*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 1, 2012

கதம்பம் @ 1/02/2012


சமையல் டிப்ஸ் சொல்லும் அளவிற்கு சமையல் வராது. சமீபமாக நான் செய்துபார்த்த சில குறிப்புகளை - கலப்படங்களை, ஆராய்ச்சிகளை செய்முறைகளை பகிர்ந்துகொள்கின்றேன்.

குலாப் ஜாமூன் செய்ய ரெடிமேட் பவுடர் கிடைப்பது அனைவருக்கும் தெரியும்.தண்ணீர் விட்டு பிசையாமல் தண்ணீருக்கு பதிலாக நன்கு காய்ச்சிய பாலுடன் பிசைந்தால் ருசி கூடுமென ஒரு வட இந்தியப்பெண் சொன்னார்.அப்படி செய்துபார்த்ததில் ருசி கூடியது உண்மைதான்.

சில சமயம் கவனமின்றி கூடுதலாக பால் கலந்துவிட்டால் குலாப்ஜாமூன் உருண்டை பிடிக்கும் பதம் வரவில்லையெனில் வீட்டில் மைதா அல்லது நன்கு சலித்த கோதுமை மாவு கொஞ்சம் கலந்து உருண்டை பிடிக்கலாம்.ருசியில் வித்யாசம் இருக்காது.ரெடிமேட் மாவுடன் மைதா அல்லது கோதுமை மாவு அதிகம் கலந்து்விட்டால் மிருதுவாய் இருக்காது.








சிறுவயதில் கமர்கட்டு மிட்டாய் சாப்பிட்டுருக்கேன். ரொம்ப பிடிக்கும். கணேஷ் சார் அவர்களின் பதிவு ஒன்றில் கமர்கட்டு மிட்டாய் செய்ய குறிப்பு  கொடுத்திருந்தார். எளிமையாகவும் இருந்ததால் ஆர்வத்தில் செய்துபார்த்தேன்.கிட்டத்தட்ட அந்த டேஸ்ட் கிடைத்தது.அவர் சொல்லியிருந்த செய்முறைகளை காப்பி பேஸ்ட் செய்கிறேன்.விரும்பியவர்கள்  செய்துபாருங்கள். 


1கப் தேங்காய்த் துருவலையும், வெல்லத் துருவல் 2 கப்பும், 1 டேபிள் ஸ்பூன் நெய்யையும் எடுத்துக்கங்க. முதல்ல வெல்லத் துருவலை கால் தம்ளர் தண்ணி விட்டு அடுப்புல வெச்சுக் கரைய விடணும். அப்புறம் அந்த வெல்லக்கரைசலை இறக்கி வடிகட்டிக்கோங்க. அடுத்து, வடிகட்டிய வெல்லக் கரைசலை மறுபடி அடுப்புல வெச்சு லேசாக் கொதி வந்ததும் அதோட தேங்காய்த் துருவலை சேர்த்துக் கிளறுங்க.

ஆச்சா... இரண்டும் சேர்ந்து திரண்டு வர்ற சமயத்துல நெய் ஊத்தி நல்லாக் கிளறுங்க. நெய் சேர்ந்து கெட்டியான கலவையா ஆனவுடனே இறக்கிடுங்க. அது சூடு ஆறுவதற்கு முன்னாலயே சட்டுன்னு உருண்டைகளா உருட்டிப் போட்ருங்க. அவ்வளவுதான்!

குளிர்காலங்களில் இட்லி தோசைக்கு மாவு புளிக்க இரண்டு நாளாகலாம்.வட இந்தியா வந்த காலத்தில் அருகிலிருந்த ஒரு தமிழ்பெண் மாவு வைத்திருக்கும் குவளைக்கும் கம்பளி போர்த்தி வச்சிருப்பார்.திவான் எனப்படும் கட்டிலினுள் மாவு வைத்திருக்கும் பாத்திரத்தை வைத்து மூடிவிடுவார்.ஏற்கனவே வைத்திருந்த புளித்த மாவை புதிதாக அரைக்கப்பட்ட மாவுடன் கலந்துவிடுவதாலும் விரைவில் புளிப்புத்தன்மை கிடைக்கும் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும்.

சில வாரங்களுக்கு முன் இட்லிக்கு அரைத்து வைத்திருந்த மாவு புளிக்காததால் சற்று கட்டியாக புளியைக் கரைத்து மாவில் கலந்தேன்.அரை டம்ளர் கரைசல் இருக்கும்.(கரும் புளியாக இருந்தால் கலர் மாறிவிடும்னு நினைக்கிறேன்.).மாவும் சற்று கெட்டிப்பதத்தில் இருந்ததால் இட்லி செய்வதில் பிரச்சனை இல்லை.விரைவில் மாவு புளித்தது.சுவையிலும்,மிருதுத் தன்மையிலும் வித்யாசம் தெரியவில்லை.விரும்பினால் ஒரு ட்ரையல் பாருங்கள்.சரி வல்லைன்னா கம்பெடுத்திட்டு வந்திடாதிங்க.

நெல்லை மாவட்டத்தில் உணவகங்களில் இட்லி மாவில் போரிக் பவுடர் கலந்திருப்பதை கண்டுபிடித்தாங்களாம்.என்னைவிட மோசமா யோசிக்கிறாங்கப்பா.

இட்லி தோசைக்கு மிளகாய்ப் பொடி பலரும் பல சுவைகளில் செய்வோம்.ஊரிலிருந்து வாங்கிவந்த மோர் மிளகாய் நிறைய இருந்தது.சிவப்பு மிளகாய்க்கு பதில் மோர் மிளகாயை வதக்கி உப்பு சேர்க்காமல் இட்லி பொடி  தயார் செய்தேன்.அந்த சுவையும் நன்றாகவே இருந்தது.மோர் மிளகாயின் காரம் மற்றும் உப்புத்தன்மை அறிந்து தேவையான அளவு எடுத்துக்கொள்வது  நல்லது.வெளிர் கலர்தான் கிடைக்கும்.

                                                     
 ________________________________________________________________________
கண்ணைப் பறிக்காத ஒரு பச்சைக் கலர் சேலையில் பார்டர்,எளிய செமிக்கி வேலைப்பாடு,ரோஜாப்பூ எம்பராய்டரி வேலைப்பாடுடன் இருந்தது.வீட்டில் சும்மா இருக்கும் நேரங்களில் என் கைவண்ணத்தை காமிக்க முயற்சித்தேன்.ஒரு புத்தகத்திலிருந்து பூச்செடியை பட்டர் பேப்பரில் வரைந்து சேலையின் அடிப்பாகத்தில் வைத்து ட்ரேஸ் எடுத்துக்கொண்டேன்.3டி கலர்ஸ்,ஃபேப்ரிக் பெயிண்டிங் செய்துள்ளேன்.
                              
                              
சேலையின் முதல் முழம் விட்டு அடுத்தடுத்து 10 இடத்தில் வரைந்தேன். புகைப்படத்தில் சேலையின் வண்ணம்   குறைவாகவே தெரிகிறது.   
    
                                  
____________________________________________________________________

எங்கள் குடியிருப்பு பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது பற்றி கடந்த பதிவில் பகிர்ந்திருந்தேன்.அதில் மேலும் சில நிகழ்வுகளை சொல்ல வேண்டும்.வருடக் கடைசி நாள் அதாவது 31 டிசம்பர் இரவு கலைநிகழ்ச்சிகள்,பொது விருந்து,சிறிய ஆர்க்கெஸ்ட்ரா குழுவின் பாடல் நடனங்களும் நடைபெறும்.

ஒரு ராஜஸ்தானி தாய் விருந்திற்கு வரவில்லை.ஏன் என்று கேட்டதற்கு தன் பிள்ளைகள் இருவருக்கும் விடுமுறை இல்லை.அதனால் பிள்ளைகள் வரவில்லை.பிள்ளைகள் இல்லாமல் விருந்திற்கு வர மனதில்லை என்றார்.அந்த தாயின் பிள்ளைகள் இருவரும் வெளியூரில் ஹாஸ்டலில் தங்கி  இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கின்றனர்.பிள்ளைகளின் கல்லூரி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பணம் அனுப்பியதையும் கிறிஸ்துமஸின் போது தெரிவித்தார்.

குடியிருப்புவாசிகளின் 15 வயதுக்குட்பட்ட  சிறுமிகளின் நடனம் நடைபெறும்.குடியிருப்புவாசிகளின் நிகழ்ச்சிகளெல்லாம் அமைதியாக நடைபெறும்.வெளி நடனக்குழுவினர் (அதுவும் வட இந்திய நடனக் குழு)அதே குடியிருப்புவாசிகளிடம் ஆர்ப்பாட்டம்,அதிகக் கைத்தட்டல்,விசில் பறக்கும்.

ஆந்திர பெண்மணியின் ஆறாம் வகுப்பு படிக்கும் மகளும் 3 பாடல்களுக்கு அழகாக எளிமையாக நடனமாடினாள்.எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நடனம் ஆடும் சிறுமிகளில் இவளது நடனமும் இடம்பெறும்.ஆனால் அந்த சிறுமியின் அம்மா என்னிடம் பகிர்ந்துகொண்டது என்ன தெரியுமா?

அவர் ஆந்திராவிலிருந்து பத்து வருடங்களுக்கு முன் இங்கு குடித்தனம் வந்தாராம்.அப்போது 8,10 வயதிலிருந்த ஆண் பிள்ளைகள் இன்று இளைஞனாகி குடியிருப்புவாசிகளின் நிகழ்ச்சிகளுக்கு அமைதியாகவும்,வெளி நடனக் குழுவினரில் பெண்கள் ஆடும்போது இத்தனை ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றனர்.அந்த இளைஞர்களின் பெற்றோரும் இங்குதானே அமர்ந்துள்ளனர்.இவர்களுக்கு அச்சமும் இல்லை.பெற்றோர்கள் கண்டிக்கவும் இல்லையே.என் மகளும் நடனத்தில் ஆர்வமாக இருப்பவள் நாளை வெளியிடங்களுக்கு சென்று நடனமாடும்போது என் மகளையும் இப்படித்தானே வெளியாட்கள்  எடைபோடுவார்கள்.

இதனால்தான் என் மகளை நடனங்களில் பங்குபெற வேண்டாம்.உன் திறமையை ஓவியம், பேச்சுப்போட்டி, பியனோ வாசித்தல்  போன்ற போட்டிகளில் காண்பி என்கிறேன்,அல்லது கிளாசிக்கல் நடனத்திற்கு என்றுமே தனி மதிப்புண்டு அதில் மட்டும் கலந்துகொள் என்கிறேன்.என் மகள் நான் சொல்வதை கேட்பதில்லை,என் கணவரும் என் மகள் பக்கம்தான் என்கிறார் அந்த ஆந்திர பெண்மணி. 

விளைவு குடியரசு தின நிகழ்ச்சியில் அந்த சிறுமி தன் அம்மாவிற்கு தெரியாமல் தன் அப்பாவின் துணையுடன் .ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தேசியநலன்,பெருமை சொல்லும் பாடல் ஒன்றிற்கு பரதநாட்டிய மற்றும் மேற்கிந்திய நடனக் கலவையாக சிறப்பாக அடினாள்.எப்ப ப்ராக்டிஸ் செய்தாள்னே எனக்குத் தெரியாது,எல்லாம் என் கணவரின் சப்போர்ட்டில் நடைபெறுகிறது என்கிறார் அந்த பெண்மணி.

பிள்ளைகளை எதற்காகவும் கட்டாயப்படுத்தக் கூடாதுதான்.ஆனால் என்ன நடந்தாலும் பிள்ளைகளுக்கும் பெற்றோர்க்கும் இடையேயும்,தாய் தந்தையருக்கிடையே பிள்ளைகள் வளர்ப்பிலும்,  ஒளிவு மறைவு இல்லாமல் இருத்தலும் அவசியம்தானே.

22 comments:

வெங்கட் நாகராஜ் said...

சுவையான கதம்பம்....

நல்ல தகவல்களும்..... :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான கதம்பம் நல்ல மணம் வீசி மனதை மகிழ்வித்தது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

குலாப் ஜாமூன் + கமர்கட் எனக்கு உடனே வேண்டும். அதுவும் தாங்கள் கஷ்டப்பட்டு செய்ததாக இருக்க வேண்டும். ஓ.கே.ரெடி என்று சொன்னால் உடனே புறப்படத்தயார்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சில வாரங்களுக்கு முன் இட்லிக்கு அரைத்து வைத்திருந்த மாவு புளிக்காததால் சற்று கட்டியாக புளியைக் கரைத்து மாவில் கலந்தேன்.அரை டம்ளர் கரைசல் இருக்கும்...........//விரும்பினால் ஒரு ட்ரையல் பாருங்கள்.சரி வல்லைன்னா கம்பெடுத்திட்டு வந்திடாதிங்க.//

ஏன் பயமா? வயிற்றில் புளி கரைக்கிறதோ? ;)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஊரிலிருந்து வாங்கிவந்த மோர் மிளகாய் நிறைய இருந்தது.சிவப்பு மிளகாய்க்கு பதில் மோர் மிளகாயை வதக்கி உப்பு சேர்க்காமல் இட்லி பொடி தயார் செய்தேன்.அந்த சுவையும் நன்றாகவே இருந்தது.மோர் மிளகாயின் காரம் மற்றும் உப்புத்தன்மை அறிந்து தேவையான அளவு எடுத்துக்கொள்வது நல்லது.//

அதன் காரம் + உப்புத்தன்மை சூப்பராக இருக்குமே. நாக்கில் ஜலம் ஊற வைத்து விட்டீர்களே ..... ரெயில் ஏறியோ, ப்ளேன் ஏறியோ உடனே வந்துவிடப்போகிறேன், ஜாக்கிரதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நெல்லை மாவட்டத்தில் உணவகங்களில் இட்லி மாவில் போரிக் பவுடர் கலந்திருப்பதை கண்டுபிடித்தாங்களாம்.என்னைவிட மோசமா யோசிக்கிறாங்கப்பா.//

ஒரு வாரம் ஆனாலும் மாவு புளிக்காமல் இருக்கவும், புளிச்ச வாடை அடிக்காமல் இருக்கவும், ரெடி இட்லிமாவு/தோசை மாவு பாக்கெட்களில், உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் ஏதேதோ பொருட்களைக் கலக்குகிறார்களாம். எச்சரிக்கை செய்து மெயில் கூட வந்துள்ளது. இவை எதற்கும் ISI Quality Certificate முத்திரை எதுவுமே கிடையாது என்பதும் பெரிய வேதனை தான்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்கள் கை வண்ணத்தில் அந்த சேலையின் மதிப்பு உயர்ந்து விட்டது. மனமார்ந்த பாராட்டுக்கள். கைவசம் தொழில் திறமை உள்ள உங்களுக்குக் கவலையே இல்லை.

//பிள்ளைகளை எதற்காகவும் கட்டாயப்படுத்தக் கூடாதுதான்.ஆனால் என்ன நடந்தாலும் பிள்ளைகளுக்கும் பெற்றோர்க்கும் இடையேயும்,தாய் தந்தையருக்கிடையே பிள்ளைகள் வளர்ப்பிலும், ஒளிவு மறைவு இல்லாமல் இருத்தலும் அவசியம்தானே.//

சரியாகச் சொல்லி முடித்து விட்டீர்கள். அழகான பதிவுக்கு நன்றி.
பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

நிறைய பின்னூட்டங்கள் இன்று கொடுத்து விட்டேன். திருப்தியா?
அன்புடன் vgk

கீதமஞ்சரி said...

சுயபுராணத்தில் பல செய்திகள் சுவையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளன. புடவையில் வேலைப்பாடு அழகாக உள்ளது. மோர்மிளகாய்ப்பொடி செய்முறை நினைத்தாலே செய்யத் தூண்டுகிறது. விரைவில் செய்துபார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி ஆச்சி.

குழந்தைகளைப் பொறுத்தவரை அம்மா அப்பாவிடம் ஒளிவுமறைவில்லாமல் இருக்கும்வகையில் சிநேகமாய்ப் பழகுவதே நல்லது. நல்லதோ, கெட்டதோ, ஒருவருக்கொருவர் மறைக்கச் சொல்லி இப்பழக்கத்தை பெற்றோரே ஊக்குவிப்பது நல்லதல்ல.

RAMA RAVI (RAMVI) said...

கதம்பம் ரொம்ப சுவையாக இருக்கு ஆச்சி.
//என்ன நடந்தாலும் பிள்ளைகளுக்கும் பெற்றோர்க்கும் இடையேயும்,தாய் தந்தையருக்கிடையே பிள்ளைகள் வளர்ப்பிலும், ஒளிவு மறைவு இல்லாமல் இருத்தலும் அவசியம்தானே.//

அவசியம்தான் ஆச்சி. நல்ல கருத்து.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வெங்கட் நாகராஜ்
தங்களின் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபாலகிருஷ்ணன்
ஓவ்வொன்றையும் ரசித்து தங்கள் விமர்சனங்களை தெரிவித்ததில் மகிழ்கிறேன்.

வாங்க,கட்டாயம் செய்து தருகிறேன்.

//ஏன் பயமா? வயிற்றில் புளி கரைக்கிறதோ? ;)))))//

இருக்காதா?என்ன ஆனாலும் நான் அட்ஜஸ்ட் செய்துப்பேன்.செய்து பார்த்தவர்களுக்கு கோளாறு ஆகிட்டுன்னா?

//நிறைய பின்னூட்டங்கள் இன்று கொடுத்து விட்டேன். திருப்தியா?//

சார் நான் உங்களை மிரட்டி வைத்துள்ளதாக மற்றவர்கள் நினைக்கப்போகிறார்கள்.தங்களின் தொடர் பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@கீதா
செய்து பாருங்கள்.& மகளின் விருப்பத்திற்கும்,பாசத்திற்கும் தந்தை இப்படி ரியாக்ட் செய்துள்ளார்.எனக்குத் தெரிந்த கருத்துக்களை சொன்னபோதும் இப்ப அவள் சின்ன பொண்ணு பெரியவளானவுடன் அவளே புரிந்துகொள்வாள் என்றார்.மேற்கொண்டு விவாதிக்க எனக்கும் விருப்பமில்லை.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ராம்வி

தங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் நன்றிங்க.

Jaleela Kamal said...

கமர் கட் எனக்கு ரொம்ப பிடிக்கும் சின்னவயதில் சாப்பிட்டத நினைவுக்கு கொண்டு வந்துட்டீங


ஓ மோர் மிள்காய் சேர்த்தால் இட்லி பொடியில் காரம் கம்மியாக இருக்குமா நல்லது,இப்பவே செய்யனுமுன்னு தோனுது நான் மிளகாய் குறைத்து பயன் படுத்துவேன்


\
ரொம்ப அழகா இருக்கு பெயிண்டிங்

பால கணேஷ் said...

இன்னுமொரு முறை நீங்கள் ட்ரை பண்ணினால் கடையில் சாப்பிட்டது போலவே கமர்கட்டின் சுவை வந்து விடும். என் வீட்டில் மூன்று முறை செய்து காலி செய்த பின்தான் சரியாக வந்தது. இட்லி மாவில் புளி சேர்த்ததை சொன்னிங்கல்ல... அதோட கொஞ்சமே கொஞ்சம் ரவையைச் சேர்த்துப் பாருங்களேன்... நல்லாவே இருக்கும். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

ADHI VENKAT said...

கதம்பம் மணக்குது....
குலாப்ஜாமுன் மிக்சில் பால் கலக்கலாம் என்று தெரிந்து கொண்டேன்.கைவசம் ரெடி மிக்ஸ் வைத்திருக்கிறேன். செய்து பார்த்து விடுகிறேன். தளர்வாக ஆகி விட்டால் மைதா சேர்த்தும் செய்திருக்கிறேன்.

புடவை வேலைப்பாடு அருமை.

மோர் மிளகாய் சேர்த்து செய்ததில்லை. பொடிக்கு இன்றோ, நாளையோ வறுத்து அரைக்க வேண்டும்... மோர் மிளகாயும் இருக்கிறது. செய்து பார்த்தால் ஆச்சு.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஜலீலா கமல்

வாங்க சகோதரி நன்றிங்க.
கமர்கட்டு செய்துபாருங்கள்.&
சில மோர் மிளகாயில் காரம் அதிகமாகவும்,சில வகையில் காரம் குறைவாகவும் இருக்கும்.எனவே அதன் தன்மையைப் பொறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@கணேஷ்

வாங்க சார்.நானும் இன்னும் பலமுறை செய்து பார்க்கனும்னு நினைக்கிறேன்.அவ்ளவாக இனிப்பை விரும்பாத என் கணவரும்,மகளுமே விரும்பி சாப்பிட்டார்கள்.
ரவா ஆராய்ச்சியிம் செய்து பார்த்திருக்கேன் சார்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஆதி
செய்து பாருங்கள்.ரிசல்ட்டும் என்னாச்சுன்னு சொல்லிடுங்கள்.(கடவுள் மேல பாரத்த போட்டு செய்திடுங்கள்.)

ஆமினா said...

லக்னோவில் இருக்கும் போது மாவு புளிக்க வைக்கிறதுக்குள்ள பாதி உயிர் போயிட்டு வந்துடும். அதனால் ரவ இட்லி செய்துடுவேன் (புளிப்புக்கு தயிர்).

டோக்லா செய்வதற்கு ஈனோ என்ற மாத்திரையை சேர்க்கிறார்கள். சுவை எப்படி மாறும்னு தெரியல.

அருமையான கதம்பம்

கம்ருகட்டு செய்து பார்க்கிறேன்

ஆச்சி ஸ்ரீதர் said...

வாங்க ஆமினா

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.தயிர் கலந்து புளிக்க வைத்ததில் எனக்கு ஒரு முறை நல்லாருக்கும்,இன்னொருமுறை சரி இருக்காது.

கமருகட்டு செய்து பார்த்து சொலுங்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

http://gopu1949.blogspot.in/2012/02/liebster-blog-award-german.html

அன்புடையீர்,

மேற்படி தளத்திற்கு தயவுசெய்து வருகை தாருங்கள்.

விருது ஒன்று தங்களுக்காகக் காத்திருக்கிறது.

அன்புடன் vgk