தழுவிச் செல்லும் மெல்லிய குளிர் காற்று
மூடியிருக்கும் ஜன்னல்,வாசல் வழியாக இளம் காலைப் பொழுதின் வெளிச்சம் தூக்கத்தை துளைத்து விழிப்பை தூண்டுவதை விரும்பாத செல்வி கண்களை திறக்காமல் அருகே கிடக்கும் போர்வையைத் தேடிப்பிடித்து முகத்தோடு உடல் முழுவதும் போர்த்தி செல்லமாய் உறங்கினாள். விடியல் நேரத்தில் பறவைகளின் சப்தங்கள்,கோழியின் கக்கரிப்பு,அடுப்பங்கறையில் வேலை செய்யும் அம்மா பாத்திரங்களை புலங்கும் சப்தம்,அவள் போர்வைக்குள்ளும் துளைத்தது.
என்னம்மா இன்னைக்கு ஞாயித்துக்கிழமைம்மா இன்னைக்குகூட நிம்மதியா தூங்க விடமாட்றீங்களேனு போர்வைக்குள் முனகினாள் செல்வி.எழுந்திரிம்மா செல்வி,மணியாகிட்டு…இப்ப கிளம்பினாதான் பத்துமணிக்காவது உங்க அத்த வீட்டுக்கு போகலாமென்று அம்மாவின் குரல் ஒளித்தது.அங்கிருந்து சாய்ங்காலமா பீச்சுக்கு அழைச்சுட்டுபோறேன் தங்கத்தை,எழுந்திரிடா பட்டு என அப்பாவின் குரல் ஒளித்ததும்,விழிக்கவும் மனமில்லாமல்,தூங்கவும் மனமில்லாமல் போர்வைக்குள் சுருண்டுகிடந்தாள் செல்வி.
செல்வி …..எழுந்திரிம்மா..அப்பா சொல்றார்ல எழுந்திரிம்மா செல்லம் என்ற அம்மாவை …அம்மா முதல்ல அந்த கோழிய தெறத்திவிடும்மா காலங்காத்தால கத்திகிட்டு…ச்சே… என்று போர்வைக்குள் இருந்தபடியே தூக்கம் கலையாமல் அதட்டினாள் செல்வி.இப்பதாண்டா அரிசி நொய் போட்டேன்,இங்க வந்து பாரு கோழிக்குஞ்சுகள் எவ்ளோ சமத்தா தன் அம்மா கொத்தி சாப்பிடுவதை பாத்து,பாத்து அழகா கொத்தி சாப்பிடுதுங்க பாருடா..எழுந்திரிம்மா செல்வி..உனக்கு பிடிச்ச டிரஸ் போட்டுக்க,உனக்கு பிடிச்ச மாதிரி தலை வாரிவிடுறேன்,செல்லத்துக்கு மேகி செஞ்சு தரவா,பூரி செஞ்சு தரவா…
கொஞ்சலான சினுகளுடன் போர்வையைக் கலைந்து எழுந்திரித்த செல்விக்கு வெளிச்சத்தில் கூசிய கண்களை கசக்கி விழிக்க முற்பட்டவளை படாரென்று முதுகில் தட்டி ஏ ஜென்மமே எத்தனதட கத்துறேன்,எப்பதான் எந்திரிப்ப,தொண்டதண்ணிய வாங்குதுங்களே ஜென்மங்கள்னு கத்திய ஆயாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்துகொண்டாள் செல்வி.ஏய் எந்திரி உனக்கு தனியா கத்தனுமா,எந்திரிச்சு சீக்கரம் ரெடியாவுங்க,இன்னைக்கு ஞாயித்துக்கிழமை, பெரிய மேடம் வருவாங்க,சீக்கிரமா கிளம்பி ப்ரேயர் ஹாலுக்கு வாங்க ஜென்மங்களானு அடுத்த பிள்ளையிடம் கத்திக்கொண்டிருந்தாள் ஆயா!
பெரிய மேடத்தின் தலைமையில் நடைபெற்ற ப்ரேயரில் கண்களை மூடி கலைந்துபோன கனவை மீண்டும் நினைவுபடுத்தி கனவில் வந்த பெற்றோரின் முகங்களை தேடிக்கொண்டிருந்தாள் பன்னிரெண்டு வயதான செல்வி,ஆதரவற்ற சிறுவர்கள் காப்பகத்தில். .முற்று.