*வணக்கம் வருகைக்கு நன்றி*

Apr 17, 2011

முதியோர் இல்லங்கள் அதிகமாவது கேவலமில்லையா?

நேற்றைய இளமையின்
 தியாகம் இன்றைய
        முதுமை
இன்றைய வாலிபம்,
நாளைய முதுமை.



இலங்கயில் முதியோர் இல்லத்தின் மீது நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்த முதியவர்கள் 
 அன்னையர் தினம்,தந்தையர் தினம்,தோழமை தினம்,காதலர் தினம் போல உலகில் முதியோர் தினம் கொண்டாடப்படுவதும்,இப்படி ஒரு தினம் அரசால் அங்கிகரிக்கப்பட்டு வருடம் தோறும் அக்டோபர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறதென்றும் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இந்த முதியோர் தினமும் முதியோர் இல்லங்களில் மட்டும்தான் கொண்டாடப்படுகிறது என்பது எனக்கு வருத்தமாகதான் உள்ளது.ஆனால் எட்டாம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு காதலர் தினம் எப்போதென்றும்,என்ன செய்ய வேண்டுமென்றும்  சரியாகத் தெரிந்திருக்கலாம்.

ஐ.நா சபை 1991 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 1 ஆம் நாள் முதியோர் தின நாளாக அறிவித்துள்ளதாம்.அமெரிக்கா முதியோர் தினத்தை தேசிய விடுமுறை நாளாகவும்,ஜப்பான் முதியோர் தினத்தை முதியவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் கடைபிடிக்கின்றதாம்.

புராண காலங்களில் போரில் பிள்ளைகளை இழந்தவர்களுக்கும்,மகப்பேறு இல்லாத தம்பதியர்களுக்கும் தனி மடங்கள் துவங்கப்பட்டிருக்கின்றது.பிறகு நவீனமாகி முதியோர் இல்லங்களாகிப் போய்விட்டது.இனி பாதுகாக்கவோ அரவணைக்கவோ யாருமில்லாத சூழ்நிலையில்,வைத்திருக்கும் சேமிப்பைக் கொண்டு இங்கு தானாக முன்வந்து முதியோர்கள் சேர்ந்துகொள்கின்றனர்.இந்த பக்குவம் சிலருக்கு மட்டுமே வருகிறது.



இந்தப் படத்தைப் பார்த்தவுடன் இதன் கதை என்னவென்று புரிந்திருக்கும்.ஆனால் இன்று எந்த பிள்ளையும் இப்படி செய்ய வேண்டுமென்பது அவசியமில்லை.நாம் குடிக்கிற கூழோ கஞ்சியோ பெத்தவங்களுக்கு கொஞ்சம் கொடுத்தால் பிள்ளைகளுடன் வாழும் நிம்மதியில் பெற்றவரின் முழு வயிறும் நிரம்பிவிடுமே.ஆனால் இன்று கூழ் ,கஞ்சி குடிக்கிறவனை விட,ஹைடெக்காகவும்,பணத்தில் புரளுபவர்களும்தான் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடுபவர்களாக இருக்கிறார்கள்( இது எல்லோருக்கும் பொருந்தாது).பிள்ளைகளுக்காகவே வாழ்க்கைய அற்பணித்து,ஆளாக்கி,அவன் வளர்ச்சியில் பெருமிதம் கொள்ளும் பெற்றவர்களை வேலை நிமித்தம்,கணவன் மனைவி வேலைக்கு செல்லுதல்,வெளிநாட்டு வாழ்க்கை இப்படி பல காரணஙளால் பெற்ற பிள்ளைகளே தன் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் கொடுமைகள் அதிகரிக்கிறது. இன்னும் ஆதரவற்ற எத்தனையோ முதியவர்கள் கடைசிக் காலத்தை எப்படி கழிப்பதென்று தெரியாமல் பிச்சையெடுப்பதைக் கூட  பார்த்திருக்கலாம். 

மகனோ/மகளோ நம் கண்ணுக்கு கண்ணாக வளர்த்துவிட்டு படிப்பிற்காகவோ அல்லது குடும்ப சூழல் காரணமாகவோ விடுதியில் சேர்க்க நேரிடும்போது பெற்றோர்க்கும் பிள்ளைக்கும் ஏற்படும் தவிப்பை வார்த்தையில் சொல்ல முடியாது.பிள்ளையின் எதிர்காலத்திற்காக அந்த சூழலையும் பழகியாக வேண்டிய கட்டாயம்.ஆனால் வாழ்க்கை அனுபவங்கள் பற்பல பெற்று  வாழ்ந்து முடித்தாகிவிட்டது,இனி நமக்கு தேவை ஓய்வும்,ஆதரவும்தான் என்கிறபோது முதியோர் இல்லம்தான் அதற்கான இடம்  என்ற நிலை பெற்றோர்களுக்கு கிடைக்கும் அவலம்   என்பதைவிட,அவர்களின் பிள்ளைகளுக்குத்தான் கேவலம்.பெற்றோர்கள் இல்லையெனில் இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா என்பதை சிலர் நினைவுபடுத்திக் கொள்வதில்லை.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில்  முதியோர் இல்லத்தில் மேஜிக் ஷோ நடைபெற்றதை ஒளிபரப்பினார்கள். கண் முன்னே மாய ஜாலம் நடந்தால் எல்லோருக்கும் ஆச்சர்யமும்,திகைப்பும்,மகிழ்சியும் ஏற்படும்.இதே உணர்வுகள் அங்குள்ள முதியோர்களின் முகத்திலும் ஏற்படுவதைப் பார்க்கும் போது எனக்கு அந்த மேஜிக்கை ரசிக்க முடியவில்லை,குழந்தைகள் போல அவர்கள் குதுகளித்தாலும் அவர்களின் கண்களிலும்,முகத்திலும் ஒரு சோகம்,எதோ ஒரு எதிர்பார்ப்பு இருப்பது நன்றாகவே தெரிந்தது.அந்த இல்லத்தின் நிறுவணர் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்,வந்து சேரும் முதியோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் சொன்னது எனக்கு வேதனையளித்தது.

அனைத்து பிள்ளைகளையும் குறை சொல்ல முடியாது,அதுபோல சிலரை கவனித்ததில்

திருமணத்திற்கு பிறகு மனைவியின் அம்மாவையும்   பாதுகாக்கும் மருமகன் கிடைத்த மாமியார் ஒருவர் தன் பெண் ,தன்னை அதிகம் கவனிக்கனும்னு செய்யும் சின்ன சின்ன டார்ச்சலைப் பாக்கும்போது அந்த அம்மா இல்லைனா கணவன் மனைவி இன்னும் நல்லபடியா/நிம்மதியா இருப்பாங்கனு தோணும் . 

சில பெண்கள் மாமியார்,மாமனாரை கவனிக்கும்போது நம்ம அப்பா அம்மா அங்க என்ன செய்கிறார்களோனு நினைத்துக் கொண்டே பணிவிடைகள் செய்வதும் உண்டு.இந்த நிலையில் ஆண் பிள்ளைகளை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்.

சில பெண்கள் மாமியார்,மாமனாரை நிறைவாக கவனித்துக் கொள்வது இல்லைதான்.

சில மாமியார்,மாமனார்க்கு தன் மருமகள்/மருமகன் என்ன செய்தாலும் குறை கண்டுபிடித்து பனிப்போர் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

சிலருக்கு மட்டுமே இரு தரப்பும் நிறைவான உறவாக அமைகிறது.


சிறு பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தால் கூட சமாதனப்படுத்தி விடலாம்.பெரியவர்கள் சில சந்தர்ப்பங்களில் பிடிவாதமாக இருக்கும் நிலையில்ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்வதில் குறைந்துவிட மாட்டோமென்ற எண்ணம் பெரியவர்களுக்கும் வர வேண்டும்.பெரியவர்களுக்கான கவனமும்,அக்கறையும் நம் மனதில் இருப்பதை அவர்களுக்கு புரியும்படி நடந்துகொள்ள  வேண்டும்.

என்ன கஷ்டமிருந்தாலும் பெற்றோரை,மாமனார் மாமியாரை நம்மை வளர்த்து ஆளாக்கியவர்களை நாம் கவனிக்கவில்லை என்றால் வேறு யார் கவனிப்பார்கள்.அவர்களின் இளமையில் நம்மை கவனிக்காமல் விட்டுருந்தால் நம் இன்றைய நிலமை என்னவாகிருக்கும்?நினைத்துப் பார்க்க வேண்டும்.

நமது தாத்தா பாட்டி காலங்களில் நான்கு,ஐந்து பிள்ளைகள் அல்லது அதற்கு மேல் இருப்பா்ர்கள்.வயதான காலத்தில் ஒவ்வொரு பிள்ளை வீட்டில் காலத்தை கழித்திருக்கலாம்.இப்போது ஒரு குழந்தையை பெற்று வளர்த்து படிக்க வைத்து முன்னேற்றுவதற்குள் போதும் போதுமென ஆகிவிடுகிறது.அந்த பிள்ளை பிழைக்கப் போகும் இடத்திற்கெல்லாம் பெற்றோரை அழைத்துச் செல்ல முடியுமா என்பதும்,பெற்றோர் சிலருக்கு தன் சொந்த இடத்தை விட்டு பிள்ளையுடன் போக விரும்பாததும் ஒரு காரணமாகிறது.

முதியோர் இல்லங்கள் அதிகரிக்க வேண்டாம்.கடைசிக் கால கடமைகள் செய்தால் கூட அவர்கள் நம்மை வளர்த்து ஆளாக்கிய அன்புக் கடனை தீர்க்க முடியாது என்பது என் கருத்து. 


முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் அவர்கள் தனக்கு பிள்ளை இல்லாத காரணத்தால் தனது கடைசிக் காலத்தை முதியோர் இல்லத்தில் கழிக்கப் போவதாக ஒரு பத்திரிக்கயில் செய்தி படித்தேன்.

 இந்த பதிவு முதியோர்களை மதிப்பவர்களுக்கும்
பெற்றோரைப் பாதுகாப்போருக்கும்
அல்ல.

7 comments:

வெங்கட் நாகராஜ் said...

முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருவது வேதனையான விஷயம். இருப்பினும் சில பெரியவர்கள் தாங்களாகவே இது போன்ற இல்லங்களில் விரும்பி இருக்கவும் செய்கிறார்கள். மகன்/மகள் இல்லாத சில பெரியவர்களும் இது போன்ற இல்லங்களில் தன்னுடைய கடைசி காலத்தினை கழிக்க இவை வகை செய்கின்றன. பெற்ற பிள்ளைகள் இருந்தும் கவனிப்பில்லாமல் இருப்பது கொடுமையே!

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு பதிவு. எல்லா முதியோர்களும், எல்லா இளம் வயதினரும், நீங்க சொல்வதைப்புரிந்து நடந்துகிட்டா, முதியோர் இல்லங்கள் அதிகமாகாமல் தடுக்க முடியும். ஒருவருக்கொருவர் புரிதல், சகிப்புத்தன்மை, ஈவு, இரக்கம் முதலியன இல்லாததே பெரும்பாலும் பல வீடுகளில் பிரச்சனையாகிறது.

முதியோர் ஆகும் அனைவருக்குமே இது மிகவும் கவலைதரும் விஷயமாகத்தான் உள்ளது.

எல்லாமே சரிவர அமைய கொஞ்சமாவது கொடுப்பினை வேண்டும் போலிருக்கு; என்னசெய்ய? கஷ்டம் தான்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல பதிவு... சொகுசு வாழ்க்கைக்கு அடிமையாகி பெரிசுகளை வெளியேற்றி விடுகிறார்களே....

எல் கே said...

ஆச்சி , இது கொஞ்சம் சிக்கலான விஷயம். அவ்வளவு எளிதில் தீர்வு கிடைக்காது என்று எண்ணுகிறேன்.

இன்றைய சூழலில் பல பெண்கள், தனிக் குடித்தனம் என்றால்தான் திருமணத்திற்கு சம்மதிக்கின்றனர். மேலும், கல்யாணமாகாத தம்பி/தங்கைகள் இருக்கக் கூடாது :( இப்படி பல கண்டிஷன் போடறாங்க,


என் தம்பி (கசின்) பொண்ணு தேடின பொழுது ஏற்ப்பட்ட அனுபவம் இது. மிக சமீபத்தில் எதோ ஒரு தளத்தில் படித்தது , பெண் தனது பெற்றோர்களை விட்டு வருகிறாள் அதை போலவே ஆணும தன் பெற்றோரை விட்டுவிட்டு வரவேண்டும் .

ஆச்சி ஸ்ரீதர் said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி.

ஆமாங்க மிகக் கொடுமையே.

@கோபலகிருஷ்ணன் சார்
நன்றி

ஆமாம் இரு தரப்பிலும் கொடுப்பினை இருக்க வேண்டும்

@தமிழ்வாசி
நன்றி

இப்படிப்பட்ட எண்ணம் இல்லாமல் வாழனும்

@எல்.கே
நன்றி

தன் மகனுக்கு திருமணமான பின் பெற்றோர்க்கு தன் மகன்/வீடு என்ற உரிமை
தன் மகளுக்கு திருமணமான பின் தன் மகள்/வீடு
என்ற உரிமை,அன்பை பகிர்தல் இவற்றில் வித்யாசம் அதிகம் தான்.அதற்காக

// பெண் தனது பெற்றோர்களை விட்டு வருகிறாள் அதை போலவே ஆணும் தன் பெற்றோரை விட்டுவிட்டு வரவேண்டும் //.
எனில் அந்தப்பெண் குடும்ப வாழ்க்கைக்கும்,உறவுகளை காப்பதற்கும் தகுதியற்றவளாகவே நான் கருதுகிறேன்.

Unknown said...

வருத்தப்பட வேண்டிய விசயங்கள்தான், வேறு வழியில்லாமல் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விடுபவர்கள் மிக குறைவே என நினைக்கிறேன், பெரும்பாலானோர் தம்முடைய சவுகரியங்களை மட்டுமே கணக்கில் கொண்டும், வயதானவர்களின் மனநிலையை பற்றி கவலைபடாமல், அல்லது புரிந்து கொள்ள முயற்சிக்காமல் தன்னுடைய சந்தோசத்தை மட்டுமே பெரிதாக எண்ணி விடுபவர்கள்தான் அதிகம், இவர்களுக்கு காலமும் கடவுளும் பதில் சொல்வார்கள் வயதான காலத்தில் இன்னோர் முதியோர் இல்லம் வாயிலாக, பகிர்வுக்கு நன்றி ஆச்சி

ஆச்சி ஸ்ரீதர் said...

@சுரேஷ்
நன்றி

தலை வலியும்,வயிற்று வலியும் தனக்குனு வந்தாதானே தெரியும்.