*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 15, 2012

என்றும் மறக்க இயலாத பேருந்து நினைவுகள்- 1

பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு பல அனுபவங்கள் கிடைத்திருக்கும்.ஜன்னலில் வேடிக்கை பார்ப்பது,ஜன்னலோரம் இடம் கிடைக்கலைன்னா வருந்துவதும்,லேசா ப்ரேக் போட்டாலே பக்கத்தில் இருப்பவங்க மேல விழுந்திடாம ஆர்மியில் பயிற்சி எடுப்பது போல உறுதியாக நிற்கவோ உக்காந்திருக்கவோ முயற்சிப்பதும்,வீசும் காற்றில் தூங்கிக்கொண்டே போவதும் ரொம்ப பிடிக்கும்.

பயண நேரத்தில் புது மனிதர்களையும்,வெளிப்படும் சிலரது குணங்களை பார்க்கமுடிவதும்,அவரவர் நிறுத்தங்களில் இறங்குவதும்,மற்ற மனிதர்கள் வருவதும்,இதில் நடத்துனரின் குணமும்,அவர் நடமாடுவதும்,பயணிகளுக்கும் நடத்துனருக்குமிடையே நடைபெறும் கதை தனிக் கதையாக இருக்கும்.பயணிப்பவர்கள் அனைவருக்கும் நடத்துனரின் முகம் தெரிந்திருக்கும்,பலருக்கும் ஓட்டுனர் முகம் தெரியாது.முகம் தெரிந்தால் மட்டும் கோப்பையா கொடுக்கப்போகிறோம்,பயணிகள் இருக்கை எங்கிருக்கோ எங்க வேணாலும் உக்காரலாம்,நிக்கலாம்,நடமாடலாம் ஆனால் பாவம் ஓட்டுனர் எவ்ளோ தொலைவு சென்றாலும் அந்த ஒரு இருக்கை மட்டும்தான் அவருக்கு சொந்தம்,வேறு யாரும் அவர் இடத்தை பிடிக்கவும் முடியாது.

பத்தாம் வகுப்பு வரை உள்ளூர் பள்ளியிலே படித்தேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது சமூகஅறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர்  "பஸ்ஸில் பல நல்லவர்களையும் பார்க்க முடியும்,பல
கிறுக்குகளையும் பார்க்க முடியும்".என்பார்.பெற்றோருடன் பேருந்தில் செல்லும்போது வெளி வேடிக்கை மட்டும் பார்த்து பழக்கப்பட்ட நான், அந்த ஆசிரியர் சொன்னது நினைவிற்கு வரும்.உடன் பயணிக்கும் மனிதர்களையும் கவனிக்கத் தூண்டியது.அப்பாவுடனோ,அம்மாவுடனோ போகும்போது எனக்கு டிக்கெட் அப்பா,அம்மாதான் எடுப்பாங்க,என்னை பத்திரமாக அழைத்துச்செல்ல பெற்றோரின் பார்வை என் மீது இருக்கும்.கூட்டத்தில் எங்க இறங்கனும்னு தெரியாட்டாலும் என்னை அழைத்து வந்தவர் என்னை கூப்பிட்டோ ,தட்டி எழுப்பியோ அழைத்துச்செல்வார்கள்.


எதாவது பொருட்கள் வாங்கி வந்தாலும் எனக்கு சிரமம் இல்லாமல் பெற்றோரே எடுத்து வருவதால்  சுமையுடன் பயணப்பட்டும் பழக்கமில்லை.பேருந்து  பயணம்,பயணம் என்கிறேனே,என் பயணத் தொலைவு  எனது ஊரிலிருந்து 7 கி.மீ  அல்லது மதுரை,அல்லது சிலமுறை வெளியூர் கோவில் பயணங்கள் மட்டுமே.பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு ஆசிரியர் தனது பேருந்து பயணத்தின் அனுபவங்களை குறிப்பாக சில நகைச்சுவை அனுபவங்களை பாடத்தின் நடுவே சொல்வார்.


பத்தாம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன்,எனது ஊரிலிருந்து 12 கி.மீ.(இனி நோ பேருந்து ஒன்லி பஸ்)இனி தினம் பஸ்ஸில் போகப்போறோம்னு உற்சாகத்தில் காலை தூக்கம் கெடுவதும் பெரிதாகத் தெரியவில்லை.எனக்கு முன்னடியே எழுந்து அம்மா எனக்காக குளிக்க,குடிக்க வெந்நீர்,காலை,மதிய சாப்பாடு என ஆர்வமாக செய்து என்னை கல்லூரிக்கு அனுப்பிவிடுவாங்க,தெருமுனை திரும்பும் வரை அம்மா வாசலிலே நின்னு வழியனுப்புவாங்க,மாலை நேரத்திலும் என் வருகையை எதிர்பார்த்து அம்மா வாசலிலே காத்திருப்பாங்க.சில நாட்கள் அப்பாவும் பஸ்டாண்ட் வரை வந்து விட்டுட்டு போவார்.


இப்ப என் பஸ் பயண அனுபவம் என்னவென்றால்


பேக்கை(bag) பிடிச்சிகிட்டு பஸ்ஸில் ஏறனும்,ஏறியவுடன் எதாவது சீட்டு காலியா இருக்கான்னு கண்டுபிடிக்க சுத்திலும் ஒரு லுக் விடனும்,பேக்கை பிடிச்சுகிட்டு ஸ்டடியா நிக்கனும்,நகரனும்,பைசாவை நானே எடுத்து டிக்கெட் எடுக்கனும்,யாராவது என்னை வித்யாசமாக பார்த்தால் அழகா இருக்கேன்னு பாக்கிறாங்களா,அசிங்கமா இருக்கேன்னு பாக்கிறாங்களா,உடுத்தியிருக்கும் உடை சரியா இருக்கான்னு வேற அந்த பார்வை செக் செய்ய வைக்கும்,இப்படி பார்வை மாற்றங்கள் பல சந்தேகங்கள்,கேள்விகள்,பாடங்களை உணர்த்தும்.வெளியூரில் படிக்கும் பள்ளி மாணவர்கள்,சிறுவர்கள் என்னைவிட அதிக கனமுள்ள புத்தக மூட்டையை சுமந்து வருவதும்,பஸ்ஸில் சாதரணமாக இருப்பதும் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.


கிட்டதட்ட ஒரு மாதம்வரை பஸ் பயணம் போராட்டமாகவே இருந்தது.ஸ்டாப்பிங்கில் நிறுத்த பிரேக் போட்டாலே கம்பிகளில் முட்டிக்குவேன்,பேக்கை விட்டுவிடுவேன்,பாலிடெக்னிக் என்பதால் முதலாம் ஆண்டு புத்தகம் அதிகம் எடுத்துச்செல்ல வேண்டியிருந்தது.ட்ராஃப்டர் எடுத்துச்செல்லும் நாள் ரொம்ப மோசம்,யார்கிட்டயும் கொடுக்கவும் மாட்டேன்.டிக்கெட் எடுக்க பைசா எடுத்து கொடுப்பதும் டிக்கெட்டை வாங்கி பத்திரமா வச்சிருப்பதும் பெரிய சோதனையா இருந்தது.எத்தனையோ தட பைசாவ தவிறவிட்டிருக்கேன், அல்லது டிக்கெட்டை பறக்க விட்டுவிடுவேன்.


கல்லூரி முதல் நாள் முடிந்து மாணவிகள்  பஸ்டாண்டில் பஸ்ஸிற்காக காத்திருந்தோம்,எங்களுடன் ஒரு லேடியும் காத்திருந்தார்.இரண்டு பஸ் மாறிப்போகனுமா,அல்லது ஒரே பஸ்ஸில் போகும்படி இருக்கும்மான்னு விசாரித்துக்கொண்டிருக்கையில் சுந்தரராமன் வரும்,ரமேஷ் வருவான்னு மாணவிகள் சொன்னதில் எனக்கு ஒரே குழப்பம்,பிறகுதான் தெரிந்தது பிரைவேட் பஸ்களின் பெயர்கள்தான் ரமேஷும்,சுந்தரராமனும் என்பது.உண்மையா சொல்றேன் அப்போதுவரை அரசு பஸ் என்றால் சிகப்பு கலரில் இருக்கும்,டிக்கெட் பைசா குறைவு,தனியார் பஸ்கள் கலர் கலராகவும், டிக்கெட்  கட்டணம் சற்று அதிகமாக  இருக்குமென்றுதான் தெரிந்து வைத்திருந்தேன்.தனியார் பஸ்களுக்கு பேர் இருக்குன்னு அப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.


என் ஊர்வரை நேராக போகும் பஸ்ஸில் ஏறினேன்,யுவன் யுவதிகள் கூட்டம் அதிகம் இருந்தாலும் சின்ன பயமும் இருந்தது.பஸ்டாண்டில் பார்த்த லேடியும் எங்களுடந்தான் ஏறினார். சில நிமிட பயணத்தில் அந்த லேடி தன் பின்னிருப்பவர் தன்னை வேணுமென்றே முதுகில் கைவைத்து வம்பிழுப்பதாக சொல்லி அந்த ஆளிடம் சண்டையிடத் தொடங்கினார்.பார்த்து பயம் அதிகமானது.அந்த ஆளும் தான் அப்படி செய்யவில்லை இந்த லேடி பொய் சொல்கிறார் என்கிறார்,இத்தனை பேர் இருக்கும்போது உன்னை ஏன் சொல்லனும்,போலிஸில் கம்ப்ளைண்ட் செய்வேன்னு சப்தமிட்டார் அந்த லேடி.பலரும் சமத்துவம் பேசி அந்த ஆளை பாதி வழியிலே இறக்கிவிட்டு விட்டார்கள். அந்த ஆள் கிராஸ் செய்யும்போது பிராந்திவாடையும் வந்தது.அந்த லேடி நல்ல தைர்யமானவர் இப்படித்தான் இருக்கனும்னு  நினைத்தேன்.பிறகு கண்ணில்பட்ட  தனியார் பேருந்துகளின்  தலையில் பெயர்கள் எழுதியிருப்பதையும் கவனித்தேன்.அட ஆமா..இவ்ளோ பெரிசாதான் எழுதிருக்காங்க,இத்தனை நாளும் கவனிக்கலையேன்னு  நினைத்தேன்.

மறுநாள் கல்லூரியில் நேற்று பஸ்ஸில் சண்டையிட்ட லேடி அங்குமிங்கும் நடமாடுவதை பார்த்தபோது இவங்க எதாவது மேடமாக இருப்பாங்களோன்னு சந்தேகம் வந்தது.அன்று அந்தந்த சப்ஜெக்ட்களின் ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கத் துவங்கினார்கள்.லன்ச் ஹவருக்கு பின் முதல் வகுப்பு கெமிஸ்ட்ரி.கெமிஸ்ட்ரி எடுக்க வந்தவர் நேற்று பஸ்ஸில் தைர்யமானவர்னு நினைத்த அதே லேடிதான்.அந்த நிமிடம் எனக்கு ஏற்பட்ட பயத்த என்னனு சொல்றது...அதை விட கொடுமை அவர் ஆங்கிலத்திலேயே பேசியதும்,பாடம் எடுத்ததும் கண்ணை கட்டி காட்டில்விட்ட மாதிரியாகிட்டு.அவர் விளக்கிய சமன்பாடுகள் எனக்கு எதும் புரியாமல் அழுகை வந்துவிட்டது.தமிழில் சமன்பாடுகளை விளக்கினாலே எனக்கு புரியாது.என்னை எழுப்பி அவர் ஏன் என்னனு கேள்விகேட்டதும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.முதல் வகுப்பிலே என்னம்மா இப்படி பிஹேவ் பன்றன்னும் கேட்டார்.பிறகு எனக்கு பாடம் புரியலை என்றதும் மீண்டும் விளக்கம் தந்தார்.அன்றே எனக்கு கெமிஸ்ட்ரி பாடத்தின் மேல் மிகுந்த வெறுப்பு உண்டாகிவிட்டது. கெமிஸ்ட்ரி பிடிக்காமல் போனாலும் அந்த மேடமிற்கும் எனக்கும் நாளடைவில் நல்ல நட்பு உண்டானது.


பேருந்து நினவிலிருந்து தடம் மாறுவது போல உள்ளதா?ஆரம்பத்தில் அப்பாவியாக பேருந்தில் பயணித்த நான்  மூன்று வருட பயணத்தில் அறிந்தும்,அறியாமலும்   பல பிரச்சனைகளை சந்தித்தேன்,இனிமையான அனுபவங்களும் கிடைக்கப்பெற்றேன்.நினைவிருக்கும் சில நகைச்சுவையான பேருந்து தருணங்களை மட்டும் அடுத்த பதிவில் பகிர்கின்றேன்.

19 comments:

RAMA RAVI (RAMVI) said...

சுவாரசியமான ஆரம்பம் ஆச்சி, தொடருங்க..

ஓட்டுனரை பற்றி நீங்க எழுதியிருப்பதை முதலில் படித்த போது சிரிப்பு வந்தது. ஆனால் வேறு யாரும் அவரிடத்தை பிடிக்க முடியாது என்பது உண்மை.நன்றாக இருக்கு.

பால கணேஷ் said...

பேருந்துப் பயணத்தில் உங்களோடு வர நானும் துண்டைப் போட்டு இப்பவே இடம் பிடிச்சுட்டேன். (கடவுளே... பக்கத்துல வர்றவர் சாமியாடி, தலைய என் தோள்ல சாய்ச்சு எரிச்சல் படுத்தாம இருக்கணும்.)

மிஸ்ஸைப் பாத்து அழற அப்பாவியா இருந்திருக்கீங்களே... என்னைல்லாம் பாத்து மிஸ் தான் அழுதிருக்காங்க. அவ்வ்வ்வ்...

இராஜராஜேஸ்வரி said...

கெமிஸ்ட்ரி மிஸ்ஸுடன்
கெமிஸ்ட்ரி ஒர்க அவுட் ஆகி நட்பு.. அனுபவப் பகிர்வுகளுக்குப் பாராட்டுகள்..

ஆச்சி ஸ்ரீதர் said...

@ராம்வி

ரசித்தமைக்கும் ,வருகையிலும் கருத்திலும் மகிழ்கிறேன்.

@கணேஷ்

சார்,உங்கள் பின்னூட்டத்தை படித்து செம சிரிப்பு தாங்க முடியல,நன்றி,

@இராஜராஜேஸ்வரி

வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிகள்.

ADHI VENKAT said...

பேருந்து நினைவுகள் சுவாரசியமாக இருக்கிறது ஆச்சி.
நானும் கல்லூரி நாளில் தான் பேருந்து. DRAFTERம் A2 சீட்டும் எடுத்துப் போவதே பெரிய சாகசம் தான்.

பேருந்து டிக்கெட்டை வாட்சுக்கும், கைக்கும் இடையில் மடித்து சொருகி வைப்பது தான் என் பழக்கம்.. பறக்க வாய்ப்பேயில்லை.. இது அப்பா மூலம் எனக்கு வந்தது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"பஸ்ஸில் பல நல்லவர்களையும் பார்க்க முடியும்,பல
கிறுக்குகளையும் பார்க்க முடியும்".//

ரொம்ப கரெக்ட்டாத்தான் சொல்லியிருக்கார்.

//கூட்டத்தில் எங்க இறங்கனும்னு தெரியாட்டாலும் என்னை அழைத்து வந்தவர் என்னை கூப்பிட்டோ ,தட்டி எழுப்பியோ அழைத்துச்செல்வார்கள். //

இன்றும் கூட எவ்வளவோ பேர்கள் அப்படித்த்தான் இருக்கிறார்கள்.

//எத்தனையோ தட பைசாவ தவிறவிட்டிருக்கேன், அல்லது டிக்கெட்டை பறக்க விட்டுவிடுவேன்.//

சமீபத்தில் செல்போன் கூட தவறவிட்டதாகச் சொன்னீர்களே வேறொரு பதிவில்.

தவறினால் தங்கம் என்பார்கள். அது இதுதானோ? ;)

//இரண்டு பஸ் மாறிப்போகனுமா,அல்லது ஒரே பஸ்ஸில் போகும்படி இருக்கும்மான்னு விசாரித்துக்கொண்டிருக்கையில் சுந்தரராமன் வரும்,ரமேஷ் வருவான்னு மாணவிகள் சொன்னதில் எனக்கு ஒரே குழப்பம்//

நல்ல நகைச்சுவை தான்.

கெமிஸ்ட்ரி மிஸ்ஸுடன்
கெமிஸ்ட்ரி ஒர்க அவுட் ஆகி நட்பு!

அனுபவப் பகிர்வுகளுக்குப் பாராட்டுகள். vgk

ராஜி said...

கணேஷ் said...

பேருந்துப் பயணத்தில் உங்களோடு வர நானும் துண்டைப் போட்டு இப்பவே இடம் பிடிச்சுட்டேன். (கடவுளே... பக்கத்துல வர்றவர் சாமியாடி, தலைய என் தோள்ல சாய்ச்சு எரிச்சல் படுத்தாம இருக்கணும்.)

>>>
வாந்தி எடுக்குறவர் வந்தா என்ன பண்ணுவீங்க அண்ணா

ராஜி said...

உங்க பேருந்து தடம் மாறி பிளாட்ஃபார்ம்ல ஏறிடாம பதிவு போடுங்க சகோ

வெங்கட் நாகராஜ் said...

பேருந்து நினைவுகள் நன்று....

தொடருங்கள்...

ஆமினா said...

அருமையான பயணமா இருக்கே

உங்களோட சேர்ந்து நானும் பேருந்தில் பயணிக்கிறேன்

தொடருங்க

பால கணேஷ் said...

ராஜி said...
வாந்தி எடுக்குறவர் வந்தா என்ன பண்ணுவீங்க அண்ணா...

-ரொம்ப ஸிம்பிள்! அவர் தலைய முன்னால கொண்டு வரும்போது சட்டுன்னு சீட்டுக்கு கீழ உக்காந்துடுவேன். பாவம், தலை கம்பியில முட்டி பல் பேந்துரும் அவனுக்கு! (நிஜமாவே இந்த மாதிரி ஒருத்தனுக்குச் செஞ்சிருக்கேன் தங்கச்சி) நாமல்லாம் வில்லாதி வி்ல்லன்களாச்சுதே...

சாந்தி மாரியப்பன் said...

எங்களுக்கு டிக்கெட் எடுக்க வேண்டிய ப்ரச்சினையே இல்லாம பஸ் பாஸ் இருந்துச்சு. அதுக்கு நாங்க வெச்சிருந்த செல்லப்பேரு 'ரேஷன் கார்டு' :-)). ஒவ்வொரு நாளும் அன்னிய தேதிக்கு எதிர்ல இருக்கும் கட்டத்துல கையெழுத்துப் போட்டுத் தருவார் நடத்துனர். அதனால்தான் அந்தப்பெயர்..

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஆதி
நல்ல விசயம்தான்.தங்கள் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி.

@வை.கோபாலகிருஷ்ணன் சார்
அனைத்தையும் ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி,செல்போன் சென்ற வருடம் தொலைத்துவிட்டேன்.நன்றி சார்

ஆச்சி ஸ்ரீதர் said...

@ராஜி
வாங்க,நிச்சயம் தவறு ஏதும் நடக்காது,

கணேஷ் சார் உங்களுக்கு பதில் சொல்லிபுட்டாரு........

@வெங்கட் நாகராஜ்

வருகைக்கு நன்றி,தொடருகிறேன்

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஆமினா

வாங்க,வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்,போலாம் ரைட்...

@அமைதிச்சாரல்
ரேசன் கார்டா.......?அவ்வ்வ்வ்......
நன்றி

கீதமஞ்சரி said...

ஆச்சி... சொன்னா நம்பமாட்டீங்க. இந்தப்பதிவு முழுக்க முழுக்க அப்படியே என்னைப்பற்றியது போலவே இருக்கு. பத்தாவது வரை உள்ளூர் பள்ளியில் படித்துவிட்டு பாலிடெக்னிக் பஸ்ஸில் போன அனுபவம். டிராஃப்டர் பற்றி சொன்னீங்களே... அது மட்டுமா... அந்த மேடம்... உங்களுக்கு கெமிஸ்டிரி எனக்கு மேத்ஸ் மேடம்.

என்ன ஒற்றுமை... ஆனால் நான் அந்த மூன்று வருடமும் நீங்கள் சொல்வது போல் நிறைய அனுபவப்பாடங்கள்தான்.

தொடரும் உங்கள் அனுபவப்பகிர்வுகளை ஆவலோடு பார்த்திருக்கிறேன்.

டிரைவர் பற்றிச் சொன்னீங்களே.... இங்கு ஆஸ்திரேலியாவில் பஸ்ஸில் கண்டக்டர் கிடையாது. பஸ்ஸில் முன்வாயில் வழியாக ஏறும்போதே டிரைவரிடம் டிக்கட் வாங்கிவிட்டுதான் ஏறவேண்டும். எல்லோரும் டிக்கட் வாங்கியபின்தான் அவர் வண்டியை எடுப்பார். இறங்கவேண்டிய இடத்துக்கு முன் பஸ்ஸில் ஆங்காங்கே இருக்கும் பஸ்ஸரை அழுத்தினால் டிரைவருக்கு இன்டிகேஷன் கிடைத்து பஸ்ஸை நிறுத்துவார்.

ஆச்சி ஸ்ரீதர் said...

உங்களுக்கும் சிலுவை அதான் ட்ராப்டர் சுமந்த அனுபவம் உண்டா ?நல்ல ஒற்றுமை.மேத்சா?.....அதுவும் எனக்கு கஷ்டம்தாம்,அதுவும் மேத்ஸ் 2 வை எனக்கு பிடிக்கவே பிடிக்காது.என்ன பன்றது,...ம்ம்,,,.......


உங்க நாட்டின் சிஸ்டமே தனி...என்ஜாய் ய்வர்செல்ஃப்

raji said...

நல்ல அனுபவப் பகிர்வு ஆச்சி.நான் சென்னை வந்த புதிதில் பஸ்ஸில் பயணிக்க நேரிட்ட போது அதில் பயணிகள் சிலர் ஒரு கல்யாணி ரெண்டு கண்ணகி என்றெல்லாம் டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்தது எனக்கு வேடிக்கையாக இருந்தது,பின்னர்தான் என் அண்ணா கூறி அது கண்ணகி சிலை கல்யாணி ஹாஸ்பிடல் என்று தெரிந்து கொண்டேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம் 3 இன்ட்லி 2