*வணக்கம் வருகைக்கு நன்றி*

Mar 20, 2011

தபால் நினைவுகள்


தற்போதைய தலைமுறைக்கு கடிதம் என்றவுடன் நினைவிற்கு வருவது,வீட்டிற்கு தபால் நிலையத்தில் அல்லது கூரியர் சர்விசிலிருந்து  வரும்  வங்கிகள், காப்பிடுகள், சொத்துக்கள், இத்யாதி ...... சம்பந்தமான கடிதங்கள் என்பது மட்டுமே தெரிந்திருக்கும்.குடும்ப உறவுகளை,நட்புகளை ,காதலை தொடர்பு கொள்ள,வலுப்படுத்திக் கொள்ள,உணர்வுகளை,எழுத்துக்களால் பரிமாறிக் கொள்வதற்கு கடிதம் என்று ஒன்று இருந்தது,அதுவும் அரசாங்கத்தின் வழியாகவே கடிதங்கள் பரிமாறிக்கப்படது என்பதை வரலாறாக வருங்காலத்தினருக்கு நாம் தெரியப்படுத்தும் நிலையில் நாகரீக,அறிவியல் முன்னேற்றங்கள், எளிதில் தொடர்பு கொள்ளும்படியும்,கால விரையங்களை குறைத்து செல்போன்களாகவும்,இணையதளமாகவும் மற்றும் பிற வசதிகளும் வந்து விட்டது.

சில கால கட்டத்திற்கு பிறகுதான் கூரியர் தொடர்பு வந்தது,என்றாலும் அதிகம் பேர் தபால் நிலையத்தைத்தான்,தொடர்புத் தூது நிலையமாகக் கொண்டு,தபால்காரர்   (போஸ்ட்மேன்) எப்ப வருவார்,தபால் எப்ப வரும்னு ஆவலாக,சந்தோஷமாக,ஏக்கமாக காத்திருப்பார்கள்.தபால்காரர் வரும் நேரம் எவ்வளவு எதிர்பார்ப்பான நேரம்.எதிர்பார்த்த தபால் அன்றைய தினத்தில் வரவில்லையெனில் மனமும்,முகமும் எப்படி வாடிப்போகிவிடும்.கடிதங்களை படித்துவிட்டு அதிலுள்ள விபரங்கள் பற்றி இரண்டு நாட்கள் கதை ஓடும்.படிக்கத் தெரியாதவர்கள் படித்தவர்களிடம் சென்று தபாலை படிக்கச் சொல்லி விபரம் தெரிந்து கொள்வதும்,பதில் கடிதம் எழுதுவதும்,செய்திகள் சென்றடையும் காலம் தாமதமானாலும் அந்த இன்பங்கள் இப்போது தோராயமாக குறைந்துவிட்டது.டெலிகிராம் வசதி இருந்தபோதிலும், வருத்தம் என்னவெனில் இன்ப துன்ப  செய்திகள் உடனுக்குடன் கிடைக்காமல் போவதும்,உரிய நேரத்திற்கு உரியவர்கள் கலந்து கொள்ள முடியாமல் போவதும்தான்.  

இப்போது எல்லோரிடமும் செல்போன்,எஸ்.எம்.எஸ்,..ஆனால் எதிர்பார்த்து,காத்திருந்து கிடைத்த இன்பம் குறைவுதான்.தொலைபேசி இல்லாத வீடுகளே இல்லை,அரிதாக தொலைபேசி வசதி இல்லையென்றாலும் அண்டை அயலாரின் தொலைபேசி எண்கள் அவசரத்திற்கு உதவும். 
ஊருக்கு ஒரு தபால் நிலையம்,மாவட்டத்திற்கு ஒரு தலைமை தபால் நிலையம் இருக்கும்,    இப்போதும்       இருக்கிறது, ஆனால்  மக்களுக்கிடையில்  கடிதப் போக்குவரத்து    குறைந்துவிட்டதால்  அங்கங்கே தபால் பொட்டியின் எண்ணிக்கைதான்  குறைந்து விட்டது.கடிதம் வாங்கப் போகனும்,எழுதனும்,கவர்  என்றால்  எழுதி முடித்த பின் பசை கொண்டு ஒட்டனும்,ஸ்டாம் ஓட்டனும்,அடித்தல்,திருத்தல் இல்லாமல் எழுதனும்,குறிப்பாக தெளிவாக முகவரி எழுதனும்,பின்கோடு எழுதனும்.ரெண்டு வரியானாலும்,நூறு வரியானாலும் இந்த முறைகள் பின்பற்ற வேண்டும். சுப காரிய கடிதம் எனில் நான்கு முனைப்பகுதியிலும் மஞ்சள் தடவி அனுப்புவார்களே,அந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது.தற்போது நாம்  ஸ்பீட் போஸ்ட்,ரிஜிஸ்டர்ட் போஸ்ட்,அவசரமில்லாத அழைப்பிதழ்கள்,அரசாங்கத் தேர்வுக்கான அப்பிளிகேசன் அனுப்ப மட்டுமே தபால் நிலையத்தை நாடுகிறோம்.
நம்மிடம் தபால் கொண்டு வந்து சேர்க்கும் தபால்காரருக்கு ஊருக்குள் எவ்வளவு மரியாதை கிடைக்கும்,சிலருக்கு தபால்காரர் அவதாரப் புருஷராகவே கண்ணுக்குத் தெரிவார்.ஊருக்கே அவர் ஒரு பொதுப் பிள்ளையாகத் தெரிவர்.சில காலங்களுக்குப் பிறகு தபால் கொண்டு வந்து சேர்க்கும் பணிக்கு போஸ்ட் உமனாக பெண்களும் அமர்த்தப்பட்டது சிறப்பானது.  
தொலை தூரக் காதலெனில் தபால் நிலையம் வழியாக கடிதங்கள் பரிமாறப்படும்,தபால் நிலைய கடிதங்கள் அவசியம் இல்லையெனில் தங்களுக்குள்ளாகவோ,நண்பர்கள்,அக்கம் பக்கத்து நண்டு,சிண்டுகள் மூலம்  கைப்பட எழுதி அனுப்பி படிப்பதிலிருக்கும் திரில்,சுகம் நேரில் பேசிக் கொள்வதிலோ,எஸ்.எம்.எஸ்  அனுப்புவதிலோ குறைவுதான்.

விஞ்ஞான முன்னேற்றங்களை நல்வழியில் பயன்படுத்துவோம்
பழமைகளை மறவாதிருப்போம்.


                                                                                                  இப்படிக்கு

                                                                                                  அன்புடன்
                                                                                                      
                                                                                                        ஆச்சி.

18 comments:

டக்கால்டி said...

சூப்பர்...சூப்பர்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. இழந்தவைகள் பலவற்றில் இதுவும் ஒன்று. நான் முன்பு இதே விஷயத்தினைப் பற்றி “சார் போஸ்ட்!” [http://venkatnagaraj.blogspot.com/2010/05/blog-post_14.html] என்று ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். ஒரு விஷயம். அந்த பகிர்விலும் நீங்கள் பயன்படுத்திய அதே புகைப்படம் தான் போட்டு இருந்தேன் :)

Unknown said...

எனக்கும் மனைவிக்கும் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் அப்போதைய(1996) ஒரே தொடர்பு கடிதங்கள்தான்..

எல் கே said...

ஹ்ம்ம் அதெல்லாம் அந்தக் காலம் ஆச்சி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத உறவினருக்கு அவருடைய பேத்தி கடிதம் எழுதி அனுப்பி இருந்தாள். அவருக்கு அதுஎவ்ளோ மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லையே :)
இப்படிக்கு
முத்துலெட்சுமி
:))

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆம். பசுமையான அந்த நினைவுகளைக் கிளறி விட்டு விட்டீர்கள்.

இப்போதைய அவசர உலகத்தில் யாருக்கும் எதிலும் வெயிட்டிங் பிடிக்காது போய் விட்டது.

உடனுக்குடன் தொடர்பு, உடனுக்குடன் பதில். அதுதான் விஞ்ஞான முன்னேற்றம். அதையும் கைதட்டி வரவேற்போம்.

பழைய நினைவுகளையும் நாம் மறக்காமல் இருப்போம். நம்
குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுவோம்.

raji said...

என் பொண்ணு 'இன்லேண்ட் கவரா?' அது எப்பிடி இருக்கும்னு
கேட்டா ஒரு நாள்.அப்பறம் நான் 1990 களில் என் அக்கா,மன்னி எல்லோரும்
எனக்கு எழுதியிருந்த கடிதங்களை எடுத்துக் காமிச்சேன்.
அதையெல்லாம் வியப்பா பாத்தா.அப்பறம் இதெல்லாம் இன்னும் எதுக்கு
நீ பத்திரமா வச்சுருக்க என்று கேட்டாள்.
என் பழைய நினைவுகளின் பொக்கிஷம் என்று அவளுக்கு விளக்கினேன்.
அவள் இன்லேண்ட் கவர் பாத்த சந்தோஷத்தை அவள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொண்டாள்.

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு ஆச்சி. தபால்காரர் வரவை எதிர்பார்த்த நாட்கள் நிறைய உண்டு. இப்பொழுது யாரும் எழுதுவதே இல்லை. நவீன தொலைதொடர்பு சாதனங்களில் நல்லதும் உண்டு. அதே சமயம் கெட்டதும் உண்டு. நானும் சில கடிதங்களை பத்திரபடுத்தி வைத்திருக்கிறேன்.

Anonymous said...

அன்புள்ள..எனத்தொடங்கும் அந்த அன்பு..செல்ஃபோனில் பேசும்போது உணரமுடியவில்லை

Angel said...

கடிதம் எழுதி அது கிடைக்கும் வரை காத்திருந்து படிப்பது
என்பது உண்மையிலேயே நல்ல சுவாரஸ்யமான அனுபவம்.
SMS வந்து எல்லாம் சுருங்கி விட்டது .
BECAUSE-- BCOS,-LOTS OF LOVE--LOL,TAKE CARE ---TC,THANKYOU--TANQ
இப்படிஎவ்ளவோ.

ஆச்சி ஸ்ரீதர் said...

@டக்கால்டி

முதல் வருகைக்கு நன்றிங்க.

@வெங்கட் நாகராஜ்

தபால் பெட்டியில் தமிழில் ‘தபால்’ என்று எழுதியிருப்பதைப் பார்த்து படத்தை தேர்வு செய்தேன்.நன்றிங்க.


@கே.ஆர்.பி.செந்தில்

கடித அனுபவங்கள் மறக்க முடியாத ஒன்று.நன்றிங்க.

@எல்.கே,ஆமாம்,மலரும் நினைவுகள்,நன்றிங்க.

@முத்துலெஷ்மி,

உணர்வுகளை எழுத்துக்களாக படிக்கும்போது அதன் சக்தி அதிகம்தான்.,நன்றிங்க.

@வை.கோபாலகிருஷ்ணன் சார்

உங்கள் கருத்து ப்ராக்டிக்கலானது.நன்றிங்க.

@ராஜி

ஆமாம்,பல வீடுகளில்,இந்த கடித சேகரிப்பு இருக்கும்,இப்போது உள்ள பிள்ளைகளுக்கு நம்ம வீட்டில் நாம் வைத்திருக்கும்,நாம்மால் பயன்படுத்தப்பட்ட வரலாற்று பொருள், நன்றிங்க.

@ஆதி

நமக்கு பிடித்தவர்களின் கடிதமென்றால் அது பொக்கிஷமாச்சே,நன்றிங்க.

@ஆர்.கே.சதிஸ்குமார்,

’அன்புள்ள’இதைப் படிக்கும்போது ஏற்படும் உணர்வே தனிதாங்க,இன்னும் சில காலம் கழித்து ‘அன்புள்ள’னு எழுதினால்,எழுதினவர வித்தியாசமா பார்த்தாலும் பார்ப்பாங்க.
முதல் வருகைக்கு நன்றிங்க.

@ஏஞ்சலின் நன்றிங்க.

ஆமாங்க அப்படி ஒரு மொபைல் மொழியே உருவாகிவிட்டது.விங்ஞான வளர்ச்சியில் உலகம் சுருங்கி,மொழியும் அப்படியே ஆகிவிட்டது.

சாந்தி மாரியப்பன் said...

நல்ல பகிர்வு.. ஒருகாலத்தில் தபால்காரர் எப்போவருவார்ன்னு காத்துக்கிடந்த காலத்தை நினைவுபடுத்திட்டுது :-))

Unknown said...

மறந்து போனதை நினைவுபடுத்திய ஒரு நல்ல பகிர்வு, அதுசரி நீங்க இப்போ தபால்லதான் எழுதிகிட்டு இருக்கீங்களா? சும்மா ஒரு டவுட்டு கேட்டேன் :-)))))))))

ஆச்சி ஸ்ரீதர் said...

@அமைதிச்சாரல்

மலரும் நினைவுகலுடன் வருகை தந்தமைக்கு நன்றி.

@சுரேஷ், நன்றி.

இதோ இந்த திறந்தவெளி தபால்தான்(வலைப்பதிவு)எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Anonymous said...

டும்டும்..டும்டும்...

நம்மை நேசித்தவர்களிடமிருந்து வரும் கடிதத்திற்காக தபால் காரரை எதிர்நோக்கி இருக்கும் காத்திருப்பதும் சுகம் தான்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ நையாண்டி மேளம்

மேள ஓசையுடன்,முதல் வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி.தபால்காரரின் வருகை எதிர்பார்த்து காத்திருந்தவர்களால் மறக்க முடியாதது.

இராஜராஜேஸ்வரி said...

பசுமை நிறைந்த நினைவுகள்.
வாழ்த்துக்கள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@இராஜராஜேஸ்வரி

சரியே.நன்றிங்க.