*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 21, 2012

என்றும் மறக்க முடியாத பேருந்து நினைவுகள்-4

இந்த பதிவில் பஸ் காதல்களை,வயதுக்கோளாறுகளை,சில சில்மிஷங்களை பகிர்கின்றேன்.
காதல் எங்கும் நிகழ்கிறது.படிக்கும் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளாகட்டும் பயணிக்கும் சக பயணியாகட்டும் பயணம் செய்ய மட்டுமே அதுவும் நடுத்தர வர்க்கத்தினர்களின் போக்குவரத்து பகவான் பல வித குணங்களுடைய பயணிகளை சுமந்து செல்வதோடு  காதலையும்,சில்மிசங்களையும் சுமக்கத் தவறுவதில்லை.எங்கிருந்தோ புறப்பட்டு,எங்கெங்கோ நிறுத்தப்படுவது போல பல காதல்களும் நிறுத்தப்படுகிறது.காணாமல் போகிறது.இதற்கு பெயர் காதலா என்று பார்ப்பவர்களால் பேசப்பட்டு,தோல்வியோ ஏமாற்றமோ ஏற்படும்போது மட்டுமே அந்த காதலர்களுக்கும் காதல் மீது சந்தேகம் வருகிறது.காலம் கடந்து உணர்வது மட்டுமே மிச்சப்படுகிறது.

தினமும் பார்க்க நேரிடும்போது எதோ ஒரு ஈர்ப்பில் பழகப்படுவதே பயணத்தின் நட்பு.பெண்ணுக்கும் பெண்ணுக்கும் ஆணுக்கும் ஆணுக்கும் பயண நட்பு அப்படியே இருக்கிறது.ஆண்,பெண் நட்புதான் 80% காதல் நாடகமாகிறது.இதில் திருமணம் ஆனவர்களா/ஆவாதர்களா என்ற கேள்வி வந்தால் அதுவும் 90% திருமணம் ஆகாதவர்கள்தான் இந்த பயணக் காற்று காதலில் சிக்குபவர்கள். நம்மை பார்க்கும் மனிதர்களின் குணங்கள் புரியாவிட்டாலும்   கண்களின் இரண்டு பார்வையிலே பார்வையின் அர்த்தங்கள் புரியக்கூடும்.எதார்த்தமாக இருக்கலாம்,மீண்டும் பார்த்து புரிந்துகொள்வதில் தவறில்லை,வேணுமென்றே பார்க்க வைக்கப்படுவதுதான் தவறு.

உடையாகட்டும்,பேச்சாகட்டும் எனக்குத் தெரிந்து நான் பார்த்தவரை அப்படி வேணுமென்றே பார்க்க வைப்பதில் பெண்கள்தான் முதலிடம் பிடிக்கின்றனர்.இதை எவரேனும் எதிர்ப்பார்களாயின் என் ஊர் மட்டுமில்லை,பல ஊர்களில் என்ன நடைமுறை நிகழ்கிறது என்பதை நேரில் காண்பிக்க என்னால் முடியும்..எனக்கு இப்படிபட்ட பெண்கள் விட்டில் பூச்சிகளாய் தெரிகின்றனர்.வழிகாட்டுதல் தேவையில்லை என்ற நினைப்பு,ஊடகங்களின் தாக்கம்,எதையும் சமாளித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை,தனக்கு கிடைத்த புது உறவினால் இது நாள்வரை வளர்த்தவர்களையும் சமாளித்துவிடலாம்,எதிர்க்கலாம் என்று நினைக்கிறார்களே தவிர,தாம் வயதென்ன,பக்குவமென்ன,இப்போது இது தேவைதானா,தனது நண்பன்/காதலன் எனப்படுபவன் எப்படிப்பட்டவன்,இந்த உறவு எதுவரை,எத்தனை நாட்களுக்கு  இதெல்லாம் யோசிப்பதும் கிடையாது,தனக்கே தெரியவந்தாலும் தனக்கு எந்த கெடுதலும் இருக்காது,வராது என்ற நம்பிக்கை.

படிப்பில்,உத்யோகத்தில் ஆர்வமுள்ளவர்கள்,தன்  குடும்ப மற்றும் சமூக சூழலை உணர்ந்தவர்கள் மட்டுமே யோசித்து செயல்படுகின்றனர்.இப்போதும் ஊர் பக்கம் மளிகைக் கடையிலும்,ஜவுளிக் கடைகளிலும் வேலை பார்க்கும் சில பெண்கள்,படிக்கும் சில பெண்கள்  பஸ்ஸில் தன் ஆண் நண்பர்களுடன் மறைந்து,மறைந்து,தயங்கி தயங்கி பேசி வருவதை பார்க்கும்போது “அடி பேதையே! என்ன மயக்கத்தில் இப்படி நடந்துகொள்கிறாய்,வெற்றியும்,ஏமாற்றமும் எதிலும் உண்டு,ஆடவனுக்கு ஆயிரம் வழி உண்டு,உன் கதி என்ன?, எப்படியும் இணைந்துவிடுவோம் என்ற உன் நினைப்பு,நம்பிக்கை வெற்றி பெற்றால் நீ அதிர்ஸ்டசாலி” என்றே சொல்லத் தோனுகிறது.

ஃபேசனுக்காகவும்,டைம் பாஸிற்காகவும் நட்பும்,காதலும் கொண்டுள்ளவர்கள் எந்த காலத்திலும் எதையும் எதிர்கொள்ளும் பிறவிகள்.
என் காலத்தில் பஸ்ஸில் தினமும் பயணி்த்த பெண் ஒருவர் வீட்டிற்கு தெரியாமல்  நடத்துனரை திருமணம் செய்துகொண்டார்.மற்றொரு பெண் ஏற்கனவே திருமணமான ஓட்டுனரை திருமணம் செய்துகொண்டார்.அவர்களின் வாழ்க்கை தற்பொழுது எப்படி உள்ளது என்பதெல்லாம் தெரியவில்லை.தினமும் பஸ்ஸில் பயணித்த மாணவன் மாணவிக்கும் காதல் வந்து பல அவமானங்களை சந்தித்தபோதும் தைரியமில்லாத ஆடவனால் கைவிடப்பட்ட பெண்களை பார்த்திருக்கிறேன். காதலிக்கும்போது வரும் தைர்யம் இரு குடும்பத்தார்களையும் எதிர்கொள்ளும்போது மனம் திடமற்று முடிவை மாற்றிக்கொள்ளும்  பெண்ணையும், ஆண்களையும் பார்த்திருக்கிறேன். ஒரு தலைக்காதலும் உண்டு. 

நான் கல்லூரி சென்ற காலத்தில் ஆட்டோ மொபைல் என்பதுதான் தெரியும்.மொபைல் ஃபோன் பற்றி யாருக்கும் தெரியாது.இப்போ எல்லோரிடமும் மூன்றாவது கை போல செல்பேசி உள்ளது.செல்பேசி இல்லாத அந்த கால பயணத்தை நினைத்துப் பார்க்கும்போது உடனடித் தொடர்பிற்கு சிரமங்கள் இருந்தாலும் அது ஒரு அமைதியான காலமாகவே இருந்தது.அப்போது வாகனங்களின் சப்தம்,நடத்துனரின் விசில் சப்தம் மட்டுமே இருக்கும்.இப்போது பயணிக்கையில் திடீர்,திடீரென்று ரிங்டோன்கள் ஒலிப்பதும்,பாட்டி முதல் பள்ளி மாணவர்களிடத்தும் இந்த செல்பேசி உபயோகம் தற்கால மாற்றமே!

தகவல் தொடர்பில் நவீனம் கண்டு உலகம் சுருங்கிவிட்டது போல,காதலை அனுபவிப்பதும் நவீனமாகிவிட்டது.தற்போழுது பேசவோ பார்க்கவோ தனியிடமும்,பொது இடமும் தேவைப்படுவதற்கு முன்னர் வேண்டியவர்களின் நம்பர் பரிமாற்றம் இருந்தால் போதும் .யாருக்கும் பயந்தோ,அருகே வந்தோ அன்பை,விருப்பத்தை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.முக்கால்வாசி காதல் தொலைபேசியிலே முடிந்துவிடுகிறது.தனக்கு முன் நாலு பேருக்கு முன்னால் நிற்கும் பெண்ணிடம் மாலை சந்திப்போம்னு சொல்வதற்கு பட்ட பாடும்,அரை மணி நேரம் பயணித்தாலும் பார்வையிலே காதல் பரிமாற்றம் நடந்தாலும் மனதில்பட்டதை உடனே சொல்ல முடியாமல் தவித்ததும் இப்போ மலையேறிப்போச்சு.முன்பு தகவல் தொடர்பு சரியில்லாததால் சங்கடம்,பிரிவு,முறிவு வரும்.இப்போ தகவல் தொடர்பு அதிகமானதால் பிரிவு,முறிவு அதிகமாகிறது.

பிற்காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறியாத அப்போதைய பல பெண்களும், இப்போது சில பெண்களும் காதல் தோல்வி,ஏமாற்றம் அடைந்தாலும் இனி யாருக்கும் என் மனதில் இடமில்லை, யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என்பார்கள்.
இவர்கள் மறுமணத்தை  ஆதரித்தாலும்  ஆதரிப்பார்களே  தவிர மறு காதலை ஆதரிக்கமாட்டார்கள்.

சமீபத்தில் விஜய் டீவி   நீயா நானா நிகழ்ச்சியில் காதல் தலைப்பில் பேசிய இளம் பெண்கள் பலர்  காதல் ஒரு முறை மட்டும்தான் வரும் என்பது பொய்.காதலில் தோல்வியுற்றால் காலப்போக்கில் சந்திக்கும் மற்றவரிடத்தும் காதல் வரும்,ஏற்பதில் தவறில்லை என்று பேசியதில் வியந்துபோனேன்.திருமணம் ஆகாத அந்த பெண்கள் அந்த சபையில் பேசியது வியப்பாக இருந்ததைவிட தற்கால பெண்களின் மன மாற்றத்தைக் கண்டு வியந்தேன்.எனினும் ஒரு முறை வந்த காதலி்ல் தோல்வியும் ஏமாற்றமும் இல்லாமல் இருக்கட்டும்.  

அடுத்து உரசல் மன்னர்கள்:

இவர்களால் பாதிக்கப்பட்ட,இம்சைகளை அனுபவித்த பெண்களுக்கு மட்டுமே இவர்களின் தரம் தெரியும்.வழக்கமான வசனம்தான் கேக்க  நினைக்கிறேன் ”உன் சகோதரி அல்லது உன் அம்மாவிடமும்” இப்படி நடந்துகொள்(வாயா?). 

எனக்கு கேல்(girl) ஃப்ரண்ட் இருக்குடா மச்சி,இன்னைக்கு என் ஆளிடம் இன்னது பேசினேன்,அல்லது இங்கே சென்றோம்,அல்லது இன்னைக்கு ஒரு சூப்பர் ஃபிகரை பார்த்தேன் என்று தன் நண்பர்களிடம் பெருமை பிதற்றும் சில ஆண்கள் இருப்பது போல இந்த உரசல் மன்னர்களில் சிலர் தன் நண்பர்களிடம் எதாவது பெண்களை உரசி தன் சாதனையை பெருமை பேசுவதும் நடக்கிறதாம்.

சேலையில் முள் விழுந்தாலும்,முள்ளில் சேலை விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் என்பது போல பேருந்தில் மட்டுமல்ல இது போன்ற நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதிகம்  பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே.

24 comments:

பால கணேஷ் said...

முன்பு தகவல் தொடர்பு சரியில்லாததால் சங்கடம்,பிரிவு,முறிவு வரும்.இப்போ தகவல் தொடர்பு அதிகமானதால் பிரிவு,முறிவு அதிகமாகிறது.

-வைர வரிகள். நானும் இதை எண்ணி வியந்திருக்கிறேன். பஸ்ஸில் மொபைல் உபயோகிப்பது மிக அதிக அளவில் பெண்கள்தான் என்பது தெரியுமா உங்களுக்கு? (அதுவும் குசுகுசுவென்று அருகில் இருப்பவன் காதைத் தீட்டிக் கேட்டால்கூட சத்தம் எழாதபடி எப்படித்தான் பேச முடியுதோ? அவ்வ்வ்வ) பத்தாததுக்கு இப்போ மொபைல்லயே இன்டர்நெட் வேற!

-பெண்களை உரசுபவர்களை உரசல் மன்னர்கள் என்றா சொல்வீர்கள். உரசல் பன்றிகள், உரசல் பொறுக்கிகள் என்று எத்தனை நல்ல(!) வார்த்தைகள் இருக்கின்றன.

RAMA RAVI (RAMVI) said...

காதலைப்பற்றிய மிகவும் தெளிவான சிந்தனை.விழிப்புணர்வை தரும் படியாக அருமையாக எழுதியிருக்கீங்க ஆச்சி.

//சேலையில் முள் விழுந்தாலும்,முள்ளில் சேலை விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் என்பது போல பேருந்தில் மட்டுமல்ல இது போன்ற நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே.//

உண்மை ஆச்சி. பாதிக்கபடுவது பெண்கள் என்று நீங்கள் சொல்லியிருப்பதும் சத்தியமான வார்த்தை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சேலையில் முள் விழுந்தாலும்,முள்ளில் சேலை விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் என்பது போல பேருந்தில் மட்டுமல்ல இது போன்ற நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே//

மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.

பெண்கள் எங்கும் எதிலும் மிகவும் உஷாராகவே இருக்க வேண்டியுள்ளது.

மனதளவில் முதலில் எல்லோரும் நல்லவர்களாக மாற வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.... தொடருங்க ஆச்சி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@கணேஷ்
//பஸ்ஸில் மொபைல் உபயோகிப்பது மிக அதிக அளவில் பெண்கள்தான் என்பது தெரியுமா உங்களுக்கு? (அதுவும் குசுகுசுவென்று அருகில் இருப்பவன் காதைத் தீட்டிக் கேட்டால்கூட சத்தம் எழாதபடி எப்படித்தான் பேச முடியுதோ? அவ்வ்வ்வ) பத்தாததுக்கு இப்போ மொபைல்லயே இன்டர்நெட் வேற!

-பெண்களை உரசுபவர்களை உரசல் மன்னர்கள் என்றா சொல்வீர்கள். உரசல் பன்றிகள், உரசல் பொறுக்கிகள் என்று எத்தனை நல்ல(!) வார்த்தைகள் இருக்கின்றன.//

அத்தனையும் உண்மை.தங்கள் கருத்திற்கு நன்றிகள்.

@ராம்வி
ஆமாம் பாதிப்படைவது பெண்களே!தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபாலகிருஷ்ணன் சார்
தங்கள் கருத்திற்கும்,பாராட்டிற்கும் நன்றிகள் சார்.

@வெங்கட் நாகராஜ்
தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிகள்.

Unknown said...

இந்த கால காதலை பத்தி எழுதி எழுதி ரொம்ப போரடிச்சு போயிருச்சுங்க, அவங்கவங்க அவங்க வேலைய கரக்டா பாத்துகிட்டேதான் இருக்காங்க, நாமதான் அதையெல்லாம் பாத்து நொந்துக்கனும் போல இருக்கு,ம்ஹூம்

ஆச்சி ஸ்ரீதர் said...

@இரவு வானம்

சொல்றவங்க சொல்லிகிட்டே இருக்கட்டும்,செய்றவங்க செய்துகிட்டே இருக்கட்டும்,நான் செய்வது எதுவும் தப்பு கிடையாதுன்னு நினைக்கும் வரைதான் உல்லாசம்.தப்புன்னு உணரும்போது வருந்துவதை அப்போதும் மற்றவர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்

Angel said...

//
.வழிகாட்டுதல் தேவையில்லை என்ற நினைப்பு,ஊடகங்களின் தாக்கம்,எதையும் சமாளித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை,//


பெண்கள்தான் பெரும்பாலும் விட்டில்பூச்சிகள்.
பதின்ம வயது கவனமுடன் கையாளப்பட வேண்டிய பருவம் . தெளிவான சிந்தனையுடன் எழுதியிருக்கீங்க .

கோவை நேரம் said...

மலரும் நினைவுகள் ..

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஏஞ்சலின்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.பதின்ம வயது பெரிய பரீட்சையாகவே உள்ளது.

@கோவை நேரம்
ஆமாங்க,மல்ரும் நினைவுகளேதான்,நன்றிகள்

ராஜி said...

விட்டில் பூச்சிகளாய் பெண் இருக்கும்போது வேறேன்ன சொல்ல

ஆச்சி ஸ்ரீதர் said...

@ராஜி

பட்ட பின்தான் திருந்தனும் என்பதில் உறுதியாய் இருக்கும்போது என்ன செய்ய முடியும்.நன்றி சகோ

கீதமஞ்சரி said...

பழைய நினைவுகளோடு சமூகச்சாடல்களையும் முன்வைக்கும் விதம் அருமை. காதல் பற்றிய சிந்தனைப் பகிர்வுகள் யாவும் மிகச்சரியே. காலம் மாறினாலும் காதல் மாறாமல் இருப்பதெல்லாம் பழங்கதையாகிவிட்டது.

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. பேருந்து பற்றிய நினைவுகள் நிறைய கருத்துக்களை தருகிறது.

சம்பத்குமார் said...

வணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.ஓய்வு நேரத்தில் வலைச்சரம் வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்
ஜொலிக்கும் பெண் சிற்பிகள்

அன்புடன்
சம்பத்குமார்

ஆச்சி ஸ்ரீதர் said...

@கீதமஞ்சரி

வருகைக்கும் நேர்த்தியான கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க.

@ஆதி

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

ஆச்சி ஸ்ரீதர் said...

@சம்பத்குமார்

மிக்க நன்றி,வலைச்சரம் வந்து பார்த்தேன்.

சாந்தி மாரியப்பன் said...

நல்லதொரு பகிர்வு.. ரெண்டு பேரோட தகவல் தொடர்பு நிலையும் நல்லாருந்தா அங்கே சாதனங்களுக்கே இடமில்லை, பிரிவு முறிவுக்கும் வாய்ப்பில்லை.

கூட்டத்தில் மாட்டிக்கிட்ட பெண்களின் நிலையை சரியாச் சொன்னீங்க..

ஆச்சி ஸ்ரீதர் said...

@அமைதிச்சாரல்
//ரெண்டு பேரோட தகவல் தொடர்பு நிலையும் நல்லாருந்தா அங்கே சாதனங்களுக்கே இடமில்லை, பிரிவு முறிவுக்கும் வாய்ப்பில்லை.//

அதுலாம் காதலின் அருமை,உணமை புரிந்தவர்களுக்குங்க.

இப்பதான் காதல்ன்ற பேரை மட்டும்தான வச்சிருக்காங்க,காதலிக்கிறோம்னு மனதார சொல்றதற்குள் காதல் பிச்சிகிட்டு போய்டுது.அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர வகுப்பினரும்,பெண்களும்தான்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம் 3 இன்ட்லி 2 யுடான்ஸ் 56

Unknown said...

சேலையில் முள் விழுந்தாலும்,முள்ளில் சேலை விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் என்பது போல பேருந்தில் மட்டுமல்ல இது போன்ற நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே.//

ஆணோ, பெண்ணோ திருமணம் செய்து கொண்டு மனைவியையும், கணவனையும் காதல் செய்தால் நன்றாக இருக்கும்.

நல்லதொரு பதிவு.
வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் அன்பு  said...

உண்மை தெளிவு எதார்த்தம் ஏற்றுக்கொண்டு மற்றிகொண்டால் சமுதாயம் தலைக்கும் அருமை பகிர்வுக்கு

வை.கோபாலகிருஷ்ணன் said...

27.12.2012 அன்று வலைச்சரத்தில் இந்த தங்களின் பதிவு பற்றி திருமதி உஷா அன்பரசு என்பவர்களால் பாராட்டிப் பேசப்பட்டுள்ளது.

மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள். VGK