு வியப்பாக இருந்தது.(அப்பாடா என் கணவர் பக்கத்தில் அந்த பெண் அமரவில்லை என்பதனில் லேசான பொசசிவ்னஸ் சந்தோஷமும் பட்டுக்கொண்டேன்...ஹி,ஹி..) 
மக்கள் கூட்டம் அதிகமான மற்றொரு பேருந்து பயணத்தில் உக்கார சீட் இல்லாமல் நின்றவாறு பயணித்தோம்.எங்கள் அருகில் குழந்தையுடன் ஒரு பெண்ணும் நின்றே பயணித்தார்.சிறிது தூரத்தில் இரு ஆண்கள் அமர்ந்திருந்த பக்கத்து சீட்டில் ஒருவர் எழுந்து செல்ல ஒரு இடம் கிடைத்தநிலையில் அந்த பெண் தன் குழந்தையை நடுவில் உக்காரவைத்து சளெகரியமில்லாமல் ஓரமாக அமர்ந்துகொண்டார்.  2011 லயும் இப்படிபட்ட பெண்களும் இருக்காங்க.   

சில இடங்களும்,சூழ்நிலைகளும் எதுவுமே மாறவில்லையே என்பதாக இருந்தது.பல சூழ்நிலைகளும் இடங்களும் அடேங்கப்பா இவ்வளவு மாற்றமாயென வியக்கவைத்தது.காலமாற்றங்களிலும் விங்ஞான மற்றும் நாகரீக ,வளர்ச்சியிலும் மாற்றங்கள் இருந்ததே தவிர இந்த வலையில் வாழும் எனக்கான சொந்தபந்தங்கள்,நட்புகள்,சுற்றத்தாரின் குணத்திலும்(நல்ல/கெட்ட) இயல்பிலும் மாற்றங்கள் இருப்பதாக உணரவில்லை.சிறு பிள்ளைகளாக இருந்தவர்கள் வளந்திருப்பதை பார்க்கும்போது கண் மூடி திறப்பதற்குள் நிகழ்ந்தது போல இருந்தது. சிலரின் மரணம் வேதனையளித்தது. கால சக்கரத்தின் சுழ்ற்சியில் அனைத்து பந்தங்களின் பிணைப்பும் தளர்கிறது. அன்பும்,மனசாட்சியும் உள்ளவர்கள் மட்டுமே பிணைப்புக் கயிறாகவும் பந்தங்களோடு நிலைத்து  வாழவும் முடிகிறது.
                                             ****************************************
ஒரு  தமாசு

தன் வயிற்றில் கரு உருவாகி குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட ஆண் ஒருவர் கடவுளிடம் ,கடும் தவமிருந்து வரம் பெற்றானாம்.
அவன் வயிற்றில் குழந்தை உருவாகிவிட்டது.மருத்துவரிடம் பரிசோதனை செய்துவந்தான்,மருத்துவர் எல்லாம் சரியாக உள்ளது,மருந்துகளை சாப்பிடுங்கள்,ரெஸ்ட் எடுங்க,கனமான பொருள்களை தூக்காதீங்க,மாடிப்படி ஏறி இறங்காதீங்க என்று அறிவுரை கூறினார்.
இதே அறிவுரை 3,5 ஆம் மாதங்களிலும் தொடர்ந்தது.

7ஆம் மாதம் பரிசோதனைக்கு வந்தவரிடமும் மருத்துவர் அதே அறிவுரையை சொல்ல அந்த ஆள் டென்சனாகி “டாகடர் எப்பதான் டாகடர் என்னை படி வழியா போகலாம்னு சொல்வீங்க  எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல,என் குழந்தைக்கு எதும் ஆகிடக்கூடாது, தினமும் பைப் லைன்ல ஏறி தாவி போறது ரொம்ப கஷ்டமா இருக்கு,நான் மூனாவது மாடியில் குடியிருக்கேன்,ல்ஃப்ட் வசதியும் இல்ல என்றாராம்.