*வணக்கம் வருகைக்கு நன்றி*

Aug 16, 2013

என் கணினி அனுபவங்கள்

.கம்ப்யூட்டர்,கம்ப்யூட்டர்......

அப்படின்னா தீவிரவாதி/வில்லன்/திருடனை படம் வரைந்து கண்டுபிடிப்பாங்களே சினிமாவில்,அதனால் நான் முதன் முதலில் கம்ப்யூட்டரை பார்த்தது சினிமாவில்தான்.எங்க ஊரு பிரபல ஜவுளி/மளிகைக் கடைகளில் கம்ப்யூட்டர் பில் போடுவதை பார்த்திருக்கின்றேன்.

டாக்டர்/நர்ஸ் உடை அணிந்துகொள்ளவே டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்ட நான்,பாலிடெக்னிக்கில் படித்தால் விரைவில் வேலை கிடைக்குமென்று 10 ஆம் வகுப்பு முடித்தவுடன் பாலிடெக்னிக்கில் சேர முற்படுகையில் எந்த துறையை தேர்ந்தெடுப்பதென்று தெரியவில்லை.தனியார் கணினி மையங்கள் பிரபலமாகத் துவங்கிய சமயம் அது.அப்பா சொன்னதால் எலக்ட்ரானிக்ஸ்&கம்னியுகேசனில் சேர்ந்தேன்.

கல்லூரியில் கணினி லேபை க்ராஸ் பன்னும்போது  மனதை ஈர்க்கும் எதோ ஒன்று ஜில் அறையில் வரிசையாக நிற்பதாக உணர்வேன்.அதில் படித்து கற்க அப்படி என்ன இருக்கும்னு யோசித்திருக்கின்றேன்.முதலாம் ஆண்டு நிறைவடையும் நேரத்தில் அவைஸ் என்ற தனியார் கம்யூட்டர் நிறுவனம் கணினி கண்காட்சி வைத்திருந்தார்கள்.அனைத்து மாணவர்களுக்கும் இலவச அனுமதி.நானும் சென்றிருந்தேன்,அங்கு கணினி பற்றின ஏற்பட்ட  மாய அதிர்ச்சி என் மனதை விட்டு இன்னும் அகலவில்லை.

கண்காட்சியில் எங்களுக்கு காண்பிக்கப்பட்டது ms-word & basic launguage கோபால் லாங்வேஜும் இருந்தது என நினைக்கிறேன்.நமது பெயரை எழுதி ஸ்கிரீன் சேவரில் ஓடி ஆட விட்டதும்,font  size,bold,underline இதெல்லாம் செய்து காமித்தபோது வாயை பிளந்துகொண்டு பார்க்காத  குறையா பிரமித்தேன்.என் பேரை எழுத அன்றுதான் ரொம்ப கஷ்டபட்டேன்,ஏன்னா என் பேருக்கு ஸ்பெல்லிங் கீ போர்டில் தேடித்தேடி அழுத்துவதற்குள் கர்சர் ஒரு பக்கம் துள்ளுவதும்,ஒரு லெட்டருக்கு பக்கத்து லெட்டரையும் சேர்த்து அழுத்திவிட்டதும்,தவறான லெட்டரை நீக்க கஷ்டபட்டு கீ போர்டில் நீட்டிய ஆள்காட்டி விரலுடன் வலம் வந்ததும் பக்கத்தில் இருப்பவர் அசிங்கமா நினைச்சிடுவாங்கன்னு நெளிந்ததும் மறக்க முடியாது.

அடுத்துms paintword,ms dos,games வகை வகையா கலர் ,டிசைன்ஸ்,கம்ப்யூட்டரில் படம் வரைவது பவர் பாயிண்டில் விதவிதமா ஸ்லைட் ஷோ என்று எதோ மாய உலகிற்குள்  கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்ட எபஃக்ட்.அந்த கண்காட்சியை விட்டு வர மனதே இல்லை.கம்ப்யூட்டர் கத்துக்கனும்னு என் வாழ்க்கையிலே முதல் உறுதிமொழி எடுத்துக்கொண்ட நாள் அது.

கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் basic languge ,ms dos வந்தது.ஆசையா கணினி லேபிற்குள் சென்ற எனக்கு  மல்டிமீடியா,விஸ்வல் எஃபக்ட் எதுவும் இல்லாமல் ப்ரோக்ராம் கோடிங் எழுது,லாஜிக் கிரியேசன் என்று காய வைத்துட்டாங்க.எனக்கும்  லாஜிக்கும் சம்மந்தமே இல்ல.......லைப்ரேரியில் பேசிக் லாங்வேஜ் புத்தகம்(பாலகுருசாமி அவர்கள் எழுதியதுனு நினைக்கிறேன்) எடுத்து அதில்   ஒரு முக வடிவம் ரிசல்ட்டிற்கு ஒரு பக்கத்திற்கும் மேல் கோடிங்ஸ்களை காப்பி செய்து அவுட்புட் கொண்டுவந்ததை நானே ப்ரொக்ராம் கோடிங் கண்டுபிடிச்ச மாதிரி சந்தோசப்பட்டேன்.அப்போ ஸ்டோர் செய்ய ஃப்ளாப்பி ட்ரைவ்தான் இருந்தது.

ப்ரோக்ராமிங் கோடிங்ஸ்/லாஜிக் என்பது  கசந்ததால் கணினி மீதான ஆர்வம் எனக்கு குறைந்துவிட்டது.மூன்றாம் ஆண்டில் எந்த கணினி சப்ஜக்ட்டும் கிடையாது.ஆனால் இறுதியாண்டில் அருகில் உள்ள இன்ஜினியரிங் காலேஜில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்துகொண்டேன்.அங்குதான் ,dvd,cd,net,mail பற்றி அறிந்தேன்.பிரமிப்பை உண்டாக்கினாலும் அய்யோ எப்பா ஷோவில் ஜாலியாதான் இருக்கும் நாம் ப்ரசண்ட் ஆகும்போதுதான் அதன் கஷ்டம் தெரியும்னு நானே ஒரு புல்ஸ்டாப் போட்டுகிட்டேன்.

animated computer photo: Net computer_animated_globe.gif ஒரு நாள் என் தோழி ஒருவருடன் இண்டெர்நெட் மையத்திற்கு சென்றபோது இணையம் மெயில்,சாட்டிங் என்பது கண்ணை கட்டி காட்டில் விட்டதாய் இருந்தது.கீபோர்டை பார்த்தாலே எரிச்சலாகியது.மானிட்டரில் வருவதை படிச்சு தெரிஞ்சுக்கனும்னு மெயிலை சுற்றிலும் உள்ள விளம்பரங்களையெல்லாம் படிச்சேன்.என் தோழி விரைவா டைப் பன்னுவா நான்  டைப்புவதற்குள் ஸ்க்ரீன் சேவரே வந்துவிடும்.எப்பபாஆஆஆஆஆ கம்ப்யுட்டரும் வேணாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம்னு நினைச்சேன்.


animated computer photo: Animated Computer AnimatedComputer_zps799eba3c.gif  இன்ஜினியரிங் படிக்க முயற்சித்தேன்,என் 82% க்கு சீட் கிடைக்கவில்லை.வருசத்துக்கு 65000 கட்டி மேனெஜ்மெண்ட்டில் படிக்கதான் முடியும் என்றனர்.அந்தளவுக்கு பண வசதி இல்லாததால் அடுத்து ஒரு பிரபல தனியார் கணினி மையத்தில் சேர்ந்தேன்.ms.dos,ms.office  கற்க 8000 கட்டினேன் என்றால் உங்களால் நம்ப முடியுமா ?பட் அதுதான் உண்மை.

வகுப்பு பற்றின என்கொய்ரிக்கு போகும்போதே குளு குளு அறையில் உக்காரவைத்து சாப்பிட கேக் கொடுத்து என்னை கவிழ்த்துவிட்டார்கள்.மற்ற கணினி மையங்களில் கட்டணம் எவ்வளவென விசாரிப்போம் என்றார் அப்பா,விசாரித்ததில் இங்குதான் டபுள் கட்டணம் என்பது தெரியவந்தாலும் நான் பிடிவாதமாக கேக் கொடுத்த மையத்திலே சேர்ந்துகொண்டேன்.

animated computer photo:  stoel.gifகணினி முன் வீலிங் சேரில் அமர்ந்தபோது பெரிய கம்பேனிக்கு ஓனர் போல மனதில் துள்ளல்.அந்த செண்டரில் என்கொய்ரிக்கு வந்ததிலிருந்தே எனக்கு ஒரு டவுட்டு,இங்கிருப்பவர்களுக்கு குரல் சப்தம் குறைவாகவே இருந்ததுதான்.எனக்கு டிஜிட்டல் குரல்,நான் பேச ஆரமித்தாலே மெதுவா பேசுங்க,பி கொய்ட் னு  ஃபேக்காலிட்டி சொல்லி சொல்லி என்னையும் பூனை மாதிரியே பேச வச்சாங்க.அதுதான் மேனரிசமாம்.

animated computer photo: computer surfing computer_surfing_hw.gifடைப்பிங் கற்கவில்லை.கல்லூரியில் கணினி லேபில் கீபோர்டுக்கு பல்விளக்க ஆள்காட்டி விரலை உபயோகிப்பது போல இங்கும் ஆரம்பித்தேன்.நாட்கள் கடக்க கீபோர்ட் என்னுடன் பழகியது.சுமாராக டைப்புவேன்.ms,office,ms dos கற்றதில் செமினார் க்ளாஸ் எடுத்ததில் என் மீது நம்பிக்கை கொண்ட அந்த கணினி மையம் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் ஃபேக்காலிட்டியாக வாய்ப்பு தந்தது.எனக்கு வேலை கிடைத்துவிட்டதென்று அன்று நான் மகிழ்ந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.(2000 ஆம் ஆண்டு)

தினமும்  பள்ளிக்கு கணினி ஆசிரியராக ஒரு மணி நேரமும் கற்கவும் செல்வேன்.சம்பளம் இவ்வளவென்று சொல்லவில்லை,மாதம் 500 ரூபாயாவது கொடுப்பாங்கன்னு எதிர்பார்த்தேன்.குழந்தைகளுக்கு கணினி சொல்லித்தருவதும்,நானே தேர்வு வைத்து அதனை நான் கற்கும் மையத்திற்கு சப்மிட் பன்வதும் இனிமையான,புதுமையான அனுபவமாக இருந்தது.கணினி என்பதால் பள்ளி மாணவர்களும் மற்ற ஆசிரியர்களைவிட என்னை எதிர்பார்த்திருப்பதும்,நான் வந்ததும் குதுகுலமாவதும் மற்ற ஆசிரியர்களுக்கு என் மீது ஒரு பொறாமைப் பார்வையைத் தூண்டியது.

அப்பாவிடம் பிடிவாதம் பிடித்து அடுத்த 6 மாத கோர்ஸில் 9 ஆயிரத்திற்கு மேல் கட்டணத்துடன் இணைந்தேன்.அப்போதுதான் மேலும் பல மறக்க முடியாத சம்பவங்கள் நடந்தன.கணினி நிறுவனம் எனக்கு ஒரு மாதமும் சம்பளம் தரவில்லை,கேட்டதற்கும் 6 மாதத்திற்கு சேர்த்து கொடுத்துவிடுகிறோம் என்றார்கள்.கணினி மையத்திலும் செய்வதறியாமல் யாரும் மறக்க முடியாதளவிற்கு   தேவையில்லா பிரச்சனைகளை   நானே இழுத்துக்கொண்டேன்.இத்தனைக்கும் ஆறுதலாக தேவதை வந்துவிட்டாள் என்னைத் தேடி என்பதாய் புது வரவாய் கணினி கற்க வந்த மாணவி  இனிய தோழியாய் அமைந்தார்.இன்று வரை எங்கள் நட்பு தொடர்கின்றது(13 வருடங்கள் ஆகிறது,திருஸ்டி போடனும்).

எனக்கு ப்ரோக்ராமிங் நாலேட்ஜ் 50% கூட இல்லை.பட் அந்த பெண் c++ ல் வெளுத்துக்கட்டுவார்,நான் வேடிக்கைப் பார்த்துவிட்டு அவர் உழைப்பை
animated computer photo: Computer Head Banging Animated frustratedPC.gifரெண்டு பேரும் சேர்ந்து செய்ததாக காண்பித்துக்கொள்வோம்.ms-acsses ல் திருபார்கவி பிரைவேட் லிமிட்டட் என்ற பெயர் வைத்து இன்வைசிங் ப்ராஜக்ட் செய்தோம்.இன்னொரு ப்ராஜக்ட் என்ன செய்தோம்னு நினைவில்லை.ஆனால்  முதல் 6 மாத கோர்சில் என்னுடன் படித்த மாணவர் ஒருவர் 2 கணினி வாங்கிப்போட்டு dtp ஜாப் துவங்கிவிட்டார்,இன்னொருவர் இண்டெர்நெட் மையமே துவங்கி இன்றுவரை நடத்தி வருகின்றார்.

எனக்கு பள்ளியில் 6 மாதம் முடிந்தவுடன் சம்பள செக் கவருடன் கொடுத்தார்கள்,கவரை பிரித்துப் பார்க்காமல் அம்மா அப்பவிடம் காண்பிக்க மகிழ்ச்சியில் பஸ்ஸில் ஏறி வீட்டிற்கு ஓடாத குறையாக சென்றேன்.அம்மா அப்பாவும் பிரிக்காமல் சாமி படத்திற்கு கீழ் வைத்து பிரார்த்தனை செய்து பெருமிதமாக என்னிடம் கொடுத்தார்கள்.பிரித்துப் பார்த்தால் செளத்துப்போன புஸ்வானமா போயிட்டுப்பா.1000 rs only  என்ற செக் தான் உள்ளே இருந்தது.அம்மா அப்பாவும் சரி விடும்மா என்றே சொன்னார்கள்.

6 மாதத்திற்கு 1000 ரூபாய்.நானும் மேற்கொண்டு அந்த நிறுவனத்தில் எதும் கேக்கவில்லை.எனக்கு செக் கொடுத்த பிறகு அந்த வேலைக்கும் வேறு நபரை நியமித்தார்கள்.என்னுடைய இரண்டாவது 6 மாத கோர்சை நானும் காப்பியடித்தே கழித்தேன்.அதற்குபின் கணினியைத் தொட்டதே இல்லை.


நான் சென்ற கணினி மையத்தின் நிறுவனர் சொன்ன ஒன்று எங்களால் மறக்க முடியாது.  அது

என்ன செய்ய நினைத்தாலும் 1000 காரணம் சொல்லலாம்
எதை செய்யாட்டாலும் 1000 காரணம் சொல்லலாம் .

என்பதுதான்.

2009 ல் கணவர் வாங்கிய லேப்டாப்பில் தான் மறுபடியும் கணினி நட்பு தொடர்கின்றது.அப்போ என் மூத்த மகளுக்கு 2 வயது.அப்போதே அவள் எளிமையாக எளிமையாவற்றை கணினியில்  கற்றுக் கொண்டாள்,31/2 வயதில் password டைப்பி விண்டோஸ் ஒப்பன் செய்து பெயிண்டிங்,கேம்ஸ் விளையாடுவாள்.

இப்போ என் இளைய மகளின்  கணினி அனுபவத்தை பாருங்கள்.நம்ம மதுரை தமிழர்(அவர்கள் உண்மைகள்) மற்றும் கோவை 2 தில்லி ஆதி அவர்கள் கணினி அனுபவங்கள் தொடர் பதிவிட அழைத்ததினில் இந்த பதிவினை சமர்ப்பித்து அவர்களுக்கு நன்றியும் தெரிவிக்கின்றேன்

இதுவரை கணினி அனுபவங்களை பகிரவில்லையெனில் இனி தங்களது கணினி அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

Aug 10, 2013

ஈகைத் திருநாளில் என் நினைவுகள்.......

பெரிய கோவிலின் பக்கவாட்டில் என் வீடு.காலையில் 5 மணிக்கே கோவில் மணி ஓசை,அர்ச்சகரின் அன்றைய நாட்குறிப்புகள்,பிறகு தேசிகரின் பாடல்,பிறகு பக்திப்பாடல்கள் ஒலிக்கும்.

ஆனால் ka 3.45 மணிக்கே மெயின் ரோட்டில் அமைந்திருக்கும் பள்ளிவாசாலில் வாங்கு சொல்லும் அல்லாஹு அக்பர் அல்லாஹ் என்று ஒலிக்கும் கம்பீரம் தூக்கத்தை களைத்தாலும் அந்த தொழுகையின் சப்தத்தை கேட்டுக்கொண்டே உறங்கியிருக்கின்றேன்.மாலையிலும் வாங்கு சப்தம் கேக்கும்,பின்னே ஹிந்து கோவிலில் பாடல்கள் ஒலிக்கும்.

என் ஊர் காளியம்மன் கோவிலுக்குச் செல்ல இரு வழிகள் உண்டு.அந்த இரு வழிகளிலும் நிறம்ப,நிறம்ப முஸ்லீம் மக்களின் இல்லங்கள் இருக்கும்.ஒரு முஸ்லீம் தாத்தா காளியமன்,முருகன் கோவிலுக்கு வந்து அர்ச்சனை செய்து கால பூஜைகளில் கலந்துகொள்வார்.

என் பள்ளி நாட்களில் என்னுடன் சில முஸ்லீம் மாணவர்கள் படித்தார்கள்.சாந்து பொட்டில் டிசைன்,ஸ்டிக்கர் பொட்டில் கலர்ஸ்/டிசைன்ஸ் வைக்க ஆசை வந்த காலத்திற்கு முன்பு முஸ்லீம் பெண்கள் பொட்டு வைக்காமல் வருவது போலவே நானும் பொட்டு வைத்துக்கொள்ளாமல் செல்வேன்.அம்மா திட்டுவாங்க,எனவே பள்ளிக்குள் செல்லும்வரை பொட்டு வைத்துச் செல்வேன்,பிறகு அழித்துடுவேன்.

அவர்களைப் போலவே மின்னும் உடைகள் வாங்கி அணிந்ததுண்டு.படிப்பில் முதன் முதலில் எனக்கு போட்டிக்கு வந்ததும் முஸ்லீம் மாணவன்தான்.அவர்கள் வார்த்தைக்கு வார்த்தை அல்லாஹுனு சொல்வது போலவே நானும் சொல்வதுண்டு.நாளடைவில் அதையும் விட்டுவிட்டேன்.

மதுரை பாஷை போல சொன்னாக,வந்தாக,அந்த பிள்ள,இந்த பிள்ளனு  பேசுவதை ரசித்துள்ளேன்,அது போல ,இது போல என்பதற்கு அது கணக்கா,இது கணக்கா என்று அவர்கள் உபயோகிப்பதை ரசித்துள்ளேன்.

சில முறை என் பக்கத்து வீட்டாருடன்  வாரத்திற்கு ஒரு முறை நாகூர் தர்கா சென்றுள்ளேன்.அவர்களின் வழிபாட்டில் எனக்கு ஆர்வமில்லை என்றாலும் அந்த சூழல் எனக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது.

பள்ளி முடிந்து பாலிடெக்னிக் படிக்கச் சென்றேன்.அங்கு எனக்கு கல்லூரி நிறுத்தமே ஒரு தர்கா வாசல்தான்.ஒரிரு முறை அந்த தர்காவிற்குள் சென்று வந்துள்ளேன்.பேருந்தில் முஸ்லீம் பெண்கள் வெள்ளை நிற,கருப்பு நிற புர்கா அணிந்து வருவதைப் பார்த்து “எப்பா எப்படித்தான் இவ்வளவு நேரம் போர்த்தி(அணிந்து) வர்றாங்களோனு ”வியந்ததுண்டு.பேருந்தில் பல சமயம் எனக்கு முஸ்லீம் பெண்கள்/பாட்டிகள் இடம் தந்ததுண்டு.பிரேக் போடும்போதோ /நகர்ந்து செல்லும்போதோ லேசாக உரசிவிட்டாலோ அம்மக்களிடம் நான் அதிகம் திட்டும்  வாங்கியதுண்டு.

என் அப்பா உள்ளூரில் வேலை பார்க்கும்வரை ரம்ஜான் மாத நோம்பு கஞ்சியை  அவ்வப்போது  வாங்கி வருவார்.அதன் ருசியே தனிதான்.என் அப்பாவிற்கும் நெருங்கிய ஒரு முஸ்லீம் நண்பர் இருந்தார்.

என் திருமணத்திற்கு பிறகு தெரியவந்தது என் மாமியார் கடந்த 25 வருடங்களாக வருடத்திற்கு ஒருமுறை  நாகூர் தர்காவிற்கு வந்து வழிபட்டு அன்று இரவு தர்காவிலே தங்கி மறுநாள் செல்வாராம்.தனது சுற்றாத்தாருடன் துவங்கிய இந்த வழிபாடு இன்றுவரை மாமியாருக்கு தொடர்கின்றது.

முஸ்லீம் மருத்துவமனையில் கிறிஸ்த்தவ கைனக்காலஜி சிசெரியன் செய்து எனக்கு முதல் குழந்தை பிறந்தது .இப்படியாக  அனைத்து மதங்களும் வாழும் சூழலில் இஸ்லாமிய மதத்தினரின் நட்பு ,
உதவி இன்றுவரை தொடர்கிறது.


Jul 1, 2013

நிகழ்ந்தபவைகளும்,நிகழுபவைகளும்@1/7/13

உள்ளாடை தெரியக் கூடாதென்று ”சிம்மிஸ்” என்று ஒரு பனியன் டைப் உள்ளாடையை அணிந்து அதற்குமேல் சுடிதார் அணிவதுண்டு.

இப்போ இங்க பல பெண்கள் இந்த இரண்டாம் சிம்மிஸ் அணிந்திருப்பதை தோல்பட்டை முழுவதும் காமிக்கும்படி மூன்றாம் சிம்மிஸ் அணிந்து வலம் வருகின்றார்கள்.அந்த உடையில் சிலருக்கு வயிற்றுப் பகுதி தெரியும் அளவிற்கு கட்டிங் உள்ளது.சிலருக்கு இரண்டாம் சிம்மிஸ் வயிற்றை மறைத்துள்ளது.இந்த உடைக்கு பெயர் என்னனு தெரியாததால் இந்த விளக்கம்.

சிறு வயதில் தமிழகத்தில் நான் பிரபலமான கோவிலுக்கு பக்கத்தில் குடியிருந்தேன்,பக்கத்தில் நாகூர்,வேளாங்கன்னி உண்டு.அதனால் தினம் தினம் சுற்றுலா பயணிகளை பார்த்ததுண்டு.அவ்வப்போது வெளிநாட்டு சுற்றுலா மக்களையும் பே,பே னு பார்த்ததுண்டு.ஏனெனில் வெளிநாட்டவர் அதிக கலராகவும் அரைகுறை ஆடையுடன் வருவார்கள்.

இப்போது இந்திய மெட்ரொ பெண்களை ,ஆடை கலாச்சாரத்தில் வெளிநாட்டவர் வியந்து பே,பே னு பார்த்தாலும் ஆச்சர்யமில்லை.


தில்லியின் நவ நாகரீக இளம் பெண்கள் சிலர் உடுத்தியிருந்த  ஆடையின் முன்பக்கத்தில் எழுதியிருந்த சில வாசகங்கள் .

"facebook
lets tweet"

"have a cup of milk"

"u cant forget this"

"fuck french connection"(இதற்கு என்ன அர்த்தம்)

வெளிநாட்டவரை வியந்து பார்ப்போமே தவிர முகம் சுளிப்பு வந்ததில்லை,முக்கால் ஜீன்ஸ்,ஸ்லீவ்லஸ் டாப்ஸ் அட்டாச்டு மினி பாட்டாம்(பேர் தெரியல)சகஜாமாயிட்டு.

ஆடை அணிவது அவரவர் சுதந்திரம்.இவைகளை பார்த்துப் பார்த்து கண்கள் பூர்த்து போனால்தான் பார்ப்பவர் பார்வையில் மாற்றம் வரும்.

இதெல்லாம் அணிந்து ஆண் நண்பருடன் போகும் ஜோடிகள் அதுபாட்டுக்குதான் போகுதுங்க.தன் கேள் ஃபிரண்டை எவன் எவனோ எங்கெங்கயோ பாக்குறானுங்களுனு கவல இல்லாம அவன் வேலைய மட்டும் பாத்துகிட்டு அந்யோந்யமா போறான் பாருங்க (கொஞ்சல்,உரசல்)அங்க வெளிப்படுது அவனவன் பெருந்தன்மை.

இன்றுவரை வெளிநாட்டவர்கள் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொள்வதை நான் பார்த்ததில்லை,அந்நிய மோகம் கொண்டவர்கள் அல்லது தன் காதலி/கேள் ஃப்ரண்ட்ஸ்களுடன் பல பொது இடங்களில் நம் நாட்டு ஜோடிகள் பலர் அநாகரீகமாக நடந்துகொள்கின்றனரே!

பார்த்ததை சொன்னேன்,எப்படி இப்படி சொல்லப்போச்சுனு கேள்வி கேட்டால் தெரிந்ததை சொல்றேன்!சம்பந்தமில்லாம என்ன இந்த போட்டோனு பாக்றிங்களா?ஹரியானாவில்  ஒரு நாள் ஷேர் ஆட்டோவில் செல்லும்போது ஓட்டுநரின் சாவகாசம்தான் இது

  இது ஹரியானாவின் ஒரு bsnl அலுவலகத்தின் செக்கியுரிட்டி அமரும் நாற்காலி,ஒரு நேரம் கம்பி போட்டு கட்டிருக்கும்.இப்போ கேபிள் போட்டு கட்டிருக்கு.2008 லேர்ந்து இப்படித்தான் சீரியாஸா இருக்கு.Jun 28, 2013

உங்களுக்கு பண கஷ்டமா? / மன கஷ்டமா?


திர்க்க முடியாத வேதனையா உங்களுக்கு? 

வாழ்நாட்களை இனிமையானதாக்க வேண்டுமா?

அனைத்து நொடிகளும் இன்பம்  பொங்க வேண்டுமா?  

மற்றவர்களின் டார்ச்சலை தாங்க முடியலையா?

இப்படி தீர்வில்லா பல கேள்விகளும் பிரச்சனைகளும் இருப்பது போல உணருகின்றீர்களா ?

இவைகள் எல்லாம் காற்றும் சதையும் அடைத்த உடலுக்கு தேவையில்லை.இவைகள் இல்லாமலும் இந்த உடலை நடமாட விடாது இந்த .மனித பிறவி.

தேவை

போதுமான 
 உணவு
காற்று 
தண்ணீர்  .

இந்த மூன்றை ஈடுகட்ட என்னென்னத்தையோ இழகின்றோம்.எதையெதையோ பெறுகின்றோம்.வாழ்வை கற்பதில் தோற்கின்றோம்.

என்ன இருக்கோ இல்லையோ, பசிக்காக எது கிடைத்தாலும் சாப்பிடுவோமா ? 

இளமையில் கொடுமை வறுமை ,கைக்கு எட்டும் உணவு வாய்க்கு எட்டாமல் போவது அதனினும் கொடுமை.

எனில் குழந்தைப் பருவத்திலிருந்து எனக்கு பசி தெரியாமல் வயிறார உணவளிக்க உழைத்த என் அப்பா,எல்லாம் இருந்தும்  இன்று ஒரு வேளைக்கு  கால் வயிற்றை நிரப்ப முடியாமல் உணவுக்குழல் புற்றுநோயால் அவதிப்படுவதை பார்ப்பது பெரும் கொடுமை.

தலைவலி ,வயிற்றுவலி அல்லது சின்ன காயம் என்றாலும் மருத்துவமனையில் உள்ள அனைத்து பரிசோதனைகளையும் செய்துகொள்ள சொல்லும் மருத்துவரிடம் செல்லாததே என் அப்பா செய்த தவறு.

15 நாட்களில் பிரச்சனை அதிகமாகவும் நவீன மருத்துவமனையில் காண்பித்து உணவுக்குழல் கேன்சர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த மருத்துவர் சொன்னது : உடனே ஒரு லட்சம் கட்டுங்கள் 4 நாட்களில் மருத்துவம் ஆரம்பிக்க வேண்டுமென்று,........

அதே மருத்துவமனையில் அட்மிட் ஆகாமல் அந்த ரிப்போர்ட்டுகளுடன் அடையாறு கேன்சர் இன்ஸ்டியுட் சென்றால் பென்சன் வாங்கும் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட அப்பாவிற்கு நடந்தது டெஸ்ட்,டெஸ்ட்,டெஸ்ட்.....ஒரு நாளைக்கு ஒரு டெஸ்ட்  மட்டும்தான் .

சாப்பிட கஷ்டப்டுகின்றார்,வலியில் அவதிப்படுகின்றார் மருந்து எதாவது கொடுங்களேன் என்றால் இதற்கு மருந்து இப்போ கொடுக்கமாட்டோம் ,அனைத்து பரிசோதனைக்கு பிறகுதான் முடிவு செய்ய வேண்டுமென பதில் வந்தது.

அங்கு காணப்பட்ட நோயளிகளின் நிலைமைகளை பார்க்கும்போது நமக்கு நாளை என்ன வியாதி வருமென்று தெரியாவிட்டாலும் இதுவரை நாமெல்லாம் எவ்வளவு பாக்கியசாலிகள் நமக்கு உள்ள பிரச்சனைகளெல்லாம் பிரச்சனைகளே இல்லை,கிடைத்த ஒவ்வொரு நொடியும் பொன் போன்றது என்று பல முறை உணரவைக்கும்.

ஒரு வார கட்டண  பரிசோதனைக்கு பின் அப்பாவிற்கு 3rd ஸ்டேஜ் கேன்சர் உறுதிப்படுத்தப்பட்டது,இங்கு மேற்கொண்டு சிகிச்சை அளித்து பலனில்லை உங்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் கீமோ தெரபி கொடுக்க முன்வந்தால் சிகிச்சை மெற்கொள்ளுங்கள் என்று கட்டாயமாக அனுப்பிவைத்தார்கள்.

அதற்கு பிறகு தஞ்சாவுரில் கேன்சர்க்காக மட்டும் வைத்தியம் பார்க்கும் மருத்துவமனை இருப்பதை கண்டுபிடித்து சிலரின் உதவியுடன் அங்கு சென்றோம்.அங்கு மீண்டும் பரிசோதனைகள்,பிறகு ரிஸ்க் & ட்ரயலில் தான் கீமோ கொடுக்கப்பட முடியும்,எனவே உங்களுக்கு விருப்பமெனில் கீமோ தெரபி கொடுக்கிறோம் இல்லையெனில் இங்கிருந்து சென்றுவிடுங்கள் என்றபோது ஒரு மருந்தும்,மருத்துவமும் இல்லாமல் அவதிப்படுவதை பார்ப்பதைவிட கீமோ கொடுத்துவிடுஙகள் என்று சொல்லிவிட்டோம்.

அப்பாவிற்கு திரவ ஆகாரம் மட்டுமே செல்கிறது,ஒரு மாதத்தில் கருவாடா ஆகிட்டேனே ஆச்சி ,குதிங்கால் சதையும் கரைகின்றதே என்று அப்பா சொல்லும்போது இயலாமையில்  நோக மட்டுமே முடிகின்றது.அப்பா ரிட்டயர்ட் ஆகி ஒரு வருடம் ஆகின்றது.அவருக்கு இந்த கேன்சர் வந்து 3 வருடமாகின்றதென ரிப்போர்ட் சொல்கிறது.ஆனால் அவருக்கு பிரச்சனை அறிகுறியானது 15 நாட்களில் மட்டுமே.

எனக்கு சிறு வயதில் சைக்கிள் கற்று கொடுத்தார் அப்பா,என்னை விட அவருக்குத்தான் அதிக அடிபடும்,பொருட்படுத்த மாட்டார்,எனக்கு சின்ன காயம் பட்டாலும் அந்த காயம் ஆறும்வரை சைக்கிள் கற்றலுக்கு விடுமுறை.நீச்சல் கற்று கொடுத்தார்,ரோஸ்ட்டும் பரோட்டாவும் சாப்பிட ஹோட்டலுக்கு அழைச்சிட்டு போவார்,அவருக்கு அறிமுகம் ஆனவர்கள்,உறவினர்கள் வந்தால் வயிரும் மனதும் திருப்திபடும் வகையில் விருந்தளிப்பார்,இன்று மிக்சியில் அரைத்த சாதக் கஞ்சியையும் விழுங்க அவதிப்படுகிறார்.

எனக்கும் அவருக்கும் வந்த மனக் கசப்புகளிலும் நாட்கள் கடந்த பிறகு அப்பாவின் பக்கம்தான் நியாயம்/நல்லது இருப்பதை உணர்ந்துருக்கின்றேன்.இப்போதும் அவர் நடமாட்டமாக இருப்பது மட்டுமே எங்களுக்கு தெம்பு.

நெருங்கிய நட்புகள்/உறவுகள் பார்க்க வரும்போது “நான் என்ன பாவம் செய்தேன் இப்படிப்பட்ட வியாதியில் மாட்டிகிட்டேனே என்று அப்பா கண் கலங்கி வருத்தப்படுவதை பார்க்க நான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை.இப்பவும் அவருக்கு ஆறுதல் சொல்ல முற்பட்டால் ஆறுதலும்,அறிவுரையும் அவர் எனக்கு சொல்கின்றார்.

என்னை எப்போதும் வாடா போடானுதான் அழைப்பார். 
கோபமாகவோ அல்லது வேறு வேலையில் கவனமாக இருக்கும்போது மட்டுமே ஆச்சி...வாம்மா போம்மா/ வா போ என்பார்.

ஆச்சி எப்படியிருந்த நான் எப்படி ஆகிட்டேனென்ற காமெடி எனக்குதானாடா ஆச்சி என்று அவரே சொல்லி குழந்தை போல சிரித்தது கண்ணில் நிற்கின்றது.

எங்களை சாப்பிட வைத்து அழகு பார்த்திங்களே அப்பா!  விரும்பியதை வாங்கி சமைத்த உணவை பரிமாறி சாப்பிடுவோமே, இனி அந்த நாள் வரவே வராதா அப்பா!
இந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது அப்பா!

  Apr 13, 2013

சற்று முன் நிகழ்ந்தது

கணவர் யார்கிட்டயோ பேசிட்டுருக்காறு,

ஓ ! தனது நண்பர் வரப்போவதா சொல்லிட்டுருந்தாரே அவரா இவர்,

நண்பர் எப்ப வந்தாரு ?

எனது மூத்த மகள் அம்ருதா எதோ புத்தகத்தை எடுத்துட்டு வந்து என்னை எதோ கேக்குறா ,

எதுவும் வாலு பண்ணாத அங்கிளுடன் அப்பா பேசிட்டுருக்காரு,ஹோம் ஒர்க் என்னனு பாத்தியான்னு கேட்டுகிட்டே துணிகளை அயன் பண்றேன் ,

நம்மள கூட இன்ட்ரடுயூஸ் பண்ணாம இவ்ளோ நேரம் என்னத்த பேசுறாருன்னு தெரியல,

சரி நாமளே போய் அறிமுகமாகிப்போம்னு போறேன்,என்னால் இயல்பாய் நகர முடியல ,

பஸ்ஸில் எனக்கு முன்னாடி சீட்டில் தான் எனது கணவரும் அவரது நண்பரும்  பேசிட்டுருக்காங்க !

ஓ !!அதான் என்னால் எளிமையாய் முன்னோக்கி போகமுடியல ,

ஜன்னலில் வேடிக்கை பார்த்துகிட்டே வரேன் ,

அட எங்கள் அருகிலிருக்கும் தெரிந்த பெண்மணி ஒருவர் காரில் போயிட்ருக்காங்க,

என்னுடன் இருந்த அம்ருதா எங்க காணும்,

அட கடவுளே !அயன் பண்ணிட்டுருந்தேனே !

இதோ ஒரு அயன் பண்ணிய சட்டை கிடக்கு ,எடுத்து பார்த்தால் அழுக்கு சட்டை ,ஒன்னுமே புரியலயே !!    (உங்களுக்கும்தானே! )

அதற்குள்ளும் எதோ ஒரு ஸ்டாப்பிங் வருகிறது ,பஸ் ஸ்லோ ஆகிறது கணவர் இறங்க  முற்படுகையில் என்னையும் அழைக்கிறார் ,

அவசரமாக எழுந்திருக்கும்போது பார்க்கிறேன் ,நைட்டிஅணிந்திருக்கிறேன் ,

அய்யோ என்னது இது?நான் எப்படி இப்படி வந்தேன் ?,

கஷ்டபட்டு ,அசிங்கப்படுகிட்டே இறங்குறேன்,போனில் பேசிகிட்டே என் கணவர் மட்டும் என்னை எதிர்பார்த்து நிற்கிறார்,

எனில் என் பிள்ளைகள் எங்கே?கணவரின் நண்பரையும் காணும்?

நைட்டி அணிந்திருப்பதால் பஸ்ஸின் கடைசிப்படியை விட்டு இறங்க தயங்குகிறேன்,

வர்றதனு வா இல்லைனா அப்படியே திரும்பி போறியா  என்கிறார்,

அடப்பாவி மனுசா இந்த கோலத்தில் நான் எங்க எப்படி போவேன் !

அச்சசோ !எனது ரெண்டாவது மகளை தொட்டிலில் தூங்கப்போட்டுருந்தேனே,

இது என்னது வேளாங்கன்னி ரோடு போல தெரியுது  ,

நான் வட இந்தியாவிலிருக்கும் என் விட்டீலல இருந்தேன்,

அய்யோ  என் குழந்தை தொட்டியிலிருந்து கீழ விழுந்துடுவாளே !

ஒன்னும் புரியாமல் விழித்து  , விழித்து  பார்க்கிறேன் ,

கைகளை நகர்த்த முடியவில்லை மரத்துப்போயிருந்தது ,

மிகுந்த முயற்சியில் விழித்துப்பார்த்தால் எனது கைகள் லேப்டாப்பில்தான் இருக்கிறது ,

சுற்றி ஒரு முறை பார்த்தேன் ,என் அருகே  குழந்தை தொட்டிலில் அயர்ந்து தூங்கிககொண்டிருக்கிறாள் ...அப்பாடான்னு பெருமூச்சு வந்துச்சு,

அப்பா நானும்  வட இந்தியா வீட்டில்தான் குழந்தையுடன் இருக்கிறேன்,

கணவர்  டூட்டிக்கும்,அம்ருதா ஸ்கூலுக்கும் சென்றிருப்பது நினைவிற்கு வந்தது.

அட ச்சே !!! இப்ப நிகழ்ந்ததுலாம் கனவா !!!!!!!!!!!!!!!

வீட்டிற்கும் வீட்டு மக்களுக்கும் வேலை பார்த்துட்டு நேரத்தை பிடுங்கி கணினி பார்க்க அமர்ந்த நேரத்தில் இப்படியொரு கனவு வந்திருக்கென்றால் அதற்கு என் கடின உழைப்பே காரணம் *

(ஹி ....ஹி ....ஹி ....   இதை படிச்சவங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கம்பேனி  பொறுப்பல்ல @@@@@@@)
பெயிண்டில் நானே வரைந்தது  யாரும் பழிக்கப்  பிடாது'அப்பா இதை  பதிவாக்குவதற்குள் எனக்கு அடுத்த தூக்கம் வராப்பள  ........ Mar 21, 2013

ஜவஹர்லால் நேருவின் குடும்பத்தை பார்ப்போம் வாங்க

கடந்த ஞாயிற்று கிழமை (17/3/2013)எங்கள் குடியிருப்பு பகுதியில் ஒரு நாள் சுற்றுப் பயணமாக தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையின் முகல் கார்டன்,ஜவர்ஹர் லால் நேரு மீயுசியம்(தீன் மூர்த்தி பவன்),இந்திரா காந்தி மீயுசியம்,இந்தியா கேட் மற்றும் கரோல் பக் வணிக வளாகம் சென்று வந்தோம்.

முகல் கார்டன்

ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை குறிப்பிட்ட  நாட்களில் பொது மக்களுக்கு ஜானாதிபதி மாளிகையின் தோட்டமான முகல் கார்டன் பார்க்க இலவச அனுமதி அளிக்கப்படுகின்றது.2006 ஆம் ஆண்டு முகல் கார்டன் சென்றுள்ளேன்,பிறகு இந்த முறை சென்றபோது எதுவுமே மாறலையே என்று நினைக்கத் தோன்றியது.கழிப்பறைகள் கட்டப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளது மட்டும் மாற்றமாக தெரிந்தது.ஏனெனில் 2006 ல் சென்றபோது குடியரசு மாளிகையின் தோட்டத்திற்கு வந்த மக்களுக்கே இவ்வளவு கேவலமான கழிப்பறை வசிதியா என்று நினைக்க வைத்தது.ஏற்கனவே பார்த்ததாலோ என்னவோ பூக்களைக் கண்டு  முதல் முறை அடைந்த குதுகலம் இல்லை.சென்ற முறை பார்த்த கனகாம்பரமும் தும்பை பூவும் கண்ணில் தென்படவில்லை.இங்கு புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை.


தீன் மூர்த்தி பவன்(ஜவஹர் லால் நேரு மீயுசியம்)

இங்கு நுழைந்த போது ஐ!!!!!! நேரு மாமாவின் வீட்டிற்கு போகிறோம் என்ற குதுகலம் உள்ளே சென்று அனைத்தையும் பார்த்தபோது இனம் புரியாத துக்கமாக மாறியது.வாழ்க்கை வரலாற்று நினைவிடமும்,புகைப்படங்களும் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.இப்போது உள்ள அரசியல் தலைவர்களின் நிலையை நினைத்து நொந்து கொள்ளவும் வைத்தது.தேசத்திற்காக பாடுபட்ட எத்தனையோ பேர் மக்கள் மற்றும் அரசாங்கத்தால்  அடையாளம் தெரியாமல் பாதுகாக்கப் படாமல் போய்விட்டனரே என்றும் நினைக்க வைத்தது.

 பிரிட்டிஸ் ஆட்சியில் பிரிட்டானிய படைத்தளபதி வாழ்ந்த இந்தக் கட்டிடம், பின்னர் விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் வசிப்பிடமாக இருந்தது. நேரு இறந்ததின் பின்னர் இக் கட்டிடம் தேசிய நினைவுச் சின்னம் ஆக்கப்பட்டுள்ளது .அழகான தோட்டம்,ஏகப்பட்ட அறைகள்,முக்கிய ஓவ்வொரு அறைக்கும் இரு வழிகள்,நூலகம்  மற்றும் நேரு அவர்களுக்கு கிடைத்த விலை மதிப்பற்ற பரிசுப் பொருட்கள் பிரமிப்பை ஏற்படுத்தியது.அலுவலக அறைகள் கண்ணாடிக் கதவால் அடைக்கப்பட்டு உள்ளே அனுமதியின்றி காட்சிக்கு மட்டும் இருந்தது,சிறிய விற்பனை நிலையமும் இருந்தது.

கோளரங்கமும் உள்ளது.1984 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி  ஜவகர்லால் நேருவின் மகள்  இந்திரா காந்தி அவர்கள் அதனைத் திறந்து வைத்தாராம் .காட்சி நேரம் எங்களுக்கு ஒத்து வராததால் கோளரங்க காட்சிக்கு செல்லவில்லை.இந்தியாவின் முதல் விண்வெளிவீரரான ராகேஷ் சர்மா பயணம் செய்த விண்கலமான சோயுஸ் டி 10 இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அனைத்தையும் புகைப்படங்கள் எடுக்க அனுமதித்தனர்.எதை படம் பிடிப்பது,விடுவது என்ற மலைப்பும் எல்லாத்தையும் படம் பிடித்து என்ன செய்ய போகிறோமென்ற நினைவில் மனம் கவர்ந்த படங்களை கிளிக்கினேன்.

அடுத்து சப்தர்ஜங் சாலையில் அமைந்துள்ள இந்திராகாந்தி மியுசியத்திற்கு சென்றோம்.அவர் வாழ்ந்த இடம் காட்சிக்கு விடப்பட்டுள்ளது.இந்திரா அவர்கள் கொல்லப்பட்ட முதல் நாள் நடந்து வந்த காலடித் தடம்,எழுதிய கடிதங்கள்,அவரின் இளமை மற்றும் அரசியல் வாழ்க்கையின் புகைப்படங்கள்,தனது கணவர் ,மகன்கள் ,பேரப்பிள்ளைகளுடன் படங்களும் ராஜீவ் காந்தி உபயோகித்த பொருட்களும் படங்களும் ,குண்டுவெடிப்பில் இறந்த ராஜீவின்  மிஞ்சிய ஆடை காலணிகள் காட்சிக்கு உள்ளது.

 இணைப்பை கிளிக்கி படங்களை பார்க்கவும்   
**************************************************தற்சமயம் பல பிரச்சனைகளுடன் காங்கிரஸ் இருந்தாலும் இந்த மியுசியங்களின் காட்சிக்கு உள்ளவைகள் எப்படியிருந்த குடும்பம் என இனம் புரியாத துக்கத்தை ஏற்படுத்தியது.நான் இங்கு தந்திருக்கும் படங்களும் விடியோக்களும் மிகவும் குறைவானதுதான்,ஆனால் அனைத்தும் நானே  எடுத்தது.

Mar 8, 2013

மாபெரும் சாதனைப் பெண்கள்

கல்வி,கலை,விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் அல்லது வீர தீர செயல்கள் அல்லது ஒரு இளம் பெண் தனது ஆண் நண்பர்களுடன் சுற்றுவது அல்லது எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது கற்பு/ஆபரணங்கள் சூரையாடப்படாமல் இருப்பது இவைகளில் சாதனை படைப்பதெல்லாம் சாதனை எனில் ஆயிரக்கணக்கில் கொடுக்க வழியில்லாத காரணத்தினால் அடிப்படை வசதியான படுக்கை,கழிவறை,சுகாதாரம் இல்லாத அரசு மருத்துவமனைகளில்  உயிரை பிரசவித்து மறு ஜென்மம் எடுக்கும் பெண்கள்தான் எனக்கு சாதனை பெண்கள்.

தலை வலியும் வயிற்று வலியும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும்.பிரசவ வேதனை பிரசவிக்கும் பெண்கள் மட்டுமே உணர முடியும்.மகள் அல்லது மனைவியின் பிரசவ வேதனை கண்டு  மனசாட்சி உள்ள ஆண்கள் மனம் அல்லது கண்கள் கலங்குவதும் இந்த தருணம்தான்.


குண்டு வைத்து கொல்லப்படும் ஈழத் தமிழர்களின் வேதனைகளை தொலைக்காட்சியில் மட்டும்தானே பார்த்து கலங்கியிருப்பீர்கள்.மற்ற மாநிலங்களை விடுங்கள் நம் தமிழ்நாட்டில் ரெண்டு,மூன்று அரசு மருத்துவமனைகளைத் தவிர மற்ற அனைத்து அரசு பொது மருத்துவமனைகளின் பிரசவ வார்டுகள் பக்கம் வலம் வாருங்கள்.நம் பெண்களின் நிலை உள்நாட்டிலே எப்படியிருக்கின்றது என்று பாருங்கள்.

தகர கட்டில்கள்,தகர தொட்டில்கள் தேங்காய் நார் மெத்தைகள்,குறைவான பஞ்சு மெத்தைகள்,அனைத்து கட்டில்களுக்கும் மெத்தை கிடையாது,பெட்சீட்டுகள் மடுமே அதிகம் கிடைக்கும்.கட்டில்களின் எண்ணிக்கைகளை விட கர்பிணிப் பெண்கள் அதிகம் வந்துவிட்டால் அந்த பெண்களுக்கும் அவர்கள் பெற்றெடுக்கும் இந்நாட்டு குடிமகனுக்கும் கட்டாந்தரைதான்.வெயில் அல்லது மழை காலங்களில் இந்த நிலையை நினைத்துப் பாருங்கள்.

உதிர வாசனை பால் வாசனையில் ஈக்களும் கொசுக்களும் போட்டி போட்டுக்கொண்டு படையெடுக்கும்.தனி அறை இல்லாட்டாலும் இன்ஸ்டட்  ஸ்க்ரீன் தருவார்கள்.அதுவும் தேவைப்படும் நேரங்களில் கிடைக்காது.பக்கத்து அல்லது எதிர் பெட்டிற்கு தகப்பன்,ஆண் விசிட்டர்கள் யார் இருந்தாலும்  நம் குழந்தைக்கு பசி அவர்கள் சென்ற பிறகா வரும்.

எந்த மரப்பு மருந்தும் கொடுக்கப்படாமல் பிரசவ வலியோடு வலியாக மைனர் ஆப்ரேசன் என்று சொல்லப்படும் பிறப்புறுப்பை கிழித்து குழந்தை எடுத்த பின் அதே ரணத்தில் தையல் போட்டு கிடந்தாலும்,சிசேரியன் செய்திருந்தாலும் கழிவறைக்கு பக்கத்தில் பெட் கிடைக்கவில்லையெனில் துரதர்ஷ்டம்.10 மீட்டருக்கு அப்பால் கழிவறை இருந்தாலும் ஸ்ட்ரெக்சரில் செல்ல முடியாது.படுக்கையிலே சிறு நீர்,மலம் கழித்து எடுத்து செல்ல பிளாஸ்டிக் /அலுமினிய கோப்பைகள் வைத்திருப்பார்களே அதுவும் ஒவ்வொரு படுக்கைக்கும் கிடையாது.யார் கட்டிலுக்கு அடியில் இருக்குனு தேடனும் அல்லது அவசரத்தைப் பொருத்து நர்சம்மாக்கள் அல்லது துப்புரவாளியிடம் கேட்டு கெஞ்சனும்.

துப்புராவாளிகள் உதிர கவுச்சியில் வெறி கொண்டு செந்தமிழில் பேசுவதையும்,நமது பரம்பரைக்கே மகுடம் சூட்டுவதும் நொடியில்  கிடைக்கும் பரிசுகள். நமக்கு பின் எவளோ எப்படியோ வந்துட்டு போகட்டுமென்று கழிவறைகளை உபயோகிக்கும் நமது பெண்மணிகள் இருக்க தண்ணீர் வசதியும் இல்லாமல் போவது கொடுமையின் உச்சம்.லேபர் வார்டில் மருத்துவர் நர்ஸ்களின் ஆராய்ச்சியில் கர்ப்பிணிக்கு பிரசவிக்க நேரமாகுமெனில் அவரை அனுப்பிவிட்டு அடுத்த பெண்ணிற்கு முயற்சிகள் நடக்கும்.அனுப்பிவிடப்பட்ட பெண் நல்ல நிலையில் இருந்தால் நடந்து செல்வார் அல்லது லேபர் வார்டு வாசலில் வலியில் தவித்துகொண்டிருப்பார்.தலைப் பிரசவத்தினர் பிரசவிக்க ஒத்துழைப்பதில்   நேரம் எடுத்தால் மருத்துவர்/நர்ஸ்கள் தாம்பயத்தை கேவலப்படுத்தி திட்டுவதும் ,கர்ப்பிணிகளை தொடையில் சற்று கோபத்துடன் அடிப்பதும் நடக்கின்றது.பெடிற்கு  வந்து நர்ஸ்கள் ஊசி போடுவது குறைவு.நர்ஸ்கள் உள்ள இடத்திற்கு வேதனையுடன் நடந்து சென்று வரிசையில் நின்று ஊசி போடுக்கொள்ள வேண்டும்.

நமது குழந்தை உறங்கும்போது அனைத்து குழந்தைகளும் உறங்கிவிடுமா?வீல்லென்று அழு குரல் சப்தத்தில் கண் அயர்ந்த குழந்தை பயத்தில் உடல் குலுங்கி அழுகத் தொடங்கும்.சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை.எதோ ஒரு கர்ப்பிணியின் அலரலும், மகளின் உதிரக் கைழிவுகளை எடுத்துச் செல்லும் தாய்,குழந்தையின் மலத்தை சுத்தம் செய்யும் காட்சிகள்,நம் அருகே துப்புரவாளி சுத்தம் செய்வதையும் பார்த்துக்கொண்டேதான் நாம் சாப்பிட முடியும்.
எல்லாவற்றையும் விட இவ்வளவு பாடுபட்டு பெற்ற குழந்தை காணாமல் போக 100% வாய்ப்பும் உண்டு.பிரசவத்தில் தாய்க்கு ஆபத்து,குழந்தைக்கு ஆபத்து குறைகள் என்றால் போதுமான வசதி இல்லாமல் தவிக்கும் காட்சிகள் இன்னும் கொடுமை.ஓரளவு பண வசதி கொண்டவர்களும்  ஒரு வார அவஸ்தைக்கு எதற்கு ஆயிரகணக்கில்  செலவு செய்ய வேண்டுமென்று துணிச்சலாக அரசு மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்த்துக்கொள்கின்றனர். தனியார் மகப்பேறு மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தாலும் அரசு மருத்துவமனைகளில் பல மடங்கு பிரசவங்கள் நடைபெறுகின்றது.இங்கு கிடைக்கும் துன்பங்களை சகித்துக்கொண்டு புன்முகத்தோடு குழந்தைக்கு பாலூட்டி வளர்க்கத்  தயராகும் தாய்மார்களே சாதனைப் பெண்கள்.

பெண்ணுரிமை பேசுபவர்களே,பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர்களே,பணம் படைத்தவர்களே! இங்கு எதாவது உதவுங்கள்.
இன்று ஒரு நாளாவது அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டுக்கு முகம் சுளிக்காமல் செல்ல முடிந்தால் மகளிர் தினத்தை கொண்டாடுங்கள்.Feb 1, 2013

குளிர்,குளிர்...குளிரு....


நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்  காணும் திரைப்படத்தில்  வரும் ஒரு வசனம் “ என்னது சிவாஜி செத்துட்டாரா!!!!!! “ என்பது போல நாட்டில என்னென்னமோ நடக்கும்போது வட மாநிலங்களில் குளிர் ஆரம்பித்து சில மாதங்கள் ஆனாலும் இந்த குளிரின் அட்டகாசம் இன்னும் குறையவில்லை .” என்னது குளிரா!!!! ” அதுதான் வருடந்தோறும் வருமே என்பார்கள்.இப்பதான் 2012 பிறந்தது போலவும் வெயில் அதிகம் இருந்தாலும் குளிர்தான் அதிகம் நினைவில் நிற்கின்றது.அதற்குள் 2012 முடிந்து 2013 ம் பிறந்துவிட்டது,முதல் மாதமும் மாயமாய் முடிந்துவிட்டது.

 இந்த குளிரு இருக்கே குளிரு,,,,அது மட்டும் மாயமாகாமல் மீண்டும் மீண்டும் மூடுபனியில் ரெண்டு வீட்டிற்கு பிறகு மூன்றாவது வீட்டை மறைத்துவிடுகின்றது,ரெண்டு லைட்டு மிதந்து வரும்,அருகில் வந்தவுடன்தான் அது பேருந்தா ,காரா,லாரியா என்று கண்டுபிடிக்கலாம்.லைட்டுகள் அசையாமல் சற்றே உயரத்தில் வரிசையாக தெரிந்தால் அது கட்டாயம் போஸ்ட்மரம்தான்.

சினிமாவில் வரும் வானுலகத்தில் அணிகலன்களுடன் பகவான்கள், தேவர்கள் காட்சி தருவது  போல பூலோகத்தில்  குளிருக்கான பாதுகாப்பு உடைகளில் முகம் அல்லது கண்கள் மட்டும் தெரியும் பேய்கள் போல ...இல்லை இல்லை முகமூடி கொள்ளைக்காரர்கள் போல  காட்சி தருகின்றோம்.காலை 10,11 மணிக்கு மேல் வெயில் வருகையில் தலைப்பாக்கள் முகமூடிகளுக்கு  விடுப்பு.சீனாவில் 4 மீட்டர் தூரத்திற்கு கடலே உறைந்திருப்பதை தொலைக்காட்சியில் பார்த்தபோது இங்கு நிலவும் குளிருக்கு பெரிய கும்பிடு போடனும்.

சாக்ஸ்,கைகளில் கிளவுஸ்,2 அல்லது 3 ஸ்வட்டர் ,மப்ளர்,ஜர்கின்,ஜாக்கெட் ,கோட்,சால்வை என்று  பெரியவர்களும் குழந்தைகளும் குளிருக்கான பாதுகாப்பு ஆடைகளுடன் வீட்டிலும்,வெளியிலும்,பள்ளி கல்லூரிக்கு சென்றாலும் ,ஒரு சமயம் குளிரை நேசிச்சாலும் தண்ணீரைச்  சார்ந்த வேலைகளில் தண்டனை அனுபவிப்பது போலத்தான் செய்ய வேண்டியுள்ளது.5 டிகிரிக்கு கீழே வெப்பநிலை வந்தபோது பாத்திரம் விளக்க,துணிகள் துவைக்க (வாசிங்மெசினிலும்) சுடு தண்ணீர் உபயோகிக்க வேண்டியுள்ளது

 குளிருக்கான பாதுகாப்பு ஆடைகள் அதிகம் இல்லாமல் தண்ணீர் சுட வைக்க ஹீட்டர் இல்லை, வசிக்கும் இடத்தை தேவையான போது இதமாக வைத்துக்கொள்ள ரூம் ஹீட்டர் இல்லாமல் சாலையோர குப்பைகளை சேகரித்து சாலையோரத்திலே தீ மூட்டி குளிரை தனித்துக்கொண்டு டென்டுகளிலும்,குடிசைகளிலும்,பாலங்களுக்கு அடியில் வசிப்பவர்களையும் , அவர்களின் குழந்தைகளின் நிலைமையும் பார்க்க வருத்தமாக இருந்தாலும் குளிரை பொருட்படுத்தாமல் அவர்கள்  இயல்பாக அன்றாட வேலைகளில் ஈடுபடுவது பெரும் ஆச்சர்யம்.

காய் கனிகளின் விலை குறைவதும் புதிய காய் கனிகள் வருவதும் ஆறுதல்.குளிர்காலத்தில் இங்கு வேர்கடலையின் வரவும் விற்பனையும் அதிகம்.ஆனால் எங்கும் பச்சைக் கடலை கிடைப்பதில்லை.அவித்த வேர்கடலையின் ருசி அறிந்திராதவர்கள் இம்மக்கள்.கடலை மிட்டாய் சதுர,உருண்டை வடிவில் பார்த்திருப்போம்,
.இங்கு தட்டையாக வட்ட வடிவ கடலை மிட்டாய் பாருங்கள்.இதற்கு கஜக் என்று பெயர்.ஒரு கஜக் 175 கிராமிலிருந்து 200 கிராம் வரை இருக்கும்.


இங்குள்ள பெண்கள் குளிர்காலங்களில் ஸ்வெட்டர் முனைவதில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள்.கணிதத்தில் ஃபார்முலா வைத்து டெரிவேசன்ஸ் கொண்டுவருவது போல பல டிசைன்களை போட்டுப்பார்த்து ஸ்வட்டர்,தோப்பாக்கள் வடிவில் கொண்டுவருவது கண்டு நான் வியப்படைவேன்.ஹேன்ட் மேடா ரெடி மெடா என்று கண்டுபிடிக்க முடியாது. 

குழந்தைகளும் வயதானவர்களும் குளிரில்  அதிகம் பாதிக்கப்படுவதால்  மருத்துவர்கள்  பிசியாக இருக்கின்றார்கள்.பல பேசண்டுகள் பேசண்டிற்கு துணை வந்த்திருப்பவர்கள் ,நர்ஸ்கள் ,முகத்தில் ஒரு இன்ச் மேக்கப் குறையாமல் மருத்துவமனையில் காட்சி தருகின்றனர்.குளிரினால் பட்டுப்போன மரங்கள் 


கடந்த திங்கள் கிழமை மார்க்கெட்டிற்கு நடந்து  செல்லும்போது இந்த காட்சியை கிளிக்கினேன்.சாலையில் இடது வலது பக்கம் வாகனங்கள் செல்லும் நடுவே சின்ன பிளாட் ஃ பார்ம் இருக்குமே அங்க சேர் போட்டு அமர்ந்திருக்கின்றார் இந்த சாமியார் (பாபா).ட்ராபிக் போலிஸ் பிறகு விரட்டிவிட்டாரா என்னவென்று தெரியவில்லை.இவர் இங்கு அமர்ந்திருப்பது வெயிலுக்கா / வசூலுக்கா என்பது தெரியவில்லை.எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வார்கள்  " கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவனை தூக்கி மடியில் வை " என்று.இவரைப் பார்த்தவுடன் அந்த பழமொழி ஏனோ நினைவிற்கு வந்தது. குளிருக்கு  எதோ புது காய் வந்திருக்கென்று விசாரித்தால் தோல் உரித்து நறுக்கிய கரும்புத் துண்டுகள்.கிலோ 50 ரூபாய் என்றார்கள்.ரொம்ப சந்தோஷம் ,பல்லுக்கு கொஞ்சம்  வேலை இல்லைன்னு வாங்கினோம் .*மீண்டும் சந்திப்போம் *

Jan 5, 2013

பிறந்த நாள்

 பிறந்த நாள் யாருக்கு?என்னுடைய இந்த வலைப்பக்கத்திற்குதான் இன்று  3 வது பிறந்த நாள். இங்கு  என் பதிவுகளை வெளியிடத் தொடங்கியதில் இன்று இரண்டாம் வருடம் நிறைவடைகின்றது.

2011 ல் 80  பதிவுகளும்
2012 ல் 26   பதிவுகளும்

பதிந்துள்ளேன்.

2013 ஆம் வருடத்தில் இதுவே என் முதல் பதிவுமாகும்.

பின்தொடர்வோரில் (111 பேர் ) இணைந்துள்ளவர்களுக்கும்
பின்னூட்டங்கள் அளித்து நிறை குறைகளை தெரிவப்பவர்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

 இந்நாளில் என்னை மிகவும் கவர்ந்த பரதநாட்ய வீடியோ கிளிப்பிங்குகளை அரங்கேற்றுகின்றேன் .கண்டு மகிழுங்கள் . அனைவருக்கும் தாமதமான புத்தாண்டு நல்வாழ்த்துகள்.