*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 23, 2012

என்றும் மறக்க முடியாத பேருந்து நினைவுகள்-5(முற்றும்)

பேருந்து,ரயில் பயணங்களில் காலம் காலமாக இடம்பெறும் பலவகை திருட்டு,உணவுப் பொருட்களில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து கொள்ளையடித்தலும் நிகழ்ந்து வருகிறது.உழைக்காமல் பொருள் சேர்க்க எத்தனை விதங்களாக யோசித்து தைர்யமாக அத்தனை பேரையும் முட்டாளாக்கி கார்யம் சாதிப்பது கள்வர்களின் கலை.செய்தித்தாள்களிலும்,தொலைக்காட்சியிலும்,அக்கம் பக்கத்திலும் திருட்டுகள் நடப்பதை கேள்விப்பட்டாலும்,பயணங்களில் ஜாக்கரதையாக பயணித்தாலும் திருட பகவான் பார்வை நம்மீது பதிந்துவிட்டால் நம்மளால் தப்பமுடிவதில்லை.


பயணங்களில் யாராவது உணவுப் பொருட்களை கொடுத்தால் தவிர்ப்பது நல்லது.ஆனால் குழந்தைகளுடன் பயணிக்கும்போது இதில் சிரமம் ஏற்படும்.நாம் எதாவது சாப்பிடும்போது எதிரே அல்லது பக்கத்தில் குழந்தைகள் இருந்தால் பார்க்க வைத்து சாப்பிட முடியாது.அப்படி நாம் எதாவது கொடுக்கும்போது நம்மை சந்தேகித்து வேண்டாமென்று மறுத்தால் நம் மனது சங்கடப்படும்.அதே சங்கடத்துடன்தான் நமக்கோ நம் குழந்தைக்கோ எதிரில் உள்ளவர்கள் உணவுப் பொருள் கொடுத்தால் எப்படிப்பட்டவராக இருந்தாலும் மறுத்தாக வேண்டும்.பயணங்களில் நட்பும் கிடைக்கும்,ஏமாற்றங்களும் கிடைக்கும்.

செல்ஃபோன் இல்லாத காலத்திலே நீண்ட தூர பயணமெனில் என் அப்பா எப்போதும் எதில் பயணித்தாலும் நமது முகவரி,நாம் சென்றடைய வேண்டிய முகவரியையும் எழுதி நம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பார்.யார் எங்கு பயணித்தாலும் தேவையானவைகளை எடுத்து வச்சுட்டியா என்ற கேள்விக்கு அடுத்து அட்ரஸ் எழுதி வச்சிருக்கியா என்றுதான் கேப்பார்.வழியில் என்ன வேணும்னாலும் நடக்கலாம்.எதாவது ஒரு நல்லவன் கண்ல இந்த அடர்ஸ் பட்டு நம்மை உரியவங்க இடத்தில் சேக்க மாட்டானா,தகவல் தெரிவிக்கமாட்டானா... என்பார்.

என் தாத்தா அம்மாச்சி கிராமத்தை சேர்ந்தவர்கள்.பயணத்தில் பக்கத்திலிருப்பவர் கொஞ்சம் பேச்சு கொடுத்தால் போதும் தனது பூர்வீகம் வரை ஒப்பித்துவிடுவார்கள்.பக்கத்தில் கிடைப்பவரும் இவர்களது பேச்சை கேட்டு சலிக்கிற மாதிரி தெரியாது,அப்படிப்பட்டவர்தான் அமைந்துவிடுவார்.சில நேரம் இப்படி எல்லா கதையும் ஏன் சொல்றீங்கன்னு திட்டுவோம், சில நேரம் அருகில் போய் நிறுத்துங்கன்னு சொல்ல முடியாது.

எங்க வீட்டில் லேண்ட் லைன் ஃபோன் இருந்த காலத்தில் ஒருமுறை என் தாத்தா மதுரையிலிருந்து நாகைக்கு தனியே இரவு நேர பஸ்ஸில் வந்திருக்கிறார்.விடிய காலையில் ஃபோன் வந்தது,நான்தான் பேசினேன்,அதில் “நான் ஆட்டோ டிரைவர்,மதுரை பஸ்சிலிருந்து ஒரு பெரியவரை நாகை பஸ்டாண்டின் நடுவே இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.அவர் போதையில் கிடக்கிறார்.அவரது சட்டைப் பையில் இந்த நம்பரும் அட்ரசும் இருக்கிறது,இன்ன பேர் உடைய இவரை உங்களுக்குத் தெரியுமா? ”என்றார்.

மற்ற அடையாளங்களும் சொன்னதில் அவர் என் தாத்தாதான். தான் வருவதாக எங்களுக்கு தகவலும் சொல்லவில்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேனே தவிர என்ன பேசனும்னு தெரியவில்லை,என் அப்பாவும் அப்போது வீட்டில் இல்லை.என் அம்மாவிற்கும் நம்புவதா வேணாமான்னு புரியாமல் இந்த முகவரிக்கு அழைத்து வாருங்கள்,உடல் நிலை சரியில்லையென்றால் வழியில் ஹாஸ்பிடலில் சேர்த்துவிடுங்கள் ஆகும் செலவை நாங்கள் ஏற்கிறோம்,அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.
 அவர் போதையில் இருக்கிறார் என்பதைதான் எங்களால் நம்ப முடியவில்லை என்று அம்மா சொல்லிவிட்டு என் அப்பாவிற்கும் தகவல் தெரிவித்தார்.

பத்து நிமிடங்களில் ஆட்டோ என் வீட்டிற்கு வந்தது.சுய நினைவின்றி சட்டை ட்ராயருடன் உள்ளிருந்தது என் தாத்தாவேதான். அந்த கோலத்தில் பார்த்தால் என் அம்மாவிற்கு எப்படியிருக்கும்,என்னாச்சுப்பா,என்னாச்சுப்பான்னு கதறினார். ஹாஸ்பிடலில்  சேர்த்தோம், அந்த ஆட்டோ ட்ரைவருக்கும் நன்றி தெரிவித்து பணம் கொடுத்தபோது அவர் வாங்க மறுத்துவிட்டார்.ஹாஸ்பிடலில் தாத்தாவிற்கு முற்றிலும் நினைவு இழந்துவிட்டது,கோமா ஸ்டேஜ் என்கிறார்கள்.எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.தாத்தா ஏன் புறப்பட்டு வந்தார்,எதற்கு எங்கே கிளம்பினார் ஒன்றும் தெரியவில்லை.மதுரையில் இருக்கும் என் அம்மாச்சிக்கு தகவல் தெரிவித்ததும் விபரம் புரிந்தது,தாத்தா எங்களை பார்க்க உசிலம்பட்டி பஸ்ஸில் வந்திருக்கிறார்.அம்மாச்சி மற்ற உறவினர்களுடன் கதிகலங்கி வந்து  சேர்ந்தார்.

ஊருக்குள்ளும் ஒரே பரபரப்பு,தாத்தாவை பார்க்க பலரும் வந்தவன்னம் இருந்தனர்.சீடி ஸ்கேன் எடுத்தார்கள்,எல்லா டெஸ்ட்டுகளும் நார்மலா இருக்கு,அவர் கடைசியாக உண்ட உணவினால் இந்த பிரச்சனையிருக்கலாம்,வேற ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போயிடுங்கனு டாக்டர் சொல்லிட்டார்.அன்று முழுவதும் அதே நிலையிலிருந்த தாத்தா மறுநாள் காலை கண் விழித்தார்.அவருக்கும் சற்று நேரம் தான் எங்கிருக்கிறோம்,தனக்கு என்னாச்சுன்னு புரியவில்லை,பேச்சும் வரவில்லை.சற்று நேரம் கழித்து பேச்சு வந்தது.நாங்களும் விபரங்கள் சொல்ல என் அம்மாச்சி அப்போதுதான் கேட்கிறார் ” தாத்தா கொண்டுவந்த பைகள்,கையில் போட்ருந்த மோதிரம்,வைத்திருந்த பணம் “ இல்லையா?ஆட்டோவில் தாத்தா மட்டும்தான் வந்தாரா என்கிறார்.சூழ்நிலையின் கட்டாயம் அப்போது லேசான சந்தேகம் அந்த ஆட்டோ டிரைவர் மீது வந்தாலும்  முதலில் இன்றும் அதே நேரத்திற்கு வரும் உசிலம்பட்டி பஸ் டிரைவரை விசாரிப்போம் என்று என் அப்பா சொன்னார்.

அதற்கிடையில் என் தாத்தாவும் பேச ஆரம்பித்தார்.பஸ்ஸில் தன்னுடன் வந்தவருடன் பேசிக்கொண்டு வந்ததாகவும்,கோவில் பிரசாதமென்று பொங்கல் கொடுத்ததாகவும்,அதை சாப்பிட்ட பின் என்ன நடந்ததுன்னு தெரியவில்லை என்றும் சொன்னதில் விபரம் புரிந்தது.தான் கொண்டு வந்த பொருட்கள் களவாடப்பட்டதை விட தன்னால் எல்லோரும் இவ்வளவு சிரமத்திற்குள்ளானதிலும்,பொங்கல் சாப்பிட்டு ஏமாந்ததிலும் என் தாத்தாவிற்கு பெரும் வருத்தம்,அவமானமாகவும் நினைத்தார்.என் அப்பாவும் பஸ் டிரைவர் ஓட்டுனரை விசாரித்ததில் என்ன நடந்ததென்று எங்களுக்குத் தெரியாது,எல்லோரும் இறங்கியும் இவர் மட்டும் இறங்காமல் மயக்கத்திலே இருந்தார்,நாகைதான் கடைசி நிறுத்தம்,டிக்கெட்டும் நாகைக்குதான் எடுத்திருந்தார் எனவே எங்களுக்கு வம்பெதற்கு,அடுத்த ட்ரிப் போகனும்னு அவரை இறக்கி கீழே போட்டுவிட்டோம்.வேட்டி அவிழ்ந்த நிலையில்தான் இருந்தார்,என்றும் தெரிவித்திருந்திருக்கின்றனர். இந்த நிகழ்வு தெரிந்த அனைவருக்கும் பாடமானது.அதற்கு பிறகு என் தாத்தா அம்மாச்சி பயணத்தில் சக பயணிகளுடன் வெகு ஜாக்கிரதையாக பயணிப்பார்கள்.


பயணங்களில் எவ்வளவோ பொன் பொருட்களை பரிகொடுத்தவர்களின் நிலை  எப்படிப்பட்டதாக இருக்கும்!


பேருந்து மட்டுமல்ல அனைத்து பயணங்களும் நாம் வாழும் உலகின் மறுபக்கங்களில் ஒன்றை உணர்த்துவதாகவே அமைகிறது.
கள்வர்களே!


வீரமும்,மானமும் உள்ள கள்வர்களாயின் ஸ்விஸ் பேங்கிற்கு போய் இந்தியப் பணத்தை களவாடிட்டு வாங்க பாப்போம்!இந்தியா பாராட்டும்.(இந்தியா டு ஸ்விஸ் ரயில், பஸ் இன்னும் விடலையோ).இந்தியாவின் பேங்குகளில் அப்பாவி மக்கள் அதுவும் அப்பாவி பேங்குகளில் சேர்த்து வைத்திருப்பதில்   கை வைத்தால் என்கவுண்டர்தான்.


பீ கேர்ஃபுல்...........................................


மக்களை சொன்னேன்,,,,

26 comments:

Angel said...

பாவம் ஆச்சி உங்கள் தாத்தா .வயதானவரிடம் எப்படித்தான் அதுவும் கோவில் பிரசாதத்தை கொடுத்து திருட மனம் வந்ததோ .

நீங்க சொன்ன மாதிரி பார்த்திட்டேயிருங்க விரைவில் சுவிஸ்சுக்கும் நம்மூருக்கும் கடல் வழி /வான்வழி பேருந்து ஏன் சுரங்கபாதை கூட வர சாத்தியக்கூறுகள் இருக்கு .எத்தனையோ கோடி அங்கிருக்காம் .
.......களவாணிபயல்களே/பெண்டுகளே
1400 பில்லியன் டாலர் அங்கிருக்கு அங்கே போய் உங்க கை வரிசையை காட்டுங்க. .அப்பாவிங்களை விட்ருங்க

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்கள் தாத்தா பற்றிய கதை, மற்றவர்களுக்கு நல்லதொரு பாடமாக அமையும்.

பாவம் அவர். அவருக்கும் மனதுக்குக் கஷ்டம், மற்றவர்களுக்கும் இதனால் கஷ்டம் தான்.

அந்த நல்ல ஆட்டோ டிரைவரை பாராட்டத்தான் வேண்டும்.

தாத்தாடம் விலாசம்+ஃபோன் நம்பர் இருந்தது, நல்லவேளையாக ஆட்டோ ஓட்டுனர் மூலம் வீடு வந்து சேர முடிந்தது.

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.

வரவர சூப்பராகவே எழுதுகிறீர்கள்.

கடைசியில் நகைச்சுவை வேறு!

பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

அன்புடன் vgk

சாந்தி மாரியப்பன் said...

ரயில் பஸ் பயணங்கள்ல இந்த திடீர் நட்புகள் கொடுக்கற 'அல்வா'வால நல்லவங்களையும் சந்தேகப்பட வேண்டி வந்துருது. பொருள் போனாலாவது சில சமயங்கள்ல போயிட்டுப்போறதுன்னு விட்ரலாம். உயிருக்கு ஆபத்து ஏதாவது வந்துட்டா என்ன செய்யறது.

வயசானவரை ஏமாத்தறதுக்கு திருடனுக்கும், வழியிலே இறக்கி விடறதுக்கு பஸ் ட்ரைவருக்கும் எப்டித்தான் மனசு வந்ததோ.

ஸ்விஸ் :-)))))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

வலைச்சரத்தில் இன்று மீண்டும் ஜொலிப்பதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அன்புடன் vgk 24.02.2012

கீதமஞ்சரி said...

மனசு மிகவும் கனத்துப்போனது ஆச்சி. பக்கத்திலிருப்பவர் மீதிருக்கும் பரஸ்பர நம்பிக்கையில்தானே அவர் கொடுத்ததை வாங்கி உண்டிருப்பார்? அந்த நம்பிக்கையை பாழ்படுத்த அந்தக் கயவனுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ? நல்லவேளையாக மனிதாபிமானமிக்க ஒரு ஆட்டோ டிரைவர் இருந்தார். தாத்தாவை பத்திரமாக வீடு சேர்த்தார். வீட்டு விலாசத்தையும் போன் நம்பரையும் தாத்தா தன் சட்டைப்பையில் வைத்திருந்ததும் நல்லதாயிற்று. அதைக் கவனித்து அந்த ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு கொண்டுவர எண்ணியதும் நல்லதாயிற்று. இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்தே பார்க்க முடியவில்லை.

பிக் பாக்கெட்காரர்களைவிடவும் மோசமானவர்கள் இப்படிப் பேசி நைச்சியமாக ஏமாற்றும் பேர்வழிகள்.நல்லதொரு எச்சரிக்கைப் பாடம். ஏன் சீக்கிரமாக முடித்துவிட்டீர்கள்? பயணநினைவுகளுக்கு முடிவே கிடையாதே....

பால கணேஷ் said...

தாத்தாவை நினைக்கையில் பாவமாக இருக்கிறது. ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு ரொம்பவே பதறியிருப்பீர்கள் இல்லை..? இது மாதிரி விஷயங்களைப் படிச்சாலே மனசை என்னமோ பண்ணிடுது. அடுத்த முறை வர்றேன்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஏஞ்சலின்
இன்னமும் இப்படித்தான் பல அப்பாவிகளை நம்ப வைத்து ஏமாற்றுகின்றனர்.

தங்களின் மனப்பூர்வ கருத்திற்கு நன்றி


@வை.கோபாலகிருஷ்ணன் சார்

ஆமாம் சார்,நல்ல ஆட்டோ ட்ரைவர் அவர்.
என் தாத்தா அட்ரஸ் எழுதிய பேப்பரை சட்டைப் பையில் வைத்திருந்ததால் இப்படி காப்பாற்றப்பட்டார்.கொண்டுவந்த பைக்குள் வைத்திருந்தால் அதுவும் பையோடு களவாடப்பட்டிருக்கும்.நகைச்சுவையை ரசித்தமைக்கும் நன்றி சார்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@அமைதிச்சாரல்
//பொருள் போனாலாவது சில சமயங்கள்ல போயிட்டுப்போறதுன்னு விட்ரலாம். உயிருக்கு ஆபத்து ஏதாவது வந்துட்டா என்ன செய்யறது.

வயசானவரை ஏமாத்தறதுக்கு திருடனுக்கும், வழியிலே இறக்கி விடறதுக்கு பஸ் ட்ரைவருக்கும் எப்டித்தான் மனசு வந்ததோ. //

இதேதான் அனைவர் மனதிலும் தோன்றுகிறது.என்ன பன்றது இதுதான் உலகம்னு உறுதிபடுத்துகிறது.

ஆச்சி ஸ்ரீதர் said...

@கீதமஞ்சரி
ஆமாங்க கெட்டதிலும் நல்லது நடந்தது போல அன்று அவர் உயிர் பிழைத்தார்.ஒரு பக்கம் இப்படியான நயவஞ்சகர்கள் இருந்தாலும்,மற்றொரு பக்கம் அந்த ஆட்டோ ட்ரைவர் போன்ற நல்லவர்களும் வாழ்கின்றனர்.

போரடித்துவிடுமோ என்றெண்ணி 5 பகுதிகளுடன் நிறுத்திவிட்டேன்.மற்றொரு காலகட்டத்தில் மீண்டும் துவங்குகிறேன்.நன்றி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@கணேஷ்

ஆமாம் சார்,தாத்தா கண் விழித்து விபரம் சொல்லும்வரை எல்லோரும் ஒன்றும் புரியாமலும் செய்வதறியாமலும் பதட்டத்திலே இருந்தோம்.இன்னமும் இது போன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இப்போது அட்வான்சாக நாம் நமது கையில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களின் மீதே எதோ நச்சு ஸ்ப்ரே அடிச்சுடறாங்களாம்.

Unknown said...

பொதுவாகவே அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதே தவறுதான்.

RAMA RAVI (RAMVI) said...

உங்க தாத்தாவை பற்றி படித்ததும் வருத்தமாகிவிட்டது.
வயதானவர்களை தனியாக விடக்கூடாது என்று தோன்றியது.ஆனால் சில பெரியவர்கள் பிடிவாதமாக சொன்னலும் கேட்க மாட்டார்கள் தனியாக கிளம்பி விடுவார்கள்.

நீங்க சொன்ன மாதிரி யாராவது சுவிஸ் பேங்கல போய் அடிச்சுகிட்டு வந்தா தேவலை!!

உங்களோட பயணம் செய்த நாங்களும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம் ஆச்சி. நன்றி.

Avargal Unmaigal said...

உங்கள் பஸ் பயணம் அனுபவங்கள் மிக அருமை. எங்க ஊரு தாத்தாவை ஏமாற்றி விட்டார்களே என்ற வருத்தம் பதிவை முடித்ததும் வருகிறது

இராஜராஜேஸ்வரி said...

பொங்கல் என்று சொல்லி அல்வா அல்லவா கொடுத்து ஏமாற்றியிருக்கிறார்கள்!


பதிவல்ல பாடம்.. அனைவரும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய பகிர்வுகள்..

ஆச்சி ஸ்ரீதர் said...

@கே.ஆர்.பி.செந்தில்
வாங்க,சரிதான்,அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகினதில் கிடைத்த பரிசுதான் தாத்தாவிற்கு.


@ராம்வி
இது போல கொள்ளையடிப்பவர்கள் வயது பார்ப்பதில்லையே, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@அவர்கள் உண்மைகள்
வாங்க,ஊர்க்காரவக பாசமா?
தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி

@இராஜராஜேஸ்வரி
ஆமாம் மேடம் அல்வாவேதான்.அதில் அப்படி என்னத்த கலப்பார்கள்ன்னு தெரியல.நன்றி.

காந்தி பனங்கூர் said...

இந்த காலத்தில் நல்லவர்கள் போல் பேசும் யாரையும் நம்பி நாம் எதையும் சொல்லவும் கூடாது, அதேபோல எதையும் அவர்களிடமிருந்து எதையும் வாங்கி சாப்பிடவும் கூடாது.

ADHI VENKAT said...

உங்க தாத்தாவின் அனுபவத்தை நினைத்தாலே பயமாக இருக்கின்றது. வயதானவர்கள் தனியாக பயணம் செய்வதும் கூடாது. அப்படியே போனாலும் தன்னை பற்றிய எந்த விவரங்களையும் சொல்லக் கூடாது....

பேருந்து பயணத்தில் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

வெங்கட் நாகராஜ் said...

பேருந்து பயணம் சுகமாய் இருந்தது.. எத்தனை எத்தனை அனுபவங்கள் ஒவ்வொரு பயணத்திலும்....


நல்ல பகிவுக்கு நன்றி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@காந்தி பனங்கூர்
வாங்க,தாங்கள் சொல்லியிருப்பதும் சரியே,நன்றி.

@ஆதி
அந்த நிகழ்வு எல்லோருக்கும் பாடமாகட்டும்.நன்றி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வெங்கட் நாகராஜ்

ரசித்தமைக்கு நன்றி.மீண்டும் எப்போதாவது பயணம் துவங்கும்.

Unknown said...

பொங்கலையே அல்வாவா யூஸ் பண்ணி இருக்காங்களா? ஒருவேளை பொங்காலி திருடங்களா இருப்பாங்களோ? ஒகே ஒகே சொல்ல வேண்டிய கருத்தெல்லாம் எல்லாரும் சொல்லிட்டதால எனக்கு தோன்ற ஒரு கருத்த சொல்லிட்டு போறேன், நீங்க ஏன் இந்த தொடர இத்தோட நிறுத்திட்டீங்க, இன்னும் சொல்ல வேண்டிய விசயங்கள் இருக்குமே, இன்னும் கூட நிறைய விசயங்கள இன்னும் கொஞ்சம் சுவாரஸ்சயத்த கூட்டி சொல்லி இருக்கலாம்க்றது என்னோட அபிப்பிராயம், கொஞ்ச நாள் கழிச்சி விட்டு போன விசயங்கள் எதாவது ஞாபகத்துக்கு வந்தா மறுபடியும் பதியுங்கள், வாழ்த்துக்கள்

ஆச்சி ஸ்ரீதர் said...

@இரவு வானம்
தங்கள் கருத்திற்கும் ஆலோசனைக்கும் நன்றி.இப்போ பயணத்திற்கு இடைவேளை.

ஆச்சி ஸ்ரீதர் said...

@இரவு வானம்
தங்கள் கருத்திற்கும் ஆலோசனைக்கும் நன்றி.இப்போ பயணத்திற்கு இடைவேளை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம் 3 இன்ட்லி 3 யுடான்ஸ் 56

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என்றும் மறக்க முடியாத பேருந்து நினைவுகள்-5(முற்றும்)//

ஜாலியான உங்களின் மறக்க முடியாத பேருந்து நினைவுகளில் நாங்களும் ஜாலியாக பயணம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென்று வண்டி பஞ்சராகி நின்று விட்டது போல [முற்றும்] போட்டு விட்டீர்களே ;(

எங்களுக்கும் கோவில் பிரஸாதமோ அல்வாவோ கொடுத்தது போல மயக்கம் வருகிறதே!

சீக்கிரம் வேறு ஏதாவது அனுபவம் பற்றி ஆரம்பிங்களேன்.