*வணக்கம் வருகைக்கு நன்றி*

Oct 19, 2011

பாண்டி நாட்டு தமிழ் - பாகம் 2

முதல் பாகம்  பதிந்த பின் மேலும் சில வார்த்தைகள் நினைவிற்கு வந்தன.

அவைகள் :
இடுப்பு பகுதியை குறுக்கு என்பார்கள்.என் தாத்தா அம்மாச்சியின் கிராமத்தில் பலரும் வேலை பார்த்த அலுப்பில் அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது முதுகு,இடுப்பு வலியெடுத்தால் குறுக்க வலிக்கிதென்று சொல்வதை கேட்டிருக்கிறேன்.


நாகப்பட்டினத்தில் நான் பட்டைய படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும்போதுதான் முதல்வன் திரைப்படம் வெளிவந்தது.அந்த வருட ஆண்டுவிழாவில் முதல்வன் திரைப்படத்தின் குறுக்குச் சிறுத்தவளே பாட்டிற்கு மாணவிகளின் நடனம் நடைபெற்றது.இந்த பாடல் எல்லோருக்கும் பிடித்த பாடல் .கைத்தட்டல்கள் ஆரவாரம் அதிகம் கிடைத்திருந்தது.


கலைநிகழ்ச்சிகள் நிறைவுபெற்று விழாவைப்பற்றி பின்னுட்டமிட்டபடி  குதுகலத்துடன்    பேருந்து நிலையம்   சென்றோம். என்னுடன் வந்த சக மாணவி குறுக்குச் சிறுத்தவளே பாட்டு நல்லாதனிருக்கு மீனிங் இல்லாம பாட்ட ஆரம்பிச்சிருக்கார் பாடலாசிரியர் என்று சொன்னாள்.அவள் சொன்னது குறுக்குச் சிறுத்தவளே என்றால் என்ன அர்த்தம்,அது அர்த்தமற்ற வார்த்தை என்பதுதான்.


அந்த வார்த்தைக்கு அர்த்தமுண்டு.குறுக்கு என்றால் இடை(இடுப்பு).இடை சிறுத்தவளேனு பாட்டு ஆரம்பிக்குதுனு சொன்னதும் சின்னதாய் ஏற்றுக்கொண்டாள்.எனக்கும் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பை விளக்கியது போல ஒரு சந்தோஷம்.


சளி(ஜலதோஷம்) பிடித்திருந்தால் தடுமம் பிடிச்சிருக்கு என்பார்கள்.


கொத்தவரங்காயை சீனி அவரைக்காய் என்பார்கள்.(இதை ஒரு சகோதரி நினைவுபடுத்தினார்கள்).


கரும்பில் தோகை இருக்குமே அதனை சோகை என்பார்கள்.சோக உரிக்க போறேன் என்று கேள்விப்பட்டதுண்டு.


வீட்டில் அறை(ரூம்) இருந்தால் மச்சி வீடு (அறை உள்ள வீடு) என்பார்கள்.


குதிப்பதற்கு தவ்வுதல் என்பார்கள்.சிறு பிள்ளைகள் குதிக்கும்போது தவ்வாதப்பா என்று சொல்வதை கேட்டிருக்கிறேன்.


 நாளாவது அல்லது ஐந்தாவது பெண்குழந்தை பிறந்தால் போதும்பொண்ணு என்றே பெயர் வைப்பார்கள்.இந்த பெயரை கடைசிவரை  மாற்றமாட்டார்கள்.


களவு (திருட்டு) போய்விட்டது என்பார்கள்.களவாண்ட்டாங்கே (திருடிவிட்டார்கள்) என்பார்கள்.திருடனை களவானி என்பார்கள்.திருட்டுப்பைய என்று திட்டுவதை களவானிப்பைய என்பார்கள்.


வயிறு வலிக்குதென்றால்  வகுத்த/வவுத்த வலிக்குதுன்னு சொல்லுவார்கள்.செம சிரிப்பு வரும்.


மிகையாகப் பேசுபவர்களை அல்லது பிதற்றுபவர்களை அல்லது ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது பக்கத்திலிருப்பவர் அவர் பற்றி கவலைப்படாமல் தன் புகழ்,பெருமை பேசுபவர்களின் நிலையை பகுமானம் என்பார்கள்.பெருமை பேசும்போது பகுமானத்த பாரு என்பார்கள்.


ஒரு சமயம் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்குச் சென்றோம்.
பொதுவாக வெட்ட பயன்படும் கத்தியை என் தாத்தா வெட்டுக்கத்தி என்பார்.அங்கு பலரும் அறிந்த வார்த்தைதான் இந்த வெட்டுக்கத்தி.வீட்டிலிருந்து புறப்படும்போதே மற்ற பொருள்களுடன் அந்த வெட்டுக்கத்தியையும் எடுத்து வைக்க சொன்னார்.பூசாரி இல்லையென்றால் நாமேதான் எல்லாம் செய்யனும்.பக்கத்திலே வாழை மரங்கள் இருக்கும்.வாழை இலைகள் வெட்ட உதவும் என்றார்.




கோவில் அமைந்திருக்கும்  கிராமம் தொன்மையான மிக அழகான கிராமம்.மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்காது. கண்ணுக்கெட்டிய  தூரம்  வரை  வீடுகள்  கிடையாது.  சுற்றிலும்   மலைகளும், கரும்பு,கம்பு, நிலக்கடலை,துவரம்பருப்பு, எள், வெங்காய விளைநிலங்கள் இருந்தன. அங்கிருந்த இயற்கை சூழலே அருமையாக  இருந்தது.

எங்கெங்கிருந்தோ அந்த கோவிலுக்கு வருபவர்களே அதிகம். கிராமத்து பூசாரி தமிழ் பாடலை பாடி அபிசேக அர்ச்சனை செய்தார்.கோவில் வாசலில் நான்கு வயது முதல் பத்து வயதுவரை மதிக்கத்தக்க பிள்ளைகள் பிரசாதத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.அந்த கிராமத்து பிள்ளைகளாக இருக்கலாம்.

என் அம்மா அந்த பிள்ளைகளுக்கு கொடுப்பதற்காக தட்டில் தின்பொருட்கள்,பிராசதங்களை பிரித்துக்கொண்டிருந்தார்.சிறுவர்கள் கூடினர்.என் தாத்தா சற்று உரத்தக் குரலில் அந்த வெட்டுக்கத்திய எடும்மா என்றதும் ஒரு சிறுவன் எடுத்தானே ஓட்டம்.அலரி அடித்துக்கொண்டு ஓடினான்.யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.என் அம்மா வேறு ஓடுபவனை நில்லுப்பா,நில்லுப்பாங்கிறாங்க.

வெட்டுக்கத்திய எடுன்னு சொன்னவுடன் ஓட்றேயான் (ஓடுறான்) போலருக்கும்மான்னு தாத்தா சொன்னவுடன் எல்லோருக்கும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை,அதே நேரத்தில் பாவமாகவும் இருந்தது.என் தாத்தா தேங்காய் கீறுவதற்குதான்  வெட்டுக்கத்தி கேட்டாராம்.ஓடிய சிறுவனின் பங்கை மற்ற சிறுவன் ஒருவனுக்கு சேர்த்து  கொடுத்து ஓடியவனிடம் கொடுத்துவிட சொன்னோம்.மறக்க முடியாத நிகழ்வு அது.

மேலும் பாண்டி நாட்டு தமிழ் நினைவிற்கு வந்தால் 3 ஆம் பகுதியாக சந்திப்போம்.

7 comments:

KParthasarathi said...

ரசித்து படித்தேன்.இன்னும் சில வார்த்தைகள் வழக்கில் உள்ளது.அந்த கிராமீய மணமே அலாதி இன்பம் தருபைவை தான்
நீங்கள் விவரித்த இயற்கை காட்சி மனதிற்கு ரம்யமாக இருக்கிறது

kaialavuman said...

நகர்புறத்திலும் (மதுரை etc) நீங்கள் குறிப்பிட்ட பேச்சு வழக்குகள் இருக்கின்றனவா? அல்லது கிராமங்களில் தானா?

படிக்கச் சுவையாக இருந்தது. நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மெல்லிடையாளைக் குறிக்கத்தான்

குறுக்குச்சிறுத்தவளேன்னு சினிமா பாட்டே வந்திடுச்சே!

பாட்டைக் கேட்டு விட்டதால் நீங்க சொல்வது புதிதாகத் தெரியவில்லை.

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
வை.கோபாலகிருஷ்ணன் said...

சளிக்குத் தடுமம், களவு, வவுத்து வலியும்கூட நான் கேள்விப்பட்டுள்ளேன்.

தாத்தாவின் வெட்டுக்கத்திக்கதை நல்ல சிரிப்பாக இருந்தது.

புதிய இடுகையிட்டால் தகவல் தெரிவிக்கக்கூடாதா?

தமிழ்மணம் : 2

இண்ட்லி: 4 அமுக்கு அமுக்கப்பட்டது.

புதிய டெம்ப்ளேட் ஜோராக இருக்கு.
vgk

ஆச்சி ஸ்ரீதர் said...

@kparththasarathi
மிக்க நன்றி.
இன்னமும் நான் பார்த்த இயற்கை அழகில் மதுரை கிராமங்கள் முதலிடமாகவே உள்ளது.

@வேங்கட சீனிவாசன்

நன்றி.

மதுரையின் மற்ற நகர்ப்புறங்களிலும் இப்படியேதான் பேசுவார்கள்.இப்போ மக்கள் தொழில் மற்றும் படிப்பிற்காக இடம்பெயருகின்றனர்.நாகரீக முன்னேற்றத்தினால் பேச்சு வழக்குகள் சற்று மாறுபட்டிருக்கலாம்.ஆனால் வயதானவர்கள் இன்னமும் இப்படியேதான் பேசுகின்றனர்.


வை.கோபாலகிருஷ்ணன் சார்.

நன்றி.
நீங்கள் எல்லாம் அறிந்தவர்.அந்த பெண்ணுக்கு அப்போது அர்த்தம் தெரியவில்லை.உங்க திருச்சியில் 90 சதவீதம் பேர் மதுரை ஸ்லாங்தானே பேசுவார்கள்.

அதே டெம்ப்ளேட் தான்.தலைப்பில் மட்டும் டெக்கரேசன்.

வெங்கட் நாகராஜ் said...

நன்றாக இருக்கிறது... நன்றி...