புது தில்லியில் நேரு ப்லேஸ் என்ற இடத்தில் லோட்டஸ் டெம்பிள் என்ற வழிபாட்டு இல்லம்,அனைத்து பிரிவினருக்கான தியான ஸ்தலம் ஒன்று உள்ளது.இதன் வடிவம் தாமரை மலர் போன்றது.இந்த வழிபாட்டு இல்லம் ஒன்பது பெரிய நீர் குளங்களால்
சூழப்பட்டுள்ளது,இது வழிபாட்டு இல்லத்திற்கு அழகை உயர்த்துவதோடு பிரார்த்தனை அறைக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது.அருகே அலுவலகம்,கருத்தரங்கு அறைகள்,நூலகம் மற்றும் ஒலி,ஒளி அறைகள் உள்ளது.ஏற்பாடு செய்கிற நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப பிரார்த்தனை அறையில் பஹாய் சமயம் மற்றும் முன்புவந்த வெளிப்பாடுகளின் புனித நூல்களிலிருந்து பிரார்த்தனைகள் மற்றும் வாசகங்கள் வாசிக்கப்படும் அல்லது சொல்லப்படும்.மற்ற நேரங்களில் அமைதியான முறையில் தியானம் செய்ய அனைவரும் வரவேற்க படுகிறார்கள்.சொற்பொழிவுகள்,சமயச் சடங்குகள் பிரார்த்தனை அறையில் செய்வதற்கு அனுமதிக்கப் படுவதில்லை.
பஹாய் சமயம் :
பஹாய் சமயம் 1948 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகத்தில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அதிகாரம் பெற்ற அரசு சார்பற்ற NGO ஸ்தாபனமாக அங்கத்துவம் வகிக்கின்றது.சமூக பொருளாதார சபையிலும்(ECOSOC), ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியகத்திலும்(UNICEF),ஆலோசனை கோரும் அந்தஸ்த்தை பெற்றுள்ளதோடு ஐக்கிய நாடுகள் தகவல் தொடர்பு மையத்தின் அலுவலகத்துடன் பல தேசிய சபைகளின் பதிவுகள் அதிகாரப் பூர்வமாகப் பதியப்பட்டுள்ளன.இந்த சமயம் 360 நாடுகள்,ராஜ்யங்கள்,தீவுகள்,என்பவற்றில் 2112 க்கும் அதிகமான பிரிவுகளைக் கொண்டுள்ளது.
லோட்டஸ் டெம்பிள் :
· 1953 ல் கட்டுமான பணிக்காக நிலம் வாங்கப்பட்டது.
· 26.6 ஏக்கர்
· 34.27 மீட்டர் உயரம்
· 1300 பேர் ஒரே சமயத்தில் அமரலாம்
· 27 (தாமரை) இதழ்கள் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது .
· 9 குளங்கள்
· 70 மீட்டர் விட்டம்
· திரு பர்பூர்ஷ் சபா என்பவர் கட்டிடத்தை வடிவமைத்துள்ளார்.
· ஏப்ரல 21,1980 ல் தொடங்கப்பட்டது.
· டிசம்பர் 24,1986 ஆம் ஆண்டு கடவுள்,மதங்கள்,மற்றும் மனித குலத்தின் ஒற்றுமைக்காக இந்த வழிபாட்டு இல்லம் துவங்கப்பட்டுள்ளது.
· இதழ்கள் வெள்ளை சிமென்ட் கலவையால் செய்யப்பட்டு,மேல்பகுதி வெள்ளை நிற கிரேக்க சலவை கற்களால் பதிக்கப்பட்டுள்ளது.
· இந்தியாவிலும் உலகத்தின் மற்ற பகுதியில் உள்ள பஹாய் சமுதாய மக்கள் தாங்களாக முன்வந்து கொடுத்த நன்கொடையின் மூலம் இந்த வழிபாட்டு இல்லம் கட்டப்பட்டுள்ளது.
· இந்த லோட்டஸ் டெம்பிள் இந்தியாவின் சுற்றுலாத் தளமாக உள்ளது.
· மேற்கு சமோவா,ஆஸ்திரேலியாஉகாண்டா,பனாமா,ஜெர்மெனி,இலி நியாஸ் போன்ற நாடுகளில் பஹாய் சமயத்திற்கான நினைவு மற்றும் வழிபாட்டு இல்லம் வெவ்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
பஹாய் கொள்கைகள்
· மனித ஒற்றுமை
· உண்மையை சுயேட்சையாக ஆராய்தல்
· அடிப்படியில் சமயங்களெல்லாம் ஒன்று.
· சமயமும் விஞ்ஞானமும் ஒத்து இயங்க வேண்டும்
· ஆண் பெண் சமத்துவம்
· எல்லாவித துவேசங்களையும் நீக்குதல்
· சர்வதேச கட்டாயக் கல்வி
· உலக அமைதி
இங்கு சென்று வந்த அனுபவம்.
தில்லி வந்த புதிதில் ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு இடங்களுக்கு சுற்றிப் பார்க்க சென்றதில் லோட்டஸ் டெம்பிளும் ஒன்று. உள் நுழைந்த போது அழகான அமைதியான சுத்தமான நீண்ட தோட்டத்தின் தொலைவில் தாமரை வடிவத்தில் கட்டிட அமைப்பு தெரிந்தது.நடந்து போகவே ஆசையாக இருந்தது.கொஞ்சம் தாழ்வான பகுதி வந்தது,எதோ நீண்ட அறை போல இருந்தது,அது காலணிகளை பாதுகாக்கும் இடம்.கட்டணம் இல்லை.மக்கள் கூட்டம் அதிகம் என்றாலும் காலணிகளை வாங்குபவரும் கொடுப்பவரும் காலணிகளை ஒப்படைக்கும் பொது மக்களிடம் கனிவாக நடந்து கொண்டதை அங்குதான் முதன் முதலில் பார்த்தேன்.அது மட்டுமல்ல.பக்கத்திலே சாக்குப் பைகள் கிடந்தது,இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் காலணிகளை ஒப்படைப்பதாக இருந்தால் அந்த சாக்குப் பையில் போட்டு தர வேண்டும்.இந்த முறையை இங்குதான் முதலில் பார்த்தேன்.
சிறிது தூரத்தில் உயரமான பகுதி வந்தது,அதில் தாமரை வடிவ கட்டிடத்திற்குள் ஒரு இதழின் உள் செல்வதற்கான வழி சிவப்பு கம்பள விரிப்புடன் இருந்தது. சுற்றிலும் (நீச்சல் குளம்) போல வருபவர்களை வரிசையாக,அமைதியாக வரவேற்க, வரிசையாக ஆண் பெண்கள் நின்றனர்.அவர்கள் வருபவர்களின் புறத் தோற்றத்தை வைத்து எந்த மொழியினர் என்று கண்டுபிடித்து விடுகின்றனர், எங்களை "வணக்கம் வாருங்கள்" என்று வரவேற்த்தது ஆச்சர்யமாக இருந்தது.உள் நுழைந்தோம், அமைதியையும் சுத்தத்தையும் பார்த்து பிரமிப்பாக இருந்தது.தியான நிலையில் சிலர்,வேடிக்கை பார்த்த வண்ணம் சிலர்.வெள்ளை நிற ஆடையில் இருவர் வந்தனர் .சில மொழிகளில் எதோ படிக்கப் பட்டதாக உணர்ந்தோம்.மீண்டும் அமைதி,சற்று நேரத்தில் அங்கிருந்து வெளியில் வர வேறு இதழின் வழியாக வந்தோம்.வரும் வழியில் முக மலர்ச்சியுடன் துண்டு பிரசுரங்களும்,வழிபாட்டு இல்லம் பற்றிய வரலாற்று பிரசுரங்களும் வழங்கப்பட்டது.பக்கத்தில் அலுவலகம்,சிறிய நூலகம்.இருந்தது.பல இன,மொழி,மாநிலத்தவரும்,வெளிநாட்டினரும் வந்து போவதை பார்க்க முடிந்தது.
அந்த பிரசுரங்கள் அப்போதே படிக்கப்பட்டு குப்பைத் தொட்டியில் போட்டாகி விட்டது.சென்ற வாரத்தில் நண்பர் ஒருவர் இங்கு சென்று வந்து அதே பிரசுரங்களை கொடுத்தார்.சரி பதிவாகப் பதிவோமென்று அதைப் பார்த்துதான் பஹாய் சமயம் மற்றும் லோட்டஸ் டெம்பிளின் விபரங்களை தெரிவித்துள்ளேன். இந்த பிரசுரங்கள் பல மொழிகளிலும் வழங்கப்பட்டது. அதில் தமிழ் மொழியிலும் இடம் பெற்றுள்ளது, மேலும் விபரங்களுக்கு என சென்னை தி.நகரின் விலாசம் ஒன்றும், தொலைபேசி எண், மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியெனில் இந்த சமயத்தினர் / சமந்தமானவர்கள் சென்னையிலும் இருக்கிறார்கள். .படங்கள் இணைய தளத்திலிருந்து பெற்றுள்ளேன்.