*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 1, 2013

குளிர்,குளிர்...குளிரு....


நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்  காணும் திரைப்படத்தில்  வரும் ஒரு வசனம் “ என்னது சிவாஜி செத்துட்டாரா!!!!!! “ என்பது போல நாட்டில என்னென்னமோ நடக்கும்போது வட மாநிலங்களில் குளிர் ஆரம்பித்து சில மாதங்கள் ஆனாலும் இந்த குளிரின் அட்டகாசம் இன்னும் குறையவில்லை .” என்னது குளிரா!!!! ” அதுதான் வருடந்தோறும் வருமே என்பார்கள்.இப்பதான் 2012 பிறந்தது போலவும் வெயில் அதிகம் இருந்தாலும் குளிர்தான் அதிகம் நினைவில் நிற்கின்றது.அதற்குள் 2012 முடிந்து 2013 ம் பிறந்துவிட்டது,முதல் மாதமும் மாயமாய் முடிந்துவிட்டது.

 இந்த குளிரு இருக்கே குளிரு,,,,அது மட்டும் மாயமாகாமல் மீண்டும் மீண்டும் மூடுபனியில் ரெண்டு வீட்டிற்கு பிறகு மூன்றாவது வீட்டை மறைத்துவிடுகின்றது,ரெண்டு லைட்டு மிதந்து வரும்,அருகில் வந்தவுடன்தான் அது பேருந்தா ,காரா,லாரியா என்று கண்டுபிடிக்கலாம்.லைட்டுகள் அசையாமல் சற்றே உயரத்தில் வரிசையாக தெரிந்தால் அது கட்டாயம் போஸ்ட்மரம்தான்.

சினிமாவில் வரும் வானுலகத்தில் அணிகலன்களுடன் பகவான்கள், தேவர்கள் காட்சி தருவது  போல பூலோகத்தில்  குளிருக்கான பாதுகாப்பு உடைகளில் முகம் அல்லது கண்கள் மட்டும் தெரியும் பேய்கள் போல ...இல்லை இல்லை முகமூடி கொள்ளைக்காரர்கள் போல  காட்சி தருகின்றோம்.காலை 10,11 மணிக்கு மேல் வெயில் வருகையில் தலைப்பாக்கள் முகமூடிகளுக்கு  விடுப்பு.சீனாவில் 4 மீட்டர் தூரத்திற்கு கடலே உறைந்திருப்பதை தொலைக்காட்சியில் பார்த்தபோது இங்கு நிலவும் குளிருக்கு பெரிய கும்பிடு போடனும்.

சாக்ஸ்,கைகளில் கிளவுஸ்,2 அல்லது 3 ஸ்வட்டர் ,மப்ளர்,ஜர்கின்,ஜாக்கெட் ,கோட்,சால்வை என்று  பெரியவர்களும் குழந்தைகளும் குளிருக்கான பாதுகாப்பு ஆடைகளுடன் வீட்டிலும்,வெளியிலும்,பள்ளி கல்லூரிக்கு சென்றாலும் ,ஒரு சமயம் குளிரை நேசிச்சாலும் தண்ணீரைச்  சார்ந்த வேலைகளில் தண்டனை அனுபவிப்பது போலத்தான் செய்ய வேண்டியுள்ளது.5 டிகிரிக்கு கீழே வெப்பநிலை வந்தபோது பாத்திரம் விளக்க,துணிகள் துவைக்க (வாசிங்மெசினிலும்) சுடு தண்ணீர் உபயோகிக்க வேண்டியுள்ளது

 குளிருக்கான பாதுகாப்பு ஆடைகள் அதிகம் இல்லாமல் தண்ணீர் சுட வைக்க ஹீட்டர் இல்லை, வசிக்கும் இடத்தை தேவையான போது இதமாக வைத்துக்கொள்ள ரூம் ஹீட்டர் இல்லாமல் சாலையோர குப்பைகளை சேகரித்து சாலையோரத்திலே தீ மூட்டி குளிரை தனித்துக்கொண்டு டென்டுகளிலும்,குடிசைகளிலும்,பாலங்களுக்கு அடியில் வசிப்பவர்களையும் , அவர்களின் குழந்தைகளின் நிலைமையும் பார்க்க வருத்தமாக இருந்தாலும் குளிரை பொருட்படுத்தாமல் அவர்கள்  இயல்பாக அன்றாட வேலைகளில் ஈடுபடுவது பெரும் ஆச்சர்யம்.

காய் கனிகளின் விலை குறைவதும் புதிய காய் கனிகள் வருவதும் ஆறுதல்.குளிர்காலத்தில் இங்கு வேர்கடலையின் வரவும் விற்பனையும் அதிகம்.ஆனால் எங்கும் பச்சைக் கடலை கிடைப்பதில்லை.அவித்த வேர்கடலையின் ருசி அறிந்திராதவர்கள் இம்மக்கள்.கடலை மிட்டாய் சதுர,உருண்டை வடிவில் பார்த்திருப்போம்,
.இங்கு தட்டையாக வட்ட வடிவ கடலை மிட்டாய் பாருங்கள்.இதற்கு கஜக் என்று பெயர்.ஒரு கஜக் 175 கிராமிலிருந்து 200 கிராம் வரை இருக்கும்.


இங்குள்ள பெண்கள் குளிர்காலங்களில் ஸ்வெட்டர் முனைவதில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள்.கணிதத்தில் ஃபார்முலா வைத்து டெரிவேசன்ஸ் கொண்டுவருவது போல பல டிசைன்களை போட்டுப்பார்த்து ஸ்வட்டர்,தோப்பாக்கள் வடிவில் கொண்டுவருவது கண்டு நான் வியப்படைவேன்.ஹேன்ட் மேடா ரெடி மெடா என்று கண்டுபிடிக்க முடியாது. 

குழந்தைகளும் வயதானவர்களும் குளிரில்  அதிகம் பாதிக்கப்படுவதால்  மருத்துவர்கள்  பிசியாக இருக்கின்றார்கள்.பல பேசண்டுகள் பேசண்டிற்கு துணை வந்த்திருப்பவர்கள் ,நர்ஸ்கள் ,முகத்தில் ஒரு இன்ச் மேக்கப் குறையாமல் மருத்துவமனையில் காட்சி தருகின்றனர்.



குளிரினால் பட்டுப்போன மரங்கள் 


கடந்த திங்கள் கிழமை மார்க்கெட்டிற்கு நடந்து  செல்லும்போது இந்த காட்சியை கிளிக்கினேன்.சாலையில் இடது வலது பக்கம் வாகனங்கள் செல்லும் நடுவே சின்ன பிளாட் ஃ பார்ம் இருக்குமே அங்க சேர் போட்டு அமர்ந்திருக்கின்றார் இந்த சாமியார் (பாபா).ட்ராபிக் போலிஸ் பிறகு விரட்டிவிட்டாரா என்னவென்று தெரியவில்லை.இவர் இங்கு அமர்ந்திருப்பது வெயிலுக்கா / வசூலுக்கா என்பது தெரியவில்லை.எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வார்கள்  " கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவனை தூக்கி மடியில் வை " என்று.இவரைப் பார்த்தவுடன் அந்த பழமொழி ஏனோ நினைவிற்கு வந்தது. 



குளிருக்கு  எதோ புது காய் வந்திருக்கென்று விசாரித்தால் தோல் உரித்து நறுக்கிய கரும்புத் துண்டுகள்.கிலோ 50 ரூபாய் என்றார்கள்.ரொம்ப சந்தோஷம் ,பல்லுக்கு கொஞ்சம்  வேலை இல்லைன்னு வாங்கினோம் .



*மீண்டும் சந்திப்போம் *