*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 18, 2012

என்றும் மறக்க முடியாத பேருந்து நினைவுகள்-3

சில மாதங்கள் வித்யாசமாகவே இருந்த பேருந்து பயணம் பிறகு எந்த பேருந்தாக இருந்தாலும் சொந்த வீட்டிற்குள் போவது போன்று சகஜமாகிவிட்டது.நடைமுறையில் ஓட்டுநர் எந்த நிறுத்தத்திலிருந்து எந்த நிறுத்தம்வரை செல்ல வேண்டும்,இடையே எங்கெங்கு நிறுத்த வேண்டுமென்பதில் கவனமாக இருக்கிறாரோ அப்படித்தான் பெரும்பாலான பயணிகளும் ஏறி,இறங்க வேண்டிய ஸ்டாப்பிங்குகளை மட்டும் கவனித்தில் கொண்டு பயணிக்கிறோம்.ஆனால் அந்த பயணத்தில் பலவற்றை பார்க்கிறோம், அவற்றில் சில மனதில் பதியும்,பல காற்றோடு காற்றாக போய்விடும்.சிலருக்கு பயணத்தில் என்ன நடந்தாலும் தன் உள்மனதோடு,சொந்த உணர்வுகளோடு மட்டும் பயணிப்பார்கள்.அதாவது வெளி உலகோடு ஒன்றமாட்டார்கள்.இது அனைத்து வகை பயணத்திற்கும் பொருந்துமென்று நினைக்கிறேன்.


ஒரு நாள் பயணத்தில் இடம் இல்லை,ஓட்டுனர் இருக்கைக்கு பின் கம்பிகளை பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தேன்.ஒரு ஸ்டாப்பிங்கில் மிக அழகான சுடிதார் அணிந்த அழகான பெண் ஒருவர் பொம்மை போல நின்றார்.என் தோழியிடம் அந்த பெண்ணை எவ்ளோ அழகா இருக்கு பாருன்னு காண்பித்தேன்,அதற்கு அந்த ஓட்டுனர் ”அழகா,இல்லையான்னு நாங்க சொல்லனும்”னு சொல்லிகிட்டே அவர்பாட்டுக்கு வண்டி ஓட்டிகிட்டிருந்தார்.நம்ம சொன்னதை காதில் வாங்கிட்டு பதில் சொல்றார்ன்னு சின்ன நகைப்பு.


ஒரு நாள் மாலை பயணத்தில் ஒரு ஸ்டாப்பிங்கில் பஸ் நிறுத்தப்பட்டபோது இறங்க வேண்டியவர்கள் இறங்கியாச்சு,ஏற வேண்டியவர்கள் ஏறியாச்சு,பஸ்ஸூம் சற்றே கிளம்பிவிட்டது,சற்று வயதான பெண்மணி ஒருவர் அவசரமாக ஓடிவந்து ஏறினார். ஏறின வேகத்துக்கு படியில் நின்ற ஒரு கல்லூரி மாணவன் அவ்வை... சண்முகி... என்று அந்த பாடலில் வருவது போலவே சொல்லிவிட்டு வேடிக்கை பார்த்து வந்தார்.எங்களுக்கு செம சிரிப்பு.ஆனால் அந்த பெண்மணிக்கு எதுவும் புரியவில்லை.

பஸ் பயணத்தில் அமர்ந்திருக்கும்போது என் பக்கத்தில் வயதானவர்கள்,குழந்தை வைத்திருக்கிறவர்கள் நின்றால் அவர்கள் கேக்காமலே என் இடத்தை தருவதுண்டு .(இப்போதும் அப்படித்தான்)பிரச்சனை என்னவெனில் கைக் குழந்தையென்றால் அம்மாவும்தான் உட்கார்ந்தாக வேண்டும்.சற்று வளர்ந்த குழந்தையெனில் கொடுங்கள் மடியில் வச்சிக்கிறேன்னு சொன்னால் சிலர் குழந்தைகளை தந்துவிடுவார்கள்,நம் பக்கத்திலும் உக்கார வைத்துக்கொள்ளலாம்.சில குழந்தை அம்மாவை விட்டு வராது.அதனால் பரவாயில்லம்மா என்று நின்றே வருவார்கள்.

பாவம் பார்த்த குற்றத்திற்கு,உரிமையாக அவன் பயப்டுவான்/ அழுவான்/ தேடுவான் நீ எந்திரிச்சுக்கன்னு சிலர் சொல்லிடுவாங்க,மறுத்து சொல்ல முடியாம நின்னுகிட்டு வரவேண்டியதுதான். சிலர் குழந்தைய கொடுங்கன்னு சொன்னால் இத்துனூண்டு இடத்தில தானும் உட்காந்து நெருக்கித் தள்ளி என்னைய நோயாளி மாதிரி உட்கார வச்சிடுவாங்க.
சில நேரம் நமக்கு முன் சீட்டில் அல்லது பக்கத்தில் குழந்தை இருந்தால் அந்த குழந்தையை சீண்டி லைட்டா கொஞ்சுவதுலாம் பிடிக்கும்.என்னவோ சில குழந்தையைப் பார்த்தால் கொஞ்சத் தோன்றாது.


சில யுவன்,யுவதிகள் தங்கள் பாய்/கேள்(girl) ப்ரண்ட்ஸ்களுடன் பேசுவதற்காக இடம் இருந்தாலும் நின்றுகொண்டே வருவார்கள்,அவர்கள் பேசிக்கொண்டு வருவதை பார்க்கும்போது சுவாரஸ்யமாக இருக்கும்.
யாருக்கும் பயப்ட வேண்டிய அவசியமில்லாத,யாருடைய அனுமதியும் தேவையில்லாத தம்பதிகள் சிலர் பக்கத்திலே அமர்ந்திருந்தாலும் வேற்று மனிதருடன் அமர்ந்திருப்பது போல கம்முன்னு வருவார்கள்.வீட்டில் பேசிப் பேசி போரடிச்சுடுமோ அல்லது கண்ணியமோ தெரியல.


எனக்கு உப்புத் தடவிய வெள்ளரிக்காய் வாங்கி தோழிகளுடன் பேசிக்கொண்டே சாப்பிட பிடிக்கும்.சுண்டல், வேர்கடலை, வெல்லரி, பனங்கிழங்குகளை சீசனுக்கு வருபவைகளை சைக்கிள்,ட்ராலிகளில் வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பஸ்டாண்டில் பஸ்நிற்கும்போது ஜன்னலோரம் குரல் கொடுப்பார்கள். ஒரு நாள் நான் அமர்ந்திருக்கும் பஸ்சின் வெளிப்புறம் ஒரு வியாபாரி சுற்றி, சுற்றி குரல் கொடுத்துக்கொண்டிருந்தார்.திடீரென பனங்கொரங்கு,பனங்கொரங்கு என்று கூவினார். எல்லோருமே திரும்பி பார்த்தோம், எங்கள் பார்வையின் சந்தேகத்தை புரிந்துகொண்டு, பனங்கிழங்குன்னு கத்தினா யாரும் கண்டுக்கமாட்றீங்க,இப்ப பாத்தீங்கள்ல,சரி ஆளுக்கொரு பனங்கிழங்கு கட்டு வாங்கிக்குங்க என்றார்.அவரின் வியாபார ட்ரிக்கை ரசித்து சிலர் வாங்கினார்கள்.

பெரும்பாலும் தனியார் பஸ்களில்தான் பாடல்களை கேட்டபடி பயணிக்க முடியும்.அதற்காகவே நாங்கள் பல நாட்கள் அரசுப் பேருந்து வந்தாலும் அதில் பயணிக்கமாட்டோம்.அப்படியொரு நாள் பாடல் இசைத்துக்கொண்டிருந்த பஸ்ஸில் ஏறியாச்சு,இடமும் கிடைத்துவிட்டது.அந்த பஸ் கிளம்ப 4,5நிமிடங்கள் இருந்தது.அதற்குள் என் தோழிக்கும் எனக்கும் பக்கத்தில் உள்ள கடையில் சாக்லேட் வாங்கிட்டு வந்திடலாம்னு ஆசை வந்துவிட்டது.உடனே ரெண்டு பேரும் இறங்கி கடைக்கு ஓடிப்போய் சாக்லேட் வாங்கிட்டு திரும்பி பார்க்கிறோம் அந்த பஸ்ஸைக் காணும்.அடப்பாவி அதுக்குள்ளையும் அவன் கடிகாரத்தில மணியாகிட்டு போலன்னு,ஒரு சாக்லேட்டுக்காக பாட்டு பாடுற பஸ்ஸை விட்டுவிட்டோமேன்னு புலம்பிக்கொண்டோம்.நீண்ட நேரத்திற்கு பின்னரே அடுத்த பஸ் வந்தது பாடலுடன்.

15 comments:

பால கணேஷ் said...

ஆஹா... பாட்டுப் பாடும் பஸ்க்காக காத்திருந்து பயணிப்பது என்ற விஷயத்தில் நம்மிருவருக்கும் ஒற்றுமை இருக்கு. குழந்தைய மடியில வெச்சுக்கறதுன்னு நீங்க சொன்னதும் காவலன் வடிவேல் காமெடிதான் நினைவு வந்தது. சிரித்தேன். பொதுவாக பஸ்ஸில் பெண்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பது (என் மாதிரி) இளைஞர்களின் பழக்கம். அப்படித்தான் பஸ் டிரைவரும் உங்களுக்கு பதில் சொல்லிருப்பார்னு நினைக்கிறேன். தொடர்கிறேன் உங்களுடன்...

RAMA RAVI (RAMVI) said...

வித விதமான மனிதர்கள்,எத்தனை வேடிக்கை மனிதர்கள் என்று தோன்றியது, ஆச்சி பதிவை படித்ததும்.

சுவாரசியமாக எழுதியிருக்கீங்க. தொடருங்கள் நீங்கள் ரசித்ததை நாங்களும் ரசிக்கிறோம்.

Anonymous said...

பேருந்து நினைவுகள் மறக்க முடியாததாக சுவாரசியமாக இருக்கு......நல்லா எழுதியிருக்கீங்க...
தொடருங்க...

//எனக்கு உப்புத் தடவிய வெ..ரிக்காய் வாங்கி தோழிகளுடன் பேசிக்கொண்டே சாப்பிட பிடிக்கும்.சுண்டல், வேர்கடலை, பனங்கிழங்கு//

எல்லாம் என் விருப்பமும் கூட...

ADHI VENKAT said...

எனக்கும் பாட்டு பாடுற பஸ்ஸில போகத்தான் பிடிக்கும். இப்போதும் திருச்சி போகும் போது என கணவரிடம் பாட்டு பாடுற பஸ்ஸில போகலாம்னு தான் சொல்வேன். இறங்க மனமே வராது. இன்னொரு ரவுண்ட் போயிட்டு வரேன்னு கூட சொல்லியிருக்கிறேன்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@கணேஷ்
உங்கள் பின்னூட்டத்தை ரசித்து சிரித்து மகிழ்ந்தேன்.

//பொதுவாக பஸ்ஸில் பெண்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பது (என் மாதிரி) இளைஞர்களின் பழக்கம்.//

நான் ஒன்னுமே சொல்லலப்பா....

@ராம்வி

ஆமாம் பலதரப்பட்ட மனிதர்களும்,விசயங்களும் பார்க்க முடியும்.நன்றி,நன்றி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ரெவெரி

//உப்புத் தடவிய வெ..ரிக்காய்//

உடனே எனக்கும் சந்தேகம் வந்து ரஃபர் செய்து வெள்ளரின்னு திருத்திட்டேன் சகோ. நன்றிகள்.

@ஆதி
இப்ப பாட்டு கேட்டு அதே பஸ்சில் போனாலும் தோழிகளுடன் சென்ற அந்த காலம் திரும்பாதுனே நினைப்பேன்.அது ஒரு கனாக்காலம்.இப்ப அனுபவிப்பதும் தனி இனிமை.நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//யாருடைய அனுமதியும் தேவையில்லாத தம்பதிகள் சிலர் பக்கத்திலே அமர்ந்திருந்தாலும் வேற்று மனிதருடன் அமர்ந்திருப்பது போல கம்முன்னு வருவார்கள்.வீட்டில் பேசிப் பேசி போரடிச்சுடுமோ அல்லது கண்ணியமோ தெரியல.//

கண்ணியமும் இல்லை ஒரு கத்திரிக்காயும் இல்லை.

வாயத்திறந்தாலே வம்பு என்ற, ஒருவித சலிப்பாகத்தான் இருக்கும்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபாலகிருஷ்ணன் சார்
வாங்க சார்,
//வாயத்திறந்தாலே வம்பு என்ற, ஒருவித சலிப்பாகத்தான் இருக்கும்.//

இருக்கலாம் சார்.எனக்கும் திருமணத்திற்கு பிறகு ஒரு முறை இப்படியான அனுபவம் உண்டு.மற்றபடி மற்ற அனைத்து பயணங்களிலும் நிறுத்து,நிறுத்துன்னு சொல்றளவுக்கு பேசிகிட்டேதான் இருப்பேன்.

Angel said...

பேருந்தில் நாங்களும் பயணித்தது போலிருக்கு ஆச்சி

//பனங்குரங்கு // வியாபார டெக்னிக் சூப்பர் .

குரங்குன்னதும் எல்லாருமே திரும்பி பார்த்துவிட்டார்கள் ஹா ஹா ஹா .

வெள்ளரிக்கா /மாங்காய் /கிழங்கு /உப்பு மிளகாய்த்தூள்ஆசைய கிளப்பறீங்களே//

//வீட்டில் பேசிப் பேசி போரடிச்சுடுமோ அல்லது கண்ணியமோ தெரியல.//
In the 1st year, the man speaks and the woman listens.
In the 2nd year, the woman speaks and the man listens.
In the 3rd year, they both speak and the neighbors listen.//

அப்ப பேருந்தில் வந்தவங்க எத்தனையாவது வருஷமோ !!!!!!!!!

ஞா கலையரசி said...

நல்ல சுவாரசியமான பேருந்து பயண நினைவுகள். அந்தப் பனங்கொரங்கு விஷயம் சிரிப்பை வரவழைத்தது.

எனக்கும் சில ஆண்டுகள் பேருந்து பயண அனுபவமிருந்தது. உங்கள் பதிவைப் படித்ததன் மூலம் அந்நாட்களுக்கு ம்ண்டும் ஒரு முறை போய் வந்தேன். தொடர்ந்து எழுதுங்கள் ஆச்சி. பாராட்டுக்கள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஏஞ்சலின்
தாங்கள் ரசித்து கருத்திட்டமையில் மகிழ்கிறேன்.
//both speak and the neighbors listen.//
அதனாலதான் கம்முன்னு வறுகிறார்களோ!ஹஹா...ஹா...

@கலையரசி

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்,பாராட்டிற்கும் நன்றிகள்.

கீதமஞ்சரி said...

ஒவ்வொரு ரசனையான நிகழ்வையும் அழகாகவும் சுவைபடவும் சொல்லியிருக்கீங்க. எத்தனை மனிதர்கள்! எத்தனை குணாதிசயங்கள்! கல்லூரிக் காலத்தின் சுமையற்றப் பறத்தலின் சுகமான நினைவுகள் யாவும் அழகுதான். பாராட்டுகள் ஆச்சி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@கீதா
தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும்,பாராட்டிற்கும் நன்றிகள்

சசிகலா said...

பொதுவாகவே பேருந்துப் பயணம் சக தோழர் , தோழிகளுடன் செல்வது பிடித்தமான ஒன்று . நீங்க சொல்வது போல பாடல் கேட்ட படி என்றால்
சொல்லவே வேண்டாம் . படிக்கும் பொது அரட்டை அடித்த ஜாபகம் வருகிறது . அருமையான பகிர்வு .

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம் 2 இன்ட்லி 2

யுடான்ஸ் 56 [you have already voted என்று சொல்லுகிறதே? ஒண்ணுமே புரியலே உலகத்திலே .. என்னவோ நடக்குது]