*வணக்கம் வருகைக்கு நன்றி*

Jun 28, 2013

உங்களுக்கு பண கஷ்டமா? / மன கஷ்டமா?


திர்க்க முடியாத வேதனையா உங்களுக்கு? 

வாழ்நாட்களை இனிமையானதாக்க வேண்டுமா?

அனைத்து நொடிகளும் இன்பம்  பொங்க வேண்டுமா?  

மற்றவர்களின் டார்ச்சலை தாங்க முடியலையா?

இப்படி தீர்வில்லா பல கேள்விகளும் பிரச்சனைகளும் இருப்பது போல உணருகின்றீர்களா ?

இவைகள் எல்லாம் காற்றும் சதையும் அடைத்த உடலுக்கு தேவையில்லை.இவைகள் இல்லாமலும் இந்த உடலை நடமாட விடாது இந்த .மனித பிறவி.

தேவை

போதுமான 
 உணவு
காற்று 
தண்ணீர்  .

இந்த மூன்றை ஈடுகட்ட என்னென்னத்தையோ இழகின்றோம்.எதையெதையோ பெறுகின்றோம்.வாழ்வை கற்பதில் தோற்கின்றோம்.

என்ன இருக்கோ இல்லையோ, பசிக்காக எது கிடைத்தாலும் சாப்பிடுவோமா ? 

இளமையில் கொடுமை வறுமை ,கைக்கு எட்டும் உணவு வாய்க்கு எட்டாமல் போவது அதனினும் கொடுமை.

எனில் குழந்தைப் பருவத்திலிருந்து எனக்கு பசி தெரியாமல் வயிறார உணவளிக்க உழைத்த என் அப்பா,எல்லாம் இருந்தும்  இன்று ஒரு வேளைக்கு  கால் வயிற்றை நிரப்ப முடியாமல் உணவுக்குழல் புற்றுநோயால் அவதிப்படுவதை பார்ப்பது பெரும் கொடுமை.

தலைவலி ,வயிற்றுவலி அல்லது சின்ன காயம் என்றாலும் மருத்துவமனையில் உள்ள அனைத்து பரிசோதனைகளையும் செய்துகொள்ள சொல்லும் மருத்துவரிடம் செல்லாததே என் அப்பா செய்த தவறு.

15 நாட்களில் பிரச்சனை அதிகமாகவும் நவீன மருத்துவமனையில் காண்பித்து உணவுக்குழல் கேன்சர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த மருத்துவர் சொன்னது : உடனே ஒரு லட்சம் கட்டுங்கள் 4 நாட்களில் மருத்துவம் ஆரம்பிக்க வேண்டுமென்று,........

அதே மருத்துவமனையில் அட்மிட் ஆகாமல் அந்த ரிப்போர்ட்டுகளுடன் அடையாறு கேன்சர் இன்ஸ்டியுட் சென்றால் பென்சன் வாங்கும் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட அப்பாவிற்கு நடந்தது டெஸ்ட்,டெஸ்ட்,டெஸ்ட்.....ஒரு நாளைக்கு ஒரு டெஸ்ட்  மட்டும்தான் .

சாப்பிட கஷ்டப்டுகின்றார்,வலியில் அவதிப்படுகின்றார் மருந்து எதாவது கொடுங்களேன் என்றால் இதற்கு மருந்து இப்போ கொடுக்கமாட்டோம் ,அனைத்து பரிசோதனைக்கு பிறகுதான் முடிவு செய்ய வேண்டுமென பதில் வந்தது.

அங்கு காணப்பட்ட நோயளிகளின் நிலைமைகளை பார்க்கும்போது நமக்கு நாளை என்ன வியாதி வருமென்று தெரியாவிட்டாலும் இதுவரை நாமெல்லாம் எவ்வளவு பாக்கியசாலிகள் நமக்கு உள்ள பிரச்சனைகளெல்லாம் பிரச்சனைகளே இல்லை,கிடைத்த ஒவ்வொரு நொடியும் பொன் போன்றது என்று பல முறை உணரவைக்கும்.

ஒரு வார கட்டண  பரிசோதனைக்கு பின் அப்பாவிற்கு 3rd ஸ்டேஜ் கேன்சர் உறுதிப்படுத்தப்பட்டது,இங்கு மேற்கொண்டு சிகிச்சை அளித்து பலனில்லை உங்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் கீமோ தெரபி கொடுக்க முன்வந்தால் சிகிச்சை மெற்கொள்ளுங்கள் என்று கட்டாயமாக அனுப்பிவைத்தார்கள்.

அதற்கு பிறகு தஞ்சாவுரில் கேன்சர்க்காக மட்டும் வைத்தியம் பார்க்கும் மருத்துவமனை இருப்பதை கண்டுபிடித்து சிலரின் உதவியுடன் அங்கு சென்றோம்.அங்கு மீண்டும் பரிசோதனைகள்,பிறகு ரிஸ்க் & ட்ரயலில் தான் கீமோ கொடுக்கப்பட முடியும்,எனவே உங்களுக்கு விருப்பமெனில் கீமோ தெரபி கொடுக்கிறோம் இல்லையெனில் இங்கிருந்து சென்றுவிடுங்கள் என்றபோது ஒரு மருந்தும்,மருத்துவமும் இல்லாமல் அவதிப்படுவதை பார்ப்பதைவிட கீமோ கொடுத்துவிடுஙகள் என்று சொல்லிவிட்டோம்.

அப்பாவிற்கு திரவ ஆகாரம் மட்டுமே செல்கிறது,ஒரு மாதத்தில் கருவாடா ஆகிட்டேனே ஆச்சி ,குதிங்கால் சதையும் கரைகின்றதே என்று அப்பா சொல்லும்போது இயலாமையில்  நோக மட்டுமே முடிகின்றது.அப்பா ரிட்டயர்ட் ஆகி ஒரு வருடம் ஆகின்றது.அவருக்கு இந்த கேன்சர் வந்து 3 வருடமாகின்றதென ரிப்போர்ட் சொல்கிறது.ஆனால் அவருக்கு பிரச்சனை அறிகுறியானது 15 நாட்களில் மட்டுமே.

எனக்கு சிறு வயதில் சைக்கிள் கற்று கொடுத்தார் அப்பா,என்னை விட அவருக்குத்தான் அதிக அடிபடும்,பொருட்படுத்த மாட்டார்,எனக்கு சின்ன காயம் பட்டாலும் அந்த காயம் ஆறும்வரை சைக்கிள் கற்றலுக்கு விடுமுறை.நீச்சல் கற்று கொடுத்தார்,ரோஸ்ட்டும் பரோட்டாவும் சாப்பிட ஹோட்டலுக்கு அழைச்சிட்டு போவார்,அவருக்கு அறிமுகம் ஆனவர்கள்,உறவினர்கள் வந்தால் வயிரும் மனதும் திருப்திபடும் வகையில் விருந்தளிப்பார்,இன்று மிக்சியில் அரைத்த சாதக் கஞ்சியையும் விழுங்க அவதிப்படுகிறார்.

எனக்கும் அவருக்கும் வந்த மனக் கசப்புகளிலும் நாட்கள் கடந்த பிறகு அப்பாவின் பக்கம்தான் நியாயம்/நல்லது இருப்பதை உணர்ந்துருக்கின்றேன்.இப்போதும் அவர் நடமாட்டமாக இருப்பது மட்டுமே எங்களுக்கு தெம்பு.

நெருங்கிய நட்புகள்/உறவுகள் பார்க்க வரும்போது “நான் என்ன பாவம் செய்தேன் இப்படிப்பட்ட வியாதியில் மாட்டிகிட்டேனே என்று அப்பா கண் கலங்கி வருத்தப்படுவதை பார்க்க நான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை.இப்பவும் அவருக்கு ஆறுதல் சொல்ல முற்பட்டால் ஆறுதலும்,அறிவுரையும் அவர் எனக்கு சொல்கின்றார்.

என்னை எப்போதும் வாடா போடானுதான் அழைப்பார். 
கோபமாகவோ அல்லது வேறு வேலையில் கவனமாக இருக்கும்போது மட்டுமே ஆச்சி...வாம்மா போம்மா/ வா போ என்பார்.

ஆச்சி எப்படியிருந்த நான் எப்படி ஆகிட்டேனென்ற காமெடி எனக்குதானாடா ஆச்சி என்று அவரே சொல்லி குழந்தை போல சிரித்தது கண்ணில் நிற்கின்றது.

எங்களை சாப்பிட வைத்து அழகு பார்த்திங்களே அப்பா!  விரும்பியதை வாங்கி சமைத்த உணவை பரிமாறி சாப்பிடுவோமே, இனி அந்த நாள் வரவே வராதா அப்பா!
இந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது அப்பா!

  



10 comments:

எல் கே said...

எங்கள் ப்ரார்த்தனைகள் ஆச்சி

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் வருத்தமாக இருக்கிறது... விரைவில் பூரண நலம் பெற வேண்டுகிறேன்...

Avargal Unmaigal said...

மன தைரியத்தை வளர்த்து கொள்ளுங்கள்... வாழும் நாள் வரை உங்களால் முடிந்த வரை அவரை சிரிக்க வையுங்கள் சகோதரி மீதியை கடவுளிடம் ஒப்படைத்து விடுங்கள்.... உங்களுக்கு மனதிடம் வரவும் தந்தைக்கு வலியை தாங்கி கொள்ளும் திடத்தை கொடுக்கவும் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்....

இராஜராஜேஸ்வரி said...

அருமைத்த்ந்தை விரைவில்
நலம் பெற பிரார்த்திக்கிறோம் ..!

Unknown said...

மிகவும் வேதனையாக இருக்கிறது... அவருக்கு ஆறுதல் கூறுங்கள்.. நீங்கள் கூறியது போல இந்த நிமிடம் வரை நமக்கு ஏதும் இல்லையெனில் ஒவ்வொரு நிமிடமும் பொன் போன்றது தான்... ஏனோ சமீப காலமாக இந்த மாதிரி நோய்களை பற்றியும் மருத்துவதுறையை பற்றியும் செய்திகளை கேட்டும் அனுபவித்தும் மனம் மிகவும் பதற்றம் அடைக்கிறது... எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்குவோம்...

Unknown said...

god bless him....

வெங்கட் நாகராஜ் said...

வேதனையான விஷயம் தான் ஆச்சி. அவரது உடல்நலம் முன்னேற எனது பிரார்த்தனைகளும்.....

Ranjani Narayanan said...

உங்களின் இந்தப் பதிவைப் படித்ததும் எனக்கு என் தந்தையின் நினைவு வந்தது. அவரும் இதேபோலத்தான் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளானார்.
உங்கள் எழுத்து ஒவ்வொன்றும் எனக்கு அந்த நாட்களை நினைவூட்டியது.
உங்கள் தைரியம் தான் அவருக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய மருந்து. வேறொன்றும் செய்ய இயலாது!

ADHI VENKAT said...

தைரியமாக இருங்க ஆச்சி.... என் தாயும், தந்தையும் இந்த நோயால் பீடித்திருந்தவர்கள் தான். அவர்கள் பட்ட வேதனையை கண்கூடாக பார்த்திருக்கிறேன்...

அப்பாவுக்காக கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.

சாந்தி மாரியப்பன் said...

பிரார்த்தனைகள் நிச்சயம் இறைவனை எட்டும்.

விரைவில் நலம் பெற பிரார்த்திப்போம்.