திருமலை நாயக்கர் சிலை |
என் சிறு வயதில் என் அப்பா,தாத்தாவுடன் சென்றிருக்கிறேன்.சிறு வயதில் நான் அங்கு சென்றிருந்தபோது மிகப் பிரம்மாண்டமான கட்டிடமுமாக அகன்ற,உயரமான தூண்களை வியப்பாக பார்த்து நின்றது ஞாபகம் இருக்கிறது.தூண்கள் உருளை வடிவத்தில் இருந்தாலும் ஒரு தூணைச் சுற்ற முதல் அடி எடுத்து வைத்த இடத்திற்கு மீண்டும் வந்து சேருவதற்குள் நீண்ட நேரம் ஆனது இன்னும் நினைவிருக்கிறது. இது அரசனின் நாற்காலி என்று ஒரு நாற்காலியைப் பார்த்தது நினைவிருக்கிறது.முழு அரண்மனையையும் பார்த்து முடித்த பின் இன்னும் சற்று நேரம் அங்கும் இங்கும் ஓடியாடி,சுற்றி விளையாட ஆசைப்பட்ட என்னை வலுக்கட்டாயமாக வா போகலாம்னு என் தாத்தா பர பரனு அழைச்சிட்டு வெளியேறியதாக ஞாபகம்.அதற்கு பிறகு அங்கு போக இன்னும் வாய்ப்பு அமையவில்லை.
இந்த அரண்மனை தென்னிந்தியாவின் பண்டைய அரண்மனைகளில் ஒன்று.கிபி1627 ஆம் ஆண்டு முதல் கிபி1659ஆம் ஆண்டு வரை திருமலை நாயக்கர் ஆண்டு வந்திருக்கிறார்.1639 ஆம் ஆண்டில் இந்தோ-சாரசீனிக் முறைப்படி இந்த அரண்மனை கட்டப்பட்டிருக்கிறது.திருமலை நாயக்கர் தமது 75 ஆம் வயது வரை இந்த அரண்மனையில் வாழ்ந்திருக்கிறார்.
திருமலை மன்னன் கட்டியபோது இப்போது எஞ்சியுள்ளதைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியதாக இவ்வரண்மனை திகழ்ந்தது. இவ்வரண்மனையில் பல பகுதிகளைப் பற்றிய பண்டைய குறிப்புகள் உள்ளன. இங்கு சொர்க்க விலாஸம், ரங்க விலாஸம், என்று இரண்டு முக்கிய பகுதிகள் இருந்தன. தவிர, பதினெட்டுவித இசைக் கருவிகள் இசைக்கும் இடம், படைக்கலன் வைக்கும் இடம், பூஜை செய்யும் இடம், அரியணை மண்டபம், தேவியரின் அந்தப்புரம், நாடகசாலை, உறவினர்களும் பணிசெய்வார்களும் வசிக்கும் இடங்கள், வசந்தவாவி, மலர்வனங்கள் சுற்று மதிள் முதலியன இருந்தன. திருமலை நாயக்கர் சொர்க்க விலாஸத்திலும் அவர் தம்பி முத்தியாலு நாயக்கர் ரங்கவிலாஸத்திலும் வசித்தனர்.
இப்பொழுது எஞ்சியுள்ள பகுதியே சொர்க்க விலாஸம் என்பது. இப்பொழுதுள்ள அரண்மனை நுழைவாயில் இக்கட்டத்தின் வடக்கில் இருந்தது. கட்டடத்தின் கிழக்கில் புறங்களில் பக்கத்துக்கு ஒரு சிகரமாக இரண்டு சிகரங்கள் இருக்கின்றன. இவற்றின் மேல் இருந்த ஸ்தூபிகள் தங்கத்தால் செய்யப்பட்டு இருந்தன. தற்பொழுது வடபுறச் சிகரத்தில் ஒரு கடிகாரம் வைக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்தும் ஒரு பெரும் முற்றவெளியும் சுற்றிலும் உயரமான தூண்கள் தாங்கிய கட்டடமும் உள்ளன. மேற்கில் வேலைப்பாடுடைய ஒரு பகுதி உள்ளது.தாங்கும் சட்டங்கள் இல்லாத அந்த குவிந்த கூரை கட்டடக்கலையில் ஒரு மைல் கல் ஆகும்.
இந்த அரண்மனையையும் மீனாட்சி அம்மன் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது என்றும், பொதுவாக போர்காலங்களில் இளவரசரும், மற்ற குடும்பத்தினரும் தப்பிச்செல்ல இந்தப் பாதைப் பயன்படுத்துவர் என்றும், தற்போதுகூட மீனாட்சி அம்மன் கோயிலில், பைரவர் சுவாமி ஆலயத்தின் அருகே வழி இருப்பதாகக் குறிப்புகள் இருக்கிறதாம். .
இங்கு கல்பீடத்தின் மீது நடுவில் யானைத் தந்தத்திலான நுண்ணிய வேலைப்பாடுள்ள மண்டபம் உள்ளது.அதன் நடுவில் இரத்தினங்களால் செய்யப்பட்ட அரியனை உள்ளது.
செங்கோல் விழா
ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் எட்டாம் நாள் திருமலை மன்னன் அங்கயற்கண்ணி அம்மைக்கு கோயிலில் முடிசூட்டு விழா நடப்பித்து அங்கு அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்று வீதி உலாவாகக் கொணர்ந்து இவ்வரண்மனையில் இந்த சொர்க்க விலாஸத்தில் சிறப்பாக அலங்கரித்த அரியணையில் செங்கோலை அமர்த்தி தான் அருகில் கீழே அமர்வார். செங்கோலுக்குச் சிறப்பாக வழிபாடுகள் வழங்கப்படும். அன்று முழுவதும் செங்கோல் அரியணையில் இருக்கும். மறுநாள் திருமலை மன்னர் செங்கோலுக்கு மறுவழிபாடு செய்து, கோயிலுக்கு எடுத்துச் சென்று அன்னையின் அடியில் வைத்து வணங்குவது வழக்கம். அன்னையின் அடியானாக நாட்டை ஆள்வதை இது குறிக்கும்.
அந்தப்புரம்
சொர்க்க விலாஸத்தின் மேற்கில் அந்தப்புரம். தென் மேற்கில் கருங்கல் தூண்கள் கொண்ட ஒரு இடம் இருக்கிறது. இங்கு இரண்டு அறைகள் இருந்தன. இப்பொழுது உள்ளது ஒன்றின் பகுதியே. இங்கு அரச மாதேவியரும் பிற பெண்டிரும் இசையும் தென்மேற்கு மூலையில் அரண்மனையின் மேலே செல்ல படிகள் இருக்கின்றன. அங்கே பல பகுதிகளில் சுற்றி வர வசதி இருக்கிறது. திருமலை மன்னர் தன் மனைவியருடன் மேலே சென்று சுற்றிவரும்போது கீழிருந்து மக்கள் கண்டு வணங்குவர்.
அந்தப்புரத்தின் மேற்கில் ஆயுதசாலை இருந்தது. நாடகசாலையின் மேற்கில் 'வசந்தவாவி' என்னும் நீர்த்தடம் இருந்தது. இதற்கும் வடக்கில் மல்யுத்தம் செய்யுமிடம் ஆட்டுக்கிடாய் சண்டை செய்யுமிடம் முதலியன இருந்தன. இவற்றிற்கும் மேற்கில் உற்றார் உறவினர் வசிக்கும் நீண்ட பல கட்டடங்கள் இருந்தன.
சொர்க்க விலாஸத்தின் வடமேற்கில் கிழக்கு மேற்காக நீண்ட, மிகவும் எழில் வாய்ந்த ஒரு பகுதி இருக்கிறது. இதன் நடுப்பகுதி தாழ்ந்தும் சுற்றிலும் திண்ணைபோல் உயர்ந்தும் உள்ளன. தூண்களையும் மேல் பகுதிகளையும் அழகிய சுதை உருவங்கள் அலங்கரிக்கின்றன. இதன் மேற்கில் இருபுறமும் மேலே செல்வதற்கு மாடிப்படிகள் உள்ளன. இதுவே நாடகசாலை என்று குறிக்கப்படுவது. மாலை நேரங்களில் திருமலை மன்னன் தன் பெண்டிருடனும் உற்றார் உறவினருடனும் நாட்டிய மகளிர் ஆடும் பல கூத்துகளை தீவர்த்தி வெளிச்சத்தில் கண்டு களிப்பது வழக்கம்.
.
தேவி பூசைக்கோவில்
நாடகசாலையின் வடகிழக்கில், கிழக்கு நோக்கிய கோயில் ஒன்று இருந்தது. இதன் முகப்பிலும் உள்ளும் கருங்கல் பணிகள் நிறைந்திருந்தன. இங்கு இராஜராஜேஸ்வரியயும் மற்ற பிற தெய்வங்களையும் திருமலை நாயக்கர் நாள்தோறும் வணங்குவர். இக்கோயிலின் முன்னர் ஒரு நீராவியும் மலர்வனமும் இருந்துள்ளது.
ரங்கவிலாஸம்
இக்கோயிலின் வடக்கில் ஒரு சந்துத் தெருவில் நெடிய பத்துத் தூண்கள் இன்றும் நிற்கின்றன. இவை மறைந்த அரண்மனையின் பகுதியே. இவற்றின் மேற்கில்தான் ரங்கவிலாஸம் இருந்தது. சொர்க்க விலாஸம் போல இது அமைந்திருக்க வேண்டும். இதில் திருமலை நாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கர் வசித்தார். இதன் மேற்கில் சந்திரிகை மேடை என்னம் ஒரு கட்டடம் இருந்தது.இவற்றின் வடக்கில் தெற்கு மாசி வீதியை நோக்கி ஒரு நுழைவாயில் இருந்தது. இங்கு "காவல் ராஜாக்கள்" இருந்தனர். பல பரிச்சின்னங்களும் ஆயுதங்களும் இங்கு வைக்கப்பட்டிருந்தன. அரண்மனை வாயில் பத்து தூண்களின் கிழக்கில் அரண்மனையின் நுழைவாயில் இருந்தது. அதன் முகப்பு சிறந்த வேலைப்பாடுகளுடன் திகழ்ந்தது. அங்கு 18வித இசைக்கருவிகள் இசைக்கும் இடமிருந்தது. இப்பகுதியையே நவ்பத்கானா என்று கூறுவர். இது இருந்த இடமே நவ்பத்கானா தெரு என்று அழைக்கப்படுகிறது. ஒரு நூறு ஆண்டுகளுக்கும் முன்னர் கூட இக்கட்டடம் இருந்தது. ஆனால் பழுதடைந்திருந்தது. 1858ல் பழுது பார்க்கப்பட்ட போதிலும் இது அதிகநாள் நிற்கவில்லை. கிழக்கில்தான் பல்லக்கு முதலிய பரிகலன்கள் வைக்கப்பட்டிருந்தன.
சுற்று மதில்
இவை அனைத்தையும் சுற்றி ஒரு மதில் இருந்தது. இதைப் பாரிமதில் என்பர். சென்ற நூற்றாண்டில் கூட எஞ்சியிருந்த இம்மதில் 900 அடி நீளமும் 660 அடி அகலமும் 40 அடி உயரமும் இருந்ததாம். மிகவும் அபாய நிலையிலிருந்ததால், 1837ல் இச்சுவர் இடித்துத் தள்ளப்பட்டதாம். இம்மதிலுக்கு வெளியில், மேற்கில் மலர் வனங்கள் இருந்தன. இவற்றின் நடுவில் ஒரு கட்டடம் இருந்தது. அதில் திருமலை மன்னன் மனைவியருடன் தங்குவது வழக்கமாம்.அரண்மனைப் பகுதி மறைவு
இவ்வெழில் வாய்ந்த அரண்மனையின் பகுதியை திருமலை மன்னரின் பெயரன் சொக்கநாத நாயக்க மன்னனே இடித்தான். மதுரையிலிருந்து திருச்சிக்கு அதன் தலைநகரை மாற்றியபோது இங்கிருந்து இடித்த பொருள்களை திருச்சி எடுத்துச் சென்று அங்கு ஒரு அரண்மனை எடுக்க முயன்றான். அவன் முயற்சியில் கலை அதிக இடம் பெறவில்லை. சென்ற நூற்றாண்டில் கூட இடிந்த சில பகுதிகள் நின்று கொண்டிருந்தன. காலப்போக்கில் பல பகுதிகள் அழிந்துவிட்டன.அரண்மனை பிழைத்தது
கிபி 1857லேயே இப்போது எஞ்சியுள்ள சொர்க்க விலாஸத்தின் பல பகுதிகள் விரிசல் கண்டிருந்தன. கிபி. 1858ல் பெய்த கடும் மழையில் மேற்குப் பகுதியில் ஒரு சுவர் வீழ்ந்தது. பல பகுதிகளுக்குச் சேதம் ஏற்பட்டது. 1868ல் சென்னை கவர்னராயிருந்த லார்டு நேபியர் இவ்வரண்மனையின் அழகைக் கண்டு , ஈடுபாடு கொண்டு இதை உடனடியாகக் காக்க வகை செய்தார். 1872க்குள்ளாக இரண்டு லட்சம் ரூபாய் செலவில் பழுதுபார்க்கப்பட்டது. இடிந்த சில பகுதிகள் கட்டப்பட்டன. மேலே விரிசல் கண்ட பகுதிகளில் இரும்புக்கம்பிகள் போட்டு முறுக்கப்பட்டன. சுதை வேலைகள் பழுதுபார்க்கப்பட்டன. வண்ணங்கள் ஓரளவிற்கு முன்போல் தீட்டப்பட்டன. 1970 வரை நீதிமன்றங்கள் இவ்வரண்மனையில் இயங்கிவந்தன. பிறகு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இவ்வரண்மனையைத் தன்வசம் தக்கவைத்துள்ளது.தினந்தோறும் 08-00 மணிமுதல் 17-00 வரை சுற்றுலாவினருக்காக திறந்திருக்கும் இம்மண்டபத்தில் ஒளி/ஒலிக்காட்சி தினந்தோறும் இருமுறை நடத்தப்பெறுகிறது. ஆங்கிலத்தில் மாலை 6-45க்கும் தமிழில் இரவு 8-15க்கும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இக்காட்சிகளை நடத்துகிறது.
அரண்மனைக்குள் ஒளிஒலிக்காட்சிக்காக காத்திருப்போர் |
http://youtu.be/SdOR8rdSbRo இந்த லின்க்கிற்கு சென்று பார்க்கவும்
திருமலை மன்னரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளையும், அவரது ஆளுமைத்திறனையும், சிலப்பதிகார நினைவுகளையும் இக்காட்சிகள் நினைவுபடுத்துகின்றன. கைகேமராக்களைக் கொண்டு செல்வதில் தடை இல்லை. ஆனால் வீடியோ காமிராக்களுக்கு சிறப்பான அனுமதி மேலிடத்திலிருந்து பெறவேண்டும். அரண்மனைக்கு வெளியே மாநகராட்சியால் பராமரிக்கப்படும் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. ஒரு பாதிநாளை அமைதியுடனும் வியப்புடனும் கழிக்க இந்த பழைமையான சின்னம் சிறந்த இடமாகும்.
http://youtu.be/em3hJX8dLkk இந்த லின்க்கிற்கு சென்று பார்க்கவும்
இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் பம்பாய் திரைப்படத்தின் ’கண்ணாலனே என்னை நேற்றோடு காணவில்லை’ என்ற பாடல் இந்த அரண்மனையில் எடுக்கப்பட்ட பாடலாகும்.
விக்ரம் நடித்த பீமா திரைப்படத்தின் ’இது ரகசிய கனவு சொல்’ என்ற பாடலும் இந்த அரண்மனையில் எடுக்கப்பட்ட பாடலாகும்.
13 comments:
அரண்மனை பெரிய இடத்து விஷ்யங்களைப் புட்டுப்புட்டு,வைத்து விட்டீர்கள். அதனால் தான் அந்த அரண்மனைக் கட்டடமும் ஆங்காங்கே புட்டுக்கொண்டு விட்டது என்று நினைக்கிறேன். அருமையான படங்கள், மிகவும் ரசிக்கத்தக்க விஷ்யங்கள்.
நாற்காலி = சரி
நாற்காளி = தவறு
இரண்டு இடங்களிலும் நாற்காலியை உடனே ரிப்பேர் செய்துவிடவும்.
நல்ல பதிவு, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். கலக்க ஆரம்பிச்சுட்டீங்க !
முற்பிறவியில் மதுரை மாநகர ராணியாகவே இருந்திருப்பீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.
அன்புடன் vgk
@வை.கோபலகிருஷ்ணன் சார்
இணையதளத்திலிருந்த எடுத்த தகவல்தான்.
நாற்காலி திருத்திவிட்டேன்.
//முற்பிறவியில் மதுரை மாநகர ராணியாகவே இருந்திருப்பீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.//
ஹா,ஹா,ஹா.........
நான் கல்லூரியில் கூட பாரத மாதா வேஷம்தான் போட்டுருக்கேன்.
நன்றி சார்.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
விரிவான தகவல்கள் ஆச்சி. இந்த அரண்மனையில் இனி யாரு படப்பிடிப்பு நடத்த முடியாது. தொல்லியல் துறை தடை விதித்துள்ளது
@ரத்னவேல்
வருகைக்கும் வாழ்த்திருக்கும் நன்றிங்க.
@எல்.கே
//படப்பிடிப்பு நடத்த முடியாது. தொல்லியல் துறை தடை விதித்துள்ளது//
தகவலுக்கும்,வருகைக்கும் நன்றி.
நல்ல பகிர்வு ஆச்சி. பல தகவல்களை தெரிந்து கொண்டேன். மதுரைக்கு சிறுவயதில் சென்றிருந்தாலும் திருமலை நாயக்கர் மஹால் இது வரை செல்ல முடியவில்லை. பார்க்கலாம் வாய்ப்பு கிடைக்கும் போது.
நானும் சில முறைகள் சென்று ரசித்திருக்கிறேன். அருமையாக பகிர்ந்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.
எத்தனை பேர் எழுதினாலும் தகவல் சுரங்கமான இடங்கள்.நம் நினைவலைகளில் புதுப்புதுக் கோணங்களைக் காட்டுமே.!!
நிறைய புதுதகவல்கள், இதுவரை சென்று பார்த்தது இல்லை, நீங்கள் சொன்ன திரைப்படங்களிலும், அண்மையில் வந்த குள்ளநரிக்கூட்டம் படத்திலும் மட்டுமே பார்த்து ரசித்தது உண்டு, பகிர்வுக்கு நன்றி
@ஆதி
வருகைக்கு நன்றி
வாய்ப்பு வரும்போது சென்று வாருங்கள்.
@இராஜராஜேஸ்வரி
வருகைக்கும்,பாராட்டிற்கும் நன்றி
@சுரேஷ்
ஒருமுறை நேரில் பார்த்து வாருங்கள்
மன்னர்கள் எப்படியெல்லாம் அரண்மனை அமைத்து,இதே பூமியில் ஆட்சி புரிந்திருக்கிறார்கள்,ஆச்சர்யமான மற்றும் பாதுகாக்க வேண்டியவைகள்,இவைகள்.
old is gold. good and detailed post. Thaak you.
நல்ல பதிவு, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
@சாகம்பரி
நன்றி
முதல் வருகைக்கும் நன்றி,
@சிநேகிதி
நன்றி
முதல் வருகைக்கும் நன்றி,
திருமலை நாயக்கர் மஹால் பற்றி மிக நல்ல பதிவு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .நான் அங்கு பல வருடங்கள் பணி புரிந்தவன்
Post a Comment