*வணக்கம் வருகைக்கு நன்றி*

Jan 2, 2012

மார்கழி மாதமும், காலத்தின் கோலமும்

சேனல்களை மாற்றினாலும் மனம் ஒருநிலைப்படாததால்,என் மனசுக்குதான் ஒரு ரிமோட் இல்லாமபோயிட்டு போ என்று ரிமோட்டை எரிச்சலுடன்  அழுத்தி  டீவீயை  ஆஃப் செய்துவிட்டு அடுப்படிக்கு சென்றாள் மஞ்சு.அடுப்பங்கறையிலும் என்ன செய்வதென்று புரியவில்லை.மஞ்சுவின் பார்வையில் மதியம் சமைத்த,சாப்பிட்ட பாத்திரங்கள் ”என்னை விளக்கு, துளக்குனு” சத்தம்போடுவதுபோல  இருந்ததால் அடுப்பங்கறையிலிருந்தும்   வெளியே  வந்துவிட்டாள்.

வீட்டிற்குள் யார் இருந்தாலும்,என்ன சொன்னாலும்,செய்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் தான் உண்டு,தன் வேலை உண்டுனு இருக்கும்னு கடிகாரத்தை பார்த்தாள்.நேரம் நாலரையானது.அப்பா எப்படியோ இவ்ளோ நேரத்தை கடந்துட்டேன்னு கடிகாரத்தைப் பார்த்து பெருமூச்சுடன் புன்னகைத்தாள்.பதிலுக்கு கடிகாரமும் அடுத்த நொடிக்கு நகர்ந்தபடி புன்னகைத்தது போலிருந்தது மஞ்சுவிற்கு.திருமணத்திற்கு பின் கணவனை விட அதிக நேரம்   மஞ்சுவுடன் இருப்பதும்,ஓயாமல் சுற்றி,இதோ வந்துடுவார்,இதோ வந்துடுவார்னு கணவன் வரும் நேரத்தை காட்டுவதும்  கடிகாரம்தான்.

மொபைல் ஒலித்தது.ஹோ! மொபைல எங்க வச்சேன்,யாரோ ஃபோன் பன்றாங்களேனு சத்தம் வரும் இடத்தை கண்டுபிடித்து  ஓடிப்போய்  எடுத்தாள்.அம்மா காலிங் என்பதை பார்த்தவுடன் அதீத புத்துணர்வுடன் அம்மாவுடன் பேசத்துவங்கினாள்.நலம் விசாரிப்புகள் முடிந்ததும் ஒரே போரடிக்குதும்மா எதுலையும் மனசு ஒன்றமாட்டேங்கிறது என்றாள் மஞ்சு.உனக்குனு ஒரு குழந்தை வந்துட்டுனா சரியாகிடும்னு அம்மா சொன்னதும் ”அம்மா” என்று தீர்க்கமாக குரல் கொடுத்தாள் மஞ்சு.

சரி மஞ்சு, ஒரு விசயம் ஞாபகப்படுத்ததான் ஃபோன் செய்தேன்,நாளைக்குதான் மார்கழி பிறக்குது.போன மார்கழியில் எங்களோட இருந்த,நான் வேண்டின தெய்வங்கள்  உனக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுத்துருக்கு,இந்த மார்கழிக்கு உன் கணவன் வீட்டில் இருந்தாலும் நம்ம வீட்லமாதிரியே காலையில் எழுந்து குளிச்சிட்டு,சாமி படத்துக்கிட்டயும்,வாசலிலும் விளக்கேத்திவச்சுடு,கலர் மாவு கிடச்சதுன்னா கலர் கோலம் போடு..என்றதும் கொஞ்சலும்,டென்சனுமாய் “அம்மா நீ வேற ஏம்மா என்னை டென்சனாக்குற, க்வாட்ரசில்  ரெண்டு  ஆள்  சேர்ந்தாப்ல நிக்கமுடியாத வாசல், அதுவும் இரண்டாம் மாடியில் இருக்கேன் .கல்யாணம் ஆகி வந்தப்பவே ஆசையா கோலம்மாவ கண்டுபிடித்து வாங்கி இந்த சின்ன வாசலில் சின்ன கோலம் போட்டதற்கே என் வீட்டு வாசல் வழியா போற பக்கத்து வீட்டுக்காரங்களெல்லாம் செய்யக்கூடாத குத்தம் செஞ்சிட்ட மாதிரி பார்த்தாங்க,சாக்பீஸ்ல கோலம்  போடுங்க,கோல ஸ்டிக்கர் வாங்கி ஒட்டிவைங்கனு உலக அட்வைஸ் கொடுத்தாங்க.அன்னைக்கே கோலம் போடுற ஆசையே விட்டுப்போச்சுன்னு சொன்னேன்ல,கலர் கோலத்த ஞாபகபடுத்தி வெறுப்பேத்திறியேம்மா”

சரி மஞ்சு உனக்கு அங்க தோது எப்படியோ அப்படி செய்ம்மா.சாஸ்த்திர சம்பிராதயங்கள மறந்திடாதம்மா,உன் வீட்டுக்காரரையும் நீதான் பாத்துக்கனும்,சந்தோசமா இருக்கனும்மா,அனுசரிச்சு நடந்துக்கோம்மா சரி வச்சிடுறேம்மான்னு ஃபோனை வைக்க மனசில்லாமல் இருவரும் பேசி முடித்தனர். தன் பெற்றோருடன் வாழ்ந்த மார்கழி மாதங்களின் நினைவுகளை நினைத்து தனக்குத்தானே ரசித்துக்கொண்டிருந்தவளை வாசலின் அழைப்பு மணியோசை தடுத்தது.கடிகாரத்தைப் பார்த்தாள் ஆறேகால்.ஹை... கணவராதானிருக்கும்னு ஆசையாய் ஓடினாள்.


கதவைத் திறந்தவுடன் “ஹ்ம்!.....  மஞ்சு இன்னைக்கு பொழுது எப்படி போனுச்சு,எனிதிங் ப்ராப்ளம்னு” கேட்டவர் மஞ்சுவின் கணவர்தான்.அதெல்லாம் ஒன்னுமில்ல,உள்ள வாங்கன்னு அன்பாய் வரவேற்று அவளும்  அந்த வீட்டிற்குள் புதிதாய்  நுழைவது போல உணர்ந்தாள்.இனி  கண்டுக்கவே மாட்டாள்னு கடிகார முட்கள் புலம்பியபடி சுற்றின.ஒரு   டீ எடுத்துட்டு வரவா? ஸ்நாகஸ் எடுத்துட்டு வரவா என்றாள் மஞ்சு.ஒரு கப் டீ போதுமென பதில் வந்ததும்  அதே அடுப்படிக்கு பறந்து செல்லாத குறையாக சென்று இரண்டு கப் டீ ரெடி செய்தாள்.விளக்கி கழுவ வேண்டிய பாத்திரங்கள் எதுவும் அவள் கண்களுக்குத் தெரியவில்லை.


ஃப்ரஷ் ஆகிட்டு கணினி முன் அமர்ந்திருந்த கணவரிடம் டீ எடுத்துக்கங்க என்று சொல்லி தானும் அருகே அமர்ந்து டீயை பருகியபடி உங்களுக்கு இன்னைக்கு ஆபிசில் வேலையெல்லாம் நல்லபடியா நடந்துச்சா என்றாள்.அஸ்யூஸ்வல் என்றார் மஞ்சுவின் கணவர்.நாளைக்கு மார்கழி
மாதம் பிறக்குதுங்க,என் அம்மா ஃபோனில் பேசினாங்க,அம்மாவும் சொன்னாங்க.தென்,வேறென்ன விசேசம் என்றார் மஞ்சுவின் கணவர்.என்னங்க இப்படி சொல்றீங்க.மார்கழி பிறந்தால் எவ்ளோ ஜாலியா இருப்பேன் தெரியுமா!ஊதக்காற்றிலும்,குளிரிலும் விடியகாலையில் கோலம் போடுறதே தனி சந்தோசம்.

அப்ப கோலம் போடுவதில் வித்தகின்னு சொல்லு,மார்கழி மாத குளிரில் நல்லா தூங்கதான் எனக்கு பிடிக்கும் என்றார் மஞ்சுவின் கணவர்.என்னையவிட என் அம்மாதான் சூப்பரா கோலம் போடுவாங்க,எனக்கு கலர் அடித்து கோலத்தை அலங்கரிப்பதுதான் ரொம்ப பிடிக்கும்.கலர் மாவை டப்பாக்களில் சேகரித்து வச்சிருப்பேன்,கடை கடையா போய் கலர் பொடி வாங்குவேன்,எங்க தெருவில் வரும்  கலர் பொடி விற்பவரையும் விடமாட்டேன்.இல்லாத மற்றும் வித்தியாசமான கலர்களை வாங்கிப்பேன்.

கலர் மாவுடன் வெளைக் கோலமாவை கலந்து அடித்தாலும் நல்லாருக்கும்.  அப்படியே அடித்தாலும் நேச்சுரலா இருக்கும்.கோலத்திற்கு கலர் கொடுப்பதிலும்,கலர் காம்பினேசன் கொடுப்பதிலும்,பிறகு வெளிக்கோடு கொடுப்பதிலும் எவ்ளோ டெக்னிக் இருக்குத் தெரியுமா?எங்க தெருவில் யாரு சீக்கிரம் எழுந்து கோலம் போடுறாங்கன்னு போட்டி போட்டு கோலம் போடுவோம்.கோலத்த போட்டு கலர் கொடுத்திட்டு அக்கம்பக்கத்து வீட்டு கோலத்தை போய் பாத்திட்டு யாரோட கோலம் நல்லாருக்குன்னு வாக்கு வாதம் செய்வோம்.

பள்ளி படிக்கும்போது கூட படிக்கிறவங்க சொல்றத கேட்டு நானும் செங்ககல்லை அறைத்து அதை ஒரு கலரா வச்சுக்குவேன், ஃபில்ட்டர் காப்பித்தூளை உலர்த்தி அதையும் ஒரு கலரா போடுவேன்.நாளைக்கு என்ன கோலம்,கலர் என்னென்ன கொடுக்கலாமென  முதல் நாளே முடிவு செய்திடுவோம்.பக்கத்து வீட்டிற்கு கூட நாளை போடப்போகும் கோலத்தை தெரியாமா ரகசியமா வச்சுக்குவோம்.பூசனி,அல்லது பரங்கிப் பூவை கோலத்தின் நடுவே வைப்போம் பாருங்க,அது தனி அழகு.ஆனா பொழுது விடிந்ததும் ரோட்டில ஆடு,மாடு போனுச்சுனா அந்த பூவை தின்னுட்டு போய்டும்.

எங்க வீட்டுக்கு பக்கத்தில கோவில்,குளம் இருக்குல்ல,கோவில்ல திருவெம்பாவை,திருப்பாவை பாட்டு போடுவாங்க,அந்த பக்கம் உள்ள மாரியம்மன் கோவில்ல பாட்டு கேக்கும்,அந்த பாட்டுக்களை கேட்டுகிட்டே,அம்மா வாசலில் ஏற்றி வச்சிருக்கும்,விளக்கு,அகர்பத்தி வாசனை,காலங்காத்தால அய்யப்ப சாமிக்கு மாலை போட்டவங்களெல்லாம் குளத்திற்கு,குளிக்க போவாங்க,படிதுறையிலிருந்து  குளிரில் சாமியோ,அய்யப்போன்னு சொல்லிக்கிட்டு வருவதும்,அவர்களின்  சந்தன வாசனையும் மணக்க,மணக்க கலர் கொடுப்போம்.ரோட்ல போறவங்க,வர்றவங்க எங்க வீட்டு கோலத்தை எப்படி பாக்குறாங்க,மிதிக்காம போறாங்களான்னு பள்ளி,கல்லூரி போகும் வரை அப்பப்ப வாசலில் வந்து வந்து பாப்பேன்.

சைக்களில்,பைக்கில் போறவங்க நாம நின்னா கோலத்தில் ஏத்தாம போவாங்க.ஆனா சில நல்லவங்க ஆள் இருந்தாலும்,இல்லன்னாலும் கோலத்தை வீணாக்காம ஒதுங்கி போவாங்க.சாய்ங்காலம் நான் வரும் வரை வாசலை பெருக்கிடாதம்மான்னு சொல்லிட்டு போவேன்.எங்க தெருவில் மட்டுமில்லாம பள்ளி,கல்லூரி போகும்போது மற்ற வீடுகளிலும் என்னென்ன கோலம்,எப்படி கலர் கொடுத்திருக்காங்கன்னு பாத்துக்கிட்டே போவேன்.ஃபிரண்ட்ஸ்ங்களுடனும் காலையில் அவங்கவங்க போட்ட கோலத்தபத்திதான் முதல்ல பேசுவோம்.அன்றைய கோலம் அன்றே மறைந்துபோவதில் எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கும்னு பட,படன்னு சொல்லி முடித்தாள் மஞ்சு.

நானும் கோலங்களை பாத்திருக்கேன்,ஆனா இவ்ளோ விசியம்,அதுவும் நீ இத்தனை ஆர்வம்மா இருப்பன்னு இப்பதான் தெரிஞ்சுகிட்டேன் மஞ்சு.ஆனா இப்போ நீ நம்ம வீட்டு வாசலில் எட்டு புள்ளிலகூட கோலம் போட முடியாதே,சரி பரவாயில்ல நாளையிலிருந்து சின்ன,சின்ன கோலம்,பூ வரைந்து கலர் கொடுத்துவை.நீ போடும் கோலம் அழியாமல் நான் ஃபோட்டோ எடுத்து வச்சுடறேன் என்றார் மஞ்சுவின் கணவர்.மஞ்சுவிற்கு ஆனந்தம் உச்சிக்கு போனது.ஆனால் வருத்தமுடன் கலர் பொடி இல்லைங்க என்றாள்.ஓகே ரெடியாகு,கடெத்தெரு போய் கலர் பொடி எங்கு கிடக்கும்னு விசாரிச்சு உனக்கு பிடித்த கலர்களை வாங்கிட்டு வந்திடலாம்னு கணவர் சொன்னதும் உடனே தயாரானாள் மஞ்சு.பத்து கலர்,கலர் மாவு வைக்க டப்பாக்களுடன் வந்தனர்.வந்தும் ஆர்வமுடன் டப்பாக்களில் போட்டு,இடுவதற்கு சிறிய  துணிகளை ரெடி செய்து அனைத்து கலர் டப்பாக்களுக்கும் கொண்டை போட்டது போல வைத்தாள்.

அன்று இரவு மஞ்சுவிற்கு கை,கால் புரியவில்லை.நாளை என்ன கோலம் போடலாம்,கலர் கொடுக்கலாம்னு நினத்துக்கொண்டே வேலைகளை சுறுசுறுப்பாக முடித்தாள்.வாசலை போய் பார்ப்பதும் உள்ளே வருவதுமாக இருந்தாள்.இந்த சின்ன வாசலில் சின்ன கோலம் போட்டாலும் பாக்கிறவங்க எல்லோரும் சூப்பரா இருக்குன்னு சொல்லனும்னு நினைத்துக்கொண்டாள்.நாலரைக்கு அலாரம் வைத்துவிட்டு படுத்தவளுக்கு தூக்கமே வரவில்லை.திடீர்னு விழித்துப் பார்த்தாள்.ஓ! தூங்கிட்டேன்னா, அப்பா இன்னும் நாலரை ஆகல.சே இந்த கடிகாரம் நமக்கு வேணுங்கும்போது ஓடாதுன்னு புலம்பிகிட்டே மூன்று மணிக்கெல்லாம் எழுந்தவள் காலை வேலைகளை துவங்கினாள்.குளித்துவிட்டு வந்து விளக்கேற்றினாள்.


சிமெண்ட் தரையான சின்ன வாசலை ஈரத்துணியால் தேய்த்து,தேய்த்து சுத்தம் செய்தாள்.அலாரம் அடித்தபின் நிறுத்திவிட்டு கோல மாவு மற்றும் கலர் மாவுக்களை சீர்வரிசை எடுத்து வருவது போல எடுத்து வந்து, ஆலோசித்து வைத்திருந்த ஒரு ரோஜா,இருபக்கமும் அதைவிட குட்டி ரோஜாப்பூவை வரைந்து மூன்று ரோஜாக்களையும் ஒரே வட்டத்திற்குள்  இருப்பதாய்   சுற்றிலும் அலங்கரித்தாள்.பூக்கள் சிறியதாய் இருந்தாலும் பெரிய ரோஜா சிவப்பு கலரும்,இரு பக்க குட்டி ரோஜாக்களுக்கு ரோஸ் கலரும் மெகந்தி டிசைன் போன்ற வட்ட வடிவிற்கு மற்ற வண்ணங்களும் பிரிண்ட் போட்டது போல அழகாய் மிளிர்ந்தது கோலம்.

கணவனை எழுப்பி கோலத்தை பார்க்க சொல்லனும்,தன் வீட்டுக்கு ஃபோன் பன்னனும்னு யோசித்துக்கொண்டே கலர் சீர் வரிசைகளை பத்திரமாக வீட்டிற்குள் எடுத்துச்சென்றாள்.வாசலில் காலடி சப்தம் கேட்டு அவசரமாக ஓடிப்போய் பார்த்தாள்.பக்கத்து வீட்டு அன்கிள்  தன் கால் செருப்பில் கோலம்  ஒட்டிவிட்டதை முகம் சுழித்து  பார்த்துக்கொண்டிருந்தார். இடிந்து போன மஞ்சு அன்கிள் என்றதும்,வாக்கிங் போக கிளம்பினேன்,சாரி மஞ்சு நான் கவனிக்கல, என்று நடந்து போனவர் சில அடிகள் மிதித்த பிரிண்டை வலது  பக்கத்து வீடு வரை இட்டுச்சென்றார்.

லேசாக அழிந்திருந்த இடத்தை  மீண்டும் நிரப்புவோமா என்று நிலையோடு நிலையாக நின்று மஞ்சு யோசித்துக்கொண்டிருக்கையில் இடது புற மூன்றாவது வீட்டிலிருந்து சைக்களை தள்ளிகிட்டு  ட்யூசனக்கு புறப்பட்ட  ஜனனி ,ஹை சூப்பரா இருக்குக்கா ரெங்கோலி என்றாள்.மஞ்சுவிற்கு இப்பதான் தெளிவே வந்தது.மஞ்சு அக்கா இப்ப நான் சைக்களுடன் எப்படி ஓரமா போறது என்றதும் மஞ்சுவிற்கு நெஞ்சடைத்துவிட்டது.ஜனனி உன் சைக்களை நானே இந்தப் பக்கம் எடுத்து வச்சுடறேன்,நீ ஓரமா தாண்டிப் போம்மா என்றாள்.பத்திரமாக கோலத்தைக் காப்பாற்றி சைக்களை இந்தப் பக்கம் இழுத்து,எடுத்து வைத்தாள் மஞ்சு.ஓரமாகத் தாண்டினாலும் ஆறாவது படிக்கும் ஜனனியின் கால் மூன்றாவது குட்டி ரோஜாவின் காம்பினை சுத்தமாக அழித்துவிட்டது.மஞ்சுவிற்கு துக்கம் தொண்டையில் அடைத்தது,ஜனனியும் சாரி சொல்லிவிட்டு சைக்களுடன் புறப்பட்டாள்.

மீண்டும் கலர் மாவை எடுக்க போனவளை மஞ்சு... என்று கூப்பிடும் குரல் கேட்டு வாசலுக்கு வந்தாள் மஞ்சு.பக்கத்து வீட்டு ஆன்ட்டிதான் கூப்பிட்டுள்ளார்.மஞ்சுவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி.அவள் ஆசை,ஆசையாய் வரைந்திருந்த சிவப்பு ரோஜாவை சிதைத்தபடி செய்தித்தாள் சுருள் கிடந்தது. நியூஸ் பேப்பர் எடுக்க வந்தேன் மஞ்சு,அந்த கடங்காரந்தான் கீழிருந்தபடி விட்டெறிவானே,பேப்பர தூக்கிப்போட்டு உன் கோலத்தை வீணடிச்சிட்டான்பாரு,நீ இங்க குடித்தனம் வந்து கோலம் போட்டபோதே சொன்னேன்ல பெயிண்ட்ல கோலம் போடு,இல்லைன்னா ஸ்டிக்கர் கோலத்தை ஒட்டிவைன்னு சொல்லியிருக்கேன்ல என்றார் ஆன்ட்டி.

வாசலை சுத்தம் செய்ய வந்த வலதுபுற பக்கத்து வீட்டு பெண்மணி வேதனையுடன் நின்ற மஞ்சுவை  ,என்ன மஞ்சு எங்க வீட்டுக்கும் சேத்து கோலம் போட்ருவ போலருக்கு,உன் கோலத்தை மிதிச்சவங்க என் வீட்டு வாசல் வரை தடவிட்டு போய்ருக்காங்க போலருக்கு,இனி எல்லோரும் ட்யூட்டிக்கு கிளம்புற நேரம்,உனக்காக உன் வீட்டு வாசலில் குதிச்சு,குதிச்சு போவாங்களா?,அப்படி போகலைன்னா இன்னைக்கு முழுதும் நானும் வாசலை தொடைச்சிகிட்டே இருக்கனும் போலருக்கே என்றார்.

அதற்கு மேல் மஞ்சுவால் தாங்க முடியவில்லை.மேலும் மற்றவர்கள் தன் கோலத்தினை கலைப்பதைவிட,காலத்தின் கோலத்தினை மனதில் கொண்டு ஆசையாக வரைந்த கோலத்தை ஈரத்துணியால் துடைத்தெடுத்தாள்.
**************************************************************** முற்று.*********

இந்த கதை 31/12/2011 அன்று அதீதம் மின்னிதழில் வெளிவந்துள்ளது.

இந்த கதையை மின்னிதழில் வெளியிட  வழிமுறைகள் தெரியாது.
மின்னிதழில் வெளியிட உதவிய சகோதரருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

18 comments:

kaialavuman said...

கதை நன்றாக உள்ளது.
வாழ்த்துகள்

ADHI VENKAT said...

கதை ரொம்ப நல்லா வந்திருக்கு. அதீதத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

யதார்த்தத்தை சொல்லிச் செல்கிறது.

இராஜராஜேஸ்வரி said...

"மார்கழி மாதமும், இனிமையாய் ஆரம்பித்தௌ..
காலத்தின் கோலமும் மனதை சங்கடப்படுத்தியது.."

அருமையான கதைக்கும் பாராட்டுக்கள்..

மின் இதழ் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்..

ஆச்சி ஸ்ரீதர் said...

@வேங்கட ஸ்ரீனிவாசன்
@ஆதி

வாருங்கள்,கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ரெத்னவேல் சார்
@இராஜராஜேஸ்வரி

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

வை.கோபலகிருஷ்ணன் சார் தனது கணினி பிரச்சனையால் மெயிலில் தனது கருத்தை தெரிவித்து பின்னுட்டத்தில் சேர்த்துவிட சொல்லியுள்ளார்.அவரின் கருத்துக்கள்::

கதை மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் மேடம்.
உண்மையிலேயே வெகு அருமை.
மிகவும் ரஸித்துப்படித்தேன்.
உங்களுக்குள் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் வெகு அழகாக எடுத்துரைக்கும் தனித்தன்மை ஒளிந்துள்ளது.
அதை எப்படியாவது அடிக்கடி வெளிக்கொணர்ந்து இதுபோல மிக அழகாக எழுதுங்கள்.

நமக்கிருக்கும் திறமைகளை ஒளித்துக்கொள்வது, இத்தகைய அழகிய கோலத்தை அழிப்பது போன்ற செயலே ஆகும்.
மனமார்ந்த பாராட்டுக்கள், மேடம்.
கதை மஞ்சு போட்ட ரோஜாப்பூக்கலர் கோலம் போலவே ரொம்பவும் அழகு.

அன்புடன் vgk [வை.கோபாலகிருஷ்ணன்]

நன்றி கோபலகிருஷ்ணன் சார்.இந்த சூழ்நிலையிலும் என் கதையைப் படித்து ஊக்கமளித்துள்ளமைக்கு நன்றிகள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை.... அதீதம் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்....

Angel said...

மிகவும் அருமையான கதை ஆச்சி .மார்கழி மாசம்னாலே அதிகாலை கோலம் /ஆயர்பாடி மாளிகையில் பாடல் /புல்லாங்குழல் கொடுத்த பாடல்னு கலகலப்பா இருக்கும் .எனக்கு அஞ்சு புள்ளி விளக்கு கோலம் மட்டும்தான் போடத்தெரியும் எங்க தெருவில் அழகா இருக்கும் நானும் குதிச்சு தாண்டிதான் போவேன் ....flashback

Angel said...

//காலத்தின் கோலத்தினை மனதில் கொண்டு ஆசையாக வரைந்த கோலத்தை ஈரத்துணியால் துடைத்தெடுத்தாள்.//


ஒவ்வொரவருக்கும் அவர்கள் படைப்பு என்பது குழந்தை மாதிரி இந்த இடம் மனசுக்கு கஷ்டமா இருந்தது .

Unknown said...

wish you a very happy new year -2012

கீதமஞ்சரி said...

என் மன உணர்வுகளை அப்படியே பிரதிபலிப்பதாய் உள்ளது கதை. ஹூம்.. பெருமூச்சும் ஏக்கமும் மட்டுமே இப்போதைக்கு முடிகிறது. இன்று என் மகளுக்கு இதுதான் கோலம் என்று படங்களில் மட்டுமே காட்டும் நிலை. இதுவும் காலத்தின் கோலமே. வேறென்ன சொல்வது? அழகான கதைக்கும் அது அதீதத்தில் வெளிவந்ததற்கும் வாழ்த்துக்கள் ஆச்சி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வெங்கட் நாகராஜ்
வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.


@ஏஞ்சலின்
நமது அன்றைய நிலையும் இன்றைய நிலையும் எண்ணியே இந்தக் கதை பிறந்தது.

ஆச்சி ஸ்ரீதர் said...

@மங்கையர் உலகம்

வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி.

@கீதா
உங்கள் மன் உணர்வுகள் ஒத்துப்போனதில் மகிழ்ச்சி.அந்த இன்பம் இன்றைய பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை.கிடைத்தாலும் அந்தக்காலத்து ஆர்வம் பிள்ளைகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

RAMA RAVI (RAMVI) said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அழகான கதை.

கோலத்திற்கு கலர் பொடி சேகரிப்பது பற்றிய மஞ்சுவின் வர்ணனை அருமை.

மின்னிதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள், ஆச்சி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ராம்வி
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

சிவகுமாரன் said...

நல்ல சிறுகதை
எனது இந்த ஹைக்கூ கோலங்களையும் பாருங்கள்.
http://sivakumarankavithaikal.blogspot.com/2010/12/7.html

ஆச்சி ஸ்ரீதர் said...

@சி்வகுமாரன்
வாங்க.கருத்திற்கு நன்றி.குறிப்பிட்டிருக்கும் இடுகையை சென்று பார்க்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம்: 3
யுடான்ஸ்: 4
இன்ட்லி : 3

அழகிய அந்தக்கால கிராமக் கோலம் போலவே மிகச்சிறப்பான படைப்பு.
வாழ்த்துகள்.
vgk