*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 16, 2011

உருவமும்,மொழியும் அற்றவர் ?


ஹிந்தி அலைவரிசை ஒன்றில் திவ்ய சக்தி என்ற திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கையில் தெலுங்கு திரைப்படம் ஹிந்தி மொழிமாற்றம் செய்துள்ளது தெரிய வந்தது,தெலுங்கு திரையுலக முகங்களுக்கிடையே தமிழக கோவில் அமைப்பில் அமைந்துள்ள சந்நிதியில்  கே.ஆர்.விஜயா அம்மன் வடிவத்தில் பேசிக்கொண்டிருக்க, திரைப்படம்   பார்த்துக் கொண்டிருந்த,ஹிந்தி நன்றாக தெரிந்த என்  நான்கு வயது மகள் “ அம்மா, கோயில்ல நின்னு சாமி ஹிந்தி பேசுது பாரும்மான்னு “தமிழில் என்னிடம் சொல்லியபோது குழந்தையின் அறியாமையை நினைத்து ஒரு நொடி நகைத்து விட்டாலும்,எதோ பெரிய விசயத்தை உணர்த்திவிட்டாள் என்பது போல உணர்ந்து சாமிக்கு எல்லா மொழியும் தெரியும்,உனக்கு ஹிந்தி தெரிவது போல என்று சொல்லி அமர்த்தினேன்.
அதே கனத்தில் எனது சிறு வயது நினைவும் வந்தது.சிறு வயதில் தொலைக்காட்சியில் மகாபாரதம் மற்றும் சில புராண கதைகள் நாடகங்களாக ஒளிபரப்பான போது அப்பாவிடம் “என்னப்பா கடவுள் ஒன்று வாயசைக்கிறார்,அதற்கு முன்னோ,பின்னோதான் பேசுவது கேட்கிறது “ என்று நான் கேட்டதும்,ஹிந்தி மொழியில்,எடுக்கப்பட்ட கதை தமிழில் ஒளிபரப்பாகிறது என்று என் அப்பா விளக்கமளித்தாலும்,தமிழும் ஆங்கிலமும் அல்லாத மற்றொரு  மொழி  ஹிந்தி எனவும் அது கடவுள் மட்டுமே பேசக்கூடியது என்று  வெகு நாட்கள் நினைத்ததுண்டு.வீட்டில் கேலிக்கும் ஆளானதுண்டு.  பிறகு காலப் போக்கில் விபரம் தெரிந்து கொண்டேன்.
இப்போ என் மகள் கேட்டதில் கதை பல்ட்டி என புரிந்து கொண்டேன்.
                     
                                                     கடவுள்  இல்லை.   போகட்டும் !
கடவுள் இருக்கிறார்.ஆகட்டும் !
கடவுள் நான்தான்.   ஒழியட்டும் !
ஒவ்வொரு உயிரும் கடவுளாய்
வாழட்டும்!
உருவமும்,மொழியும் அற்றவர்
 !!கடவுள்.!!
       
                     

Feb 14, 2011

இவரின் பார்வையில் காதல் - பகுதி இரண்டு

  • எத்தனைக்கு அன்பு செலுத்துகிறோமோ,அத்தனைக்கும் சார்ந்திருக்கிறோம் நம் அன்புக்குரியவரும் நம்மைச் சார்ந்திருக்க வேண்டுமென எதிர் பார்க்கிறோம்
  •  
  • காதல் இன்னதென்று அறிய மாட்டோம்.அதன் அடையாளங்களான சந்தோசம்,வலி,பயம்,கவலை இவற்றை அறிவோம்.

  • காதல் இயல்பானது,காலையில் உதிக்கும் சூரியன் போல .

  • காதல் மெய்ப்பொருள்.தியானம் மெய்ப்பொருளின் அழகு.

  • காதல் துயரத்தின் முடிவு.எங்கே துன்பங்கள் விலகிப் போகிறதோ,துயரங்கள் விடை பெறுகிறதோ அங்கே  காதல் இருக்கிறது.

  • காதலுக்காக ஏங்குங்கள் ,ஏங்காமல் காதல் இல்லை.

                
  • காதல் என்பது ஒட்டுமொத்த நேசிப்பு.கருணையின் மறு வடிவம்.

  • புலன்களால் உணர்வது ஒரு சிந்தனை.அது காதலாகாது.

  • கற்பனை,எண்ணம்,பற்றுதல்,புறக்கணிப்பு எல்லாம் வெறும் புகைச்சுருள்கள்,புகை இல்லாத போது காதல் கொழுந்து விட்டு எரியும்.

  • உள்நோக்கமும்,நிர்பந்தங்கள் அற்றதுமான காதல் நிலைக்கும்.

இந்த காதல் வாசகங்களுக்கு சொந்தமானவர் திரு.ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

இவருடைய  புத்தகத்திலிருந்துதான்  இந்த காதல் வாசகங்களை சேகரித்தேன்.  


இவர் சொல்லாத விசியங்கள் இல்லை.அதில் காதலும் ஒன்று.

Feb 13, 2011

இவரின் பார்வையில் காதல்

மதிப்பிற்குரிய ஆனால் அதிக பிரபலம் ஆகாமல் போய்விட்ட ஒருவரின் புத்தகத்திலிருந்து சேகரித்த காதலுக்கான  உண்மை வாசகங்கள்.

  • காதலின்  நோக்கம் பற்றி சிந்திக்க முடியும்.ஆனால்  காதலைப் பற்றி சிந்திக்க முடிவதில்லை.

  • உண்மையில் அன்பாகட்டும்,காதலாகட்டும் எண்ணங்களற்ற நிலையில்தான் அதை அனுபவிக்க முடியும்.

  •  மனம் எவ்வித எதிர்பார்ப்போ,தேடலோ,பொறாமையோ,அச்சமோ,கவலையோ இல்லாமல் அமைதியாய் இருக்கும்போதுதான் காதல் சாத்தியம்.  

  • .காதல் என்றால் அப்படி இருக்க வேண்டும்,இப்படி இருக்கக் கூடாதென்று தமக்குத் தாமே கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறவரிடம்  தெளிவான  காதல் எப்படி இருக்கும்.

  • போட்டி ,பேராசை,போலித்தனம் அற்றது எதுவோ அதுவே காதல் .

  • கற்பு என்பது காதலில் இருக்கிறது,மனதில் அல்ல.

  • பாலுறவு அசுத்தமானதல்ல,பரிசுத்தமானதல்ல.

  • காதல் வேதனைக்கும்,மகிழ்சிக்கும் நடுவே பிரத்தியோகமானதாய் இருக்கிறது.

  • அவளை/அவனை காதலிக்கிறேன் என்கிறபோது பொறாமையும்,சொந்தம் கொண்டாடுகின்ற விருப்பமும்,ஆதிக்கம் நிறைந்த போகும்,இழந்து விடுவோமோ என்கிற அச்சமும் மறை முகமாய் உணர்த்தப் படுகின்றன.இவைகள் முடிவுக்கு வரும்போதுதான் உண்மைக் காதலை உணர முடியும்.

  • புத்திசாலிகளும்,தந்திரக்காரர்களும் காதல் என்னவென்று  அறியமாட்டார்கள்.

  • காதலை ஒப்பிட்டு ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்கிறபோது மனம் கலைப்படைகிறதே தவிர,தெளிவடைவதில்லை,விசாலமடைவதுமில்லை ,புதிதாய் ஒன்ரைச் சேர்த்துக் கொள்வதுமில்லை.ஒப்பிட்டுப் பார்க்கிறபோது அன்பு குறைகிறது அல்லது இல்லாமல் போகிறது.

  • காதலில் தன்னை மறக்கிறபோது சாந்தம் ஏற்படுகிறது.விடுபட்ட உணர்வு உள்ளே வியாபிக்கிறது.

  • காதலின் நோக்கம் பற்றி நம்மால் சிந்திக்க முடியும்,காதலைப் பற்றிச் சிந்திக்க முடிவதில்லை.

  • உண்மையில் அன்பாகட்டும்,காதலாகட்டும் எண்ணங்களற்ற நிலையில்தான் அதை அனுபவிக்க முடியும்.

  • காதல் என்பது விருப்பமல்ல,வெறும் ஞாபகமல்ல,இணைக்கின்ற செயலுமல்ல.
அவர் யார் என்பதை அடுத்த பதிவில் மற்றும் சில   காதலுக்கான  வாசகங்களுடன் தொடரும்.

காதல்


 காதலர் தினம் கொண்டாடுபவர் ஒரு பக்கம்,
காதலர் தினத்தை எதிர்ப்பவர் மறு பக்கம்,
                  இவர்களுக்கு இடையே
காதல் என்னவென்று ஆராயும் விடலைகள்,
காதலில் விழுந்துவிட்ட விட்டில் பூச்சிகள்,
ஒரு தலைக் காதல்கள்,
உண்மை காதல்கள்,
தெய்வீகக் காதல்கள்,
கானல் நீர் காதல்கள்,
கவுரவக் காதல்கள்,
பெருமையான  காதல்கள்,
டேட்டிங் காதல்கள்,
முடியாத  காதல்கள்,
முறியடிக்கப்பட்ட காதல்கள்,
கள்ளக் காதல்கள்,   
ஏமாற்றப்படும் காதலிகள்,
ஏமாற்றப்படும் காதலன்கள் ,
காதலென்ற  பெயரில் வரம்பு மீறல்கள்,
காதலிக்கப் படாதவர்கள்,
காதலுக்காக ஏங்குபவர்கள்,
நட்பை காதலாக்கியவர்கள்,
காதலை நட்பாக்கியவர்கள்,  
திருமணத்தில் முடியும் காதல்,
திருமணத்தில் முடியாத காதல்,
திருமணத்திற்கு முன்னும்
பின்னும் காதல்
ஒன்றுதான்,
வித்தியாசம்தான் நூறு !!!  
காதலர் தினத்தைக் கொண்டாடினால் கொண்டாடு,
எதிர்ப்பு தெரிவித்து போராடினால் போராடு ,
நான் போறேன் என் வேலைய பாக்க
அப்பதான் கிடைக்கும் எனக்கு
ஒரு வேலை சோறு,
எம்பாடு  பெரும்பாடு:
என் காதல் என்
தொழிலோடு :

Feb 11, 2011

ஈஷா தியான லிங்க கோவில்


கோவை சிறுவாணி சாலையில் முப்பது கி.மீ தொலைவில் ஈஷா தியானலிங்க கோவில் சத்குரு ஜக்கி வாசு தேவ் அவர்களின் தலைமையில் உருவாகியுள்ளது.கோவில் என்று சொல்வதைவிட விங்ஞானப்பூர்வமாக அமைக்கப்பட்ட தியானலிங்க மண்டபம்.இங்கு சென்று வந்த அனுபவத்தை பகிரவே இந்த பதிவு. தற்பொழுது சில சாமியார்களுக்கு நற்பெயர் இல்லையென்றாலும் இந்த பதிவு இவரை  "பின்பற்றுக" என்பதற்கல்ல,மற்ற சிறந்த இடங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது போவோமல்லவா?அது போல அனைவரும் இங்கு ஒரு முறை செல்ல வேண்டும் என்பது என் ஆசை. கோவை காந்திபுரத்திலிருந்து 14 டி பேருந்து செல்கிறது.

கணவர் எப்படியோ சத்குரு ஜக்கி வாசு தேவ் அவர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டுவிட்டார். ஆன்மீகத்தில் பிரபலமாகும் பெரியோர்கள்,சாமியார்கள்,சந்நியாசிகள் ஆன்மிகம் என்ற பெயரில் தனக்கென்று தனி முத்திரை பத்தித்தவராக இருப்பார்கள் .ஆன்மிகம் என்பது ஒன்றுதான் என்றாலும் அவரவர் நடையில்,வழியில் என்ன சொல்கிறார்கள்  என்பதை   தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமுள்ள கணவருக்கு,ஆழியார் பெரியவர்,ஓஷோ,ஜே.கிரிஷ்ணமூர்த்தி,இவர்களின் வரிசையில்(நம்ம நித்யானந்தாவும் வந்தார் ) தற்பொழுது சத்குரு ஜக்கி வாசு தேவ் அவர்கள்.இவருடைய தியானலிங்க கோவிலுக்கு போக வேண்டுமென்ற சமீபத்திய ஆசை கடந்த ஆண்டு 2010 அக்டோபர்  6  ஆம்  தேதி நிறைவேறியது.      

கோயமுத்தூர்   என்கிற பெயரை புத்தகம்,பஸ்,ரயில்,வலைப்பதிவுகள் இவற்றில் மட்டுமே படித்ததுண்டு.முதன் முறையாக கோயமுத்தூர் சென்றோம்.மதுரையின் எழிலை ரசித்த எனக்கு ஒரு சாயலில் கோயமுத்துரும் மதுரைக்குள் செல்வது போலவே இருந்தது.மிக அழகான ஊர்.அன்று மழையும் இப்போ வரபோறேன், வரபோறேன்னு சொல்லிக்கொண்டிருக்க பயணம் செல்லமாக சென்றது.சில நிமிடங்களில்  அழகான காட்டிற்குள் செல்வது போல இருந்தாலும்,பக்கமாக தெரிந்த மலைகளும் அதன் மேல் மேகங்கள் தொட்டு தொட்டு விளையாடுவது போல இருந்தைக்கண்டு,இத்தனை நாள் இந்த  ஊர்பக்கம் வராமல் போய்விட்டோமென  நிணைக்க வைத்தது.ஒரு காட்டிற்குள்தான் இறக்கிவிடப் பட்டோம்.தெற்கு வடக்கு ஒன்றும் புரியவில்லை.எதிரே சத்குரு ஜக்கி வாசு தேவ் அவர்களின் பெரிய பேனர் கண்ணில் பட்டது.எதார்த்தமாக வந்த எங்களுக்கு அந்த பேனரில் சத்குரு ஜக்கி வாசு தேவ் அவர்களின் சொற்பொழிவு அன்று மாலை ஆறுமணிக்கு  இதே தியானலிங்க மண்டபத்தில் நடைபெறுவதாக குறிப்பிட்டுருந்ததவுடன் இத்தனை நாள் புத்தகத்திலும் சீடியிலிம் ,தொலைக்கட்சியிலும்  பார்த்த   சத்குருவை நேராக பார்க்க வாய்ப்பு கிடைக்க போவதில்  கணவருக்கு சின்ன மகிழ்ச்சி.(ஆனால் நான் என்னவர் அளவுக்கு கிடையாது, என்னத்த பாத்து,என்னத்த கேட்டு ....................) 

நாலைந்து நடையில் அங்கு வந்து செல்லும் பேருந்துகளின் நேரங்கள்,எண்கள் குறிப்புடன் வழிகாட்டி பலகை இருந்தது.ஏற்கனவே தொலைக்காட்சி முதல்  யு  ட்யுப்  டவுன்லோடிங் வரை இந்த இடத்தை லைட்டிங் எப்பக்டுடன் பார்த்த எனக்கு   காலை
ஏழு  மணியளவில் பனிச்சாரலில் உள்நுழைந்த போது நாம பாத்த இடம்தானானு சந்தேகம் வந்தது.எதிரே பெரிய அழகான நந்தி, பக்கத்தில் மண்டபங்கள் சில வழிகள்,எங்கே முதலில் போகணும்னு தெரியல,அண்ணாந்து பார்த்தால் அந்த மண்டபத்தின் தூண்களில் ஏகப்பட்ட கருநாகங்கள் சிலைகளாக, அந்த நந்தியும் கல்லால் செய்யப்பட்டது அல்லவாம்,உலோகத்தால் செய்யப்பட்டதென  ஒருவர் சொன்னார்.அந்த நந்தியை கடந்து வரும்போதே தமிழகத்திற்குள் தான் இருக்கிறோமா என்ற உணர்வு,சுத்தம்,நிசப்தம் காணப்பட்டது.
காலை ஏழு மணிக்கு அங்கு பணிசெயபவர்கள் தவிர வருகை தந்திருந்தவர்கள் குறைவு,இந்த மண்டபத்தை கடந்தவுடன் சுத்தமான திறந்த வெளி உணவகம் ஆனால் க்லோஸ்ட்    என்று எழுதிய பலகை இருந்தது.அங்கும் இங்கும் விசாரிக்கையில்தான் அந்த உணவகத்திற்கும் மண்டபத்திற்கும் இடையில் அருமையான மலை முகடுகள் வெள்ளியங்கிரி மலைச்சாரல்  மேகமா,பனிப்போர்வையா என வித்யாசம் தெரியாமல் வெண் பட்டு உடுத்திய தேவதையா என யோசிக்க வைத்தது.அந்த காட்சிக்கு அன்றைய வானிலையும் காரணமாக இருக்கலாம்,லேசாக மழை தூரத் தொடங்கியது.

கொண்டு வந்த சுமைகள்,அணிந்திருந்த காலணிகள் வைக்க இடம் காட்டப்பட்டது,தீர்த்த குண்டம் இருக்கும் இடத்திற்கு வழி காட்டினர்,அங்கு நீராடிவிட்டு தியானலிங்க மண்டபத்திற்கு போகலாம் என்றனர்,ஒருவருக்கொருவர் அக்கா,அண்ணா என்றழைத்தனர். நங்கள் அங்கங்கு நின்று வேடிக்கை பார்த்து,பேசி,அந்த கருநாகங்களை தூண்கள் தாங்கி நிற்கும் மண்டபத்திற்குள் செல்ல எட்டரை மணி ஆகிவிட்டது.மக்கள் கூட்டமும் பெருக ஆரம்பித்துவிட்டது,அமைதி மட்டும் அப்படியே இருந்தது.

வந்த வழியே தீர்த்த குண்டம் செல்லும்போது,வாசலில் வழிநடத்தும் ஒருவர் தாங்கள் முதன் முறை வருகிறீர்களா,ஏற்கனவே வந்துள்ளீர்களா என கேக்கப்பட்டு,முதன் முறை வந்தவர் ஒரு பக்கமும்,ஏற்கனவே வந்துள்ளவர் ஒரு பக்கமும் அனுப்பப்பட்டோம்,வித்யாசம் என்னவெனில் முதல் முறை செல்பவர்களுக்கு இந்த ஸ்தலம் உருவான வரலாறு ,தியானலிங்கம் உள்ள கட்டிட அமைப்புகள் பற்றிய வீடியோ ஓளிபரப்பு காட்சிகளை  பார்ப்பதுதான்.
அத்தனை அமைதியான இடத்தில் கொலுசு அணிந்திருப்பவர்கள்,சலங்கை மெட்டி போட்டிருப்பவர்கள் அந்த ஆபரணங்களை கட்டாயமாக கழற்றியாக வேண்டும்,மொபைல்கள் நிசப்த நிலையில் இருக்க வேண்டும்,இதெல்லாம் செய்து விடலாம், குழந்தைகளை அழைத்து வருபவர்களுக்கு அவஸ்த்தையாக இருந்தது,ஏனெனில் குழந்தைகளுக்கு என்ன புரியும்,புது இடத்தை கண்டவுடன் குழந்தைகளுக்கு குஷியில்,ஆயிரம் கேள்வி கேப்பது,அங்கும் இங்கும் ஓடுவது,நிசப்தம் நிலவும்போது குழந்தை நார்மலாக பேசினாலே அதிக சப்தமாக கேக்கிறது,அங்கங்கே நிற்கும் சேவகர்கள் "உஷ்  உஷ்" னு சொல்லுவதுமாக  இருந்தனர்.

உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.லிங்க பைரவி சந்நிதானம்,எதிரே  மூன்று வித சிவ  பெருமானின் தலை  வடிவங்கள் ஆளுயரத்திற்கும் மேலே காணப்பட்டது.ஆண்கள்,பெண்களுக்கு தனித்தனியே  தியான மண்டபங்கள் இருந்தது.நீராடிவிட்டு இங்கெல்லாம் மீண்டும் வந்து உள் நுழைவோமென தீர்த்தகுண்டம் நோக்கி சென்றோம்.

தீர்த்தகுண்டம் செவ்வக வடிவிலும்  பூமியிலிருந்து  முப்பத்தைந்து அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளதாம்,இங்குள்ள சிவலிங்கம் கெட்டிப் படுத்தப்பட்ட பாதரசத்தால் ஆனதாம்.இதற்கு நேர் மேலுள்ள அரைக்கோள வடிவக் கூரையில் இயற்கை சாயங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் மகா கும்ப மேளாவை சித்தரிக்கிறதாம். 

ஆண்கள் தனியாக,பெண்கள் தனியாக நீராட அனுமதிக்கப் படுகின்றனர்.வருபவர்களை எல்லாம் அரை மணி நேர இடைவெளியில் அனுப்பினர்.ஒரு கிண்ணத்தில் வேப்பிலை அரைத்து வைக்கப்பட்டிருந்தது.விரும்பினால் எடுத்து உண்ணலாம்.நீராடும்போது தனி அறையில் குளித்த பிறகு ,அங்குள்ள பெண்களுக்கு  நைட்டி போன்ற கவுனும்,ஆண்களுக்கு துண்டும் காவி நிறத்தில் கொடுக்கப்பட்டது,எல்லோரும் ஒரே  வித ஆடையில் தீர்த்த குண்டத்திற்குள்  சென்றோம்,எதோ அகன்ற கிணற்றுக்குள் போவது போல இருந்தது,அருவி போல தண்ணீர் ஒரே சீராக மேலிருந்து வந்து கொண்டே இருக்கிறது.படிகளில் இறங்கினால் மிகுந்த குளிர்ந்த சுத்தமான நீர்.தண்ணீருக்குள் சிவலிங்கம்.சிவலிங்கத்தை சுற்றி தியான நிலையிலும்,எதோ பிராத்திக்கும் நிலையிலும் பெண்கள் இருந்தாலும்  கொஞ்சம் பயமாகவும்,வித்தியாசமாகவும் இருந்தது.பிறகு நமது ஆடைகளுக்கு மாறியவுடன் தியானலிங்கம் அமைந்திருக்கும் இடத்திற்கு சென்றோம்.

தியானலிங்கம்

அங்கு முதலில் தென்பட்டது ,தியானம் செய்வதற்கு மதங்களின் மனங்களும் ஒற்றுமை பெற வேண்டும்,மத பேத வித்யாசமில்லை என்று சொல்வதற்காக கீழே காணப்படும் வடிவம்  வைக்கப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.
அங்கே வருபவர்களை வழிநடத்துபவர்கள் கை மற்றும் கண் சைகையில்தான் பேசினார்கள்.அப்படியொரு அமைதி.பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை அனுமதிக்கிறார்கள்.குழந்தைகள் அமைதி காக்க வில்லையெனில்,வெளியில் அழைத்துச்  சென்று விடுங்கள் என்று சைகையிலே சொன்ன போது மனசு கஷ்டமாகத்தான் இருந்தது.    
இப்படியான லிங்க விளக்குகள் விற்கப்பட்டன,தியானலிங்கத்தின் அருகில் இதை நம் கைகளாலே வைக்கலாம்.ஆனால் விளக்கு வெளியிலே ஏற்றி உள்ளே கொண்டு சென்றோம்.இத்தனை தற்காப்பும் ஏன் என்று உள்ளே போனவுடன்தான் தெரிந்தது,எப்படித்தான் சத்குரு அவர்களின் மனதில் தோன்றி உருவானதோ தெரியவில்லை,மிக ஆச்சரியப்பட்டேன்,நமக்கு நாம் பெரு மூச்சு விட்டாலும்,பாதங்களை அழுத்தி ஊன்றினாலும் கூட அதற்கு சமமான அத்தனைஎதிரொலிகள்.பதிமூன்று அடி உயரமும் ஒன்பதடி அங்குலமும்  கொண்டதாம் இந்த  சிவலிங்கம்.பெரிய நாகம் சுற்றியுள்ளது,வழக்கமான முறையில் சிவலிங்கத்தின் மேல் தண்ணீர் சொட்ட,சேர்ந்த நீர் நாகத்தின் வாய் வழியாக சொட்டுகிறது,தோரயமாக ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு அமரலாமென நினைக்கிறேன்.அந்த விளக்கை மெதுவாக வைத்த போது கூட எதிரொலித்தது.பலரும் தன்னை மறந்த நிலையில் த்யானம் செய்து கொண்டிருந்தனர்,எனக்கு எப்படி தெரியும்னு கேக்கறிங்களா?நான் எல்லோரையும் வேடிக்கை தான  பார்த்துக் கொண்டிருந்தேன்,நேரம் முடிந்தவுடன் வெளியில் அனுப்பப்பட்டோம்.அந்த பிரமிப்பிலிருந்து  மீள அதிக நேரமெடுத்தது.ஏழு கிழமைகளில்    இங்கு வந்து தியானம் செய்யும் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு  பலன் உண்டாம்.
தியானலிங்க சக்தி வளையத்திற்குள் வரும் அனைவருக்கும் ஆன்ம விடுதலைக்கான விதை விதைக்கப் படுவதாகவும் குரு வழிகாட்டலின் மூலம் கிடைக்கும் தியானப் பலனை தியானலிங்கம் தருவதாக சொல்லப்படுகிறது.

பத்துமணிக்கு மேலே காலை உணவு சாப்பிட்டோம்,மிக ருசியாக இருந்தது,பாகற்க்காய் சிப்ஸ்,கம்பு மாவு மற்றும்  சில நார்மல்  உணவுகளும் விற்பனையில் இருந்தது.பன்னிரெண்டரை   மணிக்கு ஓங்கார தீட்சை  (பூஜை) என அறிவிக்கப் பட்டிருந்தது.முதல் நாள் தீபாவளி என்றாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிய ஆரம்பித்துவிட்டது,ஆனாலும் அத்தனை நிசப்தம்.உணவகத்தின் எதிரே சின்ன விற்பனை நிலையமும்  இருந்தது,அங்கும் போய் பார்த்தோம்,ஜக்கி வாசுதேவ் அவர்களின் புகைப் படங்கள்,புத்தகங்கள்,சீடிக்கள் ஒரு பிரிவிலும்,மற்ற பிரிவில் உடைகள்,மூலிகை சாம்பிராணி,சோப்புகள்,எண்ணைகள்,கைப்பைகள் இப்படியான பொருட்களும் இருந்தது. எல்லாம் அதிக விலையாகத்தான் இருந்தது.


லிங்க பைரவி 
  
பிறகு லிங்க பைரவியை   தரிசிக்க சென்றோம்,அங்கு கால்களை கழுவிச் செல்வதர்காக வைக்கப்பட்டிருந்த நீர்க் குழாய்களும் வித்தியாசமாகவே இருந்தது.உள் செல்வதற்கு முன் வருபவர்களை வெளியிலே நிற்க வைத்து லிங்க பைரவி பற்றியும் ,அங்கு சமர்ப்பணத்திற்காக  விற்கப்படும் .நெய் தீபம்,தாக நிவாரணம்,தேவி நேத்ரா அர்ப்பனை,சர்ப்ப சேவா,கேஷ அர்ப்பணம்,தேவி அபய சூத்திர,மாலை அர்ப்பணம் என்பவைகள் பற்றி
மற்றும் பலன்கள்  பற்றியும்  விளக்கம் தந்த பிறகு வரிசையில் அனுமதிக்கப்பட்டோம்.இவைகள் சில வடஇந்திய தோரணையில் இருந்ததாக உணர்ந்தேன்.உள்ளே பெண்களே பூஜைகள் செய்கிறார்கள்,வரும்போது எதோ ஒரு ஆசனத்தை குறிக்கும் வகையில் நமஸ்காரம் செய்யவேண்டுமெனவும் அதே போல வாசலில் ஒரு சிலையும் பூமியில் பதித்த வண்ணம் இருந்தது.

பிறகு பன்னிரெண்டரை மணிக்கு ஓங்கார தீட்சை காண மீண்டும் தியானலிங்க மண்டபத்திற்குள் சென்றோம்.ஒரு வெளி நாட்டு பெண்தான் வெறும் பித்தளை கிண்ணம் ஒன்றின் வரும்புகளில் சிறிய பித்தளையாலான தடியில் (ஒரு விரல் அளவுதான்,)வருடி வருடி  தன்னுடைய மெல்லிய குரலில் ஓங்கார தீட்சை தருவித்தார்.ஆதியும்  அந்தமும் இல்லாத இம்மந்திரம் இந்த தியானத்தை மேற்கொள்பவரின் உள்நிலை பரிமாணங்களோடு,சமநிலையையும்,அமைதியையும் அளிக்க வல்லதாம்.ஒன்னேகால்  மணிவரை நடைபெற்றது.

பிறகு மதிய உணவிற்கு சென்றோம்.அமைதியான மக்கள் கூட்டம்
திறந்த  வெளி உணவகத்தில் பணம் செலுத்தி டோக்கன் பெற்று மற்றொரு இடத்தில் உணவு நாமே பெற்றுக்கொள்ள வேண்டும்.இருப்பில் என்ன உள்ளது என்பதை பலகையில் எழுதி போட்டுக் கொண்டே இருந்தனர்,மக்கள் கூட்டத்தில் பக்கத்தில் வேறு எங்கும் உணவகமும் இல்லை என்பதால் உணவகம் நிரம்பி வழிந்தது.
ஸ்பந்தா ஹால்   
ஸ்பந்தா ஹால்  என்று ஒன்று இருந்தது.தியான  முகாம் என்று சொல்லப்பட்டது.அங்கு குழந்தைகள் வைத்திருப்போர் அனுமதிக்கப் படவே இல்லை.மாலை ஆறு மணிக்கு நடை பெறப் போவதாக இருந்த சத்குரு அவர்களின் சொற்பொழிவு  மழை காரணமாக ஸ்பந்தா ஹாலுக்கு மாற்றப்பட்டு விட்டது.
அன்று தயானந்த சரச்வதிகளும் மாலை வந்திருந்தார்.அவருக்கு பாத பூஜைகள் செய்து அங்கேயே பயிலும் பிள்ளைகள் எதோ ஒரு சமஸ்கிருத பாடலை பாடி வரவேற்றது இனிமையாக இருந்தது.எங்கோ செல்லும் மனதை இழுத்துப் பிடித்து என்னுடனே வைத்துக் கொண்டது போல உணர்ந்தேன்.குழந்தைகள் அனுமதி இல்லை என்பதால் என் மகளுடன் தியானலிங்க மண்டபத்தின் வெளிப்புரத்திலே ஸ்பந்தா ஹாலுக்கு சென்ற கணவர் வரும் வரை காத்திருந்தோம்.ஏழு மணிக்கெல்லாம் முகாம் முடிந்துவிட்டது.தயானந்த சரஸ்வதி சுவாமி மற்றும் ஜக்கி வாசு தேவ் அவர்களின் சொற்பொழிவும் பொதுமக்களின் ஆன்மீக கேள்விகளுக்கு  பதிலும்,முந்தைய சொற்பொழிவின் சீடியும் போடப்பட்டதாம்.இரவு எட்டு மணிக்கெல்லாம் அங்கிருந்து புறப்பட்டுவிட்டோம்

இங்கே சற்று பொறுமையுடன் இந்த கிளிப்பிங்கை பார்க்கலாம்  
.
·         ஈஷா அறக்கட்டளை இங்கு ஈஷா யோகப் பயிற்சி
       சமூக,கல்விமுறை,சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான கிராம           புத்துணர்வு இயக்கம் ,பசுமைக்கரங்கள் திட்டம்,ஈஷா வித்யா போன்ற திட்டங்களை தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் செய்யல படுத்தி வருகிறது. 








,






Feb 7, 2011

முதன் முதலில் எழுத்து சொல்லிக்கொடுத்தவரை ஞாபகமிருக்கா?

எழுதத் தெரிந்த அனைவருக்கும்
எழுத்துக்களைத் தெரியும்,
முதன் முதலில் எந்த எழுத்தை
யாரிடம் எழுதக் கற்றுக்கொண்டோம்?
அப்பவிடமா ?அம்மவிடமா?ஆசிரியரிடமா?
அப்பாவிடமிருக்கலாம்,
அம்மாவிடமிருக்கலாம்,  
ஏன் ஞாபகமில்லை ?
நினைவு வந்துவிட்டது ஆசிரியர்தான்.
எனில் எந்த ஆசிரியர் ?
ஞாபகமில்லை.
முதல் பள்ளி,
முதல் மதிப்பெண்,
முதல் பரிசு,
முதல் பயணம்,
முதல் சுற்றுலா ,
முதல் சமையல்,
முதல் நண்பன்,
முதல் எதிரி,
முதல் வேலை ,
முதல் ஊழியம்,
முதல் ஏமாற்றம்,
எல்லா முதலும்
ஞாபகமிருக்க
முதன் முதலில்
எழுத்தறிவித்தவர்
ஞாபகமில்லாமல்
போனது தவறுதான்,
இனி வரும் தலைமுறைகளுக்காவது
ஞாபகப்படுத்தாமல் போனால் தப்புதான்.
எழுத்தறிவித்து,படிப்பறிவித்தவர்
நம்மை முன்னேற்றி,நமக்கு பின்தான்
நிற்பார்,அவருக்கு  சொத்து எழுதித்
தர தேவையில்லை,ஞாபகத் தேவைதான்.
அதுவே நன்றியாம் அவருக்கு.

Feb 2, 2011

நிலவு ஒளி பள்ளிகள்

கடந்த ஞாயிற்றுக் கிழைமை அன்று காலை பதினொன்று  மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் விசு அவர்களின்  மக்கள்  அரங்கம் ஒளிபரப்பானது.அன்று இடம்பெற்ற மாவட்டம் காஞ்சிபுரம்.பொதுவாக இந்த மக்கள் அரங்கத்தின் பேச்சுக்களும்,கருத்துக்களும் தரமானதாகவே இருக்கும்.விசு சார் அவர்களும் அவருடைய ட்ரசட்லிருந்து பலருக்கும் உதவிகள் செய்து வருகிறார்,என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று.  
கடந்த சில வாரங்களாக காஞ்சிபுர பேச்சாளர்கள் தங்கள் கருத்துக்களை ஜீரோவிளிருந்து ஒன்று ,இரண்டு என்று எண்களை தலைப்பாகக் கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.ரெண்டுங்கெட்டான் என்ற தலைப்பில் கூட ஒருவர் பேசினார்.
 காஞ்சிபுரத்து மாணவர் ஒருவர்  பேசியது பார்த்தோரை நிச்சியம் கலங்க வைத்திருக்கும். நிலவொளி பள்ளிகள் என்று பள்ளிக்கூடங்கள் உள்ளதாகவும்,அதில் அடிப்படை எழுத்தறிவும், படிப்பறிவும் சொல்லிக் கொடுக்கப்பட்டு ,ஐந்தாம்,எட்டாம் ,பத்தாம்,பன்னிரெண்டாம் வகுப்புகள் தேர்வுகள்   நடத்தப்பட்டு மாணவர்களை கல்விச் செல்வங்களாக உருவாக்கப்படுகிறார்கள் என்று அந்த மாணவர் சொன்னார்.
இதில் குறிப்பான விசியம் என்னவென்றால் நிலவொளி பள்ளிகளுக்கு பெயர்க் காரணம் என்னவென்றால் நடைமுறையில் உள்ள பகல் நேர பள்ளிகளில் படிக்க முடியாத மாணவர்கள்,குடும்ப வருமானத்திற்காக பகலில் வேலைக்கு போகும் அனால் எப்படியாவது படிக்க வேண்டுமென்ற ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் பணி நேரத்திற்கு பிறகு மாலையில் மட்டுமே நடைபெறும் இந்த பள்ளிகளில் சேர்ந்து படித்து தேர்வு எழுதுகிறார்கலாம்.
நாற்பது நிலவொளி பள்ளிகள் நடைபெற்றதாம்.ஆனால் அதை தொடர்ந்து நடத்துவதற்கு இடர்பாடுகள் வந்ததால் தற்பொழுது இரண்டு நிலவொளி பள்ளிகள் மட்டுமே உள்ளதாம்.அந்த மாணவன் தற்பொழுது ஒரு கல்லூரியில் படிப்பதாகவும்,தன் கல்வித் தாகத்திற்கு உதவிய அத்தகைய பள்ளிகள் தொடர்ந்து  நடைபெற போராட்டங்கள் நடத்தியதாகவும்,தொடர்ந்து போராடுவேன்,என்றும் தன்னைப் போன்ற மாணவர்கள் பயன் பெற வேண்டுமென்றும் சொன்னார்.
 வேதனையானது என்னெவென்றால் நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரத்தில் சப்தமில்லாமல் மற்றொன்றும் நடைபெறுகிறதாம்.என்னவெனில் பிள்ளைகளை அடகு வைப்பது.வறுமை காரணமாகவும்,பணத் தேவைகளுக்காகவும் தங்களது பிள்ளைகளை நேசுவுத் தொழில் நடைபெறும் ஆலைகள்,நிறுவனங்களில் அடகுவைத்து எவ்வளவு பணம் பெற்றார்களோ அந்த கடன் அடையும் வரை பிள்ளைகள் அங்கு வருடக் கணக்கில் கூட வேலை செய்ய வேண்டுமாம்.
அந்த மாணவனும் தன் சகோதிரியின் திருமணத்திற்காக முப்பதாயிரம் ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டதாகவும் இடையே தன் தந்தை இறந்து விட்டதாகவும் வேலை பார்த்து தானே மீண்டு வந்ததாராம். அந்த மாணவரின் தீர்க்கமான பேச்சும் பார்வையும் அவரின் மன உறுதியும்  பார்ப்போரை   கலங்க வைத்தது.
 ஏதாவது தொண்டு நிறுவனங்கள்,உதவும் கரங்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்று .இந்த பதிவை தான் உதவியாய் வெளியிடுகிறேன்.இத்தகைய மாணவர்களின் கல்விப் பசிக்கு உதவுங்கள் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.