*வணக்கம் வருகைக்கு நன்றி*

Mar 14, 2012

அனைவருக்கும் வணக்கமும் நன்றியும்

தமிழ் எழுதப் படிக்கத் தெரியும்னு நினைத்திருந்த எனக்கு,எழுத்துக்களை அடையாளமும், எழுதவும் தெரிகிறது,மற்றவர்கள் எழுதியிருப்பதை படிக்கத்  தெரிகிறது என்பதை பதிவுலகம் இப்போதும் உணர்த்துகிறது.எழுத்துத் திறமையும்,எழுதும் ஆர்வமும்,இணைய வசதியும் இருப்பவர்கள்  பதிவுலகில் வலம் வர முடிகின்றது.எழுதுவதில் ஆர்வமுள்ள, இணைய வசதி இல்லாத எத்தனையோ பேர் தங்களின் படைப்புகளை காகிதங்களிலும் அல்லது எதாவது பத்திரிக்கைகள்,வார இதழ்களுக்கு அனுப்பி பிரசுரம் ஆகுமா?ஆகாதா என்று காத்திருந்தும் எதிர்பார்த்தும் வருகின்றனர்.இணைய வசதி இருக்கும் பலருக்கு சொந்தமாக எழுதும் ஆர்வம் இருப்பதில்லை.


எழுதாவிட்டாலும் சக மனிதர்கள் எழுதியிருப்பதை படிப்பதில் மட்டும் ஆர்வம் பலருக்கு.தமிழ் எழுதறவங்களெல்லாம் குடும்பத்த அநாதைய விட்ட மாதிரியும் அல்லது கேப்பாரின்றி எழுதுறேன்ற பேரில் குடும்பத்திற்காக எதுவும் செய்யாமல் போன மாதிரியும் அல்லது தண்ணி தெளிச்சு விட்ட ஆளாகாவும் கருதி இதில் கவனம் செலுத்தும் மணித்துளிகளையும் என் குடும்பத்திற்காக செலவிடுவதுதான் சந்தோசம்,இந்த வெட்டி வேலையெல்லாம் எனக்கெதற்கு என்ற கேள்வி சிலருக்கு.சிறப்பாக எழுதும் பதிவர்களும் குடும்பப் பொறுப்புகள்,பிள்ளைகளின் கல்வியில் மேலும் கவனம் செலுத்த வேண்டி எழுதுவதை நிறுத்திவிடுவதுண்டு.


எல்லோருக்கும் பதிவுலகம் வர ஒரு காரணம் இருந்திருக்கும்.அத்துடன் எழுதும் ஆர்வத்திற்கும் ஒரு காரணம் இருந்திருக்கும்.இது என் 100வது பதிவு.நான் பதிவுலகம் வந்ததின் காரணம் என் அம்மாவின் மறைவு.ஆனால் எண்ணங்களையும்,நிகழ்வுகளையும் எழுத்துக்களில் பதிப்பதின் ஆர்வம் என் அப்பாவிடமிருந்து வந்தது என்றே சொல்வேன்.என் அப்பாவிற்கும் எழுத்துத் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.என் அப்பா மிகவும் சாதாரண மனிதர்.அவர் டைரி மற்றும் கடிதம் மட்டுமே எழுதுவார்.


இளமையில் வறுமையில் வாடி, தன் 17 வயதில் தந்தையையும் இழந்து(என் தாத்தா) கிடைக்கும் சிறு சிறு வேலைகள் செய்து வரும் வருமானத்தை குடும்பத்திற்கும் படிப்பிற்கும் ஈடுகட்டி அந்த காலத்து பத்தாம் வகுப்பு படித்து தொழிற்கல்வியும் படித்திருக்கிறார்.தன்னுடன் படித்த ரவி என்பவர் தன் படிப்பிற்காக உதவிகள் செய்ததாகவும் இன்று வரை அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என்பார்.லேபிற்கான கோட்டு,ஷீ கூட வாங்க வசதியில்லாமல் கடன் வாங்கி அணிந்து சென்றதாக சொல்லியிருக்கிறார்.


என் தாத்தா மின்வாரியத் துறையில் ஹெல்ப்பராக பணியில் இருந்தபோது இறந்திருக்கிறார்.என் அப்பாவும் பாட்டியும் வாரிசு வேலை கிடைப்பதற்காக பலரின் உதவிகளை நாடி,சிலரின் வீட்டு வாசல் ஏறி,இறங்கி,காத்திருந்து மின்வாரியத் துறையில் ஹெல்ப்பராக சேர்ந்திருக்கிறார்.அரசாங்க உத்யோகமானாலும் கடின உழைப்பும்,உயிரை பணயம் வைத்தும்,உழைத்து பதவி உயர்வுகள் பெற்று தான் பட்ட கஷ்டங்களை எங்களை அனுபவிக்கவிடாமல் வாழவைத்தவர்.


வேலையிலிருந்து வீட்டுக்கு வரும் அப்பா எங்களை அழைத்து பேசுவதும்,தின்பண்டங்கள் வாங்கிவந்து நாங்கள் சாப்பிடும் அழகை ரசிக்கும் அப்பா,சிறு வயதில் நான் பள்ளிக்கு சென்ற சில நாட்களில், வழியில் எதாவது மின்கம்பங்களில் ஏறி வேலை செய்வதைப் பார்க்க நேரிட்டால் கண்ணீர் வரும்.வீட்டிலும் வந்து எதுவும் கேக்க மாட்டேன்.செய்தித்தாள்களைத் தவிர வேறு எந்த புத்தகங்களும் படித்திராத என் அப்பா வாழ்வின் நெறிமுறைகளுக்காக பல உதாரணங்களும்,கதைகளும் சொல்லுவார்.டைமிங் காமெடியும் அடிப்பார்.


என் அப்பா
என் மகளுடன்
பிரச்சனைகளையும் அவமானங்களையும் சந்தித்தவர்,எளியவர்களிடம் தான் செய்து தந்த வேலைக்கு கூட ஊதியம் பெறமாட்டார்.எளிதில் மற்றவர்களிடம் ஒன்றிவிட மாட்டார்,ஆனால் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்.எதையும் எளிதாக எடுத்துக்கொள்வார்,மன்னிக்கும் குணம் உடையவர்.வசதி இல்லாதவனிடம்தான் உண்மையான அன்பிருக்கும்,இப்படியானவர்கள் வற்புறுத்தி கொடுக்கும் உணவுகளை அவமதிக்கக் கூடாது என்பார்.அவர்கள் முன்னே சாப்பிடு,அப்போது அவர்களின் முகத்தில் எழும் சந்தோசத்தைப் பார் என்பார்.


சில நேரங்களில் சில மனிதர்கள் அப்படித்தான் என அடிக்கடி சொல்லிக்கொள்வார்.முருகா என்னை மட்டும் காப்பாத்து என்பார்,ஏன் இப்படி சொல்றீங்க என்று கேட்டால் அப்பதான நான் உங்கள காப்பாத்த முடியும் என்பார்.பணத்தை சம்பாரிக்கலாம்,நல்ல மனுசனையும்,குணங்களையும் எளிதில் பெற்றுவிட முடியாது என்பார்.பதவி உயர்வுகள் வந்தபோதும் சலவை செய்து சட்டை போட மாட்டார்.சில முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டும் சலவை செய்த சட்டை அணிவார்.


தேவையான வசதிகள் இருந்தும் என் அப்பா இன்னமும் சைக்கள்தான் வைத்திருக்கிறார்.அந்த சைக்கிள் தன் அப்பாவுடையது என்பார்.அந்த சைக்கிளுக்கு ஆயிரம் முறை புது பார்ட்ஸ்கள் போட்டாலும் ஹேண்ட்பாரிலிருந்து சீட்டு வரை உள்ள கம்பிகள் மட்டும் மாற்ற அவசியமில்லாமல் பழுதாகாமல் என் தாத்தாவின் நினைவாக உள்ளது.என் அப்பாவின் திருமணத்தில் தன் மாமனார் (அம்மாவின் அப்பா )பரிசாக அளித்த அந்த காலத்து கை கடிகாரத்தைதான் இன்னமும் அணிந்துள்ளார்.


என்ன செய்தாலும்,வாங்கினாலும் தரமானதாகவும்,அதிக நாட்கள் இருக்கும்படியும்,அனைவரையும் கவரும்படியாகவே பொருட்கள்,துணிகள் வாங்குவார்.வாங்கும் பொருட்களை விற்கவும் அழிக்கவும் கூடாது என்பார்,அதற்கான பில்லையும் பல ஆண்டு காலம் சேமித்து வைத்திருப்பார்.எல்லா நிகழ்வுகளையும் எண்ணங்களையும் டைரியில் எழுதிவைத்திருப்பார்.அடுத்தவர்கள் டைரியை படிக்கக் கூடாதுன்னு எனக்குத் தெரியாது.வேலைக்கு போயிட்டு வந்து இரவில் எழுதுவார்,அவர் வேலைக்கு போனவுடன் நான் டைரியை எடுத்து படிப்பேன். என் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் சண்டை வந்ததில் அம்மா கோவிச்சிகிட்டு மதுரைக்கு போய்ட்டாங்க.டைரியில் அப்பா சண்டையை குறிப்பிடாமல் மணி (அம்மா பெயர்)மதுரைக்கு போய்விட்டாள்னு மட்டும் எழுதியிருந்தார்.நான் பேனாவை எடுத்து இன்ன சண்டையால் கோவிச்சிகிட்டு ஊருக்கு போய்ட்டாங்கன்னு எழுதிவிட்டேன்.மறுநாள் டைரி எழுதவந்த அப்பா படித்துவிட்டு என்னைய கண்டுபிடிச்சிட்டார்.ஆமாம் நாந்தான் எழுதினேன் என்றேன்.அவருக்கு செம கோபம் வந்தது.அப்பாவாக இருந்தாலும் அடுத்தவர் டைரியை படிப்பது தப்பு இனி என்கிட்ட பேசாதன்னு ஒரு வாரம்மா என்னுடன் பேசவே இல்லை.அப்றம் ஏன் எழுதுறார்ன்னு மனசுக்குள்ள கேட்டுக்கிட்டேன்.ஆனால் அப்பா பேசாமல் இருந்ததில் மிகவும் மனம் பாதிக்கப்பட்டேன்.வகுப்பறையிலும் அழுததும்,தோழிகள் சமாதானப்படுத்தியதும் நினைவிருக்கிறது.பிறகு அப்பாவே என்னிடம் பேசிவிட்டார்.அதற்கு பின் அந்த கருமத்தை (டைரியை) தொடுவதில்லை.


ஆனால் எனக்கும் எழுத அப்பதான் ஆசை வந்தது,அப்பாவிடம் சொன்னால் திட்டுவாரோன்னு நினைத்து பள்ளிக்காக வச்சிருக்கும் ஒரு குயர் நோட்டு ஒன்றை என் டைரியாக வைத்துக்கொள்வேன்.நானும் அன்றாட நிகழ்வுகளையும் மனதில் பட்டதையும் எழுத ஆரம்பித்தேன்.பள்ளி படிக்கும்போதே ஒரே ஊரில் 3வது,4வது தெருவில் இருக்கும் தோழிகளுக்கு பள்ளி விடுமுறையில் 15 பைசா கார்டில் கடிதமாக எழுதுவேன்.அவர்களும் பதில் போடுவார்கள்.பிறகு வெளியூர் தோழிகளுக்கும் கடிதம் எழுதுவது,பதிலுக்காக போஸ்ட்மேனை எதிர்பார்த்து காத்திருந்ததையும் மறக்க முடியாது.


நான் ஒன்றும் பெரிய எளுத்தாலி அல்ல.இருந்தாலும் என் எழுத்தின் ஆரம்பகால கதை இதுதான்.


இடைபட்ட காலங்களில் எனக்கு என் அப்பாவின் மீது வெறுப்பும்,அவருக்கு என் மீது வெறுப்பும் வந்த சூழ்நிலைகளும் உண்டு.ஆனால் என் அப்பா செய்தது எல்லாம் எங்கள் நலனை விரும்பித்தான் என்றாலும் வெளிப்படுத்திய உணர்வின் விதம் மனசங்கடங்களை ஏற்படுத்தியது.ஆனாலும் எனக்கு விலை மதிப்பில்லா ஆசான் என் அப்பாதான்.சென்ற ஆண்டு அக்டோபரில் ஓய்வுபெற்று வயல் மற்றும் புதிய வீட்டின் வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்.தினமும் எங்களுடன் ஃபோனில் பேசுவார்.பதிவுகள் எழுதுவதை ஒரு நாள் சொன்னபோது இணையத் தொடர்பால் பிரச்சனைகள் வரும்னு கேள்விப்படுகின்றேன்.யோசித்துகொள்ளம்மா என்று மட்டும் சொன்னார். 


சொந்த காரணங்களால் இந்த நூறாவது பதிவோடு சில காலங்களுக்கு பதிவுலகிலிருந்து விடைபெறுகின்றேன்.அனைவருக்கும் வணக்கமும் நன்றியும் .இப்படி சொல்ல எனக்கே பயமாதான் இருக்கு.ஏனெனில் என் மண்டைக்கு எட்டிய வரை எதாவது எழுத வேண்டும்,மீண்டும் வர வேண்டுமென்ற எண்ணம் உள்ளது.


சொறி பிடித்தவன் கையும் செல்போன் வைத்திருப்பவன் கையும் சும்மா இருக்காது என்பது போல பதிவுகள் எழுதின கையும் சும்மா இருக்கவிடாது.பார்ப்போம் கால மாற்றம் எப்படியுள்ளது என்பதனை.இந்த கூகிளார் சொல்லாமல் கொள்ளாமல் எதாவது மாற்றங்களை ஏற்படுத்துகிறார்.எல்லோரும் தங்கள் html கோடிங்ஸ்களை சேமித்து  வையுங்கள்.


இதுவரை எனக்கு ஆதரவளித்தவர்களுக்கும், நிறை குறைகளை எடுத்துச் சொல்லிய அனைத்து நல் உள்ளங்களுக்கும்,என் அனைத்து பதிவுகளுக்கும் அன்பினால் பின்னூட்டமளித்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


பள்ளி,கல்லூரி கடைசி நாள் பிரிவின் வலி போலவும்,திருமணத்திற்கு பின் அம்மா வீட்டிலிருந்து புறப்படும் வலி போலவும் இந்த பிரிவினை உணர்கின்றேன்.மீண்டும் சந்திப்போம்.நன்றி.

Mar 13, 2012

வாழ்வியல் கதைகள்&படங்களும்@13/3/2012

தென்காசி சுவாமிநாதன் அவர்கள் சொன்னதாக Zதமிழ் அலைவரிசையில் ஒருத்தர் சொன்ன கதை:


*காந்தியடிகளின் மகன் தங்களது காரை (அந்த காலத்து நான்கு சக்கர வண்டி) சர்வீசுக்கு அனுப்பியிருந்தாராம்.இன்று கார் தயாராகியிருக்கும்,நானும் முக்கிய நிகழ்ச்சிக்காக செல்ல வேண்டியுள்ளது காரை எடுத்து வா என்று மகனிடம் சொன்னாராம் காந்தியடிகள்.காரை எடுக்க சென்றவருக்கு மாலை வாருங்கள் என்று பதில் கிடைத்ததாம்.

மாலை வரை நேரத்தை போக்க காந்தியடிகளின் மகன் சினிமாவிற்கு போய்விட்டாராம்.வெகு நேரமாகியும் மகன் வராததால் கார் சர்வீசை தொடர்பு கொண்ட காந்தியடிகளுக்கு “தங்கள் மகனை மாலை வந்து எடுத்துச் செல்ல சொல்லியிருந்தேன்.காரும் தயாராகிவிட்டது,மாலைப் பொழுதும் போய்விட்டது.தங்கள் மகன் இன்னும் வரவில்லை” என்று பதில் வந்ததாம்.

வெகு நேரம் கழித்து காருடன் காந்தியடிகளின் மகன் வந்து சேர்ந்தாராம்.ஏன் இத்தனை தாமதம்,எங்கே சென்றிருந்தாயென கேட்ட காந்தியடிகளிடம் “தான் சினிமாவிற்கு சென்றதை மறைத்து, இப்போதுதான் வண்டி ரெடியானது,காத்திருந்து எடுத்து வர நேரமாகிவிட்டது அப்பா " என்றாராம்.


மகன் பொய் சொல்வதைக் கேட்ட காந்தியடிகள்,நான் வளர்த்த மகன்,என் கொள்கைகள் அறிந்த மகன்,தன்னிடமே உண்மை சொல்ல தைரியமில்லாமல் பொய் சொல்கிறான்,மறைக்கிறான்,தவறு உன் மீது இல்லை,வளர்த்த என் மீதுதான் தவறு,என் வளர்ப்பு  சரியில்லாமல்  போனதில்  வெட்கமடைகிறேன்,இதற்கான தண்டனையை நான்தான்  அனுபவிக்க வேண்டுமென தான்   செல்லவிருந்த  இடத்திற்கு  நடந்தே  சென்றாராம்.


அந்த சம்பவத்திலிருந்து காந்தியடிகளின் மகனும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டாராம்.




*பிரம்ம  குமாரிகள் குழுவில் ஒருவர் சொன்ன கதை.


திரைப்படம் என்றால்  பலருக்கும் தெரிந்திருப்பது, ஹீரோ,ஹீரோயின்,வில்லன் இருப்பார்கள்.வில்லனால் வரும் பிரச்சனைகளை ஹீரோ எதிர்த்து சமாளித்து வெற்றி பெறுவார் என்பதாக இருக்கலாம்.ஹீரோவால் பெறப்படும் வெற்றியும் கடைசியாக காண்பிக்கப்படலாம்.அத்தோடு திரைப்படமும் நிறைவுபெறலாம்.


ஒரு திரைப்படம் நிறைவுறும் சமயத்தில் கடைசிக் காட்சியில் வில்லனை ஹீரோ வெலுத்து எடுக்கிறார், திரைப்படத்தில் பார்ப்பவர்களும்,திரைப்படத்தை பார்ப்பவர்களும் ஆர்வமுடன் பார்க்கின்றனர்,குதூகலிக்கின்றனர்.ஹீரோ வெற்றி பெறுகிறான்.அடி வாங்கி துவண்டு விழுந்த வில்லனை போலீசும் இழுத்துச் செல்கிறது .படத்தில் மக்கள் ஹீரோவை தூக்கி   வைத்து  கொண்டாடுகின்றனர் ,திரைப்படம் நிறைவுற்றது. படத்தை பார்த்தவர்களும்   நெகிழ்வுடன் செல்கின்றனர்.


திரைப்படம் பற்றின எந்த ஒரு கருத்தும் தெரியாத ஒருவன் முதல் காட்சிகளை பார்க்காமல்  இந்த கடைசிக் காட்சியை பார்க்க நேரிடுகிறது.அவன் கருத்து எப்படிப்பட்டதாக இருக்கும்..." இவன் அடிக்கிறான்,அவன் அடி வாங்குறான்,மக்களில் தடுப்பார் யாருமில்லை.மாறாக மக்களும் மகிழ்ச்சியாக பார்க்கின்றனர்.திரைப்படத்தை பார்ப்பவர்களும் மகிழ்ச்சியாக  பார்க்கின்றனர்.அடிப்பவன் வில்லனாகவும்,அடி வாங்குபவன் அப்பாவியாகவும் இந்த அப்பாவி புரிந்துகொள்கின்றான்.கடைசியில் வந்த போலீசும் அடித்தவனை விட்டுவிட்டு அடி வாங்கியவனை இழுத்துச்செல்கிறதே" என்றும்  பிரம்மிக்கிறான்    .


இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது,மாய உலகில் என்ன நிகழ வேண்டுமோ அதுதான் நிகழ்கின்றது.நாம்   பார்த்து புரிந்துகொள்வதும், வாழ்வதும்,நமது அறியாமையையும் சிந்தனையையும் பொறுத்துள்ளது.


* குட்டி ஒட்டகம் தன் அம்மா ஒட்டகத்திடம் கேட்கிறது,


அம்மா நமக்கு ஏன் இந்த திமில்?


பாலைவனத்தில் உணவு, தண்ணீர் கிடைப்பது அரிது, கிடைக்கும் நீரை பல நாட்களுக்கு சேமித்து  வைக்கவே இந்த திமில் இயற்கையிலே நமக்கு வரமாக அமைந்துள்ளது.


கண் இமைகள் ஏன் இவ்வளவு நீளமாக உள்ளது?
மணற் புயல்களிலிருந்து காத்துக்கொள்ளவே!


நமது பாதம் ஏன் வீங்கி உப்பலாக உள்ளது?
பாலைவனங்களில் வேகமாக நடப்பதற்கு!


இத்தனையும் இருந்தும் நம்மை ஏன் இந்த மிருகக்காட்சி சாலையிலே வைத்துள்ளார்கள்?


இதற்கு என்ன பதில் சொல்லும் தாய் ஒட்டகம்?


இப்படித்தான் மனிதனிடம் இல்லாதது ஒன்றுமில்லை,முடியாதது ஒன்றுமில்லை,தேவையானவைகள் கிடைத்தாலும் பல சமயம் பயனற்றதாகிறது.நம் திறமைகளும்,வாழ்வும் எப்படியோ,எங்கோ,யாராலோ முடக்கப்படலாம்.


படங்களையும் பார்ப்போம் :








கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை தலைய விரிச்சுப் போட்டுக்கிட்டு ஆடுச்சாம்.

ஐயோ !பாவம்னு இரக்கப்பட்டா ஆறு மாச பாவம் நம்மள பிடிச்சுக்கும்மா!!

இடம்,பொருள் தெரிந்து சரியான நேரத்தில் சரியான வகையில் உதவனும்.

இதையும் மீறி,மனக் கஷ்டமோ,அசம்பாவிதமோ ஏற்பட்டால் "உன் குத்தமா?,என் குத்தமா?" ன்னு பாட வேண்டியதுதான். 


Mar 12, 2012

எல்லாம் சகஜமப்பா !!!

அடப்பாவமே ! வீட்ல எல்லோரும் எங்க போனாங்களோ தெரியலேயே,

இதான் பெரியவங்களுக்கும் குழந்தைக்கும் உள்ள வித்யாசம்.
இவரப் பாருங்க,வரும் போதே தலையனையோட வந்திருக்காரு.....

இதுக்கு காரணம் என்னவாயிருக்கும்னு யோசிங்க,
                                       









                                          
அதுங்களுக்கு பிடிச்ச வாழைப்பழம் இப்படி ஆகிட்டேன்னுதான் அப்படியொரு போசு......

ஒரு விழா கூட்டத்திற்கே மலர் கொத்து கொடுக்கிறாங்க போல  



மாடல் அழகி பொம்மைகள்ன்னா நினைக்கிறிங்க,.........
எல்லாம் மவுசுப்பா மவுசு.
அதாங்க கணினிக்கு உபயோகிப்போமே அந்த மவுஸ்.



உங்களால முடிஞ்சா இந்த குழந்தையின் அழுகையை நிறுத்துங்க.
உங்களால முடியாதுன்னு நான் சொல்றேன்.
ஏன்னா இது பொம்மை.....  பொம்மை.......
வேணும்னா நல்லா பாருங்க.

குழந்தைன்னு ஏமாந்தவங்கள பாத்து சிரிக்காத! வாய மூடுங்றேன்  
கேக்க மாட்டிங்கிதே,

இருந்தாலும் இருக்கலாம்.


அலாக்கா மேலோடு துக்கிட்டாங்கன்னா என்ன பண்றது?
யாராவது அந்த கம்பியையும் தட்டி சேத்து எடுத்துகிட்டு போனாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை.

கலிகாலம்......போனா போவுது பசி தீர்ந்தால் சரி.

இதுதான் நவீன சமையலா? 


மத்த செல்லப் பிராணிகள் போல வாக்கிங் போகனும்னு ஆசைப்பட்ட மீனின்
ஆசையை நிறைவேற்றிய இவர் வாழ்க.மீனும் வெளி உலகம்னா என்னான்னு இப்பதான் பாக்குது.


என்னன்னு புரியுதா?பில்டிங்கை ஒட்டியவாறு வெளிப்புறத்தில் குளம்.( நீச்சல் தொட்டி).உள்ள இருப்பது மீன் இல்ல.மனுஷன்தான்.வேற என்னென்ன இப்படி அந்தரத்தில் வரப்போகுதோ....


ரொம்ப அவசியம்.

மோசமான ஆண்டிங்களா இருக்கிறாங்களே!எல்லாம் பொறாமைதான்.
காதலர் தினத்தை எதிர்க்கிறாங்களாம்!!!  

Mar 11, 2012

இதுதான் காதலா?

அம்மா! உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னதே இல்லை,
அப்பா !உங்களை பிடிக்கும்னு சொன்னதே இல்லை,
உடன் பிறந்தோரை பிடிச்சிருக்குன்னு சொன்னதே இல்லை,
பிடித்த ஆசிரியர்களிடமும் உங்களை பிடிச்சிருக்குன்னு சொல்லவே இல்லை,
நட்புகளிடமும் உன்னை எனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னதே இல்லை,
பிடித்த சுற்றத்தாரிடமும் உங்களை ரொம்ப பிடிக்கும்னு சொன்னதே இல்லை,
இவர்களில் யாரும் என்னை பிடிச்சிருக்குன்னும் சொன்னதே இல்லை!
இவர்களுக்கு என்னை மட்டும்தான் பிடிக்க வேண்டுமென்ற 
எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. 

முழுமையான என் நேசத்தை 
உன்னிடம் வெளிப்படுத்தாமலே !
சொல்லாமலே!

என்னை விரும்புவதாக சொல்ல வேண்டும்
உனக்கு என்னை மட்டுமே பிடிக்க வேண்டும்,
எதிர்பார்த்து தவிக்கின்றேன்!
இதுதான் காதலா?




Mar 7, 2012

நிரந்திரமில்லா வாழ்க்கை

வாழ்க்கை என்னும் நிரந்திரமில்லா பயணத்தில் நாம் சந்திப்பது பலவகை.நினைவும் உணர்வும் இல்லையெனில் மனிதனும் இல்லை வாழ்வு என்ற வார்த்தைக்கு அர்த்தமும் இல்லை என்றே கருதுகிறேன்.கடந்த சில நாட்களில் நடந்தவற்றை பகிர்ந்துகொள்கிறேன்.

உடல் நிலை குணமின்றி இருந்த பதிவர் ஏஞ்சலின் அவர்களின் அம்மா இறந்துவிட்டதாக மெயில் அனுப்பியிருந்தார்கள்.துக்கத்தை பகிர்ந்துகொள்ள ஏஞ்சலின் அனுமதிப்பார்கள் என்றெண்ணி தெரிவிக்கிறேன்.முகம் தெரியாமல் பழகினாலும் ஒரு உயிரின் இழப்பு அதுவும் அன்னையின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது.அன்னையின் ஆத்மா சாந்தி அடையவும்,ஏஞ்சலின் அவர்கள் மன தைர்யமும் ஆறுதலும் அடைய பிராத்திப்போம்.


என் மகள் எல்.கே.ஜி படிக்கிறாள்.குளிர் கால விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததிலிருந்து காய்ச்சல்,ஜலதோசம்,கால் வலி இப்படி ஒன்று மாற்றி ஒன்று எதாவது தொந்தரவு இருந்துகொண்டே இருந்தது.பள்ளி டைரியில் எழுதி அனுப்பி ஆசிரியைக்கும் தெரிவித்துக்கொண்டிருந்தோம்.ஆசிரியையும் பார்த்துக்கொள்வதாக எழுதி அனுப்புவார்.சில நாட்கள் நன்றாக இருந்தாள்.பிப்ரவரி 29 லிருந்து முழு ஆண்டுத் தேர்வு துவங்கியது.மார்ச் 1 ஆம் தேதி என் மகளுக்கு பிறந்த நாள்.


சிறு வயதில் எனக்கு பிறந்தநாளென்றால் புது உடை,சாக்லேட் அல்லது வேறு எதாவது இனிப்பு வாங்கித் தருவார்.தெருவில் பழகியவர் வீட்டுக்கு மட்டும் கொடுப்போம்.வீட்டில் சாமி படம் முன் உள்ள திருநீரு,குங்குமம் இட்டுவிடுவார்கள்.கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்வோம் அவ்ளவுதான்.பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது கல்லூரி சென்றபின்தான்.கணவருக்கும் இப்படித்தான் பிறந்த நாள் கொண்டாடி பழக்கமில்லை.பெற்றெடுக்கும் சிரமம்,குழந்தை வளர்ப்பை அனுபவித்த பின் என் அம்மாவிற்கு என் பிறந்த நாளன்று “அம்மா ஹேப்பி பெத்த டே” என்பேன்.”போம்மா போ” என்று என் அம்மா லேசான சிரிப்புடன் சொன்னதை போனில் கேட்டிருக்கிறேன்.ஊருக்கு போகும்போது எதற்காகவாது என் அம்மா சற்று மனம் வருந்தியிருக்கும் நேரத்தில் “அம்மா ஹேப்பி பெத்த டே” என்று சொன்னால் பளிச்சுன்னு சிரிச்சுடுவாங்க.அப்போதைய வருத்தமும் விலகி ரிலாக்சா பேச ஆரமிப்பாங்க.என்ன செய்ய என் மகள் பிறந்தபோது என்னை தன் கண்களில் வைத்து கவனிச்சாங்க,என் மகளின் 3 பிறந்த நாட்களன்றும் எங்களுடன் இருக்க முடியவில்லை.நான்கவது பிறந்த நாளில் என் அம்மா உலகத்திலே இல்லை.இப்போ என் மகளின் 5 வது பிறந்த நாள்.


எங்கள் குடியிருப்பு பகுதியில் தற்போழுது ஆறு வருடங்களாக பார்க்கிறேன்,வீட்டில் வேறு என்ன விசேசங்களுக்கு அழைக்கிறார்களோ இல்லையோ பிள்ளைகளின் பிறந்த நாளுக்கு அழைத்துவிடுகிறார்கள்.பெரியவர்களை அழைக்கிறார்களோ இல்லையோ உங்கள் குழந்தையை அனுப்பிவையுங்கள் என்பார்கள்.இங்கு வந்து இன்னமும் நான் பார்க்காத கேள்விப்படாதது, ஒரு வீட்டில் உள்ள இளம் வயது பெண் எப்போது பருவம் அடைந்தாள்,பருவம் வந்தால் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாது.நம்மூரில் பருவம் வந்தால் ஊரைக் கூட்டாவிட்டாலும் உறவுகளைக் கூட்டி சடங்கு செய்வார்களே!.இங்கு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது.ஆனால் பத்தாவது படிக்கும் பெண்ணிற்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடப்பதும்,ஆண்ட்டி நாளைக்கு எனக்கு பர்த்டே உங்க பெண்ணை அனுப்பிவைங்க என்று அந்த பெண்ணே அழைப்பதும் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.


இப்படி பலரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கு கொண்ட பிள்ளைகள் விளையாட்டில் பிறந்த நாள் கொண்டாடுவதும்,வேறு விளையாட்டில் இருக்கும்போதோ,பள்ளியிலோ சண்டை வந்தாலும் (என்றோ வரப்போகும் பிறந்த நாளுக்கு) “ஏய் நீ என் பர்த்டேக்கு வரக்கூடாது,நான் உன்னை அழைக்கமாட்டேன் ”என் பர்த்டேக்கு உன்னை கூப்பிடமாட்டேன்,ஆனா இவளை /இவனை கூப்பிடுவேன்னு வெறுப்பேற்றுவதும் நடக்கிறது.இப்படிபட்ட மனநிலை உருவானதற்கு யாரை என்ன சொல்றதுன்னு  தெரியவில்லை.


பலரின் பிறந்த நாளுக்கு சென்றுவந்த என் மகளுக்கும் தனக்கும் இது போல எல்லோரும் வரனும்னு ஆசை வந்து தனது நட்பு வட்டத்தாரை அழைக்கும்படி கேட்டுக்கொண்டே இருந்தாள்.கடந்த வருடங்களில் வீட்டில் மட்டும்,நன்கு பழகியவர்களை மட்டும் அழைத்ததுண்டு. எங்களுக்கு இதில் விருப்பமில்லை,பழக்கமும்  இல்லை என்றாலும் அவளின் ஆசைக்காக சிலரை மட்டும் அழைத்து சிற்றுண்டி ஏற்பாடு செய்திருந்தோம்.இனிதே முடிந்தது.மறுநாள் மார்ச் 2 அன்று  விடியற்காலையிலிருந்து மகளுக்கு உடல் நிலை சரியில்லை.அன்று இங்கிலிஸ் ஓரல் எக்சாம் இருந்தது,லீவ் போட முடியாதே என்று அரை க்ளாஸ் பாலை குடிக்கவச்சு பள்ளிக்கு அனுப்பிவிட்டேன்.உடல் நிலை சரியில்லாததை டைரியிலும் எழுதி அனுப்பியிருந்தேன்.எப்படி திரும்பி வருகிறாளோ என்ற நினைப்புத்தான் இருந்தது.பத்தரை மணிக்கெல்லாம் பள்ளியிலிருந்து போன் வந்துவிட்டது “உங்கள் மகளுக்கு காய்ச்சல் வந்துள்ளது,வாமிட் செய்துவிட்டாள்,உடனே வந்து அழைத்துச் செல்லுங்கள் ”என்று.நான் வருவதற்கு குறைந்தது அரைமணி நேரமாவது ஆகிவிடும்.இன்றைய தேர்வை முடித்துவிடுங்கள் நான் வந்ததும் அனுப்பிவிடுங்கள் என்றேன்.கணவருக்கும் தெரிவித்துவிட்டு அப்படியே ஆட்டோவில் சென்றேன்.


பள்ளிக்கு போய் பார்த்தால் என் மகள் மிகவும் பலகீனமாக இருந்தாள்,இவளின் நிலையில் அடுத்த நாளுக்கான கணித ஓரலையும் முடித்துவிட்டதாக ஆசிரியை சொன்னார்.அதற்கு அடுத்த நாள் ரைம்ஸ்தான்,இரண்டு ரைம்ஸ் காம்படீசன்களிலும் கலந்துகொண்டிருக்கிறாள்,A+ கிரேடில் இருப்பதால் நம்பிக்கை உள்ளது,எனவே உடல் நிலை சரியானால் அனுப்புங்கள் இல்லையெனில் 9ஆம் தேதி நடைபெற உள்ள ரிட்டன் எக்சாமிற்கு அனுப்பினால் போதும் என்றார்கள்.அப்பா இது போதும்னு நினைத்து நன்றி சொல்லி பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பட்டலுக்கு  குழந்தை மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன்.அட்மிட் செய்யுங்கள் ஒரு பாட்டில் சலைன் ஏற்றனும்னு சொல்லிவிட்டார்.கையில் நரம்பு கண்டுபிடித்து ஊசி ஏற்றுவதற்குள் பட்ட பாடு !!!பார்க்கவே கொடுமையாக இருந்தது.கணவரும் வந்து சேர்ந்தார்.தொண்டையும் வலிப்பதாக அழுதாள்,இன்ஃபெக்சந்தான்னு டாக்டர் சொன்னார். 


அன்றைய தினம் ஹாஸ்பிட்டலிலே சென்றது.அன்று இரவு டிஸ்சார்ஜ் ஆனாலும் கையில் இருந்த ஊசிப்பட்டையை கழற்றிவிடவில்லை.3 நாட்களுக்கு தொடர்ந்து காலை மாலை ஊசி மருந்து ஏற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார் டாக்டர்.இனி பிறந்த நாள் கொண்டாடுவியான்னு ஆயிரம் முறை மனசாட்சி கேட்டது.வீட்டிற்கு வந்ததும் விசயம் தெரிந்த பலரில் சிலர் கேட்டது “என்னை நீ பர்த்டேக்கு கூப்பிடலைல்ல,இப்ப உன்ன பாக்க வச்சுட்ட பாத்தியா”.இந்த மனிதர்களை என்ன சொல்றது,இதான் காலக்கொடுமை.ட்ரீட்மெண்ட்டில் குணமாகிவிட்டாள் மகள்.


பூமாதேவியின் ஆட்டம்


மார்ச் 5 ஆம் தேதி மதியம் லேட்டாகத்தான் சமையல் செய்யத் துவங்கினேன்,தரையில் அமர்ந்து காய் வெட்டிக்கொண்டிருந்தேன்,என் மகளும் பக்கத்து வீட்டு பையனும் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.எனக்கு தலை சுற்றி மயக்கம் வருவதாகவே உணர்ந்தேன்,பஸ்ஸில் போவது போலவே இருந்தது,சிலிண்டர்,பிரிட்ஜ்லாம் கட,கடன்னு ஆடுவதை உணர்ந்துதான் பூகம்பம் வந்துள்ளதை உணரமுடிந்தது.அடுப்படியிலிருந்து எழுந்து நடந்து வர முடியவில்லை,விளையாடும் பிள்ளைகளை வெளியில் போங்கன்னு சொல்லிக்கொண்டே ஓடி வருகிறேன்,தண்ணிருக்குள் நடப்பது போலவே இருக்கிறது,பிள்ளைகள் நாற்காலி,டீ.வீ ஆடுவதையும்,நான் உலருவதையும் வேடிக்கை பார்க்கிறார்கள்,தாழிட்ட கதவை திறந்தும்,வெளியில் காற்றில் கதவு இழுப்பது போல இருந்தது,ஸ்ட்ரெயின் பண்ணிதான் கதவை திறக்க முடிந்தது.அப்போது வந்த நிலநடுக்கமும் நின்று போனது.


ஒரே பதட்டம்,வெளியில் மக்களின் பதட்டமான பேச்சுக்கள்,காய் வெட்டின கத்தியுடன் பிள்ளைகளை பிடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.தேர்வுக்கு போன பிள்ளை என்னாச்சோன்னு ஒரு தாயின் அலறல்,என் மகளுடன் விளையாடிய சிறுவனின் தாய் தனது கைக் குழந்தையுடன் ஓடி வந்து என்னிடமிருந்த அவனை இழுத்து அனைத்துப் பதறியது,இதோடு எத்தனை முறை நிலநடுக்கம் வந்துவிட்டது,என்றாவது ஒரு நாள் ஒரு நொடியில் இடிந்து விழுந்தால் என்ன செய்ய முடியும்னு ஒருவருக்கொருவர் பேசியது இன்னமும் நடுங்க வைக்கிறது.


10 வினாடிகள் நிலநடுக்கம் இருந்ததாகவும் எங்கள் ஊரை மையமாகக் கொண்டுதான் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும்,வேறு எங்குவரை இந்த அதிர்வு உணரப்பட்டது என்பதையும் டீவியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டோம். 


இது நிரந்திரமில்லா வாழ்க்கைதானே....


நடப்பது நடக்கட்டும் என்று இன்று ஹோலி பூஜைக்கு ரெடியாகிக்கொண்டிருக்கிறார்கள்.நாளை கலர் தூவி விளையாடும் ஹோலி விளையாட்டு.நம்மூர் தீபாவளி பரபரப்பு போல இங்கு ஹோலி,ஹோலி என்று  மக்கள் மகிழ்ச்சியாகவும்,ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணமும் இருந்தாலும் பூமாதேவியின் அதிர்வும் மனதில் ஒலித்த வண்ணமாகவே உள்ளது.