*வணக்கம் வருகைக்கு நன்றி*

Mar 14, 2012

அனைவருக்கும் வணக்கமும் நன்றியும்

தமிழ் எழுதப் படிக்கத் தெரியும்னு நினைத்திருந்த எனக்கு,எழுத்துக்களை அடையாளமும், எழுதவும் தெரிகிறது,மற்றவர்கள் எழுதியிருப்பதை படிக்கத்  தெரிகிறது என்பதை பதிவுலகம் இப்போதும் உணர்த்துகிறது.எழுத்துத் திறமையும்,எழுதும் ஆர்வமும்,இணைய வசதியும் இருப்பவர்கள்  பதிவுலகில் வலம் வர முடிகின்றது.எழுதுவதில் ஆர்வமுள்ள, இணைய வசதி இல்லாத எத்தனையோ பேர் தங்களின் படைப்புகளை காகிதங்களிலும் அல்லது எதாவது பத்திரிக்கைகள்,வார இதழ்களுக்கு அனுப்பி பிரசுரம் ஆகுமா?ஆகாதா என்று காத்திருந்தும் எதிர்பார்த்தும் வருகின்றனர்.இணைய வசதி இருக்கும் பலருக்கு சொந்தமாக எழுதும் ஆர்வம் இருப்பதில்லை.


எழுதாவிட்டாலும் சக மனிதர்கள் எழுதியிருப்பதை படிப்பதில் மட்டும் ஆர்வம் பலருக்கு.தமிழ் எழுதறவங்களெல்லாம் குடும்பத்த அநாதைய விட்ட மாதிரியும் அல்லது கேப்பாரின்றி எழுதுறேன்ற பேரில் குடும்பத்திற்காக எதுவும் செய்யாமல் போன மாதிரியும் அல்லது தண்ணி தெளிச்சு விட்ட ஆளாகாவும் கருதி இதில் கவனம் செலுத்தும் மணித்துளிகளையும் என் குடும்பத்திற்காக செலவிடுவதுதான் சந்தோசம்,இந்த வெட்டி வேலையெல்லாம் எனக்கெதற்கு என்ற கேள்வி சிலருக்கு.சிறப்பாக எழுதும் பதிவர்களும் குடும்பப் பொறுப்புகள்,பிள்ளைகளின் கல்வியில் மேலும் கவனம் செலுத்த வேண்டி எழுதுவதை நிறுத்திவிடுவதுண்டு.


எல்லோருக்கும் பதிவுலகம் வர ஒரு காரணம் இருந்திருக்கும்.அத்துடன் எழுதும் ஆர்வத்திற்கும் ஒரு காரணம் இருந்திருக்கும்.இது என் 100வது பதிவு.நான் பதிவுலகம் வந்ததின் காரணம் என் அம்மாவின் மறைவு.ஆனால் எண்ணங்களையும்,நிகழ்வுகளையும் எழுத்துக்களில் பதிப்பதின் ஆர்வம் என் அப்பாவிடமிருந்து வந்தது என்றே சொல்வேன்.என் அப்பாவிற்கும் எழுத்துத் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.என் அப்பா மிகவும் சாதாரண மனிதர்.அவர் டைரி மற்றும் கடிதம் மட்டுமே எழுதுவார்.


இளமையில் வறுமையில் வாடி, தன் 17 வயதில் தந்தையையும் இழந்து(என் தாத்தா) கிடைக்கும் சிறு சிறு வேலைகள் செய்து வரும் வருமானத்தை குடும்பத்திற்கும் படிப்பிற்கும் ஈடுகட்டி அந்த காலத்து பத்தாம் வகுப்பு படித்து தொழிற்கல்வியும் படித்திருக்கிறார்.தன்னுடன் படித்த ரவி என்பவர் தன் படிப்பிற்காக உதவிகள் செய்ததாகவும் இன்று வரை அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என்பார்.லேபிற்கான கோட்டு,ஷீ கூட வாங்க வசதியில்லாமல் கடன் வாங்கி அணிந்து சென்றதாக சொல்லியிருக்கிறார்.


என் தாத்தா மின்வாரியத் துறையில் ஹெல்ப்பராக பணியில் இருந்தபோது இறந்திருக்கிறார்.என் அப்பாவும் பாட்டியும் வாரிசு வேலை கிடைப்பதற்காக பலரின் உதவிகளை நாடி,சிலரின் வீட்டு வாசல் ஏறி,இறங்கி,காத்திருந்து மின்வாரியத் துறையில் ஹெல்ப்பராக சேர்ந்திருக்கிறார்.அரசாங்க உத்யோகமானாலும் கடின உழைப்பும்,உயிரை பணயம் வைத்தும்,உழைத்து பதவி உயர்வுகள் பெற்று தான் பட்ட கஷ்டங்களை எங்களை அனுபவிக்கவிடாமல் வாழவைத்தவர்.


வேலையிலிருந்து வீட்டுக்கு வரும் அப்பா எங்களை அழைத்து பேசுவதும்,தின்பண்டங்கள் வாங்கிவந்து நாங்கள் சாப்பிடும் அழகை ரசிக்கும் அப்பா,சிறு வயதில் நான் பள்ளிக்கு சென்ற சில நாட்களில், வழியில் எதாவது மின்கம்பங்களில் ஏறி வேலை செய்வதைப் பார்க்க நேரிட்டால் கண்ணீர் வரும்.வீட்டிலும் வந்து எதுவும் கேக்க மாட்டேன்.செய்தித்தாள்களைத் தவிர வேறு எந்த புத்தகங்களும் படித்திராத என் அப்பா வாழ்வின் நெறிமுறைகளுக்காக பல உதாரணங்களும்,கதைகளும் சொல்லுவார்.டைமிங் காமெடியும் அடிப்பார்.


என் அப்பா
என் மகளுடன்
பிரச்சனைகளையும் அவமானங்களையும் சந்தித்தவர்,எளியவர்களிடம் தான் செய்து தந்த வேலைக்கு கூட ஊதியம் பெறமாட்டார்.எளிதில் மற்றவர்களிடம் ஒன்றிவிட மாட்டார்,ஆனால் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்.எதையும் எளிதாக எடுத்துக்கொள்வார்,மன்னிக்கும் குணம் உடையவர்.வசதி இல்லாதவனிடம்தான் உண்மையான அன்பிருக்கும்,இப்படியானவர்கள் வற்புறுத்தி கொடுக்கும் உணவுகளை அவமதிக்கக் கூடாது என்பார்.அவர்கள் முன்னே சாப்பிடு,அப்போது அவர்களின் முகத்தில் எழும் சந்தோசத்தைப் பார் என்பார்.


சில நேரங்களில் சில மனிதர்கள் அப்படித்தான் என அடிக்கடி சொல்லிக்கொள்வார்.முருகா என்னை மட்டும் காப்பாத்து என்பார்,ஏன் இப்படி சொல்றீங்க என்று கேட்டால் அப்பதான நான் உங்கள காப்பாத்த முடியும் என்பார்.பணத்தை சம்பாரிக்கலாம்,நல்ல மனுசனையும்,குணங்களையும் எளிதில் பெற்றுவிட முடியாது என்பார்.பதவி உயர்வுகள் வந்தபோதும் சலவை செய்து சட்டை போட மாட்டார்.சில முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டும் சலவை செய்த சட்டை அணிவார்.


தேவையான வசதிகள் இருந்தும் என் அப்பா இன்னமும் சைக்கள்தான் வைத்திருக்கிறார்.அந்த சைக்கிள் தன் அப்பாவுடையது என்பார்.அந்த சைக்கிளுக்கு ஆயிரம் முறை புது பார்ட்ஸ்கள் போட்டாலும் ஹேண்ட்பாரிலிருந்து சீட்டு வரை உள்ள கம்பிகள் மட்டும் மாற்ற அவசியமில்லாமல் பழுதாகாமல் என் தாத்தாவின் நினைவாக உள்ளது.என் அப்பாவின் திருமணத்தில் தன் மாமனார் (அம்மாவின் அப்பா )பரிசாக அளித்த அந்த காலத்து கை கடிகாரத்தைதான் இன்னமும் அணிந்துள்ளார்.


என்ன செய்தாலும்,வாங்கினாலும் தரமானதாகவும்,அதிக நாட்கள் இருக்கும்படியும்,அனைவரையும் கவரும்படியாகவே பொருட்கள்,துணிகள் வாங்குவார்.வாங்கும் பொருட்களை விற்கவும் அழிக்கவும் கூடாது என்பார்,அதற்கான பில்லையும் பல ஆண்டு காலம் சேமித்து வைத்திருப்பார்.எல்லா நிகழ்வுகளையும் எண்ணங்களையும் டைரியில் எழுதிவைத்திருப்பார்.அடுத்தவர்கள் டைரியை படிக்கக் கூடாதுன்னு எனக்குத் தெரியாது.வேலைக்கு போயிட்டு வந்து இரவில் எழுதுவார்,அவர் வேலைக்கு போனவுடன் நான் டைரியை எடுத்து படிப்பேன். என் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் சண்டை வந்ததில் அம்மா கோவிச்சிகிட்டு மதுரைக்கு போய்ட்டாங்க.டைரியில் அப்பா சண்டையை குறிப்பிடாமல் மணி (அம்மா பெயர்)மதுரைக்கு போய்விட்டாள்னு மட்டும் எழுதியிருந்தார்.நான் பேனாவை எடுத்து இன்ன சண்டையால் கோவிச்சிகிட்டு ஊருக்கு போய்ட்டாங்கன்னு எழுதிவிட்டேன்.மறுநாள் டைரி எழுதவந்த அப்பா படித்துவிட்டு என்னைய கண்டுபிடிச்சிட்டார்.ஆமாம் நாந்தான் எழுதினேன் என்றேன்.அவருக்கு செம கோபம் வந்தது.அப்பாவாக இருந்தாலும் அடுத்தவர் டைரியை படிப்பது தப்பு இனி என்கிட்ட பேசாதன்னு ஒரு வாரம்மா என்னுடன் பேசவே இல்லை.அப்றம் ஏன் எழுதுறார்ன்னு மனசுக்குள்ள கேட்டுக்கிட்டேன்.ஆனால் அப்பா பேசாமல் இருந்ததில் மிகவும் மனம் பாதிக்கப்பட்டேன்.வகுப்பறையிலும் அழுததும்,தோழிகள் சமாதானப்படுத்தியதும் நினைவிருக்கிறது.பிறகு அப்பாவே என்னிடம் பேசிவிட்டார்.அதற்கு பின் அந்த கருமத்தை (டைரியை) தொடுவதில்லை.


ஆனால் எனக்கும் எழுத அப்பதான் ஆசை வந்தது,அப்பாவிடம் சொன்னால் திட்டுவாரோன்னு நினைத்து பள்ளிக்காக வச்சிருக்கும் ஒரு குயர் நோட்டு ஒன்றை என் டைரியாக வைத்துக்கொள்வேன்.நானும் அன்றாட நிகழ்வுகளையும் மனதில் பட்டதையும் எழுத ஆரம்பித்தேன்.பள்ளி படிக்கும்போதே ஒரே ஊரில் 3வது,4வது தெருவில் இருக்கும் தோழிகளுக்கு பள்ளி விடுமுறையில் 15 பைசா கார்டில் கடிதமாக எழுதுவேன்.அவர்களும் பதில் போடுவார்கள்.பிறகு வெளியூர் தோழிகளுக்கும் கடிதம் எழுதுவது,பதிலுக்காக போஸ்ட்மேனை எதிர்பார்த்து காத்திருந்ததையும் மறக்க முடியாது.


நான் ஒன்றும் பெரிய எளுத்தாலி அல்ல.இருந்தாலும் என் எழுத்தின் ஆரம்பகால கதை இதுதான்.


இடைபட்ட காலங்களில் எனக்கு என் அப்பாவின் மீது வெறுப்பும்,அவருக்கு என் மீது வெறுப்பும் வந்த சூழ்நிலைகளும் உண்டு.ஆனால் என் அப்பா செய்தது எல்லாம் எங்கள் நலனை விரும்பித்தான் என்றாலும் வெளிப்படுத்திய உணர்வின் விதம் மனசங்கடங்களை ஏற்படுத்தியது.ஆனாலும் எனக்கு விலை மதிப்பில்லா ஆசான் என் அப்பாதான்.சென்ற ஆண்டு அக்டோபரில் ஓய்வுபெற்று வயல் மற்றும் புதிய வீட்டின் வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்.தினமும் எங்களுடன் ஃபோனில் பேசுவார்.பதிவுகள் எழுதுவதை ஒரு நாள் சொன்னபோது இணையத் தொடர்பால் பிரச்சனைகள் வரும்னு கேள்விப்படுகின்றேன்.யோசித்துகொள்ளம்மா என்று மட்டும் சொன்னார். 


சொந்த காரணங்களால் இந்த நூறாவது பதிவோடு சில காலங்களுக்கு பதிவுலகிலிருந்து விடைபெறுகின்றேன்.அனைவருக்கும் வணக்கமும் நன்றியும் .இப்படி சொல்ல எனக்கே பயமாதான் இருக்கு.ஏனெனில் என் மண்டைக்கு எட்டிய வரை எதாவது எழுத வேண்டும்,மீண்டும் வர வேண்டுமென்ற எண்ணம் உள்ளது.


சொறி பிடித்தவன் கையும் செல்போன் வைத்திருப்பவன் கையும் சும்மா இருக்காது என்பது போல பதிவுகள் எழுதின கையும் சும்மா இருக்கவிடாது.பார்ப்போம் கால மாற்றம் எப்படியுள்ளது என்பதனை.இந்த கூகிளார் சொல்லாமல் கொள்ளாமல் எதாவது மாற்றங்களை ஏற்படுத்துகிறார்.எல்லோரும் தங்கள் html கோடிங்ஸ்களை சேமித்து  வையுங்கள்.


இதுவரை எனக்கு ஆதரவளித்தவர்களுக்கும், நிறை குறைகளை எடுத்துச் சொல்லிய அனைத்து நல் உள்ளங்களுக்கும்,என் அனைத்து பதிவுகளுக்கும் அன்பினால் பின்னூட்டமளித்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


பள்ளி,கல்லூரி கடைசி நாள் பிரிவின் வலி போலவும்,திருமணத்திற்கு பின் அம்மா வீட்டிலிருந்து புறப்படும் வலி போலவும் இந்த பிரிவினை உணர்கின்றேன்.மீண்டும் சந்திப்போம்.நன்றி.

16 comments:

சாகம்பரி said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள். உணர்வுபூர்வமான பதிவு. நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்....

இன்னும் பல நூறு பதிவுகள் எழுதவும் வாழ்த்துகள்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

நூறாவது பதிவினை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

நன்றாக எழுத ஆரம்பித்துள்ளீர்களே என மகிழ்ந்து படித்து வந்த போது கடைசியில் ஒரு அதிர்ச்சி கொடுத்து விட்டீர்களே!

OK உங்களுக்கு ஒரு 6 மாதங்கள் மட்டும் விசேஷ விடுப்பு தருகிறோம்.

மீண்டும் அக்டோபர் மாதம் திரும்ப வந்து, தொடர்ந்து எழுத வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பயணம் இனிமையாக அமைந்து நல்ல செய்தியினை கொண்டு வாருங்கள்.

வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

100 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.

காட்டியுள்ள படத்தில் குழந்தை அம்ருதாக்குட்டி ஆண்குழந்தை போல காட்சி தருகிறாள். ;)))))

தங்கள் தந்தையைப்பற்றி சொல்லிய செய்திகள் யாவும் அருமையாக இருக்கின்றன.

பகிர்வுக்கு நன்றிகள்.

கீதமஞ்சரி said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஆச்சி.

பதிவுலகில் தொடரும் மனநிலை விரைவில் அமைய வாழ்த்துகிறேன்.

அப்பாவைப்பற்றிய உங்கள் எண்ணங்கள் என்னையும் பாதித்தன. அதுவும் அப்பா மின்கம்பத்தில் ஏறி வேலை செய்யும் காட்சியை எந்தப் பிள்ளையால்தான் பார்க்கமுடியும். இந்த எழுத்தார்வமும் உங்களை அறியாமலேயே அப்பாவிடமிருந்து உங்களைத் தொற்றிக்கொண்டுள்ளது என்றே தோன்றுகிறது. அவருக்கு என் வணக்கம்.

இன்றைய வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தியுள்ள மகிழ்வைப் பகிர வந்திருக்கும் வேளையில் தங்கள் பதிவு மனம் கனக்கவைக்கிறது.

எனினும் நிம்மதியே வாழ்வின் அடித்தளம் என்பதால் எங்கு நிம்மதி கிடைக்கிறதோ அதை நாடுவதுதான் நல்லது. எழுதும் உந்துதல் பெற்றால், எழுத்தைக் கட்டுப்படுத்தி வைக்காதீர்கள்.

கீதமஞ்சரி said...

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.

http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html

Avargal Unmaigal said...

முதலில் உங்களது நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள். மிகவும் உணர்வுபூர்வமான பதிவு. மனதில் உள்ளதை அப்படியே கொட்டி இருக்கிறிர்கள்.

//இணையத் தொடர்பால் பிரச்சனைகள் வரும்னு கேள்விப்படுகின்றேன்.யோசித்துகொள்ளம்மா என்று மட்டும் சொன்னார்.///

நாம் நமது எல்லையை உணர்ந்து அதுக்கேற்றவாறு எழுதிவந்தால் பிரச்சனைகள் வராது என்பது எனது கருத்து. குடும்பமா இணையாமா என்றால் முதலில் குடும்பத்திற்கு அதிக முக்கியதுவம் கொடுத்து இணையத்திற்கு கடைசியாக முக்கியத்துவம் கொடுங்கள்.

இணையம் மூலம் நல்ல நண்பர்களையும் பெறலாம் அதே நேரத்தில் கவனக்க்குறைவால் கெட்டவர்களையும் நண்பர்களாக பெறலாம். அதில்தான் நம் புத்தியை உபயோகபடுத்த வேண்டும்.

இப்போது வேண்டுமானால் சிறிது பிரேக் எடுத்து கொள்ளுங்கள் அதன் பிறகு மாதம் ஒரு பதிவாவது நேரம் கிடைத்து உங்களுக்கு மனம் இருந்தால் போடுங்கள் என்பது எனது வேண்டுகோள்.

அதுவரை உங்களை வாழ்த்தி வழி அனுப்புகிறேன் வாழ்க வள்முடன் என்றென்றும்

ADHI VENKAT said...

அப்பாவைப் பற்றிய உணர்ச்சிப்பூர்வமான பதிவு. இதையெல்லாம் படித்தவுடன் என் அப்பாவின் நினைவுகள் கண் முன்னே வந்து வந்து போய் என்னை கண்கலங்க வைத்து விட்டது.

அப்பா அப்பா தான். உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை அவ்வப்போது அப்பாவிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

100வது பதிவுக்கு வாழ்த்துகள் ஆச்சி. சிறிது காலத்திற்கு பின் மீண்டும் பதிவுலகம் உங்களை அழைக்கும். அப்போது வந்து எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பால கணேஷ் said...

100 பதிவுகளை எட்டிய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! ஒரு நல்ல தோழியாகப் பழகிவிட்டு இப்போது தற்காலிகமாக விடை பெறுகிறேன் என்று சொல்லியிருப்பது வருத்தம்தான். விரைவில் உங்கள் மனநிலை மாறி மீண்டும் எங்களுடன் கலந்து கொள்ள வருவீர்கள்! அந்த நம்பிக்கையுடன், ஒரு புன்னகையுடன் இப்போது டாட்டா... ஸீயு!

raji said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

தற்காலைக விடுமுறைதான்.சந்தோஷ செய்தியுடன் தேவையான ஓய்விற்குப் பின் மீண்டும் பதிவுகள் தர வேண்டும்.

முனைவர் மு.இளங்கோவன் said...

வாழ்த்துகள்.
தொடர்ந்து எழுதுங்கள்.

மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

பார்க்கவும்
http://muelangovan.blogspot.in/

Vetirmagal said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
உங்கள் அப்பாவை பற்றி படித்த்தும் நெகிழ்ச்சியாக இருந்த்து.

அந்த தலைமுறை அப்பாக்கள் எல்லாம் வறுமை இருந்தாலும் தங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து, நேர்மையாக உழைத்து , எளிமையாக வாழ்ந்தனர். அப்படி இருந்ததனால் தான் இன்று , அடுத்த தலைமுறைகள், வசதியாக சுகமாக உள்ளனர்.

அவர்கள் செய்த தியாகங்களை நாம் மறவாமல் இருப்பதும் பிறருக்கு உதவி செய்வதும் தான் , நாம் செய்யும் கைம்மாறு.

ஆனால், இனி வரும் தலைமுறையினர், அந்த கோட்பாடுகளை பின்பற்றுவது சந்தேகம் தான்.(இன்று நிலவும் சூழ்நிலையை பார்த்தால்).

நன்றி.

கீதமஞ்சரி said...

அன்பான வரவேற்புகள் ஆச்சி. குழந்தைகள், நீங்கள் அனைவரும் நலம்தானே? என் வலைப்பூவில் உங்களுடைய பதிவைப் பார்த்து மனம் மகிழ்ச்சி கொண்டது. அன்பான வரவேற்பும் வாழ்த்துக்களும் உங்களுக்கு.

இராஜராஜேஸ்வரி said...

Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

ஆச்சி ஸ்ரீதர் said...

@rajarajeswari madam
thans for giving kind information&wishes

Unknown said...

தமிழ் நாட்டில் இருபவர்கள் சிலர் தமிழ் தமிழ் என முழக்கம் இடுகிரர்கலே தவிர தன் குழந்தைகளை ஆங்கிலத்தில்தான் படிக்க வைகிறார்கள் அவர்கள் திருந்தினாலே தமிழ் வளரும்.