கல்வி,கலை,விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் அல்லது வீர தீர செயல்கள் அல்லது ஒரு இளம் பெண் தனது ஆண் நண்பர்களுடன் சுற்றுவது அல்லது எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது கற்பு/ஆபரணங்கள் சூரையாடப்படாமல் இருப்பது இவைகளில் சாதனை படைப்பதெல்லாம் சாதனை எனில் ஆயிரக்கணக்கில் கொடுக்க வழியில்லாத காரணத்தினால் அடிப்படை வசதியான படுக்கை,கழிவறை,சுகாதாரம் இல்லாத அரசு மருத்துவமனைகளில் உயிரை பிரசவித்து மறு ஜென்மம் எடுக்கும் பெண்கள்தான் எனக்கு சாதனை பெண்கள்.
தலை வலியும் வயிற்று வலியும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும்.பிரசவ வேதனை பிரசவிக்கும் பெண்கள் மட்டுமே உணர முடியும்.மகள் அல்லது மனைவியின் பிரசவ வேதனை கண்டு மனசாட்சி உள்ள ஆண்கள் மனம் அல்லது கண்கள் கலங்குவதும் இந்த தருணம்தான்.
குண்டு வைத்து கொல்லப்படும் ஈழத் தமிழர்களின் வேதனைகளை தொலைக்காட்சியில் மட்டும்தானே பார்த்து கலங்கியிருப்பீர்கள்.மற்ற மாநிலங்களை விடுங்கள் நம் தமிழ்நாட்டில் ரெண்டு,மூன்று அரசு மருத்துவமனைகளைத் தவிர மற்ற அனைத்து அரசு பொது மருத்துவமனைகளின் பிரசவ வார்டுகள் பக்கம் வலம் வாருங்கள்.நம் பெண்களின் நிலை உள்நாட்டிலே எப்படியிருக்கின்றது என்று பாருங்கள்.
தகர கட்டில்கள்,தகர தொட்டில்கள் தேங்காய் நார் மெத்தைகள்,குறைவான பஞ்சு மெத்தைகள்,அனைத்து கட்டில்களுக்கும் மெத்தை கிடையாது,பெட்சீட்டுகள் மடுமே அதிகம் கிடைக்கும்.கட்டில்களின் எண்ணிக்கைகளை விட கர்பிணிப் பெண்கள் அதிகம் வந்துவிட்டால் அந்த பெண்களுக்கும் அவர்கள் பெற்றெடுக்கும் இந்நாட்டு குடிமகனுக்கும் கட்டாந்தரைதான்.வெயில் அல்லது மழை காலங்களில் இந்த நிலையை நினைத்துப் பாருங்கள்.
உதிர வாசனை பால் வாசனையில் ஈக்களும் கொசுக்களும் போட்டி போட்டுக்கொண்டு படையெடுக்கும்.தனி அறை இல்லாட்டாலும் இன்ஸ்டட் ஸ்க்ரீன் தருவார்கள்.அதுவும் தேவைப்படும் நேரங்களில் கிடைக்காது.பக்கத்து அல்லது எதிர் பெட்டிற்கு தகப்பன்,ஆண் விசிட்டர்கள் யார் இருந்தாலும் நம் குழந்தைக்கு பசி அவர்கள் சென்ற பிறகா வரும்.
எந்த மரப்பு மருந்தும் கொடுக்கப்படாமல் பிரசவ வலியோடு வலியாக மைனர் ஆப்ரேசன் என்று சொல்லப்படும் பிறப்புறுப்பை கிழித்து குழந்தை எடுத்த பின் அதே ரணத்தில் தையல் போட்டு கிடந்தாலும்,சிசேரியன் செய்திருந்தாலும் கழிவறைக்கு பக்கத்தில் பெட் கிடைக்கவில்லையெனில் துரதர்ஷ்டம்.10 மீட்டருக்கு அப்பால் கழிவறை இருந்தாலும் ஸ்ட்ரெக்சரில் செல்ல முடியாது.படுக்கையிலே சிறு நீர்,மலம் கழித்து எடுத்து செல்ல பிளாஸ்டிக் /அலுமினிய கோப்பைகள் வைத்திருப்பார்களே அதுவும் ஒவ்வொரு படுக்கைக்கும் கிடையாது.யார் கட்டிலுக்கு அடியில் இருக்குனு தேடனும் அல்லது அவசரத்தைப் பொருத்து நர்சம்மாக்கள் அல்லது துப்புரவாளியிடம் கேட்டு கெஞ்சனும்.
துப்புராவாளிகள் உதிர கவுச்சியில் வெறி கொண்டு செந்தமிழில் பேசுவதையும்,நமது பரம்பரைக்கே மகுடம் சூட்டுவதும் நொடியில் கிடைக்கும் பரிசுகள். நமக்கு பின் எவளோ எப்படியோ வந்துட்டு போகட்டுமென்று கழிவறைகளை உபயோகிக்கும் நமது பெண்மணிகள் இருக்க தண்ணீர் வசதியும் இல்லாமல் போவது கொடுமையின் உச்சம்.
லேபர் வார்டில் மருத்துவர் நர்ஸ்களின் ஆராய்ச்சியில் கர்ப்பிணிக்கு பிரசவிக்க நேரமாகுமெனில் அவரை அனுப்பிவிட்டு அடுத்த பெண்ணிற்கு முயற்சிகள் நடக்கும்.அனுப்பிவிடப்பட்ட பெண் நல்ல நிலையில் இருந்தால் நடந்து செல்வார் அல்லது லேபர் வார்டு வாசலில் வலியில் தவித்துகொண்டிருப்பார்.தலைப் பிரசவத்தினர் பிரசவிக்க ஒத்துழைப்பதில் நேரம் எடுத்தால் மருத்துவர்/நர்ஸ்கள் தாம்பயத்தை கேவலப்படுத்தி திட்டுவதும் ,கர்ப்பிணிகளை தொடையில் சற்று கோபத்துடன் அடிப்பதும் நடக்கின்றது.பெடிற்கு வந்து நர்ஸ்கள் ஊசி போடுவது குறைவு.நர்ஸ்கள் உள்ள இடத்திற்கு வேதனையுடன் நடந்து சென்று வரிசையில் நின்று ஊசி போடுக்கொள்ள வேண்டும்.
நமது குழந்தை உறங்கும்போது அனைத்து குழந்தைகளும் உறங்கிவிடுமா?வீல்லென்று அழு குரல் சப்தத்தில் கண் அயர்ந்த குழந்தை பயத்தில் உடல் குலுங்கி அழுகத் தொடங்கும்.சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை.எதோ ஒரு கர்ப்பிணியின் அலரலும், மகளின் உதிரக் கைழிவுகளை எடுத்துச் செல்லும் தாய்,குழந்தையின் மலத்தை சுத்தம் செய்யும் காட்சிகள்,நம் அருகே துப்புரவாளி சுத்தம் செய்வதையும் பார்த்துக்கொண்டேதான் நாம் சாப்பிட முடியும்.
எல்லாவற்றையும் விட இவ்வளவு பாடுபட்டு பெற்ற குழந்தை காணாமல் போக 100% வாய்ப்பும் உண்டு.பிரசவத்தில் தாய்க்கு ஆபத்து,குழந்தைக்கு ஆபத்து குறைகள் என்றால் போதுமான வசதி இல்லாமல் தவிக்கும் காட்சிகள் இன்னும் கொடுமை.
ஓரளவு பண வசதி கொண்டவர்களும் ஒரு வார அவஸ்தைக்கு எதற்கு ஆயிரகணக்கில் செலவு செய்ய வேண்டுமென்று துணிச்சலாக அரசு மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்த்துக்கொள்கின்றனர். தனியார் மகப்பேறு மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தாலும் அரசு மருத்துவமனைகளில் பல மடங்கு பிரசவங்கள் நடைபெறுகின்றது.இங்கு கிடைக்கும் துன்பங்களை சகித்துக்கொண்டு புன்முகத்தோடு குழந்தைக்கு பாலூட்டி வளர்க்கத் தயராகும் தாய்மார்களே சாதனைப் பெண்கள்.
பெண்ணுரிமை பேசுபவர்களே,பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர்களே,பணம் படைத்தவர்களே! இங்கு எதாவது உதவுங்கள்.
இன்று ஒரு நாளாவது அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டுக்கு முகம் சுளிக்காமல் செல்ல முடிந்தால் மகளிர் தினத்தை கொண்டாடுங்கள்.
15 comments:
"மாபெரும் சாதனைப் பெண்கள்தான் சந்தேகமில்லை ..
சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு இருந்தும் பணத்திற்காக அறுவை சிகிச்சை செய்யும் தனியார் மருத்துவத்திற்கு பயந்து அரசு மருத்துவ மனையில் பிரசவத்திற்கு சென்ற பெண்களில் நானும் ஒருத்தி நீங்கள் சொன்ன அனைத்தையும் அனுபவித்தும் பார்த்தும் இருக்கிறேன்.
100% true. But some one should initiate like this . In this Women's day your's is a good thought. As a friend I am proud of you.......
உண்மை உண்மை நான் கண்டு இருகிறேன் மிக நல்ல பதிவை கொடுத்தீங்க இன்று தேவையான பதிவு
உண்மைதான்.உழைக்கும் அதுவும் கீழ்தட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்து சொல்லவேண்டும்.அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அருமையாக இருக்கிறது என்று கூறமுடியாது... ஏனென்றால் உணர்வு பூர்வமாக கொடூரமா இருக்கிறது... நாமும் அங்கேயே இருக்கின்ற உணர்வை கொடுக்கிறது... நாமும் சில விசயங்களில் அக்கறையாக எடுத்துக் கொள்ளவேண்டும். பெண்கள் பிரசவத்தின் போது மறுப்பிறவி எடுக்கிறார்கள். அப்போது இந்த அவலங்களையும் அனுபவிப்பது மிகவும் கொடூரம்... இதை மாபெரும் சாதனை பெண்கள் என்பதைவிட இன்னும் மேலானவர்கள்.... வணங்குகிறோம்...
//பெண்ணுரிமை பேசுபவர்களே,பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர்களே,பணம் படைத்தவர்களே! இங்கு எதாவது உதவுங்கள். இன்று ஒரு நாளாவது அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டுக்கு முகம் சுளிக்காமல் செல்ல முடிந்தால் மகளிர் தினத்தை கொண்டாடுங்கள். //
சிறப்பாக சொல்லியிருக்கீங்க..அருமையான பதிவு.
நாட்டில் ஆங்காங்கே மிக இயல்பாக நடக்கும் இதுபோன்ற துயரங்களை மிகவும் கோர்வையாக எழுத்தில் கொண்டுவந்து குமுறியிருக்கிறீர்கள்.
படிக்கப்படிக்க தலை சுற்றுகிறது!
மிகவும் கொடுமை தான்.
அவர்கள் மட்டுமே, சாதனைப்பெண்கள் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.
விழிப்புணர்வு தரும் மிக நல்ல பதிவுக்கும், பகிர்வுக்குப்பாராட்டுக்கள்.
சிறப்பான பகிர்வு...
வாழ்த்துக்கள்... (எல்லா நாளும்)
உண்மை! உண்மை! என் மனைவியின் இரண்டு பிரசவத்தின் போது அருகில் இருந்துள்ளேன்! அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்! உங்கள் கருத்துக்களில் நியாயம் உள்ளது! இனிய மகளிர்தின வாழ்த்துக்கள்!
சரியான சாட்டையடி ..அரசு மருத்துவமனைகளுக்கு ...உண்மைதான் ஆச்சி வாசிக்கும்போதே மனசு கனத்து போனது ....பெண்களை அவர்களின் அத்யாவசிய தேவைகளை முதலில் இவர்கள் கருத்தில் கொள்ளட்டும் பிறகு மகளிர் தினத்தை பெருமையோடு கொண்டாடலாம் .
சிறப்பான நாளில் நல்லதொரு பகிர்வு .உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும் .
மிகவும் பரிதாபத்திற்குரிய இந்தப் பெண்களுக்கு மகளிர் தினம் பற்றித் தெரியுமா?
அடிப்படை சுகாதாரம் கூட இவர்களுக்கு மருத்துவ மனைகளிலேயே கிடைப்பதில்லை என்பது பெரிய தலை குனிவான விஷயம்.
ஒரு சின்ன விழிப்புணர்வாவது உங்கள் பதிவு மூலம் ஏற்பட்டால் சந்தோஷமாக இருக்கும்.
மகளிர் தினத்தன்று ஒரு அவசியமான விஷயத்தை பற்றி எழுதியதற்கு பாராட்டுக்கள்!
தமிழகம் மட்டுமல்ல ஆச்சி, தலைநகரின் பிரதான அரசு மருத்துவமனையிலே இந்த நிலை தான். ஒரே படுக்கையில் இரண்டு கர்ப்பவதிகள் படுத்திருக்கும் காட்சிகள் கண்டதுண்டு, மனம் நொந்ததுண்டு.....
அன்பு தோழி Anjel உங்களை பற்றி சொல்லி இந்த லிங்க் கொடுத்தாங்க...
எப்படி சொல்ல...மிக இயல்பாக எழுதியதாக எனக்கு தெரியவில்லை, உள்ளத்தின் ஆதங்கம், கோபம் வார்த்தைகளாய் வந்திருக்கிறது.
வாய் சவுடால் பேசித்திரியும் அரசியல் கூட்டங்கள் இவற்றை கண்டுக் கொள்ளாது , ஆனால் மகளிர் அமைப்புகள் என்று ஒன்று இருக்கிறதல்லவா , ஆபாச சுவரொட்டிக்கு எதிராக கோஷம்
போடுபவர்கள், அரசு மருத்துவமனைகளில் சரியான சுகாதார வசதி செய்துக் கொடுக்கச் சொல்லி ஏன் அரசை வலியுறுத்த கூடாது ???!!!
நம் வீடு பாதுக்காப்பாக இருக்கிறது என்ற சுயநலம் ஏழை என்றும் பெண்கள் என்று பார்க்கவா போகிறது.
இப்படியும் இருக்கிறதா என்று படித்து மிக வருந்துகிறேன் தோழி.
உங்கள் உணர்விற்கு தலை வணங்குகிறேன்.
என் அன்பான நன்றிகள்.
Post a Comment